நேருவால் நேர்ந்தவை : இளமைக் கனவுகள்

நேருவால் நேர்ந்தவை : இளமைக் கனவுகள்

காந்திஜியால் தனது வாரிசு என்று வர்ணிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, மகாத்மாவுக்கு அடுத்த படியாக நம் நாட்டு மக்களால் மிகப் பெரும் தலைவராக இன்றும் மதிக்கப் படுகிறார். இன்று சில அரசியல்வாதிகள் எவ்வளவுதான் சர்தார் படேலைப் புகழ்ந்தாலும், அவர்கள் இருவரும் வாழ்ந்த கால கட்டத்தில் அகில இந்திய அளவில் நேருவே தனிப்பெரும் தலைவராய் திகழ்ந்தார்.  அவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு தொடர்ந்து 17 ஆண்டுகள் பிரதமராக சேவை செய்ததில் வியப்பேதுமில்லை.

சுதந்திர இந்தியாவில் பிரதமராகப் பணிபுரிந்தவர்களில் நேரு ஒருவர் மட்டுமே ஆழ்ந்த தீர்க்கதரிசனத்துடன் செயல்பட்டார் என்று கூறவேண்டும். பிரதமர் நேருவின் தொலைநோக்குச் செயல்பாட்டின் விளைவாகத்தான், அவர் ஆட்சியின் போது தொடங்கப் பட்ட பல்வேறு திட்டங்களின் பயனை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று நாட்டில் தழைக்கும் கனரகத் தொழில் வளங்களுக்கும், கட்டப்பட்ட நீர் தேக்கங்களுக்கும், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும்  அன்று நேரு செயல் படுத்திய ஐந்தாண்டு திட்டங்கள் முக்கியமான காரணமாகும். மேலும் இன்று இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் அணு ஆராய்ச்சியில் முன்னேற்றம், ஏவு கணை வடிவமைக்கும் சாதனைகள், சந்திரனையே எட்டும் விண்வெளிக் கலங்கள் அமைக்கும் திறன் ஆகிய அனைத்துக்கும் அன்று நேரு தேசிய அளவில் துவக்கிய விஞ்ஞான மற்றும் விண்வெளித் துறைகளுக்கான உயர் கல்வி நிலையங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களே காரணமாகும்.

அப்படி இருந்தும் கடந்த 50 ஆண்டுகளில் நேருவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவுகளாலும், அவருக்குப்  பின் பதவியில் தொடர்ந்த நேருவின் வாரிசுகளின் குடும்ப அரசியல் ஆதிக்கத்தாலும் நேருவின் புகழ் இன்று சற்று மங்கி இருக்கிறது. 

ஜவஹர்லால் நேருவை விமரிசிக்க நான் அரசியல்வாதியோ அல்லது அரசியல் ஆய்வாளரோ அல்ல. இருந்தாலும் நான் நேருவைப் பற்றி எழுத பல காரணங்கள் இருக்கின்றன. என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர். ஆகவே நான் தேசியப் பற்று மிகுந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவன். என் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்திய இரண்டு இந்தியத் தலைவர்களில் நேருவும் ஒருவர் (இன்னொன்று மகாத்மா காந்தி). அவர் தலைமையில் வளர்ந்த இந்தியாவில்தான் நான் என் இளமைக் கனவுகளைக் கண்டேன்.

நேருவின் தலைமையில் இந்தியா உலக அளவில் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்டு பெருமை அடைந்த பல்லாயிரக் கணக்கான  இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நேரு சீனாவுடன் கை கோத்து, இந்தி-சீனி பாய் பாய் என்ற கோஷம் நாடெங்கும் ஒலிக்க அமெரிக்க மற்றும் சோவியத் வல்லரசுகளை ஒதுக்கி அணி சேராத நாடுகளின் இயக்கத்தைத் துவக்கிய போது, அதை நான் வரவேற்றேன். நேரு ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவின் சோஷலிசப் பாதையை வகுத்த போது அதை ஆமோதித்தவர்களில் நானும் ஒருவன். அந்தக்கால கட்டத்தில் சோவியத் தலைவர்கள் மற்றும் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியா வந்தபோது நேருவை அவர்களுடன் சென்னையில் பார்த்த நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.  

