மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை!

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை!

சில கேள்விகள்

பதின்மூன்று உயிர்களைப் பலி கொண்டபிறகு ஒரு வழியாக தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தமிழ்நாட்டுக்கு வந்த கதை மிக நீளமானது மட்டுமல்ல, நம் அரசியல் நிர்வாகிகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் கூட. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டம் ரத்னகிரி. 1992 -ல் அங்கே வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அரசு 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.அது தாமிர உருக்கு ஆலை அமைப்பதற்கான ஒதுக்கீடு. கடலோரத்தில் தொழிற்சாலை அமைவதுடன் இல்லாமல் அங்கே ஒரு துறைமுகமும் அமைக்கத்திட்டமிடப்பட்டது. அது அமையவிருந்த கிராமத்தின் பஞ்சாயத்து விழித்துக் கொண்டது. அதன் தலைவர் இந்த திட்ட நகலை வாங்கிப் பார்க்கிறார். எக்கச்சக்கமான கந்தக மாசு வெளிப்படவிருப்பதை அறிகிறார். அந்த மாவட்ட மக்களே திரண்டு இந்த திட்டத்துக்கு  எதிராகப் போராடுகிறார்கள். ஸ்டெர்லைட் இது பற்றிக் கவலைகொள்ளாமல் ஆலைக்கான கட்டடங்களை அமைத்துக்கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் பயிரிடும் அல்போன்சா மாம்பழங்கள், முந்திரி போன்றவற்றுக்கு இந்த ஆலையின் நச்சு எதிராக இருக்கும் என்று குரல் எழுப்புகிறார்கள். ஓராண்டாகப் போராட்டம் நடக்கிறது. ஒரு நாள் திரண்டு செல்லும் மக்கள் ஆலைக்குள் புகுந்து கட்டடங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.

இதன் பின்னர் சரத்பவார் தலைமையிலான மாநில அரசு, இந்த தொழிற்சாலை அமைந்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மாசு பற்றி ஆராய ஒரு குழு அமைக்கிறது. கடற்கரையோர சூழலை இந்த ஆலை மாசுபடுத்தும் என்று அந்த குழு சொல்கிறது. இக்குழுவின் அறிக்கையைப் பெற்று, இந்த தொழிற்சாலைத் திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிடுகிறார். ரத்னகிரி மக்கள்  நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்.

மகாராஷ்டிராவில் இருந்து விரட்டப்படும் இந்த ஆலை அடுத்த ஓராண்டில் வந்து சேரும் இடம் தூத்துக்குடி. 1994&ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் தருகிறது.  

மன்னார் வளைகுடா இதற்கு அருகே இருப்பதால் கடற்கரையில் இருந்து 25 கிமீ தள்ளி ஆலை அமைக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறது. ஆனால் இந்த விதியை மீறி 14  கிமீ தூரத்திலேயே ஆலை அமைகிறது. 1996 - ல் இயங்கத்தொடங்குகிறது. இடையில் எழும் மக்களின் எதிர்ப்புகள் நசுக்கப்படுகின்றன. போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.  நச்சு வாயுவால் பலர் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் விதிமீறல்கள் இருக்கின்றன என்று நீதிமன்றத்துக்குச் செல்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் முதன்முறையாக 1998ல் ஆலையை மூடுமாறு உத்தரவிடுகிறது. சில நாட்கள் மூடப்படுகிறது. 

‘நீரி' என்கிற அமைப்பு அளிக்கும் அறிக்கையை வைத்துத்தான் உயர்நீதிமன்றம் ஆலையை மூட உத்தரவிடுகிறது. ஆனால் ஒரு வாரம் கழித்து ஆலை இயங்க அனுமதி அளிக்கும் நீதிமன்றம், அதே அமைப்பை இன்னொரு அறிக்கை அளிக்குமாறு கேட்கிறது. மீண்டும் ஆய்வு செய்து 45  நாட்களில் நீரி தரும் அறிக்கை ஸ்டெர்லைட் ஆலை முழு அளவில் இயங்கலாம். அப்போதுதான் அது சுற்றுச்சூழல் பாதிப்புச் ஆய்வுச்சோதனையை செய்ய முடியும் என்று சான்றளிக்கிறது. ஆலை ஆரம்பிப்பதற்கு முன்பாக சுற்றுச்சூழல் பாதிப்புச் சோதனை செய்வார்கள். ஆனால் இங்கோ ஆலை தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பின் இந்த சோதனை அறிக்கை அளிக்கப்படுகிறது என்று ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் சுற்றுச்சூழல் ஆய்வாளர் நித்யானந்தம் ஜெயராமன்.

