பிரபல எழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்

ஒரு முறை சக எழுத்தாளரொருவர் ''பிரபலம்'' என்கிற செருக்கில் நான் தருக்கித் திரிவதாக வசை பாடியிருந்தார். நான் ரொம்பவும் பதறிவிட்டேன். வருத்தம் சூழ்ந்து கொண்டது. கொஞ்சூண்டு ஆனந்தமும்.  ஆனந்தம் ஏனெனில் நான் ஒரு பிரபலம் என்பதே அவர் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. இன்னும் இது ராஜேந்திரண்ணனுக்குத் தெரியாது.அவர் பக்கத்து வீடு. முப்பது வருடப் பழக்கம். ஞாயிற்றுக்கிழமைகளில் கோழிக் குழம்புகளை கைமாற்றிக் கொள்ளும் நெருக்கம்.

   தமிழில் பிரபல எழுத்தாளர் என்பது உண்மையில் ஓர் அரிய உயிரினம். ஆனால் எளிதில் காணக் கிடைப்பது. டீ க்கடை பெஞ்சில், ரேஷன் கடையில்,  இலவச மிக்சி க்யூவில், டாஸ்மாக் டேபிளின் மூணேமுக்கால் ஸ்டுலில்,  மழைத் தாரைக்கு ஒருக்களித்து நின்றபடி அரசுப் பேருந்தில், ''அவசியம் விடுப்பு வேண்டும் அய்யா... தவிர்க்க இயலாத நிகழ்வு...'' என்று குழைந்து குனிந்த கோலத்தில் அதிகாரிகளின் முன்...  இப்படி எங்கும் காணலாம்.

  ஒரு பிரபல எழுத்தாளர்... நான் அறிந்த வரையில் அவர் இரத்தம் கூடக் கருப்புதான். திருமணத்திற்குப் பின் வாரந்தவறாது வெள்ளிக்கிழமைகளில் மாகாளியம்மன் கோவிலில் தோன்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் '' மனைவிக்கு டிரைவராக வந்தேன்..'' என்று சொன்னார். பிறகு '' மனைவி ஒரு தனியுயிர்... அதன் கனவுகளை, நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டுமல்லவா?'' என்று சொல்லி முடித்து விட்டார். அவருக்குச் சோறு கூட வேண்டாம். பக்கத்திலேயே  ''ஜோதி மெஸ்'' இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அமைதி வேண்டும். அந்த அமைதியின் மீது அமர்ந்துதானே அவர் அமரகாவியங்கள் புனைய வேண்டும்? ரொம்பவும் பாவப்பட்ட ஜீவன்...
'' குடும்பத்தை உடைப்பதின் குதூகலம்'' என்கிற அவரின் பழைய காத்திரமான கட்டுரையொன்றை இப்போது நாம் நினைவு கூர்ந்து விடக்கூடாது. தன்னால் ஒரு கண்ணாடி டம்ளரைக் கூட உடைக்க முடியாது என்கிற உண்மை, அவருக்கு மணமுடித்த மறுநாளே புரிந்து விட்டது.

   எனக்கு எழுத என்று இதுவரை ஒரு தனியறை இல்லை. அவ்வளவு செழிப்பில்லை. அவ்வளவு வறுமையுமில்லைதான். கொஞ்சம் முயன்று ஒரு தனியறை சமைத்தாலும் அந்த அறையின் கதவுகளுக்கு யார் பொறுப்பு? லௌகீகம் குத்திக்குத்தி அதை உடைத்து விடாதா என்ன?

   கவிதை புனைய எனக்கு எந்த வசதியும் தேவையில்லை. மனதுக்குள்ளேயே எழுதி, மனதுக்குள்ளேயே எடிட் செய்து பஸ்ஸில் போகையில் செல்போனில் டைப் செய்து கொள்ளலாம். ஆனால் கட்டுரை எழுத ஒரு சேரும், டேபிளும் வேண்டும். எனக்கு அப்படியொரு டேபிளைத் தந்தது ஒரு பேக்கரி. பெயர் '' சஷ்டி பேக்கரி''. எனவே அதைத் தமிழ்க்கடவுள் முருகன் அருளியதாகவே எண்ணி மகிழ்கிறேன். நான் காலை நடை செல்லும் பக்கத்து ஊரில் உள்ளது அது. பத்து ரூபாய்க்கு ஒரு 'டீ' சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் கூட அங்கு அமர்ந்து வாசிக் கலாம்... எழுதலாம். ஆனால் கடைசி டேபிளில்... வியாபாரத்திற்கு இடையூறின்றி. '' பழைய யானைக் கடை'' என்கிற என் கனவின் பிரமாதமான காட்சிகள் பலதையும் அந்த டேபிளில் இருந்ததுதான் கண்டேன். பேக்கரிக்காரருக்கு  எழுத்து என்கிற விசயத்தின் மேல் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை.  நம்ப சிரமம்தான் என்றாலும் இப்போதும் சிலர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய் டி.வியின் 'நீயா நானா' வில் விருந்தினராகக் கலந்து கொண்டு திரும்பிய பிறகு மரியாதை இன்னும் கூடி விட்டது. இப்போது நானொரு பிரபலம். இனி அந்த ஒரு 'டீ' யைக் கூட குடிக்காமல் என்னால் மணிக்கணக்காக டேபிளைத் தேய்க்க முடியும். ஆனால் பிரபலத்திற்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டல்லவா?

