புது அணை வேண்டாம் – முப்பது கோடியில் ஒரு தீர்வு?

புது அணை வேண்டாம் – முப்பது கோடியில் ஒரு தீர்வு?

தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையில் தண்ணீப் பிரச்னை இப்போது உச்சநீதிமன்றத்தில் மையம் கொண்டுள்ளது. அணையில் தமிழகம் 142 அடிக்கும் மேல் நீர் தேக்கலாம்; அணை வலிமையாகத்தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டாலும் கேரளம் விடாக்கண்டனாக உள்ளது.

இந்நிலையில் அணையை உடைக்காமலேயே தமிழகத்துக்குத் தண்ணீ கொடுக்கலாம் அதற்கு வழி உண்டு என்று  கேரளத்திலிருந்தே ஒரு  குரல் கேட்கிறது…

 பேராசிரியர் சி.பி.ராய்... கேரள மக்களுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயர். கடந்த காலங்களில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள மக்களின் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்டவேண்டும்  எனத் தீவிரமாக முழக்கமிட்டவர் அவர். முல்லைப் பெரியாறு அணைப் போராட்டக் குழுவின் தலைவராகவும் ஐந்தாண்டுகள் செயல்பட்டவர். அப்போது அணைக்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்னின்று பம்பரமாகச் சுழன்றவர். ஆனால் இன்று கேரள மக்களுக்கே வேண்டாதவராக போய்விட்டார் ராய். என்ன ஆச்சு? அணையை உடைக்காமல் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்க வழி உண்டு  என்று அவர் சொன்னதுதான் காரணம்.

சி.பி. ராயை கேரள மாநிலம் கோட்டயத்தில்  ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

இனி பேராசிரியர் செம்பகமங்கலம் பீட்டர் ராய்....

‘‘எனது சொந்த ஊர் இடுக்கி மாவட்டம் கட்டபனா அருகிலுள்ள கொச்சு தோவாளா என்ற கிராமம். எம்.ஏ. ஆங்கிலம் முடித்தபிறகு  1989ம் ஆண்டு இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் என்ற ஊரில் உள்ள எம்.இ.எஸ் கல்லூரியில் முதன்முதலில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அப்போது சுற்றுச்சூழலில் அதிக நாட்டம் இருந்தது. எனது மனைவி மெர்சி வேதியியல் துறை பேராசிரியர்.  அவர் 1990ல் பாலக்காடு  மாவட்டம் பட்டாம்பி என்ற ஊரிலுள்ள அரசுக் கல்லூரியில் பணியாற்றினார். அப்போது கல்லூரி

பேராசிரியர்களுக்கான குவார்ட்டர்ஸ் கட்டுவதற்காக   கேரள அரசு, கல்லூரியின் உள்ளே இருந்த நான்கரை ஏக்கர் இடத்தை சீர்செய்தது. அதில் பல்வேறு மரங்கள் அழிக்கப்பட்டன. பசுமையான இடம் பாலைவனமாக

மாறிப் போனது. நான் வார விடுமுறை  நாட்களில் வரும் போது இதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஏனெனில் மரங்கள் இல்லாது வெப்பம் வாட்டி எடுத்துவிட்டது. இதனை உடனே சரிசெய்ய கல்லூரி முதல்வர் அனுமதியுடன் நானே மரங்களை  நட ஆரம்பித்தேன். இன்று பட்டாம்பி அரசுக் கல்லூரியில் என்னுடைய மரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அங்கே என் முகம் அறியாதவர்களுக்குக் கூட என் பெயர் தெரியும்’’. இதைத் தொடர்ந்து அதே  ஆண்டு கிரீன் லீஃப் என்ற சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவி மரக்கன்றுகளை நடும் இயக்கத்தை தொடங்கினார் சிபி ராய்.

‘‘தொடர்ந்து நான் என்னுடைய கல்லூரியிலும் மரங்களை நட ஆரம்பித்தேன். மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் என்னுடைய அமைப்பில் இணைந்து ஆர்வமாக மரக்கன்றுகளை நட்டனர். என்னுடைய அமைப்பில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் ஒரு மரக்கன்றை நட வேண்டும். அவ்வளவு தான். மற்றபடி இந்த அமைப்பு பதிவு செய்யப்படாத  எங்களுக்குள் இயங்கிய ஒன்று தான். பிறகு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொது இடங்கள் என இடுக்கி மாவட்டத்திலுள்ள எல்லாப் பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். 

இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை இங்கே  நட்டுள்ளோம். இப்போது கோட்டயத்திலும் இந்தப் பணியை செய்து வருகிறேன். 2009ல் எங்கள் கல்லூரிக்கு கேரள அரசு வனமித்ரா என்ற விருதை  வழங்கியது. அதுவரை பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த விருது முதன்முதலில் எங்கள் கல்லூரிக்கு கிடைத்தது. நாங்கள் கல்லூரியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.  பிறகு 2010ல் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்’’

முல்லைப் பெரியாறு அணைப் போராட்டத்திற்கு எப்படி வந்தார்?

‘‘2002ல் முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் காங்குளம் சப்பாத்து என்ற இடத்தில் புதிய பாலம் வேண்டி மக்கள் போராட்டம் நடத்தினர். சப்பாத்து என்றால் உயரம் குறைந்த பாலம்  அல்லது தரைவழிப்பாலம் என்றும் கூறலாம். முல்லைப் பெரியாறில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்லும்.

அதுதான் கோட்டயம் செல்லும் பிரதான சாலை என்பதால் வெள்ளக் காலங்களில் போக்கு வரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். நான் வார விடுமுறைகளில் கோட்டயத்திற்குச் செல்வது வழக்கம். அப்போது தான் இந்த மக்களின் போராட்டத்தைக் கவனித்தேன். நானும் அந்த மக்களுடன் இணைந்து புதிய பாலத்திற்காக போராட்டத்தில் பங்கெடுத்தேன். 113 நாட்கள் நடந்த  போராட்டத்திற்குப் பிறகு அரசு புதிய பாலம் கட்டச் சம்மதித்து பாலமும் கட்டி தந்தது. பிறகு 2006ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்

கொள்ளலாம் என கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் இங்கே  போராட்டங்கள் பலமாகின்றன. நான் முதலில் பாலப் பிரச்சனையில் அந்த மக்களுக்கு நன்கு அறிமுகமாகி இருந்ததால் உண்மை நிலவரம் எதுவும் தெரியாமல் போராட்டத்தில் பங்கெடுத்தேன். முல்லைப் பெரியாறு அணை பற்றி துளியளவும் அப்போது எனக்கு தெரியாது. முல்லைப் பெரியாறு சமர சமிதி  அதாவது முல்லைப் பெரியாறு போராட்ட அமைப்பு என்ற இயக்கத்தை ஆரம்பித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை சப்பாத்து ஊரில் தொடங்கினோம்.

நானும் பாதிரியார் ஜாய் நிரம்பேலும் சேர்ந்து  48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தோம். பிறகு அடுத்தடுத்த நாட்கள் மக்கள் இருந்தனர். அது இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. பிறகு 2007ல் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

அப்போது பாதிரியார் ஜாய் வெளிநாடு சென்றுவிட்டதால் முழுப் பொறுப்பும் என்னிடம் வந்தது.முதலில் கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கிடையே  அணையைப் பற்றி எனக்கு ஓரளவு பரிச்சயம் ஆனது. அந்நேரத்தில் தான் கேரள அரசு புதிய அணை கட்டதீர்மானித்து அதற்கான ஆய்வுகளிலும் இறங்கியது. நாங்களும் அதுதான் பாதுகாப்பு என்று கருதினோம். ஆனால் 2011ல் அந்தப் பகுதியில் 29 தடவை சிறியதும் பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 