இதன் பின்னர் உச்சநீதிமன்ற ஆய்வுக்குழு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்று பல ஆய்வுகள். எல்லாவற்றுக்கும் தண்ணிகாட்டிக்கொண்டே வரும் ஸ்டெர்லைட் 2013 - ல்  உச்சநீதிமன்றத்திடம் ஆதாரபூர்வமாக சிக்குகிறது. ஆனால் தாமிரம் நாட்டுக்குத் தேவை என்பதால் 100 கோடி ரூபாய் பணத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் வசம் கட்டி, அதில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈடுகட்டுதல், மாசால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்தல் போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும் என தீர்ப்பு  வருகிறது. ஆனால் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு இடையிலும் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறி ஸ்டெர்லைட் விரிவாக்கப்பணிகளும் நடக்கின்றன. இடையில் நச்சு வாயுவால் பலர்  பாதிக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. என்ன நடந்தும் இந்த ஆலையை அசைக்கவே முடியவில்லை! பலமுறை ஆலை மூடப்படுவதும் இயங்குவதும் ஸ்டெர்லைட்டைப் பொறுத்தவரை சகஜமான கதை ஆகிவிட்டது.

  ‘‘1987 - 88 இல் கூடங்குளம், 1994இல் தூத்துக்குடியில் அமைந்த ஸ்டெர்லைட், கும்மிடிப்பூண்டியில் டாபர் & டூபாண்ட் ஆகிய திட்டங்கள் வந்தபோது சென்னையில் கூட்டங்களும், அதை எதிர்த்து வழக்குகளை தொடுத்த பணிகளில் எல்லாம் ஈடுபட்டோம். கும்மிடிப்பூண்டியில் அமையவிருந்த டாபர் டூபாண்ட் திட்டம் கைவிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மதிமுக சார்பில் வைகோ தலைமையில் போராட்டங்கள் நடைபயணங்கள் நடைபெற்றன. இரண்டாயிரம் பேர் வரை 1996 -ல் கைதானோம். இந்த ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் வைகோ தொடர்ந்த வழக்கும் ஒன்று,'' என்று நினைவுகூர்கிறார் திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் இருந்து வடகிழக்கே இன்னொரு மாநிலத்துக்குப் போகலாம். அந்த மாநிலத்தின் வளமான விவசாய பூமியில் 997 ஏக்கர் நிலத்தை மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தி ஒரு கார் உற்பத்தித் தொழிற் சாலைக்குத் தர முயன்றது. விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் மாநிலத்தின் முக்கியமான எதிர்க்கட்சியும் களமிறங்குகிறது. அம்மாநிலத்தின் பல இடதுசாரி சிந்தனையாளர்களும் பொதுச்சிந்தனையாளர்களும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தேசிய அளவிலான பெரும் கவனத்தை ஈர்க்கிறது. இத்தனைக்கும் பெரிய அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய திட்டம் அல்ல அது. அதன் அடிப்படையில் அத்திட்டம் எதிர்க்கப்படவில்லை. 

எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த நிறுவனம் திட்டத்தை நிறுத்திக்கொண்டு, வேறு மாநிலம் செல்கிறது. அதற்கு அடுத்த தேர்தலில் அத்திட்டத்தைக் கொண்டுவந்த, நீண்ட நாட்களாக ஆட்சி செய்துவந்த அரசு தோல்வியைச் சந்திக்கிறது. அந்த மாநிலம் மேற்குவங்கம். அத்திட்டம் சிங்கூரில் டாடா தயாரிக்க இருந்த சிறிய நானோ கார்திட்டம்! அப்போது களத்தில் குதித்த எதிர்க்கட்சி திருணாமூல் காங்கிரஸ்! அக்கட்சியையே மக்களும் ஆதரித்து அடுத்த தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள்!

