வாழ்க்கை எனும் சினிமாப் படம்!

வாழ்க்கை எனும் சினிமாப் படம்!

சினிமா வெற்றியின் 40 ஆண்டுகள்

திருமணத்திற்குப் பிறகு ஜெசியும் நானும் முதலில் வாழ்ந்த வீடு, சென்னை சூளைமேட்டிலுள்ள ராஜவீதிப் பக்கம் இருந்தது. ‘ஒரு மகாராஜா இங்கே வசிப்பதால் இத்தெரு ராஜவீதி என்றழைக்கப்படும்' எனக்கூறி அத்தெருவுக்குப் பெயர் சூட்டியவர், மறைந்த மலையாள நகைச்சுவை நடிகர் அடூர் பாசி.

பல பதிற்றாண்டுகள் ஓர் அரசரைப்போல் அவர் வாழ்ந்த தெரு அது. அதே தெருவில்தான் பழம்பெரும் நடிகை ஷீலாவும் சிலகாலம் வசித்து வந்தாராம். நாங்கள் செல்லும் காலத்தில் ஏழாண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அடூர் பாசியின் வீட்டில் யார் யாரோ தங்கிவந்தனர். ஷீலாவின் வீட்டின்மேல் 'ஷீலா கெஸ்ட் ஹௌஸ், நாள் வாட
கைக்கு' என பெயர்ப்பலகை.

அப்பகுதியின் பக்கத்திலுள்ள பெரியார் பாதை மீன் சந்தைத் தெருவில் ஒருநாள் நான் மீன்விற்கும் பெண்களிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கும்போது இடக்கையில் ஹெல்மெட் பிடித்த ஒருவர் குனிந்து நின்று வலக்கையால் மீன்களை அழுத்திப் பார்த்துக்கொண்டிருந்தார். 'மீன்' எனும் பெயர்கொண்ட மலையாளப் பெருவெற்றிப் படத்தில் காதல் நாயகனாக நடித்த பேரழகன் ஜோஸ் அவர்! மலையாள சினிமாவின் முக்கியமான சில பாடல்காட்சிகளில் பாடியாடியவர். சினிமாவில் பார்ப்பதை விட அழகனாகத் தோற்றமளித்தார். அந்த மீன் சந்தையின் துர்நாற்றத்திலும் நெரிசலிலும் அவரைப் பார்த்தது எனக்கு அதிர்ச்சியளித்தது.

''நீங்க திரை நடிகர் ஜோஸ் தானே?! ஏன் இந்த மீன் மார்க்கெட்டுல.. இப்டி?''

''எப்டி?''

''இல்ல.. இந்த மீனெல்லாம் அழுத்திப் பாத்து...''

''இது நல்ல கூத்து.. அந்தக் காலத்துல எப்பவோ சினிமாவுல நடிச்சதால எனக்கு நல்ல மீன் சாப்பிட வேண்டாமா? சினிமா நடிகனுக்கென்ன வாயும் வயிறும் இல்லியா? சினிமால பிசியா இருந்தப்பவும் நான் மார்க்கெட்டுல வந்து மீன் பாத்து வாங்கி
சாப்பிட்டுக்கிட்டுதான் இருந்தே தம்பீ''. மீண்டும் பலமுறை அச்சந்தையில் அவரைச் சந்தித்தேன். பார்த்தபோதெல்லாம் என்னிடம் பணிவாகப் பேசினார். சினிமாவின், வாழ்க்கையின் சில உண்மைகளை அவர் சொல்லாமல் சொன்னார்.

எழுத்துத் தொழிலாளன்

சில விளம்பரங்களும் பாடல்களும் தொலைக்காட்சி நாடகங்களும் எழுதிக் கிட்டத் தட்ட ஒரு தொழில்முறை எழுத்தாளனாக நான் மாறிவிட்டிருந்த காலத்தில்தான் ஜே.எம். ராஜு எனக்கு அறிமுகமானார். எனது சிறுவயதில் இலங்கை வானொலியின் வானமுதம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளராகவும் பாடகராகவும் இருந்தவர். உணர்ச்சி வெளிப்பாட்டுடன் பாடக்கூடியவர். சில மலையாளத் திரைப்படங்களிலும் புகழ்பெற்ற ஓரிரு பாடல்களைப் பாடியிருக்கிறார். இசையிலும் சினிமாவிலும் வானொலியிலும் மூழ்கிக் கிடந்த குடும்பம் அவருடையது. பத்து வயதில் பள்ளிக்கூடங்களில் நான் பார்த்த 16 எம் எம் படங்களில் பெரும்புகழ்பெற்ற பல குழந்தைப் பாடல்களைப் பாடிய லதா ராஜுதான் அவரது மனைவி. செம்மீன், ஏழு ராத்ரிகள் போன்ற மலையாளப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துமிருக்கிறார். லதாவின் தாயார் 1950 60களில் மலையாள சினிமாவின் நிகரற்ற பாடகியாக விளங்கிய சாந்தா பி நாயர். லதாவின் தந்தை மலையாள வானொலியின் தந்தை என்று அழைக்கப்பட்ட கே. பத்மனாபன் நாயர். சில மலையாளத் திரைப்படங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். அவ்வீட்டின் ஓர் அங்கமாகவே நான் மாறி விட்டேன்.