இது எனக்குள் பெரிய பயத்தை ஏற்படுத்தியது. இருக்கும் அணையை உடைத்து புதிய அணை 1300 அடி தள்ளி கட்டப்படும் எனவும் நீரை 192 அடி வரை தேக்கிக்கொள்ள முடியும் எனவும் கேரள  அரசு தெரிவித்தது. ஏற்கனவே நிலநடுக்கம் உள்ள அந்த இடத்தில் இது சாத்தியமாக முடியுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஜான் மாத்தாய் என்ற நிலநடுக்கம் பற்றிய அறிவியல் நிபுணர் அந்தப் பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் வர சாத்தியம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இது மேலும் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. கடந்த  2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினோம். புதிய அணை, புதிய ஒப்பந்தம் இதுதான் எங்கள் சாராம்சம்.  அது  ஒன்று தான் பாதுகாப்பு என்று அனைத்து மலையாள மக்களும் நினைத்தனர். புதிய வழிகள் பற்றி யாரும் சிந்திப்பதாக இல்லை. மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் நான் மட்டும் மாற்றிச் சிந்தித்தேன். புதிய வழிகளைக் காண போராட்டத்தில்  கலந்து கொண்டே ஆராய்ந்து கொண்டும் இருந்தேன். 

பல்வேறு தரப்பினரிடமும் பேசினேன். டிசம்பர் 25ம் தேதி எங்கள் அமைப்பு தொடங்கி ஐந்தாவது வருட ஆண்டு விழா அன்று அமைப்பில் உள்ள எட்டுநிர்வாகக்குழு உறுப்பினர்களிடமும் எனது திட்டத்தை  முன்வைத்தேன். அதாவது இப்போது 104 அடிக்கு மேல் நீர் வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும். 136 அடிக்கு மேல் நீர் வந்தால் கேரளாவிற்கு நீர் வரும். 104 அடி என்பது நிலையான இருப்பு.  இப்போது 106 அடியில் இருந்து தமிழகத்திற்கு சுரங்கப் பாதை வழியாக தண்ணீர் வருகிறது.

எனது திட்டம் தமிழகப் பகுதியில் மற்றொரு இடத்தில் 50 அடி நீர் மட்டத்திலேயே 1300 அடி நீளத்தில் ஒரு சுரங்கப் பாதை அமைத்து  தமிழகத்திற்கு நீர் கொடுக்கலாம் என்பது தான். அப்போது தண்ணீர் தேக்க நிலையை 100 அடியாக இருக்கச் செய்தாலே போதும். கேரளாவிற்குஉறுதியான பாதுகாப்பு கிடைக்கும். படகு  சவாரியும் பாதிக்கப்படாது. தமிழகத்திற்கும் தொடர்ந்து இப்போது தருவதைவிட கூடுதலாக நீர் கொடுக்கவும் முடியும் என்று எடுத்துரைத்தேன். மேலும் புதிய அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் இந்த மதிப்பு மேலும் அதிகமாகலாம் என்றும் புதிய சுரங்கப்பாதையை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலேயே அமைத்துவிடலாம் என்றும் கூறினேன். ஆனால் இந்தப்புதிய திட்டத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவுமில்லை. மாறாக எனக்கெதிராகப் பேசினர். பிறகு நான் ஊடகங்களிடம் இந்தத் திட்டத்தைக் கூறினேன். ஆனால் செய்திகள்  அனைத்தும் தவறாக வந்தன. புதிய அணை தேவையில்லை- சி.பி.ராய் என தொலைக்காட்சியில் ஸ்க்ரோலிங் போட்டனர். தொலைக் காட்சிச் செய்திகளைப் பார்த்துவிட்டு போராட்டப் பந்தலில் உள்ள   மக்கள்  ஆவேசமடைந்தனர்.  அப்போது நானும் அங்கு தான் இருந்தேன்.  என் மீது செருப்பு வீசப்பட்டது. இதற்குள் கூட்டம் அதிகரிக்கவும் நண்பர்கள் சிலர் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து  பாதுகாத்தனர். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து நான் அந்ததிட்ட அறிக்கையை வாபஸ் வாங்குவதாக மக்களிடம் அவர்களே தெரிவித்தனர். ஆனால் நான் வாபஸ் வாங்க வில்லை. மறுநாள் டிசம்பர் 26 அன்று நான் போராட்டப் பந்தலில் அமர்ந்திருந்துவிட்டு மாலை  வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியை பார்க் கிறேன், பேரதிர்ச்சி! என்னை தலைவர் பதவியில் இருந்து வெளி யேற்றி விட்டனர்.