இன்று நான் ஜவஹர்லால் நேருவின் கடந்த காலச் செயல் பாட்டை பல கோணங்களில் இருந்து  பார்க்கமுடிகிறது. அவற்றில் அவருடைய மதிப்பிட முடியாத உலகளாவிய தொலை நோக்கு, ஜனநாயக ஆட்சி முறையில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கை, தெளிவான சிந்தனை ஆகிய நல்ல அம்சங்களே அதிகம். அதே நேரத்தில் சில குறைபாடுகளும் தெரிகின்றன. அப்படி இருந்தாலும் என்னுடைய தனி மதிப்பீட்டில் நேருவின் ஆட்சிக் காலத்தின் முதல் பத்தாண்டுகள் சுதந்திர இந்தியாவின் பொற்காலம் என்றே கூறுவேன்.

அரசு நிர்வாகத்தில் நேரு பொதுவாக பிரிட்டிஷ் செயல்பாடுகளை பெரும் மாற்றம் இல்லாமல் பின்பற்றியதால் காலனி ஆதிக்கத்தின் பாதுகாப்புக்காகவே செயல்பட்ட அரசின் ஆட்சிப்பணித் துறை, மற்றும் போலீஸ் ஆகிய அங்கங்கள் இன்றும் மேலாதிக்க மனப்பான்மையுடன்  செயல்படும் அவலம் தொடர்கிறது. நேரு தசாப்தங்களில் அவருடன் இருந்த அரசியல் தலைவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது பொதுமக்களுடன் இருந்த நேரடித் தொடர்பு தொடர்ந்ததால் ஆட்சிக் குறைபாடுகள் அப்போது அதிகமாகத் தெரியவில்லை.

ஏனோ நேரு ஜனநாயகத்தில் வைத்திருந்த திடநம்பிக்கை காங்கிரஸ் கட்சியின் உள் அமைப்பில் பிரதிபலிக்கவில்லை. அதைச் சீராக்க நேரு அதிகம் ஈடுபாடு காட்டியதாகவும் தெரியவில்லை. நேருவுக்குப் பிறகு இளைய தலைமுறைத் தலைவர்களை வளர்க்காமல் காங்கிரஸ் கட்சி நேரு குடும்ப வாரிசுகளின் தலைமையை நம்பியே இன்றும் செயல் படுவதற்கு இது ஒரு காரணமாகும். அத்தகைய வாரிசுக் கலாச்சாரம் பெரும்பாலான அரசியல் கட்சிகளில் தற்போது பரவியுள்ளது. ஆகவேதான் அரசியல் கட்சிகள் ஜனநாயகச் செயல்பாடுகளை ஒதுக்கிவிட்டு மூத்த தலைவர்களின் வாரிசுகளை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தும் வெட்கக்கேட்டை நாம் பார்க்கிறோம்.   

மேலும் நேருவின் மறைவுக்குப் பின்பு ஏற்பட்ட அரசியல் கலாச்சார மற்றும் நாகரீக வக்கிரங்களால் அரசியல் தலைவர்கள் பொதுமக்களைத் தவிர்த்து சுய ஆதாயத்துக்காக இடைத் தரகர்களை உபயோகிப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஆட்சிப்பணி அதிகாரிகள் துணை போவதால், அரசின் அங்கங்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் சுயநலத்துக்காகவே உபயோகிக்கப் படும் கருவிகளாக உருவாகியுள்ளன. இதனால் அரசின் நல்ல மக்கள் நலத் திட்டங்கள்கூட செயலாக்கத்தில் வெற்றி பெறுவதில்லை.

