வீட்டுக்கு ராசி பார்ப்பது இல்லை!

வீட்டுக்கு ராசி பார்ப்பது இல்லை!

நான்  ஊரிலிருந்து சென்னை வந்து இறங்கிய தேதி இன்னும் ஞாபகம் இருக்கிறது. அது 8-8-1988. 

ஊரிலிலுள்ள நண்பர் கொடுத்த முகவரிப்படி மூலக்கடையில் இருந்த வீட்டுக்குச் சென்றேன். அங்கே போய்ப் பார்த்தபோது  நாலைந்து பேர் இருந்தனர். எல்லாருமே தஞ்சைப் பகுதி இளைஞர்கள். என் நண்பனைப் பற்றிப் புகார்ப் பட்டியல் வாசித்து அச்சுறுத்தினர். இருந்தாலும் என்னைச் சேர்த்துக் கொண்டனர்.

அது ஒரு சிறிய ஓட்டு வீடு தான் என்றாலும் தனி வீடு. மாதவாடகை 50 ரூபாய். குளியல் அறையெல்லாம் கிடையாது. வீட்டு முன்பு  தெருவில் நின்றுதான் குளிக்க வேண்டும். சில நாட்கள் மட்டுமே அங்கே இருந்தேன். ஒரே மாதத்தில் கெல்லீஸில் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப்பிறகு கடைக்காரர் வீட்டிலேயே அங்கே வேலைபார்த்த சிலருடன் தங்கியிருந்தேன். அறை பெரிதாகத்தான் இருந்தது.  குடிநீர், குளியல், கழிவறை வசதிக்கும் குறைவில்லை. வேலை பார்க்கும் எங்களிடம் வாடகை வாங்குவதில்லை என்றாலும் நாளடைவில் எனக்கு அது பிடிக்கவில்லை. காரணம் வேலைபார்க்கும் எங்கள் மீது எப்போதும் வீட்டுக்காரரின் கண் இருக்கும்.அந்த சுதந்திரமின்மை பிடிக்கவில்லை. உடன் இருந்தவர்களிடம் நாம் தனியாக ரூம் பார்த்துப் போகலாம் என்றேன். நீண்ட தயக்கத்திற்குப்பின் உடன்பட்டார்கள். வெளியே வந்துவிட்டோம்.

அப்படி நாங்கள் போன வாடகை வீடு அயனாவரம். ஏழுமலை என்பவர்தான் வீட்டுக்காரர். மிரட்டல் தொனியில்தான் பேசுவார். ஆனால் அவர் ஒரு அப்பிராணி. வாடகை 200 ரூபாய் என்று நினைவு. நாலுபேர் பகிர்ந்து கொள்வோம். அந்த 50 ரூபாய் பகிர்வதற்குக் கூட சிலரால் முடியவில்லை. அந்த வீட்டுக்காரருக்கு இரண்டு மகள்கள். ஒருவருக்கு  மணமாகிவிட்டது, வீட்டில் ஒரு மகள். அவர் அவ்வப்போது சொல்வார், ‘‘வீட்ல வயசுக்கு வந்த பொண்ணு வச்சிருக்கேன்பா. பார்த்து நடந்துக்குங்கப்பா''

அவர் வீட்டின் மேல்மாடியில் புதிதாக கட்டப் பட்ட இன்னொரு ரூமுக்கு நாங்கள் மாறினோம் . கீழ் ரூமுக்கு ஊர்க்காரப் பையன்கள் வேறு சிலரை தங்க வைத்தோம். அவர்கள் அங்கேயே இருந்தனர்.அவர்களில் ஒருவன் பிற்காலத்தில் வீட்டுக்காரரின்  மகளைக்  கல்யாணம் செய்து கொண்டது தனிக்கதை. அவன்(ர்)தான்   இப்போது  ஹவுஸ் ஓனர்.

பின்னர் எனக்குத் திருமணமாகி சாலிகிராமத்தில் வெங்கடேஷ் நகரில் தனியே ஒரு வீடு போனேன்.  அதைக் கோயில்ராஜ் வீடு என்பார்கள். ஆனால் அவர் உயிருடன் இல்லை. அவரை நெல்லையில் கொலை செய்து விட்டார்களாம். அவர் மனைவி வாய் பேச முடியாதவர் என்றாலும் புத்திசாலி. நாலைந்து பிள்ளைகளை கெட்டிக்காரத்தனமாக வளர்த்தார்.

அவ்வீட்டில்10 குடித்தனங்கள்  இருந்தன.வாடகை 375 ரூபாய். 50, என்றும்100 என்றும் வாடகை கொடுத்துப் பழகிய எனக்கு அது பெரிய தொகையாக இருந்தது. மிரண்டேன். அப்போது நான் பிலிமாலயாவில் வேலை பார்த்தேன். அப்போது அருகிலிருந்த எழுத்தாளர் இருகூரான் சொன்னார், ‘பயப்படாதே உன்னால் முடியும். இதற்கு மேலும் கொடுப்பாய். தேவை இருந்தால் தேடும் எண்ணம் வரும். அதுதான் வளர்ச்சி.' என்றார்.