மலையாள, தமிழ் சினிமா மற்றும் சினிமாப் பாடல்களின் வரலாற்றைப்பற்றி அங்கிருந்து நிறைய அறிந்துகொண்டேன். அத்துடன் ஆரம்பகாலம் முதலான தென்னிந்திய வானொலியின் வரலாற்றையும் புரிந்துகொண்டேன். மலையாள இசையமைப்பாளர்கள் ரவீந்திரன், ஜான்சன், அவுஸேப்பச்சன், ஜெர்ரி அமல்தேவ் போன்ற பலர் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றனர். பழம்பெரும் நடிகர் உம்மர், பாடகர் ஜெயச்சந்திரன் போன்ற பலரை நான் முதலில் சந்தித்ததும் அவ்வீட்டில்தான். எனது ஆதர்சப் பாடகி எஸ். ஜானகியையும் அங்கேதான் முதலில் சந்தித்தேன். ஜே. எம். ராஜுவின் இசையில் நான் எழுதிய சில மலையாளப் பாடல்களை அவ்வீட்டிற்குள் இருக்கும் ஒலிப்பதிவுக் கூடத்தில் எஸ். ஜானகி பாடிப் பதிவு செய்தார். ஒரு பாடலில் 'ஸாந்த்வனம்' எனும் சொல்லை அவர் 'ஸ்வாந்தனம்' என்று தவறாக உச்சரித்துப் பாடினார் எனப்பட்டது எனக்கு.

மலையாள மொழியை கச்சிதமாக உச்சரிப்பவர் ஜானகி. நானோ தென்னிந்தியத் திரையிசையில் அவரை மிஞ்சும் பாடகிகள் இல்லை என நினைப்பவன். அவரிடம் இந்த உச்சரிப்புச்
சிக்கலை எப்படிச் சொல்வேன்? மிகவும் சிரமப்பட்டு ஒருவழியாக விஷயத்தை சொன்னேன். கோபத்தில் வெடித்தார் ஜானகி அம்மா. ''ஸாந்த்வனம் தானே? ஸாந்த்வனம்? நான் எத்தனை மலையாளப் பாட்டுல பாடியிருப்பேன்! நீ சின்னப் பையன். ஒனக்கு என்ன தெரியும்?'' கோபம் சற்று அடங்கியதும் பதிவு செய்த பகுதிகளை ஒருமுறை கேட்போம் என்றார். கேட்டபின் ''சரி.. ஷாஜிக்காக இன்னொரு முறை பாடறேன்'' என்று சொல்லியவண்ணம் அதை மீண்டும் பாடித்தந்தார். இம்முறை ஸாந்த்வனம் சரியாகவே வந்தது. அது எனக்கு மிகுந்த 'ஸாந்த்வனம்' (ஆசுவாசம்) ஆனது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

எஸ்.ஜானகியைப் போலவே எனது ஆதர்சங்களாக நான் வணங்கிய பல மேதைக் கலைஞர்களை நேரில் பார்த்துப் பழகும் வாய்ப்பு அக்காலத்தில்தான் எனக்குக் கிடைத்தது. தமிழில் எனது எக்காலத்திற்குமுரிய ஆதர்சப் பாடகர் டி.எம். சௌந்தரராஜனை அவரது வீட்டில் பலமுறை சந்தித்தேன். ஒருநாள் இரவு ரயிலில் மதுரை செல்லக் கிளம்பும்போது அதோ எனது எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார் சாக்‌ஷாத் டி.எம்.எஸ். எதிர்பாராத நேரத்தில்
சொர்க்கத்துக்கு சென்றிறங்கிய ஒருவனைப்போல் மனமகிழ்ந்துபோனேன். அன்று இரவுமுழுவதும் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தோம். தனது இசை வாழ்க்கையில் நிகழ்ந்த எண்ணற்ற விஷயங்களை அவர் என்னிடம் பகிர்ந்தார். அதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் பிற்பாடு           'டி .எம்.சௌந்தரராஜன் மக்களின் பாடகன்' எனும் கட்டுரையை மூன்று மொழிகளில் எழுதினேன்.

ஒருநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ''ஷாஜி தானே? நான் கெ.ஜெ. ஜாய். மலையாளத்தில் எழுபதுக்குமேல் படத்துக்கு ம்யூசிக் பண்ணியிருக்கேன். கஸ்தூரி மான்மிழி, மறஞ்ஞிருந்நாலும், அக்கரெ இக்கரெ நிந்நால்... எல்லாம் என்னோட பாட்டுதான்''. பதறிப்போனேன். 70, 80களில் மலையாளத்தில் மிகவும் உச்சத்திலிருந்த இசையமைப்பாளர். கிட்டத்தட்ட அவரோட எல்லாப் பாடல்களும் எனக்குத் தெரியும்.

''ஜாய் அண்ணே.. இப்படியெல்லாம் சொல்லி நீங்க என்னைச் சங்கடப்படுத்தாதீங்க. நான் உங்களுக்குத் தீவிர ரசிகன். உங்க எல்லாப் பாட்டும் எனக்குத் தெரியும்''

''உண்மைதானே! அப்டீன்னா நான் நடத்துற க்ளப் ஜாய்ல ஒடன சேருங்க. சந்தா வெறும் பத்தாயிரம் ரூபாதான்''

ஒருகாலத்தில் ஓர் அரசரைப்போல் வாழ்ந்த, திரையிசைத்துறையிலிருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்த இசைக் கலைஞர் அவர். முன்பு பார்த்தபோதெல்லாம் கிட்டே நெருங்கக் கூட நான் அச்சப்பட்ட மனிதர். சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமலானபோது தன்னால் ஆகாத சில தொழில்களுக்குக் கீழிறங்கி எல்லாவற்றிலும் தோல்வியுற்று அவதிகளும் விசனமும் நிறைந்த ஒரு காலத்துக்குத்தான் அவர் சென்றுகொண்டிருந்தார்.

கெ.ஜெ. ஜாயைப்போலவே இளவயதில் நான் ஆராதித்த இசையமைப்பாளர் ஷ்யாமுடனும் மிகவும் நெருங்கினேன். ஒருமுறை அவரைக் கௌரவிக்கும்பொருட்டு திருவனந்தபுரத்தில் ஓர் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான பாடல்களை நான்தான் தேர்ந்தெடுத்தேன். அப்பயணத்தில் முழுநேரமும் அவருடன் இருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அவரைச் சந்திக்க வந்தார் செம்மீன் கதாநாயகனும் மலையாளத்தின் ஆரம்பகால உச்ச நட்சத்திரங்களில் ஒருவருமாகயிருந்த மது. மாதவன் நாயர் எனும் தனது இயற்பெயரை சினிமாவுக்காகத்தான் மது என்று மாற்றினார். அவருக்கு 'மலையாள இசை, இலக்கிய விஷயங்களில் ஈடுபாடும் புரிதலுமுள்ள பையன்' என்று என்னை ஷ்யாம் சார் அறிமுகப்படுத்தினார். அப்போது மதுசார் அவரிடம் ''அதுக்குள்ளே மலையாள இலக்கியமெல்லாம் அத்துப்படி ஆக்கிட்டீங்களா ஷ்யாம்?'' என்று கிண்டலாகக் கேட்டார். ''பிறப்பால் தமிழன் என்றாலும் மனத்தால் மலையாளி தானே ஷ்யாம்'' என்றும் அவர் சொன்னார்.

ஷ்யாம் சாரின் குருநாதரும் எனது எக்காலத்திற்குமுரிய ஆதர்ச இசையமைப்பாளருமான சலில் சௌதுரியைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் எனக்கு ஒருபோதும் அமையவில்லை. 94இல் கடப்புறம் எனும் மலையாளப் படத்தின் இசை வேலைகளுக்காக அவர் சென்னையில் இருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாமல் போனது. 1995 செப்டெம்பர் 5ல் அவர் இறந்த செய்தியைக் கேட்டு மனமுடைந்து அழுதேன். 2002 காலத்தில் சலில்தாவின் குடும்பத்துடன் நெருங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த ஆண்டு நவம்பர் 19க்கு சலில்தாவின் 77ஆம் பிறந்தநாளை விமரிசையான ஓர் இசை நிகழ்ச்சியுடன் சென்னையில் ஏற்பாடு செய்தேன். சலில்தாவின் மனைவி சபிதா
சௌதுரி, மகள் அந்தரா, மகன் சஞ்ஜய் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடனமேதை பத்மா சுப்ரமணியமும் மேடையை அலங்கரித்தார். முன்பு சலில்தாவுடன் உதவியாளராகவும் கருவியிசைக் கலைஞராகவும் பணியாற்றிய இளையராஜா நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க, பாலு மகேந்திரா சலில்தாவைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். இருவரையும் நான் முதலில் சந்தித்தது சலில் சௌதுரி அறக்கட்டளையின் அறங்காவலர் என்கின்ற முறையில் அவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கச் சென்றபோதுதான். இளவயதுமுதல் என் வணக்கத்திற்கு உரியவர்களாகயிருந்த இரண்டு மேதைகளை எனது ஆதர்ச இசையமைப்பாளரின் பெயரால் ஒரே மேடையில் இணைக்க முடிந்ததை எனது நல்வாய்ப்பாகவே நினைக்கிறேன். பாலு மகேந்திராவுடன் அன்று ஆரம்பித்த எனது உறவு அவரது இறுதிக் காலம் வரைக்கும்
நீடித்தது.