நேரு வகுத்த வழிமுறைகளின் முக்கிய குறைபாடுகள் வெளி உறவையும் பாதுகாப்புத் துறையையும் சார்ந்தவை. வெளி உறவுத் துறையில் நேரு அதிக ஈடுபாடு காட்டினாலும், அவர் செயல்பாட்டில் ஒரு வெகுளித் தனம் இருந்தது. உதாரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர எல்லையில் ஊடுருவி பல பகுதிகளை ஆக்கிரமித்தது. அவர்களைத் துரத்தியடித்த இந்திய ராணுவம் போரைத் தொடர்ந்து நடத்தி அவர்களை முறியடிக்க வேண்டும் என்றபோது அதை ஏற்க  மறுத்தார். அதற்கு மாறாக ஐ.நா. சபையில் அப்பிரச்சினையை முன் வைத்து போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டார். அதன் விளைவால் இன்று வரை காஷ்மீரப் பிரச்சினை தீராத தலை வலியாக நீடிக்கிறது.

நேருவுக்கு வெளி உறவுத்துறையில் ஏற்பட்ட மிகப் பெருத்த தோல்விக்கு 1962-ல் சீனாவுடன் நடந்த போர் ஒரு உதாரணமாகும். நேரு சீனாவுடன் நல்லுறவை வளர்க்க எவ்வளவோ முயன்றாலும் 1959-லிருந்து இந்திய சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. சீனப் படைகள் திபெத் நாட்டை ஆக்கிரமித்ததின் விளைவால் அச்சுறுத்தலுக்கு ஆளான திபெத்தின் தனிப்பெரும் தலைவரான தலாய் லாமா தனது பல்லாயிரக் கணக்கான மக்களுடன் இந்தியாவில் அகதிகளாகச் சரண் புகுந்தார்.

சுதந்திர நாடான திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை நேரு கண்டிக்காதது மட்டுமல்லாமல் திபெத்தின் மீது சீனாவுக்கு ஓரளவு உரிமை (ண்தத்ஞுணூச்டிணtதூ)  என்று கூறியது பலருக்கும் வியப்பையும், எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. நேரு சீனாவின் ஆதிக்கப் போக்கை கண்டிக்காமல் விட்டதே பிற்காலத்தில் இந்திய-திபெத் எல்லையில் பல பகுதிகளின் மீது  சீனா முன்னுரிமை கொண்டாடுவதற்கு வித்திட்டது என்று நான் நம்புகிறேன். 

இந்திய-சீன உறவில் சரிவு தொடர்ந்த போது நான் பத்திரிகைத் துறைப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது திபெத்தியத் தலைவர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுதந்திரமாக தங்கள் நாட்டில் வாழ்ந்த அவர்கள் சீரழிந்து அகதிகளாய் வாழ்ந்த அவலம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் தோல்வி அடைந்தபோது தலை குனிந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். எனக்கு ஏற்பட்ட மனக்கொதிப்பில் நான் பத்திரிகைத் தொழிலை விட்டு விட்டு ராணுவத்தில் சேர ஒரே நாளில் முடிவெடுத்தேன் என்பதை நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கே வியப்பாய் இருக்கிறது. நேருவின் சீன விவகாரம் ஏற்படுத்திய மனக்கசப்பு தான் அந்த உந்துதலுக்கு முக்கிய காரணமாகும். 

அப்படித் துவங்கிய என் ராணுவ சேவை ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நுண்ணறிவுத் துறையில் (ஐணtஞுடூடூடிஞ்ஞுணஞிஞு இணிணூணீண்) தொடர்ந்த போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் சேவை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அப்போது இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் அரசியல் கொள்கைகளைப் பற்றி எனக்கு ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது. அந்தப் பின்னணியில் பார்க்கும் போது, இந்திய ராணுவத்தை நேரு 1962 போரில் மெத்தனமாக கையாண்ட விதத்தில் குறைபாடுகள் தென்படுகின்றன.

