மாஸ்டர் டிகிரி படிக்கிறத விட அதிகமா ஒர்க் பண்ணும்போது கத்துக்கமுடியுது

பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு ஜெயித்த பல கணினி வல்லுநர்கள் கதை மேற்குலகில் உண்டு. பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பதா அல்லது ஒரு இடத்தில் வேலை செய்வதா என்கிறபோது பொதுவாக படிப்பதையே விரும்பும் இளைஞர்கள்தான் நம்மூரில் அதிகம். இந்த வழக்கத்தை உடைத்த மூன்று இளைஞர்களை சென்னையில் உள்ள டென்த் பிளானெட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் சந்தித்தோம். ஒருவர் ஒன்பதாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தியவர். இன்னொருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளியைத் தலைமுழுகியவர். இன்னொருவர் 12 ஆம் வகுப்புக்கு மேல் கல்லூரிக்கு செல்ல வாய்ப்பில்லாமல் வேலைக்குச் சென்று அப்படியே பட்டப்படிப்பும் படித்து உயர்ந்திருப்பவர்.

திவ்யா பழனி, 24

அந்தப் பெண்ணுக்கு +2வுடன் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலை. அவர் வேலைக்குச் சேர்ந்த இடம் சென்னையில் உள்ள டென்த் ப்ளானெட் டெக்னாலஜீஸ். 5000 ரூபாய் சம்பளத்தில் கணினிமுன் உட்கார்ந்தார். அதே சமயம் படிப்பை நிறுத்தவேண்டாம் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தபால்மூலம் கம்ப்யூட்டர் சையன்ஸும், பிபிஏவும் இணைந்த படிப்பை படிக்க ஆரம்பித்தார். அவர் வேலை பார்த்த நிறுவனமே அதற்கு கட்டணமும் செலுத்தியது. இரட்டை டிகிரி. வேலைக்கு வேலையும் ஆச்சு; படிப்புக்கு படிப்பும் ஆச்சு. அவரது கணினி வேலைத்திறனும் பெருகியது. இணையதள வடிவமைப்பு, இணையம், செல் போன் செயலிகள் என்று அவர் நிறையக் கற்றுக்கொண்டார். வேலைபார்த்தார். சம்பளம் பத்தாயிரம் ஆனது. பின் 30,000 ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது. இப்போது எம்.ஏ. யோகா படிக்கிறார்.  ஆறு ஆண்டுகள் வேலைபார்த்த அனுபவமும் இருக்கிறது. இன்று 50,000 ரூபாய் சம்பளத்தில் வேறு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு  தேடிவந்திருக்கிறது.

‘’அப்பா பார்த்த பிசினஸில் கஷ்டமான சூழ்நிலை. எனக்கு ஒரு அக்கா. எனக்குப்பிறகு ஒரு தம்பி, தங்கை. அவங்க படிப்புக்கு உதவி செய்யத்தான் என்னோட படிப்பை ப்ளஸ் 2வோட நிறுத்திட்டு வேலை தேடினேன். டென்த் ப்ளானெட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் என்னை இன்சூரன்ஸ் பத்தி ஒரு ப்ரெசென்டேஷன் கொடுக்கச் சொன்னாங்க.  அதுக்காக மூணுமாதம் கஷ்டப்பட்டு ஒரு ப்ரசெண்டெஷன் கொடுத்தேன். அப்புறம் எனக்கு வேலை கொடுத்தாங்க. நான் பயாலஜி படிச்சவள். கம்ப்யூட்டர் பத்தி எதுவுமே தெரியாது. சீனியர்ஸ்கிட்ட கேட்டு வேலை கத்துகிட்டேன். அப்படியே படிக்கவும் செஞ்சேன். இப்ப தனியா ஒரு ப்ராஜெக்ட் ஹாண்டில் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டேன்”

கம்ப்யூட்டர்ல மாஸ்டர் டிகிரி பண்ணாம யோகாவில் பண்றீங்களே?