சலில் சௌதுரி குடும்பம் வழியாக உருவான எனது வங்காள உறவு ரித்விக் கட்டக் குடும்பத்திடமும் நீண்டது. பல பதிற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பன
சங்கீதா திரையரங்கின் வெள்ளித்திரையில் மின்னிய 'சுவர்ண ரேகா'வின் வாயிலாக என் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குநர் மாமேதை ரித்விக் கட்டக். அவரது மனைவி ஷுரமா கட்டக் தனது மகனைப் போலவே என்னை நேசித்தார். கட்டக் தா வின் மகள் சம்ஹிதா கட்டக் தனது 60ஆவது வயதில் இறக்கும்வரை என்னுடன் நட்பைப் பாராட்டினார். ரித்விக் கட்டக்கின் 90ஆவது பிறந்தநாளில் கொல்கத் தாவில் நிகழ்ந்த ஒரு மாபெரும் விழாவில் ரித்விக் கட்டக் நினைவு உரையை ஆற்றும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.

கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு ஹிந்தியின் முக்கியமான இசையமைப்பாளரான ரவீந்திர ஜெயின் அவர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. உ பி யில் பிறந்தாலும் கொல்கத்தாவில் வளர்ந்த அவரை ஒரு வங்காளியாகவே நினைத்து 'தாதா' என்றுதான் அனைவரும் அழைத்தனர். பிறவியிலே கண்பார்வை இல்லாதவரான ரவீந்திர ஜெயின் எத்தனையோ படங்களுக்கு அசாத்தியமான பின்னணி இசையை எப்படி அமைத்தார் என்பது இன்றுவரைக்கும் என்னால் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று. வங்காள நாடோடி முஸ்லிம் பேர்வழியில் பிறந்து பின்னர் மலையாளத்தின் ஆகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறிய எம். எஸ். பாபுராஜின் இசையுமே என்னை எப்போதும் வியப்பூட்டுவது. அவரது குடும்பத்தினரும் அவர்களது சொந்தத்தில் ஒருவராக என்னை ஏற்றுக்கொண்டது நான் பெற்ற பெரும்பேறு.

எழுத்தின் ஊடாக

கிட்டத்தட்ட 15 ஆண்டுக்காலம் எதுவுமே எழுதாமலிருந்த நான் 2002 முதல் மீண்டும் எழுதத் தொடங்கினேன். பெரும்பாலும் இசை மற்றும் சினிமா குறித்து. மும்பையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஏ.வி.மேக்ஸ் எனும் மாத இதழில் சலில் சௌதுரியைப்பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையை ஜெயமோகன் தமிழுக்கு மொழிபெயர்த்து உயிர்மையில் வெளியிட்டார். அந்தக் கட்டுரைக்குக் கிடைத்த வெற்றிதான் என்னைத் தமிழில் ஓர் எழுத்தாளனாக்கியது. தொடர்ந்து ஆறாண்டுக்காலம் இடைவிடாமல் இசை குறித்து ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.குப்புசாமி, முபாரக் போன்றவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் எழுதினேன். 2010இல் நானே நேரடியாகத் தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில் ஒருநாள் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் எதிர்பாராமல் நடிகை ரோஹிணியைச் சந்தித்தேன். அவர் என்பக்கம் நடந்துவந்து என்னிடம் ''நீங்க ஷாஜி தானே? நான் ரோஹிணி. உங்களது இசைக் கட்டுரைகளின்
ரசிகை'' என்று என்னிடம் சொன்னார். ஒருகணம் கைகால்கள் உறைந்துபோனது போலவே உணர்ந்தேன்.  பதின்பருவத்தில் திரையில் பார்த்து என்னுடைய மானசீகக் காதலியாக நான் பாவித்துக்கொண்ட ரோஹிணி இப்போது எனது ரசிகை! மிகையான ஒரு சினிமாக் கதையைப்போல் அதை நம்ப முடியாமல் குழம்பினேன். இலக்கிய வாசிப்பும் இடதுசாரிச் சிந்தனையுமுடைய ரோஹிணி பிற்பாடு எனது தோழியாக மாறினார்.

