பால் உற்பத்தியை தொழில் மயமாக்கப் பார்க்கிறார்கள்!

போராட்ட களத்தில் மாணவர்களும் இளைஞர்களும் நின்றபோது அவர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றிய புரிதலைக் கொடுத்தவர் காங்கேயம் காளைகளைக் காப்பதற்காகப் பல்லாண்டுகளாகச் செயல்பட்டுவரும் கார்த்திகேய சிவசேனாதிபதி. இந்திய உள்நாட்டு மாட்டினங்கள் பற்றி ஆழ்ந்த புரிதல் உடையவரான இவரிடம் போராட்டத்தை  மாணவர்கள் திரும்பப்பெற்ற பின்னர் பேசினோம்.  

உள்நாட்டு கால்நடை இனங்களின் முக்கியத்துவம் என்ன?

எப்படி ஒவ்வொரு சீதோஷ்ணநிலைக்கும் ஒவ்வொரு உணவு தேவையோ அதுபோல்தான் விலங்குகளிலும். இட்லி என்கிற உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இங்குள்ள சீதோஷ்ணநிலையில்தான் இட்லி மாவு புளிக்கும். இதுபோல் அந்தந்த பகுதியில் அந்தந்த உணவுவகைகள் உண்டு. அதுபோல்தான் நாட்டுமாடுகளும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றமாதிரி இருக்கின்றன. அப்புறம் கலாச்சார ரீதியான விஷயங்களும் நாட்டு  மாடுகளுடன் கலந்திருக்கின்றன. ஒரு குழந்தைப் பேறுக்குப் பிறகு கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு ஆச்சி மாடு என்று ஒரு மாட்டைக் கொடுக்கும் பழக்கம் மதுரைப்பக்கமும் கொங்குப் பக்கமும் இருக்கிறது. வெளிநாட்டு மாட்டைக் கொடுக்கமுடியாது. நல்ல பால் என்கிற ஏ2 வகைப்பாலை நாட்டு மாடுகள் தருகின்றன. அவற்றுக்கு நோய்கள் எளிதில் வராது. சாணிக்கழிவுகள் வைத்து இயற்கை விவசாயம் செய்தால் உரம் பூச்சிமருந்து செலவு கிடையாது. எந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியும் தற்கொலை செய்துகொள்வது  கிடையாது. இது மிக முக்கியம். விவசாயிகள் நன்றாக வாழவேண்டும் என்றால் இயற்கை விவசாயம் செய்யவேண்டும்.

பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காகத்தான் செயற்கை கருவூட்டல் மூலம் வெளிநாட்டு காளைகளுடன் கலப்பு செய்யப்பட்ட மாடுகள் உருவாக்கப்பட்டன அல்லவா? இந்த உற்பத்திப் பெருக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முன்பு 95 சதவீதம் பேர் கிராமங்களிலும் ஐந்து சதவீதம் பேர் நகரங்களிலும் இருந்தார்கள். பாலை விற்பது என்றைக்குமே நமக்கு பழக்கம் இல்லை. வீட்டுத் தேவைக்காக மட்டும்தான் பால். மீதியை கன்று குடிக்கும். இப்படி இருக்கும் நிலையில் நிறையபேர் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். அங்கு மாடுகள் வைத்துக்கொள்ள முடியாது. எனவே மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப நிறைய பால் உற்பத்தி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வெண்மைப் புரட்சிக்காக வெளிநாட்டு மாடுகளைக் கொண்டுவருகிறார்கள். அதில்தான் நம் மாடுகள் அடிவாங்க ஆரம்பிக்கின்றன.

பால் உற்பத்தியையும் அதிகரிக்கவேண்டும். அதே சமயம் உள்நாட்டு மாட்டினங்களையும் பாதுகாக்கவேண்டும் என்கிற சமநிலை இருந்தால் நன்றாக இருந்திருக்குமா?

தமிழ்நாடு அரசை எடுத்துக்கொண்டால் கடந்த இருபது ஆண்டுகளாக பால் கறக்கும் மாடுகளில்தான் கவனம் செலுத்துகிறார்கள். இது தவறான கருதுகோள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலை செய்யும். புலியின் வேகத்தில் யானை ஓடமுடியுமா? மாணவர்களை பள்ளிக்கூடத்தில் ரேங்க் போட்டு தரம் பிரிப்பது போன்ற தவறான விஷயம் இது.

கலப்பின பால்மாடுகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அவை தரும் பால்தான்  வாழ்வாதாரமாக இருக்கிறது. அவர்களின் பால் தரமற்றது என்பது இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில்  பிரச்சாரம் செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தைக் குலைப்பது ஆகாதா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைப்பது எங்கள் நோக்கம் இல்லை. நாம் கவனம் செலுத்துவது நாட்டில் தொழில்மயமாக பால் உற்பத்தியையும் விவசாயத்தையும் கொண்டுவரப்பார்க்கிறார்களே அவர்களுக்கு எதிராகத்தான்.  உலகத்திலேயே அதிக பால் உற்பத்தி செய்யக்கூடியது இந்தியா.  அதைவிட முக்கியம் அதில் 40 சதவீதப்பால் எருமையிடம் இருந்து வருகிறது. எருமைப்பாலும் ஏ2 பால்தான். உலகிலேயே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் மாடுகளை வைத்து பால் உற்பத்தி செய்வது இங்குதான்.  வெளிநாடுகளில் சின்ன சின்ன அளவில் மக்கள் மாடுகளை வைத்திருக்கமாட்டார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் மாட்டுப்பண்ணைகளை வைத்திருக்கின்றன. அந்த வர்த்தகத்தை இங்கே கொண்டுவருகிற நோக்கம் இந்த விலங்கு நல அமைப்புகளுக்கு இருக்கிறது. சின்ன விவசாயிகளைச் சாகடிப்பதே அவர்களின் நோக்கமே. இதைத்தான் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். ஜெர்சி பசு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்.

பிப்ரவரி, 2017.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com