அகம் முகம்: வேர்கொண்ட மனிதர்!  

அகம் முகம்: வேர்கொண்ட மனிதர்!  

பேருந்து எண் 70 . கோவை அரசு போக்குவரத்துக்கழகம் மருதமலை கிளையின் பேருந்து.

மருதமலையிலிருந்து கோவை காந்திபுரம் வரை செல்லும். இதில் நடத்துநர் யோகநாதன். உற்சாகமான வேலைக்காரர். பயணிகளுக்கு இவரது பசுமையான சொற்களும் இணக்கமும் மிகவும் பிடிக்கும்.இந்த பணியோடு இவர் தன்னைச் சுருக்கிக்கொள்ளவில்லை.

இவர் ஒரு பசுமைப்போராளி. இதுவரை மூன்று லட்சம் மரங்களை நட்டிருக்கிறார். மண்ணின் துணையோடு மனிதர்களின் நட்போடு வளர்த்திருக்கிறார். இவர் இதயம் இயற்கை நோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது.

விருதுகளை பெற்றிருக்கிறார். தலைக்குள் கனமோ தலைக்கு மேல் கிரீடமோ எதுவும் இல்லாதவர். எளிமையே இவர் பலம்.

இவரோடு அடிக்கடி பேசுவதுண்டு. அது ஆழமான உரையாடலாக மாறுவதுமுண்டு.

பல தருணங்களில் அவர் சொன்ன விஷயங்கள் முக்கியமானவை.

ஆந்தைகள் வாழ்வதற்கு மர பொந்துகள் தேவைப்-படு-கின்றன.. பெரும் மரங்கள் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டி வீழ்த்தப்பட்டு விற்பனையாகிவிட்டன. ஆந்தைகள் அனாதைகளாகிவிட்டன. பார்ப்பது அரிதாகி-விட்டது என்கிறார். அவர் குரலிலும் நீர் கசிகிறது.

சாதாரண தவளையும் தும்பியும் இல்லையென்றால் கொசு அதிகமாகி டெங்கு போன்ற பல நோய்கள் வந்து மனித இனம் அழிவுக்குத் தள்ளப்படும் என்று ஆதங்கப்படுகிறார்.

அசோகா மரம் என்கிற நெட்டிலிங்க மரம் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்துகிறது. தூசியை வடிகட்டுகிறது. இந்த நல்ல பலனை இந்த மரம் நமக்கு செய்து வருகிறது.

புங்கன் மரத்தின் காற்று, நமக்கு சக்தியைத் தருகிறது. அதனால்தான் விளையாட்டு மைதானங்களில். தொழிற்-சாலைகளில் ஓய்வெடுக்கும் இடங்களில் அருகில் புங்கன் மரங்களை நடுகிறார்கள்.

வெப்பம் அதிகமாக இருக்கிற காலங்களில் வேப்பமரம் குறைந்தபட்சம் பத்து சதவீதமாவது சூட்டைத் தவிர்த்து குளிர்ச்சியைத் தருகிறது.

நம் மாநில மரமான பனை மரம் இதில் 36 வகையான பனை மரங்கள் இருக்கின்றன. விசிறிப்பனை. தாளிப்பனை, அலகு பனை என வரிசையாகச் சொல்கிறார்.

தாளிப்பனைதான் ஓலைச்சுவடியாக நம் முன்னோர் எழுதியவைகளை இன்னும் பாதுகாக்கிறது. அரிய தகவல்களை, பழங்காலச் செய்திகளை கருவூலம்போல் வைத்திருக்கிறது என்கிறார்.

மரங்களின் அகராதி இவர் மனதில் படிந்துகிடக்கிறது.

கோவை சர்க்யூட் ஹவுசில் அப்துல் கலாம் அய்யாவை சந்தித்து 27 நிமிடங்கள் பேசியதை தன் ஆயுட்காலத்திற்குமான செய்தியாகப் பார்க்கிறார். அவர் வார்த்தைகள் மனதில் நம்பிக்கை நட்டதையும் குழந்தைகளை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும் என்று சொன்னதையும் உரக்கச் சொல்கிறார்.

இதன் நீட்சியாக பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்கிறார். ஸ்லைட் ஷோ போட்டு மரம் வளர்ப்பு, அதன் சிறப்பு எதிர்காலத்திற்கான அதன் தேவை எல்லாவற்றையும் புரியவைக்கிறார்.

இவர் சொல்லும் மரங்கள் பற்றிய தகவல்கள் அபூர்வமானவை. தெரிந்துகொள்ள வேண்டியவை.

யானை விரட்டி மரம், முகரை வீங்கி மரம் என்ற அரிய வகை மரங்கள் இவர் சொற்களில் அசைகின்றன. ஒரு ஏ4 பேப்பர் உருவாக்க 12 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 1 டன் பேப்பர் தயாரிக்க 25 டன் மரங்களை வெட்ட வேண்டியிருக்கிறது என இவர் சொல்லும் கணக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது.

பேருந்து நடத்துநராக என் பணி. என்னை வழி நடத்துவதாக இயற்கை என நெகிழ்வோடு சொல்லும் யோகநாதன் வேர்கொண்ட மனிதராகத் தெரிகிறார்.

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com