இசை, திரை குறித்தான எனது எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் போல் ஒருநாள் விஜய் தொலைக்காட்சியிலிருந்து ஓர் அழைப்பு. 'கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையின் 50ஆவது ஆண்டு விழாவை மதுரையில் கொண்டாடுகிறோம். பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் பங்கேற்கிறார்கள். நீங்களும் பங்கேற்க வேண்டுமென்று கமல்ஹாசன் விரும்புகிறார்'. அதைக் கேட்டபோது பெருமையாக இருந்தது. ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் நான் ஓய்வாக இருக்கவில்லை. நிகழ்ச்சிநாள் காலையில்தான் போக வழிதெளிந்தது. அதை அவர்களிடம் தெரிவித்தேன். அதேநாள் பயணம் என்பதால் சென்னை மதுரை விமானக் கட்டணம் 12000 ரூபாய்! அத்தொகையைச் செலவுசெய்தே அவர்கள் என்னை மதுரைக்குக் கொண்டுசென்றனர். அப்போதுதான் தெரியவந்தது நிகழ்ச்சி நடக்குமிடம் திருமலை நாயக்கர் மண்டபம் என்பது. பல ஆண்டுகளுக்கு முன்பு அதற்குள்ளே கடக்க முயன்றபோது பூவராகனையும் என்னையும் காவலாளிகள் அடித்துத் துரத்திய அதே திருமலை நாயக்கர் மண்டபம். மாலையில் அந்த மேடையில் அமரும்போது கமல்ஹாசனின் திரைவாழ்க்கையின் 50 ஆண்டுகளைவிட மதுரைநகரின் பெருமையான அம்மண்டபத்தை எனக்குக் காட்டித்தர முயன்று அடிவாங்கிய பூவராகன் மட்டும்தான் என் மனதில் நிரம்பியிருந்தார். அம்மேடையில் என்னால் சரியாகப் பேசவே முடியவில்லை.

லோஹித தாஸ்

ஒருகாலம் தமிழ்நாட்டின் முக்கிய மலையாள
சினிமா விநியோகஸ்தரும் பின்னர் பல மலையாள சினிமாப் பிரபலங்களின் நண்பருமாகயிருந்த கேசவேட்டன் என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூர் கேசவன்தான் லோஹித தாஸுக்கு என்னை அறிமுகம் செய்வித்தார். லோஹி ஏட்டனும் நானும் வெகுவிரைவில் நெருங்கினோம். மலையாளத் திரைக்கதையில் எனது ஆதர்சமான லோஹித தாஸ் எனது நண்பரும் நலம் விரும்பியுமாக மாறியது இன்றுவரை என்னால் நம்பமுடியாத ஒன்று. தமிழில் அவர் 'கஸ்தூரிமான்' எனும் படத்தை எடுக்கும்போது பெரும்பாலும் அவர் கூடவே இருந்தேன். அப்படத்தின் தயாரிப்பாளர் பின்வாங்கியபோது அதை 'நானே தயாரிக்கப்போறேன்' என்று லோஹித தாஸ் இறங்கினார். ஒருபோதும் அதைச் செய்யக் கூடாது என்று நான் அடம்பிடித்துச் சொன்னாலும் அவர் அதை ஏற்கவில்லை.

தமிழ் கஸ்தூரிமான் பெருந்தோல்வியைத் தழுவி ஒரு துயரச் சம்பவமாக மாறியது. மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். அதிலிருந்து அவர் மீண்டெழவில்லை. தான் எத்தனையோ வணிக வெற்றிகளையும் தேசிய விருதுகளையும் வாங்கித்தந்த மலையாளச் சினிமா தன்னைப் புறக்கணித்ததிலும் அரண்மனைபோன்ற தனது கனவு வீடு கைவிட்டுப் போனதிலும் அவர் மிகவும் வருந்தினார். அவர் இவ்வுலகை விட்டு மறைவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு கொச்சிக்கு அருகிலுள்ள அவரது புதிய சிறிய வீட்டிற்குச் சென்றிருந்தேன். ''ஷாஜி இவ்ளொ தூரம் வந்திருக்கானே. இன்னிக்குக் கொண்டாடிடுவோம்'' என்று அவர் ஒரு விஸ்கிப் புட்டியை வெளியே எடுத்தார். அன்று அவருடன் அமர்ந்து சீனி முளகாவும் தேங்காவும் சேர்த்து இடித்த கருவாட்டு வறுவலைத் தொட்டுக்கொண்டு நெடுநேரம் பேசியது
நீங்காத நினைவாக இதயத்தில் நீடிக்கிறது. அவர் மறைந்தபின் அவரைப்பற்றி தமிழில் ஜெயமோகன் எழுதிய 'லோஹி' எனும் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரைதான் லோஹி ஏட்டனுக்கான எனது கண்ணீர் அஞ்சலி.

