பெரிய மனிதர்கள்

பெரிய மனிதர்கள்

இணையத்தில் என்ன பார்க்கலாம்?

பத்தாயிரம் ரூபாய் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சாமானியன்கள் உள்ள நாட்டில் பத்தாயிரம் கோடிகளை லவட்டிவிட்டு அரசுக்கு பெப்பே காட்டும் பெரிய மனிதர்களின்  கதை பேட் பாய் பில்லியனர்ஸ் (Bad boy billionaries) என்ற நெட் ஃபிளிக்ஸ் வெப் தொடராக வந்துள்ளது.

இதுவரை விஜய் மல்லையா, நீரவ் மோடி, சஹாரா சுப்ரதா ராய் என மூன்று எபிசோடுகளை வெளியிட்டிருக்கிறார்கள். சத்யம் ராமலிங்க ராஜு அடுத்து வர உள்ளது. (லிஸ்ட் பெருசா இருக்கே, எத்தன சீசன் வருமோ?)

நாம் அண்ணாந்து நோக்குமளவிற்கு மிகப் பிரமாண்டமான தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்திய கோடீஸ்வரர்களின் சாதனைகளில் தொடங்கி அவர்கள் ஆடிய அழுகுணி ஆட்டம் வரை அத்தனையையும் காட்சிப்படுத்தி யிருக்கிறது  இந்தத் தொடர்.  பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் வாழ்க்கையையும் இணைத்துச் சொல்லியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

யுனைடட் பிரீவர்ஸ் என்ற சாராய சாம்ராஜ்ஜியத்திலிருந்து விஜய் மல்லையாவின் கதை தொடங்குகிறது. அப்பா, விட்டல் மல்லையா மக்கள் அறிந்திராத பெயர். அவரும் மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்தவர். ஆனால், விஜய் மல்லையா  உலகம் அறியும் நபராக இருக்க விரும்பினார்.

இந்தியாவில் மதுபான வகைகளை விளம்பரப்படுத்த முடியாது என்ற நிலையில் கிங் பிஷர் சோடா மூலம் அதை விளம்பரப்படுத்தினார். பார்முலா ஒன் டீம், கிரிக்கெட் டீம் என்று விஜய் மல்லையா அதகளப்படுத்தினார். அவரின் நீண்ட நாள் கனவான, கிங் பிஷர் ஏர் லைன்ஸ் அவரது சரிவிற்கு காரணமானது. 2005 இல் தொடங்கியது முதலே நஷ்டத்தை சந்தித்து வந்த இந்த வியாபாரம் 2011 ல் மூடும் நிலைக்கு வந்தது. இந்தியாவில் 900 பணியாளர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரப்படவில்லை. ஆனால், இது இந்தியாவில் மட்டுமே. மற்ற நாடுகளில் சம்பளம் சரியாக கொடுக்கப்பட்டுவிட்டது. ஆறு மாத சம்பளமில்லாத நிலையில் கிங் பிஷர் பணியாளரின் மனைவி குடும்பம் நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். ஏறக்குறைய அதே சமயத்தில் பல கோடி செலவு  செய்து தனது 60 வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய் மல்லையா. 2009 இல் கனடாவைச் சேர்ந்த வெரிடாஸ் என்ற நிறுவனம் கிங் பிஷர் ஏர் லைன்ஸ் மூழ்கும் நிலையிலிருப்பதை அறிவிக்கிறது. அதன் பிறகுதான் கடன் கொடுத்த வங்கிகள் மல்லையாவை நெருக்குகின்றன. ஏறக்குறைய 9000 கோடி கடனுடன் லண்டனுக்கு தப்பிச் செல்கிறார் மல்லையா. இன்று வரை எந்த பணமும் வந்தபாடில்லை.

மல்லையாவிற்கு ஐடிபிஐ, இந்தியன் வங்கி போல நீரவ் மோடிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி வகை தொகையில்லாமல் கடனை வாரி வழங்கி சிக்கலில் மாட்டியிருக்கிறது. இந்தியாவின் வைர தலை நகரான சூரத்திலிருந்து தொடங்கும்  நீரவ்வின் பயணம் குறுகிய காலத்தில் லண்டன், நியூயார்க்கில் பிரமாண்டமான கிளைகளை தொடங்குமளவிற்கு வளர்கிறது. நீரவ் வைரத் தொழிலில் பயிற்சி பெற்றது தன்னுடைய உறவினரான மெகுல் சோக்சியிடம். மெகுல் ஏற்கெனவே பொருளாதாரக் குற்றங்களுக்காக இந்தியாவில் தேடப்படும் நபர்.  2025 க்குள் உலகமெங்கும் 100 கிளைகள் என்ற நீரவ்வின் திட்டத்திற்கு பணம் எங்கிருந்து கொட்டுகிறது என்று யாரும் கேள்வி கேட்கவில்லை.