புதிய தலைவராக பாதிரியார் ஜாய்  நியமிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் பொது நலத்திற்காகப் போராடி இருக்கிறேன். ஆனால் இந்த மக்கள் புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலை எனக்கு அதிகமாகியது. இந்தியாவின் சிறந்த அணை நிபுணர் சி.டி.தத்தேவிடம் எனது திட்டத்தை அனுப்பினேன். அவரும் இந்தத் திட்டம் அருமையான ஒன்று என ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி  ஆனந்த் குழு அளித்த இறுதி அறிக்கையில் இரண்டாவது மாற்றுத் திட்ட மாக என்னுடைய திட்டத்தையும் சேர்ந்திருந்தனர்.

தற்போது அக்குழுவின் இறுதி அறிக்கையில் முதல் மாற்றுத் திட்டமாக  புதிய அணை இரண்டு அரசுகளின் சம்மத்துடன் கட்டிக் கொள்ளலாம் என்று இருக்கிறது. புதிய அணை கட்ட தமிழகம் நிச்சயம் சம்மதிக்காது. அதேநேரத்தில் 142 அடி நீரைத் தேக்கிக் கொள்ள கேரள அரசு சம்மதிக்காது. இந்நிலையில் கேரளத்துக்கும் பாதிப்பில்லாமல் தமிழகத்திற்கும் தண்ணீர் என்பது தான் எனது மாற்றுத் திட்டம். இதுமட்டுமே இருதரப்புக்கும் தற்போது சாத்தியமான தீர்வாக இருக்கமுடியும்’’ என்கிறார் ராய் அழுத்தமாக.  

‘‘இந்தப் புதிய திட்டம் குறித்து கோட்டயத்தில் ஒரு கூட்டம் நடத்தினோம். அதில் கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் 350 பேர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்  சாரு நிவேதிதா உட்பட சிலர் கலந்துகொண்டனர்.  இத்திட்டத்திற்கு  நல்ல வரவேற்பு இருந்தது. செப்டம்பர் மாதம் மீண்டும் கூட்டம் நடத்தவிருக் கிறேன். மக்கள் நிச்சயம் இதனை புரிந்துகொண்டு ஏற்றுக்  கொள்வார்கள்’’ என்கிறார் நம்பிக்கை பொங்க.

50 அடியில் சுரங்கப்பாதை அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. 104 அடிக்கு மேல் வரும் நீரை நேரடியாக சுரங்கப் பாதையின் வழியாக அனுப்பும் போது முதலில் போர்பே அணைக்கு வருகிறது.  இங்கு தான் நமது பவர் ஹவுஸ் உள்ளது. இப்போது 50 அடி என்று வரும்போது தேவையான நீர் இல்லாமல் நம்மால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது.

அடுத்து கடைசிப் பகுதி வரை நீர்  சென்றும்  சேராது. இப்போதுள்ள 136 அடி தேக்க நிலையிலேயே கடைசி பகுதி வரை நீர் கிடைக்காமல் நமது விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். 50 அடி என்றால் யாருக்கும் நீர் கிடைக்காது. பிறகு அவர்  கூறுவது போல் 100 அடியில் நீர் இருத்தினால் அவர்களுக்கும் போதுமான நீர் கிடைக்காது. நாம் அதிகளவு நீர் உறிஞ்சும் போது ஏரி என்பது மாறி இரண்டே ஆண்டுகளில் தண்ணீர் வற்றிவிடும். படகு சவாரி, சுற்றுலா என எல்லா பாதிப்புகளும் ஏற்படும். வனத்துறையும்  சும்மா இருக்காது. அப்போது பிரச்சனை இதைவிட பெரிதாகும். பிறகு மீண்டும் யாராவது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார். வழக்கு நீண்டு கொண்டே செல்லுமே தவிர பிரச்சனை தீராது. நான் 36 ஆண்டுகள் அங்கே பணியாற்றி இருக்கிறேன். அப்போது நான் சந்தித்த மூன்று பூகம்பங்களில்  அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அதனால் அணை உடையும் அச்சுறுத்தல் என்பதெல்லாம் வீண் வதந்தி. எனவே இந்த நீர் குறைப்பு, புதிய சுரங்கப்பாதை என்பதெல்லாம் திசை திருப்பும்  செயல். இதனால் பின்விளைவுகளே அதிகம்.

- பி.ஆர்.சுந்தரராஜன்

 முல்லைப் பெரியாறு அணையின் முன்னாள் அணைப்பொறியாளர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com