ஆனால் தமிழ்நாட்டில் நடந்தது என்ன? பல மாநிலங்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஆலையை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி வரவேற்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வரும் எதிர்க்கட்சியும் அந்த ஆலை தொடர்ந்து அமைய அனுமதியும் ஆதரவும் தருகிறது. இரண்டு பெரிய கட்சிகளுமே அந்த ஆலைக்கு ஆதரவாகவே இருக்கின்றன. ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்துக்குக் சுற்றுச்சூழல் அமைப்புகள், உள்ளூர் அமைப்புகள், மதிமுக போன்ற கட்சிகளின் ஆதரவு மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் நடந்தது என்ன? பல மாநிலங்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஆலையை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி வரவேற்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வரும் எதிர்க்கட்சியும் அந்த ஆலை தொடர்ந்து அமைய அனுமதியும் ஆதரவும் தருகிறது. இரண்டு பெரிய கட்சிகளுமே அந்த ஆலைக்கு ஆதரவாகவே இருக்கின்றன. ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்துக்குக் சுற்றுச்சூழல் அமைப்புகள், உள்ளூர் அமைப்புகள், மதிமுக போன்ற கட்சிகளின் ஆதரவு மட்டுமே கிடைக்கிறது.

இந்த பிரச்னை முக்கியமானதாகக் கருதப்பட்டாலும்   மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு தேர்தல்களில் பலன் கிடைப்பதில்லை என்பதை ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் ஓர் அரசியல் விமர்சகர். தேர்தல் வந்தால் சாதி, பணம், கட்சி ஆகியவைதான் வாக்காளரிடம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேட்பாளர், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் சமூகப்பணி ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை! இது கணக்கில் கொள்ளப்படுமானால் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கி முன்னெடுக்க பெரும் அரசியல் கட்சிகள் முன் வந்திருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆலையை மூடும் போராட்டம் நடந்திருக்கவேண்டியம் அவசியம் இல்லாமல் போயிருக்கும்; இப்படி கொடூர உயிர்ப்பலிகள் நடந்திருக்காது.

மேற்குவங்கத்தில் சிங்கூர் போராட்டத்தின்போது அதற்குத் தலைமை ஏற்றுப் போராடிய திருணாமூலுக்கு அதற்கு மறு தேர்தலில் பலனும் கிடைத்தது. இங்கே தூத்துக்குடிப் போராட்டத்தில் களமிறங்கிய மதிமுக வுக்கு அம்மாவட்ட மக்கள் எந்த அளவுக்கு தேர்தலின் போது ஆதரவைத் தந்தார்கள்?  துப்பாக்கிச் சூடு நடந்து 13 பேர் கொல்லப்பட்ட பின்னரும் கூட, அந்த ஆலை உரிமையாளர் , ‘‘ இப்போதைக்கு ஆலை பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து ஆலையை நடத்துவோம்'' என்றுதான் சொன்னார். தங்கள் பிரச்னையில் ஆர்வம் காட்டாத கட்சிகளை தேர்தல் வரும்போது  புறந்தள்ளுவோம் என்று மக்கள் முடிவு செய்யாத வரை இதுவே தொடரும். இதற்கு சிறந்த உதாரணம் நீட் தேர்வு. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் நீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை! ஆனால் நீட் தேர்வை நம் மாணவர்கள் எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

1998, 2010, 2013, 2018....என  ஸ்டெர்லைட் மூடப்படுவது இது நான்காவது முறை.இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டும் என்கிறார் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞர் ஒருவர். இந்த அப்பாவி மக்களின் குரல் ஆட்சியாளர்களுக்குக் கேட்கிறதா?

ஜூன், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com