நீரவ் உலகமெங்கும் பல ஷெல் நிறுவனங்களை (லெட்டர் பேட் கம்பெனிகள்)  தன்னுடைய பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் தொடங்குகிறார். அந்த நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து தன்னுடைய பயர் ஸ்டார் நிறுவனத்திலிருந்து வியாபாரம் செய்வதுபோல போலியான வியாபாரக் கணக்கை காட்டி போலியாக நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துகிறார்.  வெளி நாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும்போது வங்கியிடம் லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்(ஃOக்) கொடுக்க வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளை சரிகட்டி ஃOக் இல்லாமலேயே பல வருடம் வியாபாரம் செய்கிறார். பழைய அதிகாரி ஓய்வு பெற்று புதியவர்கள் பொறுப்பேற்ற பிறகுதான் இந்த தகிடுதத்தங்கள் தெரியவருகின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கூற்றுப்படி 28000 கோடி பண மோசடி நடந்துள்ளது. வங்கிக்கு இழப்பாக 11000 கோடி ரூபாய் சொல்லப்படுகிறது. இதில் வங்கி வகையில் சிறையிலிருப்பது ஒரு டெபுடி மேனேஜரும், கடை நிலை கிளர்க் ஒருவரும். இவர்களா 28000 கோடிக்கு அனுமதி கொடுத்தது? அந்த அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? எதற்கென்றே தெரியாமல்  பேட்டரி வாங்கி கொடுத்தவர் 25 ஆண்டு ஜெயிலில் இருப்பது போலத்தான். பெரிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட எல்லாரும் தப்பிவிட அப்பாவிகள் மாட்டிக்கொண்டு விழிப்பதுதானே நமது நீதிமுறை!

மல்லையா போன்றே பிரச்னை வெடிக்கும் முன்பாகவே குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் செல்கிறார் நீரவ். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல ஊகங்கள் வந்த நிலையில் இங்கிலாந்தில்  இருப்பதாக அங்குள்ள டெலிகிராப் பத்திரிகை உறுதிபடுத்தியது. பத்திரிகையாளர்கள் கண்டு

பிடிக்கும் வரை இங்கிலாந்தில் சௌகர்யமாக தன்னுடைய தொழிலை கவனித்து வந்திருக்கிறார் நீரவ் மோடி. தற்போது இங்கிலாந்து சிறையில் இருக்கிறார் .

இவர்கள் இருவரைப் போலல்லாமல் இந்திய சிறைக்கு சென்றவர் சகாரா சுப்ரதோ ராய். இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக ஊழியர்களைக் (11 லட்சம்) கொண்ட நிறுவனமான சகாராவின் நிறுவனர் ராய். சிட் பண்ட் முறையில் வங்கியை நாட முடியாத சிறு வியாபாரிகளிடமிருந்து தொடங்கியது சகாரா. முதலீடு செய்தவர்கள் பணத்தை எடுக்க நினைக்கும்போது அதைவிட அதிக லாபமுள்ள வேறொரு திட்டத்தில் சேரும்படி ஆசை காட்டியிருக்கிறார்கள்.

இப்படி சாதாரண மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் புனேவுக்கு அருகில் மிகப் பெரிய ஆம்பி வேலி நகரம், விமானச்சேவை, கிரிக்கெட் ஸ்பான்ஸர் என்று இந்தியாவையே அதிர வைத்தது சகாரா. பொருளாதாரக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ராயை இந்த மாதம் கூட மீதமுள்ள 62600 கோடி கட்டச்சொல்லி நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.   

 இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட யாரிடமிருந்தும் இதுவரை எதுவும் வசூல் செய்யப்பட்டதிலை. 'இந்தியாவே இப்படித் தாம்பா' என்று பொதுவாகக் கருத்து  சொல்லும் மேற்குலக அறிவுஜீவிகளுக்கு இந்த தொடரில் ஜேம்ஸ் கிராப்ட்ரீ என்ற இங்கிலாந்து நூலாசிரியர் சொல்லும் செய்தி முக்கியமானது. 'நாடுகளைக் கடந்து நடக்கும் இது போன்ற பெரிய பொருளாதாரக் குற்றங்கள் வளர்ந்த நாடுகளின் வங்கிகள், வழக்கறிஞர்களின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பேயில்லை' என்கிறார்.

சிறு வணிகர்கள், பணியாளர்கள், வங்கி குமாஸ்தா என்று இத்தொடரில் வரும் ஒவ்வொருவரின் முகமும் வலியும் நம்மில் பதிந்து தொந்தரவு செய்கின்றன!

டிசம்பர், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com