அந்த வீட்டில் சில மாதங்கள் இருந்தோம். வெக்கை தாங்கவில்லை. வீடு மாறினோம். வேறு சில வீடுகள் சில ஆண்டுகளில் மாறி, அடுத்து நாங்கள் போன வீடு லோகையா காலனி ரெட்டியார் வீடு. வீட்டு ஓனர் எதிலும் தலையிட்டதில்லை.  அப்படி ஒரு ஜென்டில்மேன்.

அது ஒரு கார்னர் வீடு. மூன்று அறைகள் எந்த அறையிலும் வெளிச்சம் இருக்கும் லைட் போடவேண்டாம். காற்றோட்டம் இருக்கும் அப்படி ஒரு வீடு அமைவது சிரமம்.

ஆனாலும் அந்த வீட்டைக் காலி செய்தோம். காரணம்? அந்த வீட்டு ராசி அப்படி.  நான் இதை யெல்லாம் நம்புவதில்லைதான்.  

முதல்நாள் பால் காய்ச்சும்போது பால் திரிந்து விட்டது. வீட்டில் பதற்றமானார்கள். வேறுபாக்கெட் பால் வாங்கி மறுபடி காய்ச்சிய போது இண்டக்ஷன் அடுப்பு புகைந்து விட்டது. கேட்க வேண்டுமா? மனைவி பயம் அதிகமானது.  இருப்பினும் சமாதானப்படுத்தி பால் காய்ச்சினோம்.

பத்தே நாளில் மனைவியின்  ஒன்றுவிட்ட  அண்ணனின்  இறப்புச் செய்தி வந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக மரணச் செய்திகள் இரண்டு  மாதங்களுக்கு ஒரு முறை துக்கம் என்று எங்கள் ஊருக்குப் போய் போய் வந்து கொண்டிருந்தோம்.குடும்பத்திலுள்ளவர்கள் மாறி மாறி மருத்துவமனை போய்க்கொண்டிருந்தோம். என்னை ஒரு நாய் கடித்தது. என் மகனை வேறொரு நாய் கடித்தது. இரண்டு முறை சாலையில் குறுக்கே வந்து பாம்பு என் பைக்கில் மாட்டிக்கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக 27 ஆண்டுகளாக சென்னையில் பைக் ஓட்டும் நான் , ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேன். யாருமில்லா சாலையில் திடீரென்று பன்றி ஒன்று எங்கிருந்தோ குறுக்கே வர வண்டி மோதி  விழுந்து என் நெஞ்செலும்பு முறிந்தது. குணமாக சில மாதங்கள் ஆயின.

துர் மரணங்களின் தொடர்ச்சி என் அம்மாவின் இறப்புவரை போனது. என் மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆபரேஷன் செய்தோம். அப்பாடா என்று இருந்தபோது மறு அட்டாக்காக அவருக்கு கேன்சர் வந்தது. மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. மூன்றே மாதங்களில் போய்விட்டார். இப்போது அவர் இல்லை. 

ஒவ்வொன்றாகப் பார்த்து அதிர்ந்த பிறகு வீட்டைக் காலி செய்யலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்ன போது இதெல்லாம் மூடநம்பிக்கை என்று பகுத்தறிவு பேசி வந்தேன். என் தாயின் மரணம் என் எண்ணத்தை அசைத்தது. பிள்ளைகளும் வேறு வீடு போகலாம்பா என்றனர்.

ஒரு வீட்டைப் பார்த்தோம். பிடித்திருந்தது. விசாலமான வீடு எதற்கும் அக்கம் பக்கம் விசாரிப்பது நல்லது என்று விசாரித்தோம். இங்கு யாரும் நீண்ட நாள் தங்குவதில்லை என்றனர். அங்கிருந்து காலி செய்து போன ஒருவரைப் பார்த்தோம்: ‘இலவசமாகக் கொடுத்தால் கூட அங்கு போக வேண்டாம்,' என்றார்.  அன்று மாலை அட்வான்ஸ் கொடுக்க நினைத்திருந்தேன்.  இது தெரிந்தபின் பிடித்தேன் ஓட்டம்! போதுமடா சாமி என்று!

30 ஆண்டுகளாக வாடகை வீடு. சொந்தவீடு வாங்கவில்லையா? வெட்கமாக இல்லையா? என்று மனைவி கேட்கிறார். இத்தனை லட்சம் கொடுத்துக் கட்டப்படும் அல்லது வாங்கப்படும் வீடு  மூலம் மிச்சப்படுத்தும் வாடகையுடன் அந்த வீட்டுக்கான முதலீட்டின் வட்டியைக் கணக்கிட்டால் நமக்கு லாபம் ஒன்றுமில்லையே  என லாஜிக் பேசுகிறேன்.

‘சொந்த வீடு, சுதந்திரம் என்பதை அனுபவித்துப் பாருங்கள்,அதற்குப்பிறகு தெரியும். அது செலவல்ல முதலீடு என்று! கையாலாகாத்தனத்துக்கு காரணம் வேறு சொல்கிறீரா?' என்கிறார் மனைவி. இப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது!

ஜூன், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com