போராட்ட பூமியில் 23 நாட்கள்!

போராட்ட பூமியில் 23 நாட்கள்!

டெல்லியில் நடக்கும் விவசா யிகள் போராட்டம் இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போராட்டம். லட்சக்கணக்கான

விவசாயிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்து நடத்துகிறார்கள். அதைக் காண எனக்கும் ஆர்வமிருக்காதா? கொரோனாவில் இருந்து மீண்டுவந்த அடுத்தவாரமே டெல்லி சலோ எனக் கிளம்பிச் சென்றேன்.

இந்த போராட்டத்தின் ஒழுங்கும் தீவிரமும் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

குறிப்பாக ஹரியானா பஞ்சாப் மாநிலத்து சீக்கிய விவசாயிகள் தங்கள் கலாசார வேர்களை எனக்குள்ளும் ஆழமாகப் பாய்ச்சி விட்டிருக்கிறார்கள்.

இருபத்து மூன்று நாட்கள் அவர்களுடன் தங்கி இருந்தேன். இடையில் ஒரு சின்ன இடைவெளியில் சென்னை வந்து மீண்டும் சென்றிருந்தேன்.

நல்ல டெல்லி குளிரில், சிங்கு எல்லையில்& அதாவது ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி வரும் தேசிய நெடுஞ்சாலை எண் 1- இல் நடந்த மறியல் போராட்டத்தில்-

 டென்ட் ஒன்றில் தங்கி இருந்தேன். நான்கு கனமான கம்பளிப் போர்வைகள், குளிருக்கு ஸ்வெட்டர், கோட், உள்ளே தெர்மல் இன்னர் என அணிந்தும் தாங்க முடியாத குளிர். காலை வேளைகளில் கால்கள் மரத்துப் போய்விடும்.

நான் தங்கி இருந்த இடத்தில் சுமார் 400 டென்ட்கள் அடிக்கப்பட்டு இருந்தன. ஏராளமான ட்ராக்டர்கள்.  பெட்ரோல் நிலையம் ஒன்றினை ஒட்டிய பகுதியில் இருந்த காலி இடம் அது. முதல் நாள் காலையில் எழுந்து தேநீர் பருகப்போனேன். அங்குதான் பக்‌ஷி சிங் என்பவரைச் சந்தித்தேன். என்னைக் கண்டதும் அமரவைத்து தேநீரும் பிஸ்கட்டும் அளித்தார். முதல் சந்திப்பிலேயே தன் அன்பால் கவர்ந்துவிட்டார். தேநீர்களை விதம் விதமாக வழங்குகிறார்கள். ஒரு டேங்கில் தேநீரைப் போட்டு நிரப்பி வைத்துவிடுவார்கள். இருபுறமும் நான்கு குழாய்கள். மேலே குவளைகள். எப்போது வேண்டுமானாலும் இலவசமாகப் பருகிக் கொள்ளலாம். 500 லிட்டர் தேநீர் பிடிக்கும் பெரிய சைஸ் டேங்குகள் அவை.

தேநீர் தயாரிப்பை பக்‌ஷி சிங்குடன் போய்ப் பார்த்தேன். விவசாய கிராமங்களில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் போன்றவை இலவசமாக போராட்ட களங்களுக்கு வந்து சேர்கின்றன.

பஞ்சாப்பில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் பங்களிப்பாக 5000 ரூபாய் வரை நன்கொடை அளித்திருக்கிறார்கள்.

போர்க்காலங்களிலும் போராட்டகாலங்களிலும் பசியுடன் யாரும் இருக்கக்கூடாது என்பதற்காக உணவு வழங்குவது சீக்கிய பண்பாடு. அதை இங்கே கடைபிடிக்கிறார்கள். இந்த சேவைப்பண்பாடு 'லங்கர்' என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. அவருடன் பழகி, சீக்கிய மத பண்பாடுகள் பற்றி அறிந்துகொண்டது நல்ல அனுபவம்.

நிஷாந்த் சிங் என்றொரு 21 வயது இளைஞர் என்னைக் கவர்ந்தார். நல்ல வாட்டசாட்டமான உடலமைப்பு. சிக்ஸ் பேக் உடல் ஆடையை மீறித் தெரியும்.  பின்னே இந்திய கபடி ஆட்டக்குழுவில் இடம்பெற்றிருப்பவர் என்றால் சும்மாவா? ஒரு நாள் திடீரென என்னை ஓர் இடத்துக்கு அழைத்துப் போனார். அங்கே ஏராளமான துணி மூட்டைகள் குவிந்து கிடந்தன. அங்கே நான் அணிந்திருந்த குளிராடைகளை கழற்றி வாங்கிக்கொண்டு, அவற்றை அங்கிருந்த துவைக்கும் எந்திரத்தில் போட்டு துவைத்து, அதைக் காயவைத்து, அயர்ன் பண்ணி திரும்ப அளித்தார். நானே செய்துகொள்கிறேன் என எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இது கப்படா லங்கர்! அதாவது ஆடைகளைத் துவைக்கும் சேவையாம்! அவர்கள் மதப்படி அழுக்கான ஆடை அணிந்திருப்பவர்களின் ஆடைகளைத் துவைத்து அளிப்பது வெகுமதியான பணி! அவர்களின் மதகுரு கோவிந்த் சிங் இட்ட கட்டளைகளுள் ஒன்று. என்னுடைய துணிகள் மட்டுமல்ல; ஏராளமானவர்களின் துணிகள் இங்கே மூட்டைகளாகக் குவிந்திருப்பதைப் பார்த்தேன்.