‘’மாஸ்டர் டிகிரி படிக்கிறத விட இங்கே அதிகமா ஒர்க் பண்ணும்போது கத்துக்கமுடியுது. அதுதான் சப்ஜெக்டை மாத்திட்டேன்”

காலேஜ் போயிருந்தா?

என்னோடது பயாலஜி பேக்ரவுண்ட். அதனால் நான் அது தொடர்பான படிப்புதான் படிச்சிருப்பேன். இப்போ நான் ஐ.டி. ப்ரபஷனல் ஆகிட்டேன். என்னால குடும்பத்துக்கு உதவியும் செய்ய முடிஞ்சது என்பதே பெரிய சந்தோசம்.

எனக்கு 20 வயது ஆவதற்குள் என் கம்பெனி ஒரு கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்ய வேண்டும்!

சிந்துஜா, 17

13 வயதில் இந்தியாவின் மிக இளம்வயது சி.இ.ஒ. என்று அறியப்பட்டவர் சிந்துஜா. இப்போது அவருக்கு 17 வயது. தன் நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் செய்த வணிகத்துக்காக முதல்முதலில் 1.5 லட்சரூபாய் காசோலையையும் பெற்றுவிட்டார். இந்த பதினேழுவயதில் 20க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசிவிட்டார்.  பல சாதனையாளர் விருதுகளும் அவருக்குக் கிடைத்துவிட்டன.

சிந்துஜா ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிக்குப் போவதை நிறுத்தியவர். ஏழுவயதில் கணினி மீது ஆர்வம் வந்து அனிமேஷன் கற்றுக்கொண்டு கணினியே கதி என்று கிடந்தார். தந்தை ராஜாராமன் ஓர் ஓவியர். மகளின் திறமையைக் கண்டுகொண்டவர் தடைபோடவில்லை. படிப்பை 13 வயதில் ஒன்பதாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள டென்த்பிளானெட் டெக்னாலஜீஸ் நிறுவனத்திடம் தொடர்புகொள்ள அவர்களின் முதலீட்டுடன் seppan.com என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு சிந்துஜா சி.இ.ஓ ஆனார். இந்தியாவின் இளம் சி.இ.ஓ. என்று எகனாமிக் டைம்ஸில் செய்தி வந்தது. பல முன்னணிப் பத்திரிகைகளும் வியந்தன. சிந்துஜா பள்ளிக்கூடம் சென்று  படிக்கவில்லை. ஆனால் அவர் ஆபீசுக்குப் போனதையே கல்வி என மாற்றிக்கொண்டார். Blunder என்கிற ஓபன் சோர்ஸ் அனிமேஷன் மென்பொருளைப் பிரித்துமேய்ந்து கற்றுக்கொண்டார். உலகளாவிய அளவில் ஆன்லைனில் தொடர்புகள் கிடைத்தன. சென்னையில் பல வர்த்தக நிறுவனங்களுக்கு 3-டி விளம்பரங்கள் செய்துதரும் ஆர்டர்கள் பிடித்தார். இடையிடையே தனியாக பள்ளித்தேர்வுகளையும் எழுதிக்கொண்டார். இப்போது மூன்றுமாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு சி.இ.ஒ சிந்துஜா பிளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறார்.

‘’டீம் ஓர்க், கூட்டங்களில் பேசுவது, வர்த்தகம், கார்ப்பரேட் நடைமுறைகள் போன்றவற்றை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அத்துடன் என்னுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். எந்த கல்வி நிறுவனமும் இதைச் சொல்லித்தரப்போவதில்லை. என்னுடைய நோக்கம் எனக்கு 20 வயது ஆவதற்குள் என்னுடைய கம்பெனி ஒரு கோடிரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்கிறது என்ற அளவை எட்டவேண்டும் என்பதுதான்”

பள்ளிக்கூடம் போகவில்லையே... உங்கள் பழைய தோழிகள், நட்பு,ஜாலி இதெல்லாம் என்ன ஆனது?

