வெற்றிக்கொடி நாட்டிய தாரகை

Narththagi Natraj
நர்த்தகி நடராஜ்
Published on

நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜ் வடமாநிலத்துக்குச் செல்லும் ரயில்வண்டியின் முதல் வகுப்பில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். அதே பெட்டியில் கல்லூரி மாணவர் கூட்டமொன்றும் ஏறுகிறது. அனைவரும் வசதியான் வீட்டுப்பிள்ளைகள், நர்த்தகி அவர்களுக்குக் கேலிப்பொருளாகிறார்.

கூட்டமாகச் சேர்ந்து கூச்சலிட்டு, அவரை ஏளனம்செய்து சீண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அடுத்து நிலையத்தில் இறங்கிவிடலாமா என்று அவருக்குத் தோன்றுகிறது, இருந்தாலும் அவர்களுடன் உரையாடத்தொடங்குகிறார்

“தம்பி, நீங்கல்லாம் யாரு..?”

“நாங்க மாணவர்கள்..”- வசதியானவர்கள் மட்டுமே படிக்க முடிகிற ஒரு கல்லூரியின் பெயரைச் சொல்கிறார்கள்

“எங்கே போறீங்க..?”

“எங்க கல்லூரி சார்பா கோவாவுக்கு சுற்றுலா போறோம்..

”எவ்வளவு கட்டணம்..?”

மாணவர்கள் ஒரு பெருந்தொகையைச் சொல்கிறார்கள்

“அந்தப்பணத்துக்கு என்ன செஞ்சீங்க?”

“பேரண்டஸ் கொடுத்தாங்க..- ஒரே குரலில் சொல்கிறார்கள்

“நல்லது தம்பிகளா, நான் ஒரு நாட்டியக்கலைஞர், மத்திய அரசு நடத்தும் கலாச்சார விழாவுக்காக, நம் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாப் போறேன்.. சென்னையில் நான் ரயிலேறும்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வந்து வழியனுப்பினாங்க... நான் இறங்கவேண்டிய இடத்திலிருந்து மத்திய அரசு அதிகாரிகள் வந்து என்னை அழைச்சிட்டுப் போவாங்க...”

மாணவர்கள் வியந்து கேட்கிறார்கள். நர்த்தகி தொடர்கிறார், “இது என் பெற்றோர் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த உயரமில்லை, நானே என் சொந்த உழைப்பில் அடைந்த உயரம்.. சொல்லுங்கள் எந்த விதத்தில் நான் உங்கள் கேலிக்குரியவளாக இருக்கிறேன்?’’

மாணவர்கள் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறார்கள். இது நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது, அந்த இளைஞர்களில் பலர் இன்னும் அவர்தம் குடும்பத்தாரோடு எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்கிறார் நர்த்தகி.

#

நர்த்தகி உலகம் முழுவதும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கும் கலைஞர் மட்டுமல்லர், தமிழில் பெரும்புலமை பெற்றவர். தமிழின் தொன்மைகளை அறிந்தவர், இன்னும் அதில் பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பவர். ஆனால் இவற்றையெல்லாம் அவர் எளிதாக அடைந்துவிடவில்லை.

மதுரை அனுப்பானடியில் பெருமாள்-சந்திராம்மா தம்பதியருக்கு ஐந்தாம் குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். வளர வளர அவர் தன் பால்திரிபு நிலையை அறிந்துகொண்டார். அவரது நண்பரான சக்திக்கும் இதே உணர்வு இருந்தது. இருவர் குடும்பமும் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தன. நடராஜும் சக்தியும் தங்கள் ரகசியங்களை பிறர் அறியாவண்ணம் நட்பாக இருந்தனர். இப்படிப் பிறந்தவர்களுக்கு இயல்பாக இருக்கும் எல்லா ரசனைகளும், பிரச்னைகளும் அவர்களுக்கும் இருந்தன.

இருவருக்கும் நடனத்தில் தீவிரமான நாட்டமிருந்தது. பத்மினி, எம்.என்.ராஜம் ராஜசுலோச்சனா, குமாரி கமலா அகியோரின் நடனக்காட்சிகள் இருக்கும் படங்களைத் தவறவிடாமல் பார்த்தனர். குறிப்பாக வைஜெயந்தி மாலாதான் இவர்களுக்குப் பிடித்த நடிகை. நடிகை என்பதைவிட நாட்டியத்தாரகை, திரைப்படங்களில் வரும் அவரது நாட்டியத்தைப் பார்த்தே தாங்களும் கற்றுத் தேர்ந்தார்கள்.