விளம்பரப்படங்களுக்குக் கதை வசனம் எழுதுவதன் வழியாகத்தான் மம்மூட்டியையும் மோஹன்லாலையும் சந்தித்தேன். மம்மூட்டியைச் சந்தித்தபோது எனது 23 வயதில் அவரைக் கோழிக்கோடு மஹாராணி விடுதியில் சந்தித்த கதை எதையும் அவரிடம் சொல்லவில்லை. அதெல்லாம் அவருக்கு நினைவே இருக்காது என்பது உறுதி. பிற்பாடு மம்மூட்டியை வைத்து 'பரோள்' எனும் படத்தை இயக்கிய விளம்பரப் பட இயக்குநர்
 சரத் சந்தித்திற்காக மோஹன்லாலை மையமாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதினேன். அத்திரைக்கதை மோஹன்லாலுக்கு மிகவும் பிடித்திருந்தும் இயக்குநருடன் அவரால் ஒத்துப் போக முடியாததால் அப்படம் கைவிடப்பட்டது. விமான நிலையங்களிலோ மற்ற இடங்களிலோ எப்போதாவது தற்செயலாகச் சந்திக்கும்போது மிகுந்த நட்புடனே மோஹன்லால் என்னை நடத்தினார். அப்போதெல்லாம் பதிற்றாண்டுகளுக்கு முன்பு அவரைப் பார்ப்பதற்காகப் படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியே பகல் முழுவதும் நின்று இறுதியில் அது அவர் நடிக்கும் படமே அல்ல என்று அறிந்து ஏமாந்துபோன அந்தப் பதினேழு வயதுக்காரன் எனக்குள்ளே தலை நீட்டினான்.

ஒருமுறை ஐதராபாத் - சென்னை விமானத்தில் ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்கம் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென்று பக்கத்திலிருந்த தனது காதலனிடம் ''வாவ்... நம்ம கூட விமானத்துல ஒரு சூப்பர் ஸ்டாரும் இருக்காரு.. ஐ அம் ஸோ எக்ஸைட்டெட்'' என்று சொன்னாள். நான் தலை தூக்கிப் பார்த்தேன். சிரஞ்சீவியோ ரஜினிகாந்தோ விமானத்தில் ஏறியிருக்கிறார்களா? அப்போது அதோ முன்பக்கம் இருக்கும் ஓர் இருக்கையிலிருந்து மோஹன்லால் லேசாகத் தலை உயர்த்திப் பின்பக்கம் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் நான் எழுந்து நின்று கை அசைத்தேன். என்னை அடையாளம் கண்ட மோஹன்லால் சிரித்தபடி கை அசைத்தார். அவரிடம் சென்றேன். சற்றுநேரம் என்னிடம் பேசினார். இருக்கைக்குத் திரும்பிய என்னை அப்பெண் உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்! 'மோஹன்லாலை நேரடியாகத் தெரிந்த இந்த மகான் யாராகயிருக்குமோ' என்றுதான் அந்தப் பார்வை. எனக்கு மோஹன்லாலைத் தெரியும் என்ற ஒரே காரணத்தால் தனது காதலனை விட்டுவிட்டு அவள் என்னுடன் ஓடி வந்திடுவாளா என்றுகூடப் பயந்தேன். தலைமுறைகளினூடாகத் தொடரும் சினிமாவெறியின் புத்தம்புது அடையாளம்தானே அந்த இளம்பெண் என்று எண்ணிக்கொண்டேன்.

நானும் நடிகனானேன்

ஒரு தமிழ் எழுத்தாளன் என்கின்ற நிலையில் வாசிப்புப் பழக்கமிருக்கும் பல தமிழ் இயக்குநர்கள் எனக்கு அறிமுகமானார்கள். மணி ரத்னம், பாலா, மிஷ்கின், ராம், சீனு ராமசாமி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், ஏ. ஆர். முருகதாஸ் போன்றவர்களெல்லாம் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருந்தனர். அதில் மிஷ்கின் எனது நண்பரானார். எங்களது நட்பில் சினிமாவுக்கு எந்தவொரு இடமும் இருக்கவில்லை. இலக்கியமும் இசையும்தாம் எப்போதும் எங்களது பேச்சுப்பொருள்களாக இருந்தன. அப்படியிருந்தும் தான் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடிக்க அவர் என்னை அழைத்தார்!

