முன்முடிவுகளில் இருந்து வெளியேறுங்கள்

முன்முடிவுகளில் இருந்து வெளியேறுங்கள்

நமக்கு ஆண் பெண் உறவு பற்றிய சரியான புரிதலும் இல்லை. தங்களது உடலைப் பற்றியோ, உறவைப் பற்றியோ, காதலைப் பற்றியோ சரியான புரிதல் இல்லை. உறவைப் பற்றி தவறாகப் புரிந்து கொள்கிறோம் அல்லது ஏற்கெனவே உறவைப் பற்றிப் போதிக்கப்பட்டிருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

 ஆண் பெண் உறவு பற்றிக் கற்பிக்கப்பட்டிருக்கும் விஷயங்களால் நிறைய உளவியல் சிக்கல்கள் நமக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதைக் கடப்பதற்கான வழிமுறை நமக்குத் தெரியவில்லை. ஆண் என்றாலே ஒருவிதமான விரோதத்தையோ அல்லது மோசமான எண்ணத்தையோ தரக்கூடியதாக பெண்களுக்கு இருக்கின்றது. இதுபோல் பெண்ணைப் பற்றிய சில கருத்துகளும் ஆண்களுக்கு உண்டு.

விரோதத்தோடும் அவநம்பிக்கையோடும் ஓர் உறவைக் கட்டமைக்கும் போது, அது சரியான உறவாகப் பரிணமிக்க முடியாமல் போய்விடுகிறது. முழுமையான நல்ல நட்பு உருவாக வேண்டுமென்றால், நாம் கற்பிதங்களிலிருந்தும், முன்முடிவு-களிலிருந்தும், கற்பனைகளில் இருந்தும்  வெளியே வரவேண்டும். இதை எதையும் களையாமல் உறவை உருவாக்கும் போது தான் உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. ஆண் & பெண் உறவில் பாலியல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகுவதற்கும், வன்முறைகள் ஏற்படுவதற்கும், அடக்குமுறை சார்ந்த விஷயங்கள் அதிகரிப்பதற்கும் காரணம் நம் ஆழ்மனதில் இருக்கும் மதிப்பீடுகள் தான்.

-சல்மா

குத்துவிளக்கு என்றால் என்ன?

குட்டிரேவதி

மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்த ஆணாதிக்க சிந்தனையும், பெண் ஒடுக்குமுறையும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில்  நீயா நானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன். அதில் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆண்கள் சொல்வதைப் பார்க்கும் போது, ஒவ்வொரு ஆணும் இரண்டாயிரம் வருடம் பின்னாடி இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் நவீன காலத்தோடு மல்லுக்கட்டி, தங்களை வலிமைப்படுத்திக் கொள்பவர்களாக, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்பவர்களாக போராடி வருகிறார்கள்.

நவீன தலைமுறை ஆண்களிடமே பழமைவாத சிந்தனை இருப்பது பாதகமான விஷயமாகப் பார்க்கிறேன். பெண்கள் என்றால் குத்துவிளக்கு மாதிரி இருக்கவேண்டும் என்பார்கள். அதுபற்றி விளக்கம் கேட்டால் அவர்களுக்குத் தெரிவதில்லை. 

இலக்கியத்தில் ஆண்கள் தொடர்ந்து வெறுப்புணர்வை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதைப்பற்றிய எந்தக் குற்றவுணர்வும் படைப்பாளிகளுக்கு இல்லை. ஒரு எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுக்கிறார்கள் என்றால், அவர் ஆண் பெண் பாலியல் பாகுபாட்டை அடிப்படையில் கடந்தவராக இருக்க வேண்டும். இந்த அடிப்படையான தகுதியை வளர்த்துக் கொள்பவர்களாக தமிழ்ப் படைப்பாளிகள் இல்லை.

தமிழ் ஆண் படைப்பாளிகள் தொடர்ந்து இரண்டு தலைமுறைகளாகப் பெண் படைப்பாளிகள் மீதான வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பெண் விடுதலை உணர்வை, பால் சமத்துவத்தை நன்கு வெளிப்படுத்தும் ஆண் படைப்பாளிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

நவம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com