ப்ளஸ் டூ படிக்கையில் நடராஜின் வீட்டில் அவரது மாற்றத்தை உணர்ந்துகொண்டனர். அவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தொடர்ந்து படிப்பதற்கும் சமூகச்சூழல்கள் ஏதுவாக இல்லை. படிப்பைக்கூட விட்டுவிடலாம். ஆனால் நட்டியத்தைவிட முடியாது.

நடனம் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவும் வையஜெயந்தி மாலாவின் குருவிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். வீடு அதனை அனுமதிக்காது. அதைவிடவும் பெரிய பிரச்னை மதுரையில் இருக்கும் அவருக்கு வைஜெயந்தி மாலாவின் குரு யாரென்று கண்டுபிடித்து அவரிடம்போய் எப்படி நாட்டியம் கற்க இயலும்..?

இந்த நேரத்தில்தான் ஒரு பிரபல வார இதழில் நாட்டியக்கலைஞர் தஞ்சாவூர் கிட்டப்பாபிள்ளை குறித்த கட்டுரை வெளியானது. நாட்டியத்தாரகைகள் ஹேமாமாலினி, யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணிரகுபதி போன்றவர்களுக்கு அவர்தான் குரு என்பது அதன்மூலமாக நடராஜுவுக்குத் தெரிந்தது, அதைவிட முக்கியம் இந்த கிட்டப்பாதான் இதுவரை அவர் தேடிக்கொண்டிருந்த வைஜெயந்தி மாலாவின் குரு என்பதும் தெரிந்தது. வீட்டில் வேறு கடும்நெருக்கடி..

நடராஜ் வேறுவழியின்றி சக்தியோடு வீட்டைவிட்டு வெளியேறினார். மதுரையிலிருந்து அவர் போன இடம் தஞ்சாவூர் கிட்டப்பாவின் வீடு. ஒரே நோக்கம் முறைப்படி நாட்டியம் கற்றுத்தேர்வது... கிட்டப்பாவைச் சந்தித்து எங்களுக்கு நாட்டியம் கற்றுக்கொடுங்கள் எனக் கேட்டனர். அவர் “பார்ப்போம்...” என்றார். முழுமையாக ஓர் ஆண்டு அவர் வீட்டு வாசலில் போய் நிற்பதே வேலையாக இருந்தது. ஓராண்டுகாலம் சோதித்தபிறகு சிஷ்யைகளாகச் சேர்த்துக்கொண்டார் கிட்டப்பா. நான்காண்டு காலம் கற்றுக்கொடுக்கவேண்டிய அடவுகளையெல்லாம் ஒரே ஆண்டில் கற்றுக்கொடுத்தார் குரு. நடராஜ் நர்த்தகியானார்.

தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் குருகுலவாசமிருந்து நாட்டியத்தின் முழுப்பரிமாணங்களையும் கற்றுக்கொண்டார். கிட்டப்பா அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் நேர்ந்தபோது நர்த்தகியும் உதவிப் பேராசிரியையாகச் சேர்ந்தார்.

குருவின் மரணத்திற்குப்பிறகு நர்த்தகி சென்னைக்கு வந்து குடியேறினார். தனிநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். ஒரு திருநங்கை பரதமாடுவதா என்று பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் நர்த்தகியின் நாட்டியத்திறமை யாராலும் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுத்தந்தது. பல ஊர்கள், பல நாடுகள், ஆயிரம் மேடைகளுக்குமேல் அவரது நாட்டியம் புகழ்பரப்பியது.

அதன்பின் மதுரையின் இன்னொரு காப்பியப் பெயரான வெள்ளியம்பதி என்னும் பெயரில் நாட்டியப்பள்ளியைத் தொடங்கினார் நர்த்தகி. இன்று அந்தப்பள்ளிக்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. வெள்ளியம்பலத்தை ஒரு அறக்கட்டளையாக்கி தனது வருவாய் அனைத்தையும் நாட்டியக்கலையின் மேம்பாட்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார் நர்த்தகி. அவர் பெருமகிழ்வோடு சொல்லும் விஷயம், “என் ஆதர்ச நாயகி வைஜெயந்தி மாலா நான் நாட்டியமாடும் பல நிகழ்ச்சிகளை நேரில் கண்டு பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்...”