எனது சினிமா வெறி என்பது இடையறாமல் திரைப்படங்களைப் பார்ப்பதிலும் சினிமா என்கின்ற கலைவடிவத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதிலும் மட்டுமே இருந்தது. லோஹித தாஸைப்போன்று ஒரு திரைக்கதை ஆசிரியராக மாற முடியும் என்ற எண்ணம் எப்போதாவது உள்ளே வந்து போயிருக்கலாம். ஆனால் திரைநடிப்பு ஒருபோதும் எனது நாட்டமாகவோ விருப்பமாகவோ இருக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. குழந்தைப் பருவத்திலும் பதின்பருவத்திலும் வாழ்க்கை தந்த தாழ்வுணர்ச்சிகள் எனக்குள்ளே அளவுக்கு மீறி அடைபட்டுக் கிடந்தன. அவை உருவாக்கும் அதீதமான சுய விமர்சனத்தன்மை திரை நடிப்பின் எதிரி. மட்டுமல்லாது முப்பது வயதுவரைக்கும் ஆறடி மூன்றங்குலம் உயரத்தில் மெலிந்து வளைந்து தசையே இல்லாத உடலுடன் இருந்தேன். ஒரு காமெடி நடிகனாகக்கூட யாருமே எண்ணிப்பார்க்க வாய்ப்பில்லாத தோற்றம். இனிமேல் இந்த 45ஆம் வயதில் என்ன சினிமா நடிப்பு! நடிக்க முடியாது என்று மிஷ்கினிடம் திட்டவட்டமாகச் சொன்னேன்.

மிஷ்கின் விடவில்லை. அப்பாத்திரத்தை எழுதும்போது எனது உருவமும் உடல்மொழியும் மனதில் வந்துகொண்டேயிருந்தன என்று
சொல்லி வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார். படத்தின் மிக முக்கியமான மூன்றாவது பாத்திரம் என்னுடையது. பெரிய பொருளாதார வெற்றி அடையவில்லை என்றாலும் பல
சிறப்புகள் இருந்த அப்படம் கவனிக்கப்பட்டது. இளையராஜாவின் மகத்தான பின்னணி இசைக் காகவும் படம் புகழப்பட்டது. அப்படத்தில் நடித்த நடிகர்களில் மிக அதிகமான புது வாய்ப்புகள் வந்தது எனக்குத்தான் என நினைக்கிறேன். ஆனால் எல்லாம் அதே பாணியிலான பாத்திரங்கள். அதற்குப் பின்பு வந்த இருபத்தைந்துக்கும் மேலான படங்களை முடியாது என்று மறுத்துவிட்டேன். காரணங்கள் பல. ஒரேமாதிரியான பாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை, ஒரு முழுநேரத் திரை நடிகனாக என்னை எண்ண நான் தயாராக இல்லை, மீதமிருக்கும் வாழ்க்கையில் மனமகிழ்ச்சி தரும் விஷயங்களை மட்டுமே தெரிவு செய்ய விரும்புகிறேன் என சில பிடிவாதங்கள். இதனால் ஷங்கர், மணி ரத்னம் போன்றவர்களின் படங்களைக் கூட மறுக்க நேர்ந்திருக்கிறது. இருந்தும் இதுவரைக்கும் 15 படங்களில் நடித்துள்ளேன்.

'சவரக்கத்தி' எனும் படத்தில் நடித்த தெருவில் அலையும் பைத்தியக்காரனின் பாத்திரத்தைப் பார்த்து ''பைத்தியக்காரனைத்தான் திரையில் பார்த்தேன், நடிகன் என் கண்ணுக்குத் தெரியவில்லை'' என்று இளவயதின் எனது ஆதர்ச இயக்குநர் பாரதிராஜா பாராட்டினார். ஒரு காலத்தில் திரை எழுத்திலும் நடிப்பிலும் என்னை மிகவும் கவர்ந்த கே.பாக்யராஜுடன் துப்பறிவாளன் படத்தில் ஒரே காட்சியில் வந்துபோக முடிந்தது. எனது தமிழ்ப் புத்தகங்களைப் படித்த பின்னர் ''பள்ளிக்கூடத்திலிருந்து தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாத ஒருவர் இவ்வளவு நன்றாகத் தமிழ் எழுதுவது ஆச்சரியம்' என்று அவர் சொன்னார். மலையாளத்தின் ஆகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான கெ.பி. ஏ.சி. லலிதாவின் மகனாக சீனு ராமசாமியின் 'மாமனிதன்' தமிழ் படத்தில் நடிக்க முடிந்தது. என்னை சந்தோஷப்படுத்திய விஷயங்கள் பல. ஆனால் இவற்றைவிட எனக்குள்ளிருக்கும் 
சினிமா வெறியனை மிகவும் மகிழ்வித்த வேறு சில விஷயங்கள் இருக்கின்றன.