   இன்று எழுத்தாளருக்கும் பிரபல எழுத்தாளருக்கு மான வித்தியாசத்தைக் கண்டறிவது சற்று சிரமமான விஷயமென்றே படுகிறது. முகநூலின் வருகைக்குப் பிறகு ஒரு எழுத்தாளன் தோன்றும்போதே புகழொடு தோன்றுகிறான். '' எனக்கென்று ஒரு உலகம்... என் நாடு.. என் மக்கள்..'' என்று ஏற்படுத்திக் கொண்டு அங்கு அவன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். அவன் கழுத்து மாலையில் எண்ணற்ற லைக்குகள், கொஞ்சும் இதயக்குறிகள், உச்சி முகரும் ''வாவ்''கள்.

   முன்னொரு காலத்தில் முன்னுரை எழுதுவதென்பது பிரபலம் என்பதற்கான அடையாளமாகப் பார்க்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் '' முன்னுரை முனுசாமி'' என்று நாமகரணம் பெறும்படி முன்னுரைகளாக தீட்டியெடுத்தவர் கவிஞர் மோகனரங்கன். ஆள் ஆறடிக்கும் அதிகம். ஆனால் இலக்கியக் கூட்டங்களில் இருக்கிற இடம் தெரியாது.
'' நீங்கதான மோகனரங்கன்...? '' என்று பரவசக் கூச்சலிட்டபடியே ஒரு ரசிகையேனும் அவரை முட்ட வந்து இதுவரை நான் கண்டதில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அவர் முன்னுரை எழுதுவதையே நிறுத்தி விட்டார். நானும் சில முன்னுரைகளை எழுதியிருப்பதாக நினைவு. ஒரு முன்னுரை நான் எழுதிய '' லட்சணத்தால்'' பின்னுரையாக பிரசுரம் கண்டது. அதைப் பின்னுரையாகச் சேர்த்துக் கொண்டது கூட கவிஞரின் நெஞ்சுறுதியையே பறை
சாற்றியது.

   முன்னுரை எழுதுவது போன்றே அதை எழுத மறுப்பதும் பிரபலம் என்பதன் அடையாளம் என்று நினைக்கிறேன். நான் அப்படிக் கொஞ்சம் மறுத்திருக்கிறேன். அதற்கு அந்தக் கவிஞரின் மீதான அன்பைத் தவிர பிறிதொரு காரணமில்லை.

     பிரபல எழுத்தாளர் என்பவரின் தலைக்குப் பிடிக்கிற சனி என்பது உண்மையில் அவரது காதல்கள்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பத்தடி தூரத்தில் விலகி நின்று, அவரையே உருகி உருகிப் பார்த்துக்கொண்டிருந்த பேதைப் பெண்ணை கன்னா பின்னாவென்று காதலித்து நாயகியாக்கி விடுவார். இப்போது தன் போனையே வெறித்துப் பார்த்தபடி சாமத்தும் துஞ்சாது துயருடன் படுத்திருக்கும் அவருக்குத் தெரியாது, அவர் எண் Block list& ல் இருப்பது. சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும். காதல் வறுமை அதில் தலையாயது.

  இப்போது எழுத்தாளர்கள் சிலர் டி.வி பிரபலமாக இருக்கிறார்கள். '' உங்கள டி.வில பார்த்திருக்கேன் சார்...'' என்று சொல்லி ஒருவர் ஆட்டோகிராப் கேட்கையில்,  '' நான் யார்? '' என்கிற தத்துவார்த்தமான கேள்வி அவர் முன் ஒரு டைனோசரென வளர்ந்து வாலாட்டி நிற்கும்.

   ஜெயமோகனின் சமீபத்திய புளித்தமாவு
சர்ச்சையில் '' பிரபல எழுத்தாளருக்கு அடி உதை'' என்று மகிழ்ந்து குலாவும் ஊடகத்தில் யாரேனும் அவரது ஒரு வரியையாவது வாசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஊடகங்களுக்கு செய்திகளை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த '' பிரபலம் '' அவசியம்.

  ராஜ்ஜியங்களில் ஆகக் குட்டியானது
எழுத்தாளனின் ராஜ்ஜியம். எவ்வளவு குட்டியென்றாலும் அங்கு கொலுவிருக்கவே அவன் உயிர் விரும்புகிறது. எழுத்தாளன் என்ன வானத்திலிருந்து குதித்தவனா? என்று அடிக்கடி கேட்கப் படுவதுண்டு. இல்லைதான். ஆனால்
நீங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் அவனால் உறுதியாக உங்களை வானத்தில் ஏற்றிவிட முடியும்.

  தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளன் 'பிரபல' என்கிற முன்னொட்டுக்கு ஆசைப்படுவதைக் காட்டிலும், தானொரு கலைஞன் என்னும் கர்வத்தை
நெஞ்சத்துள் ஊன்றிக் கொள்வதே உத்தமம். அதுவே அவனுக்கும் அவன் எழுத்துக்கும் வலு சேர்க்கக் கூடியது.   இங்கு '' பிரபல நடிகர்'' என்பதற்கும் '' பிரபல எழுத்தாளர்'' என்பதற்குமான இடைவெளியை எண்ணிப்பார்த்தால்... அதையெல்லாம் எண்ணியே பார்க்கக் கூடாது!

ஜூலை, 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com