நான் தங்கி இருந்த சிங்கு& குண்ட்லி கிராமத்தில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இந்த போராட்ட முகாமில் வேலை வழங்கப்படுகிறது. அப்பகுதி மக்களும் குழந்தைகளும் இங்கேயே சாப்பிட்டுக்கொள்கிறார்கள். அப்படி வேலை பார்த்துக் கொண்டிருந்த ரவீந்தரும் அவரது மனைவியும் என்னை இங்கிலிஷ் வாலா என்று அழைத்தார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மொழி தெரியாத போதும் அந்த குடும்பத்தினர் என்னை அழைத்து உபசரித்துக்கொண்டே இருந்தது நெகிழ்வளித்தது.

ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அபிக்‌ஷா என்ற பெண்ணை போராட்டத்தின் இன்னொரு முனையான காசிப்பூர் எல்லையில் கண்டேன். அவரும் வேறு சில மாணவர்களும்  சேர்ந்து, அங்கே புத்தகங்களைச் சேகரித்து நூலகம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்பகுதி ஏழைக் கிராம மக்களின் குழந்தைகளுக்கு தீவிரமாக ஆங்கில வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள், நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்துவது என்பது போராட்டம் நடைபெறும் எல்லா இடங்களிலும் காணக்கூடிய காட்சி. காசிப்பூர் பகுதியில் சீக்கியர்கள் இல்லை. இது உத்தரப்பிரதேசப் பகுதி. இங்கு ஜாட்கள் தான் அதிகம். பதற்றம் நிலவிய இந்த இடத்தில் அபிக்‌ஷாவும் அவரது குழுவினரும் ஆற்றும் பணியானது இளைஞர் சக்திக்கு எடுத்துக்காட்டு.

பிரேம் என்றொரு துப்புரவுப் பணி செய்யும் தோழரைப் பற்றி சொல்லவிரும்புகிறேன். கூடாரத்தில் அதிகாலையில் எழுந்து கொஞ்ச நேரம் எழுதிக்கொண்டிருப்பேன். பனிவிலகாத அந்த நேரத்தில் என்னைக்காணும் அவர், தேநீர் கொண்டுவந்து தருவார். அப்பகுதியைக் கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளும் அவர், முதல் நாள் என்னைக் கண்டதும் காலைத் தொட்டு வணங்க முயன்றார். நான் தடுத்து அணைத்துக்கொண்டேன். அதிலிருந்து அவர் எனக்கு சிறுசிறு உதவிகள் செய்ய தாமாகவே முன்வந்து செய்துகொண்டிருந்தார். அங்கிள் என்று அழைத்து நன்றாகப் பழகிவிட்டார். நான் அங்கிருந்து ஊருக்குத் திரும்பும் சமயம் அவரிடம் விடைபெற்றபோது அவர் கண்கள் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். எனக்கு இந்தியும் தெரியாது. அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. உணர்வுகளால் நட்பு பாராட்டியவர்கள் நாங்கள். யாராலும் மதிக்கப்படாத தன்னை மதித்தவர் புறப்படுவதை தன்னால் தாங்க முடியவில்லை என அவர் சொன்னதாக அங்கிருந்த இந்தி அறிந்தவர்கள்  சொன்னார்கள். என் உணர்வுகளை நான் மறைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று.

இப்போராட்டத்தை ஓர் ஆய்வு நோக்கில் அணுகு வதற்காகவே  அங்கே சென்றிருந் தேன். போராடும் விவசாயிகள் தனித்துக் கிளம்பிவரவில்லை. அவர்கள் தங்கள் கிராமங்களை போராட்ட களத்தில் புனர் நிர்மாணம் செய்திருக்கிறார்கள். மாலை வேளைகளில் கலாசார நிகழ்வுகளை நடத்திக்கொண்டு ஊரைப் பிரிந்திருப்பது தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இப்போராட்டம் அடித்தள நகர்ப்புற ஏழைமக்கள் ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராகிறார்கள் என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறது

மார்ச் 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com