ஏழுவயதில் நான் பார்த்த முதல் சினிமாவில் கதாநாயகியாக இருந்த கே. வி. சாந்தியை பல ஆண்டுகள் தேடி இறுதியில் அவரது எண்பத்துமூன்றாம் வயதில் கண்டடைந்து பழைய சினிமாக் காலங்களைப் பற்றிப் பேசியவண்ணம் அவருடன் தொடர்பில் இருக்க முடிகிறது. இளவயதில் பள்ளிக்கூடங்களில் நிகழ்ந்த சினிமாக் காட்சிகளில் பார்த்து வியந்துபோன எத்தனையோ திரைப்படங்களின் இயக்குநர், மலையாள சினிமாவின் முகத்தையே மாற்றியமைத்த மாமேதை கே.எஸ். சேதுமாதவன் அவர்களைச் சந்தித்துப் பழகவும் ஐம்பதாண்டுகள் நீண்ட அவரது சினிமா வாழ்க்கையை அவரிடமிருந்தே கேட்கவும் முடிகிறது... திரையிசையைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய முதல் புத்தகம் எக்காலத்திற்குமுரிய மலையாள இயக்குநர் கே. ஜி. ஜார்ஜ் வெளியிடுகிறார். அவரைப் பற்றித் தமிழில் 'படச்சுருள்' சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டுவர முடிகிறது.. யாதோங் கி பாராத் போன்று இந்தியாவையே அதிர வைத்த பல பெரும்படங்களை இயக்கிய நாஜிர் உசேனின் மகனும் கயாமத் சே கயாமத் தக், ஜோ ஜீத்தா வொஹி சிக்கந்தர் போன்ற சிறந்த படங்களின் இயக்குநருமான மன்சூர் கான் எனது நண்பர் ஆகிறார்... எனது பதின்பருவக் கனவு நடிகை ரோஹிணி அவர் இயக்கிய திரைப்படத்தில் நடிப்பதற்கு என்னை அழைக்கிறார்... ஒரு சினிமா வெறியனுக்கு இவற்றுக்குமேல் வேறென்ன வேண்டும்!

நான் சினிமாவை நேசித்தது சினிமாவுக்குள்ளே இடம் பிடிப்பதற்கோ நடிகன் ஆவதற்கோ அல்ல. சினிமா எனக்கு என்றுமே ஒரு பகல் கனவு. எப்போதும் விழித்துக்கொண்டே நான் பார்த்த கனவு. அனைத்தையும் துடைத் தழிக்கும் கருணையற்ற காலத்தால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட நிர்மலாவின், ஜெபக்கூடமாக்கப்பட்ட தர்சனாவின், தீயில் வெந்து சாம்பலாகிப்போன பிந்துவின், மறதியில் மறைந்தழிந்த சங்கீதாவின் முன்னால் சினிமா வெறி தலைக்கேறி ஒரு காலிப்பயலைப்போல் அலைந்து திரிந்த நான் இன்று சினிமாக்களில் நடிக்கிறேன். வீடுகளுக்குள் திரையரங்குகளை அமைத்துத் தருகிறேன். எனது வீட்டிலும் சிறிய ஒரு திரையரங்கு இருக்கிறது. அதற்குள்ளே அமர்ந்து சரவெடியெனச் சிரித்தும் அவ்வப்போது நடுங்கியும் நடுவே கண்கலங்கியும் ஒரு பெண்குழந்தை சினிமா பார்க்கிறாள். எனது சினிமா வெறியின் ஒரேயொரு வாரிசு. சினிமாதான் அவளது உலகம். சினிமாதான் அவளது வாழ்க்கை. நிற்கவோ நடக்கவோ இயலாத உடல்நிலையுடன் பிறந்த எனது மகளை மகிழ்வோடு வாழச் செய்கிறது சினிமா. நாற்பதாண்டுகள் என்னை வாழவைத்த சினிமா எனது மகளை நூறாண்டுகள் வாழவைக்கும்.

டிசம்பர், 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com