ஜெர்மானிய போர்க்கலை நிபுணரான காரல் வான் க்ளாஸ்விட்ஜ் போர் என்பது அரசியலை மாற்று முறையில் தொடர்வதே ஆகும் என்று விளக்கம் கூறினார். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ராஜதந்திரம் தோல்வியுற்றபோது ஜெர்மனியின் மீது ராணுவத்தால் அழுத்தம் ஏற்படுத்தி கடைசியில் ஹிட்லரை படு தோல்வி அடையச் செய்தது க்ளாஸ்விட்ஜின் போர்த் தத்துவத்தின் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். நேரு அவ்வாறு ராணுவத்தை உபயோகிக்காமல், ராணுவத்தின் யோசனைகளை விலக்கி, சீனாவின் பேச்சை நம்பி மெத்தனமாக இருந்ததே அவர் 1962-ல் அடைந்த பின்னடைவுக்குக் காரணமாகும். அதன் தாக்கத்திலிருந்து நேரு மீளவே இல்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நோய் வாய்ப் பட்டவர் மே 1964-ல் மறைந்தார். அந்தப் போரின் தாக்கத்தை இன்றும் இந்திய-சீன உறவில் ஏற்படும் உரசல்களில் நாம் பார்க்கிறோம்.

காந்தீயவாதியான நேரு அஹிம்சா வழியில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அரசு ராணுவத்தை அடக்கு முறையின் கருவியாகப் பயன்படுத்தினார்கள். அதனால் அதே ராணுவம் சுதந்திர இந்தியாவின் ராணுவமாக மாறிய பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ராணுவத்தை ஓரளவு சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். நேருவுக்கும் ராணுவத்தை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதில் தயக்கம் இருந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

நேரு மறைந்த பின்பு, பாகிஸ்தானைப் போல இந்தியாவிலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுமோ என்ற சந்தேகம் இன்றும் சில அரசியல் தலைவர்களிடையே இருப்பதாகத்தான் தெரிகிறது. அதுவே தற்போதைய அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டது ராணுவத்தின் துரதிர்ஷ்டமே. இதன் விளைவாக, பாதுகாப்பு சார்ந்த முக்கிய முடிவுகள் அரசியல் தலைவர்களால் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மட்டுமே ஆலோசனை நடத்தி எடுக்கப்படுவது  இன்று நடைமுறையாக நீடிக்கிறது. ஆகவே பல ஆண்டுகளாக ராணுவத்தின் ஆயுதத் தளவாடத் தேவைகள் தீர்க்கப் படாமல், ராணுவம் தயார் நிலையில் இல்லாமல் தொடர்ந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தருணத்தில் ஜவஹர்லால் நேரு 1947-ல் தேசிய பாதுகாப்பு அகடெமியைத் துவக்கி வைத்த போது ராணுவத்தைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. “நாம் பல தலைமுறைகளாக வன் நடத்தையைத் தவிர்த்து, சமாதான வழியில் தீர்வு காணவேண்டும் என்று பேசி வருகிறோம்...இருந்தாலும் வாழ்க்கையில் நாம் எந்த எதிர்பாராத நிகழ்வையும் எதிர் கொள்ளத் தயாராய் இல்லாவிட்டால் நமக்கு தோல்வியே ஏற்படும்...தேசத் தந்தை காந்தியே தோற்று ஓடுவதை விட கையில் வாள் எடுப்பதே மேல் என்று கூறியுள்ளார்...ஆகவே நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் நவீன போர் முறைகளைக் கற்று ராணுவம், கடற் படை மற்றும் விமானப் படை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார். நேரு சொன்னதை அவர் வாழ்ந்த போது செயல்படுத்தத் தவறினாலும் இப்போதாவது விழிப்படைவோம் என நம்புகிறேன். அதுவே நமது நலனுக்கு அவசியமாகும்.

 (கர்னல் ஹரிகரன் இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்)

மார்ச், 2014.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com