”இந்த நாட்டியத்தின் வேர்கள் எங்கிருக்கின்றன என்று நான் தேடத்தொடங்கி அவை தமிழ் இலக்கியங்களில் இருப்பதைக் கண்டுகொண்டேன். தொல்காப்பியத்தில் மொழி இலக்கணம் மட்டுமின்றி நடனம், இசை அதற்கு மேலாக திருநங்கைகளின் உடலியல்கூறுகள் பற்றிக்கூட சொல்லப்பட்டிருக்கின்றன...

சிலப்பதிகார மாதவியின் நடனங்கள்தாம் சாஸ்திரிய நடனங்களின் வேர். இந்திரவிழாவில் மாதவி நடனமாடுகிறாள். அதில் ஒன்பதாவது வகையாக பேடி நடனத்தை ஆடுகிறாள். அதுதான் உலகின் முதல் திருநங்கை நடனம்.இன்று கீழ்த்தரமாகக் குறிப்பிடப்படும் அலி என்னும் சொல் உண்மையில் இறைநிலையைக் குறிப்பதாகும். ஆணாகி, பெண்ணாகி அலியாகி நின்றவன் இறைவன் என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். இறைவனை ஆணாகப்பாவித்து தன்னைப் பெண்ணாக நினைத்து சிவனடியார்களும், ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். மாணிக்கவாசக நாச்சியார் என்று மாணிக்கவாசரையே நாயகியாக பாவத்தில் அழைப்பதுமுண்டு...” என்கிறார் நர்த்தகி.

உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரவிழாக்களில் ஆடியிருக்கிறார் நர்த்தகி. ஜப்பானில் உலக அறிஞர்கள் பலர் கூடியிருந்த ஒசாகா எத்னாலஜி அரங்கில் இவர் ஆடியது முக்கியமானது.

திருநங்கை என்பதால் பரிகசிக்கப்பட்ட நர்த்தகி இன்று பல வெளிநாட்டுப்பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். தமிழ்நாடு அரசு பதினோராம் வகுப்பிற்கான பாடப்புத்தகங்களில் நர்த்தகியின் வாழ்க்கைக்கதையை பாடமாகச் சேர்த்திருக்கிறது.

அவரது பெருமைகளில் சிலவற்றின் பட்டியல் இதோ..

1. திருநங்கை என்னும் மதிப்பான அடைமொழியை முதன்முதலில் பயன்படுத்தியவர் நர்த்தகி.

2.முதன்முதலில் இந்திய அரசின் கடவுச்சீட்டு பெற்ற திருநங்கை.

3. முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை.

4.முதன்முதலில் கலைமாமணி விருதுபெற்ற திருநங்கை.

5.நர்த்தகிதான் நாட்டியத்திற்காக குடியரசுத்தலைவரிடமிருந்து தேசியவிருது பெற்ற திருநங்கை.

மியூசிக்அகாதமியின் நிருத்திய கலாநிதிவிருது, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம், தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் போன்றவை இவர் பெற்ற பெருமைகளில் சிலவாகும்.

2019-இல் இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதும் இவருக்கு வழங்கப்பட்டது..

ஒரு சில பக்கங்களில் இங்கு நர்த்தகியின் வெற்றிப்பாதை விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை அடைவதற்கு அவர் அனுபவித்த வலிகளும், அவமானங்களும் ஏராளம்.

“ஒவ்வொரு வலியிலிருந்தும் என்னை மீட்டெடுத்து உற்சாகமூட்டியவர்கள் பலர்.. என்னை மகளாக ஏற்றுக்கொண்ட மீரா அம்மா, என் குரு கிட்டப்பாபிள்ளை ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு என்னை முன்னிறுத்தி இப்போதும் என்னைத் தாங்கிநிற்கும் என் தோழி சக்தி பாஸ்கருக்கு என் வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்திலும் பங்கிருக்கிறது,” என்று நெகிழ்வோடு குறிப்பிடுகிறார் நர்த்தகி.

நாத்திகனான என்னை கலைமகளின் உருவத்தை வரையச் சொன்னால் நான் நர்த்தகியின் உருவத்தையே வரைந்து காட்டுவேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com