மௌனத்தில் விளையாடும் மனசாட்சிகள்

மௌனத்தில் விளையாடும் மனசாட்சிகள்

சில வார்த்தைகள் உலகின் எந்த மொழியிலும் கசப்பை தரக் கூடியவை. அதில் ஒன்று கோர்ட்.

கிட்டத் தட்ட ஓராண்டுக்கும்மேல் உலகின் பல முக்கியமான திரைப் பட விழாக்களில் இந்த மராத்தி மொழிப் படம் சுற்றிக் கொண்டும் விருது வாங்கிக் கொண்டும் இருக்கும் தகவல்கள் அவ்வப்போது காதில் விழுந்த பட்சத்திலும் அதன் பக்கத்தில் எட்டிப் பார்க்கத் தோன்றவில்லை. காரணம் அதன் தலைப்பு மட்டுமல்ல, களமும் தான். விதி, நான் வாழவைப்பேன், அவ்வளவு ஏன் பராசக்தி முதல்கொண்டு நாம் அதகளம் ஆடிய களம் அல்லவா கோர்ட். ஆனால், இந்த மராத்திப் படம் அறுபத்தி இரண்டாவது தேசிய விருதுகள்(2015) அறிவிக்கப் பட்ட போது, சிறந்த படமாக தேர்வு செய்யப் பட்டதும்,கொஞ்சம் சுவாரஸ்யம்  வந்தது. அதை ஒட்டி, அப்படத்தின் இந்திய ரிலீசுக்கான ட்ரைலர் அறிமுக வீடியோ ஒன்றை காண நேர்ந்ததும்,கோர்ட் படத்துக்கான முதல் சுவாரசிய தருணங்கள் அமைந்தன.

யூ ட்யூபில் கிட்டத் தட்ட முப்பத்தைந்து நிமிடங்கள் ஓடும்,அந்த ட்ரைலர் அறிமுக வீடியோ,அளித்தது சினிமா குறித்தான நவீன பிம்பமும்,எதிர்கால இந்திய சினிமாவின் நம்பிக்கைத் தருணங்களும் கூட.

சைதன்யா தமானே, விவேக் கோம்பர் இருவரும் நண்பர்கள். ஒரு குறும்படம் செய்து விட்டு,தன்னுடைய இருபத்து நாலு வயதில்(2009) கைவிடப் பட்ட ஒரு உணர்வுடன், மனமுடைந்து போயிருந்த சைதன்யா ஒரு புதிய திரைப் படத்திற்கான ஸ்க்ரிப்ட் ஐடியா வுடன் நண்பர் விவேக்கிடம் பேசுகிறார்.விவேக்கிற்கு அது மிகவும் பிடித்துப் போகவே,செய் நண்பா, நான் உதவுகிறேன், நாம் படம் பண்ணலாம் என்கிறார். அன்றிலிருந்து கிட்டத் தட்ட ஒரு வருட உழைப்பில்,ஒரு ஸ்கிரிப்ட், அதன் பின் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள். இந்தப் படத்தில் நடித்தவர்கள் சிலரைத் தவிர்த்து,மீதி அனைவரும் புதுமுகங்கள். இதில் பணியாற்றிய ப்ரொடக்ஷன் டிசைனர் முதற்கொண்டு எடிட்டர் வரை இதற்கு முன் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் வேலை பார்த்திராதவர்கள்.கோர்ட் படத்தின் உருவாக்கம் முடிய மூன்று ஆண்டுகள் பிடித்தன. சினிமா முடிந்ததும், நண்பர்கள் செய்த அடுத்த வேலை, அதை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பிலிம் பெஸ்டிவல் ஆக சுற்றியதுதான்.

இதோ, அமோல் பலேகரின் தலைமையிலான தேர்வுக் குழு  மேலே சொன்ன இரு நண்பர்களின் படத்தை இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இயக்குநர் சைதன்யா போர்ப்ஸ் பத்திரிகையால் மிகவும் நம்பிக்கைக்குரிய இளைஞராக தேர்வு செய்யப்பட்டார்.