“வீட்டிலேயே நான் ஜாலியாகத்தான் இருக்கிறேன். பழைய தோழிகளைப் பார்க்கும்போது சந்தோஷமாகப் பேசிக்கொள்கிறோம். எதையும் இழந்ததாக நான் நினைக்கவில்லை.” என்கிறார் இந்த இளம் சாதனையாளர்.

இப்போதைக்குப்ளஸ் 2-வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்து தன்னை இந்த உலகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று ஒரு ஜாலி சவாலுடன் படித்துக் கொண்டிருக்கிறார்.

பள்ளிக்கூடம்போயி, காலேஜ் போயி படிக்கிற படிப்பு எனக்கு வேண்டவே வேண்டாம்.

பரீட்சை என்றாலே எனக்குப் பயம்.

வருண், 19

”உங்க பையன் சதா கம்ப்யூடரையே சுத்திசுத்தி வர்றான். நாங்க சொல்ற வேலைஎதுவுமே செய்யறதில்லை..” ஆறாவது படிக்கும் பையன் வருண்மீது அவன் படித்த சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகம் குற்றம் சுமத்தியது. பெற்றோரிடம் புகார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்பையன் கேட்டான்: “எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். அதை ஏன் தடுக்கிறீர்கள்?” சீட்டு கிழித்து அனுப்பிவிட்டார்கள். இன்னொரு பள்ளிக்குப் போனான், அங்கும் எட்டாவதுக்கு மேல் படிக்காமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.

இப்போது 19 வயது ஆகும் வருணை ஒரு சீனியர் டெவலப்பராக டென்த் பிளானெட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் பார்க்கமுடிகிறது. ‘’எனக்கு படிப்பு, எக்ஸாம் எதுவுமே பிடிக்கலை. பிடிச்சதெல்லாம் கம்ப்யூட்டர் மட்டும்தான். அதனால் எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னுட்டேன். வீட்டிலேயே ஆன்லைன்ல பல விஷயங்களைக் கத்துட்டேன். அப்புறம்தான் இங்கே வந்து சேர்ந்தேன். இப்போ இங்கே 12,000 மாதம் சம்பளம் கிடைக்கிறது. அதைவிட வேலை பார்க்கிறது, புதிய டெக்னாலஜிகளைக் கத்துக்கிறது, அதைச் செய்துபார்க்கிறது. ப்ராஜெக்ட்களை முடிக்கிறதுன்னு மேலேமேலே போயிட்டிருக்கேன்” என்று  மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார் வருண்.

அப்பாவின் கிரெடிட் கார்டை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்தி சொந்தமாக செர்வர் ஹோஸ்ட்டிங் செய்து பணமும் சம்பாதித்திருக்கிறார் வருண். இதெல்லாம்இவர் வயதையொத்த மற்ற இளைஞர்கள் யோசித்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்பது முக்கியம்.

உங்கள் சமவயது நண்பர்கள்?

‘’எனக்கு நண்பர்களே ஒரு அஞ்சாறு பேருதான் இருப்பாங்க. ஆனால் எனக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கிற ரிச்சி ஸ்ட்ரீட்ல ஒரு ஐம்பது பேரை எனக்குத் தெரியும். ஆன்லைன்ல நான் ஒரு 500 தளங்களிலாவது உறுப்பினராக இருக்கேன். உலகளாவிய அளவில் எனக்கு ஆன்லைன் நண்பர்கள் இருக்காங்க. அதுபோதும்”

சரி பட்டப் படிப்பு?

“பள்ளிக்கூடம்போயி, காலேஜ் போயி படிக்கிற படிப்பு எனக்கு வேண்டவே வேண்டாம். பரீட்சை என்றாலே எனக்குப் பயம்.”

லட்சியம்?

‘’நம்ம நாட்டில் மிகப்பெரிய தகுதியும்  திறமையும் வாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது. வெளிநாடுபோயிருக்கிற நம் திறமைவாய்ந்த மூளைகளை இங்கே கொண்டுவரணும். இங்கயே எல்லோருக்கும் வாய்ப்புகளை உருவாக்கணும்”

 19 வயதுக்கு இது மிகப்பெரிய லட்சியமே.

ஏப்ரல், 2014.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com