மிகவும் நுணுக்கமான இழைகளைக் கொண்ட படம் கோர்ட்.சினிமா மொழியில் லேயர்கள் என்போம்.அவ்வளவு எளிதாக திரும்ப யோசிக்க முடியாத இம் மாதிரிப் படங்களின் அடிப்படை இந்த லேயர்கள் தான். நோலனின் இன்செப்ஷன், மனோஜ் நைட் ஷ்யாமளனின் சில படங்கள், தமிழில் விருமாண்டி ஆகியவற்றை சட்டென்று உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் கோர்ட், நவீன சினிமாவாகும் முதல் தருணம்,மிகக் கவனத்துடன் அதில் சைதன்யா மேற்கொண்டிருக்கும் சில கட்டுப்பாடுகள் தான்.அதில் மிக முக்கியமானது கேமராவின் மௌனம். அதீத ஜென் தன்மையுடன் தான் காண்பிக்கும் காட்சிகளை மேற்கொண்டு ஒரு கேள்வியையும் நம்மிடம் எழுப்ப முயலாமல் படம் முழுவதும் இயங்குகிறது கேமரா.அதன் அதன் ஆன்மாவுடன் கதாபாத்திரங்கள் மெல்ல அறிமுகமாகி பின் அவர்களுக்கான பின்னணியை நாம் அறிந்து கொள்ளும்போது கேமரா சொன்ன காட்சிகளின் பிடிபடுதல் மாறுகிறது. இங்கே,எதுவும் நமக்கு சொல்லப் படவில்லை எனினும் நாம் எதோ ஒன்றை அப்பட்டமாக புரிந்து கொள்கிறோம். நவீன சினிமாவின் புதிய கூறு இதுவாகவே இருக்க முடியும். நாம் எளிதில் பின்பற்ற முடியாததும்.

தனித் தனியாக எடுத்தால், நான்கு முழுப் படத்திற்கான ஜீவனைக் கொண்டிருக்கும் நான்கு பின்புலங்களை, அதன் மனிதர்கள்  மூலம் கோர்ட்  என்கிற தளத்தில் ஒன்றிணைக்கிற முயற்சி தான் சைதன்யா தமானே செய்திருப்பது. மும்பையின் சேரி முட்டுச் சந்துகள், அதன் மக்கள், அங்கே நடக்கும் கலை விழாக்கள்,“இறந்தவனின்  பிணஊர்வலத்தில் எழுப்பப்படும் இசையும் பாடலும் கலை அல்லவே தோழா”என்று அடித்தர வர்க்க மனிதர்களுக்கு பாடற்குரல் எழுப்பும் அறுபத்து ஐந்து வயதான நாராயண் காம்ரே  ஒரு பின்புலம். முகம் தெரியாத, சாக்கடைக் குழியில் இறங்கி சுத்தம் செய்யும் வாழ்க்கையைக் கொண்டு வாழ்ந்த,இறந்து போன பரிவார், அவரது மனைவி, அவர்களது சேரி இன்னொரு பின்புலம். நாராயண் காம்ரேவின் தற்கொலைப் பாடல் ஒன்றைக் கேட்டு இரண்டு நாட்களில் பரிவார் என்கிற மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்று மும்பை போலீஸ் நாராயண் காம்ரேவை கீழ்க் கோர்ட்டில்(செஷன் கோர்ட் ) நிறுத்துவதில் படம் ஆரம்பிக்கிறது. அவருக்காக வாதாடும் வினய் வோரா என்னும் ஆக்டிவிஸ்ட், அவரது வசதியான குடும்பம்,மற்றும் இரவுகள் அடுத்த பின்புலம். பப்ளிக் பிராசிகியூட்டர் பெண்மணி, அவரது குடும்பம், குழந்தைகள், இது மற்றொன்று. ஒரு விசயத்தை அல்லது ஒரு மனிதனை அல்லது ஒரு போராளி குறித்த இந்தியர்களின் பார்வை எவ்வளவு சிக்கலானது, அவரவர்களின் நியாயங்களின் படி என்று கொஞ்சம் கொஞ்சமாக நாம் உணர ஆரம்பிக்கும்போது, மலைத்துப் போகிறோம்.

எந்த ஒரு குரலையும் எழுப்பாமல் கோர்ட் சொல்லியிருப்பது ஒரு தீவிர அரசியலை. இந்திய ஆளும் வர்க்கத்தின் கடைக் கோடி ஆன்மா ஒன்றிற்கும்,ஏனைய மக்களின் ஆன்மாக்களுக்கும் இடையே இருக்கும் புரிதல், அவநம்பிக்கை, கண்டுகொள்ளாத் தன்மை, சட்டத்திற்கும்,காவல்துறைக்கும் இவ்விரு ஆன்மாக்கள் குறித்தும் இருக்கும் விட்டேற்றித் தனம். படம் முடியும் போது நம்பிக்கையற்ற ஒரு எதிர்காலம் உணர்த்தி சுடுகிறது கோர்ட். அதைச் சொன்ன விதத்தில் கோர்ட்  மிக மிக நம்பிக்கையான சினிமா என்பது முரண்.

அதனாலேயே, அது ஆஸ்கரிலும் சுடும் என்று அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறதோ என்னவோ.

அக்டோபர், 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com