ஓவியம்
ஓவியம்ரவி பேலட்

இலக்கிய வேர்கள்

முள்ளரும்பு மரங்கள்-1

ஆசிரியையின் பூ வாசம்

வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்குத் தொந்தரவுகொடுக்கும் பையனாகத்தான் நான் இருந்திருக்க வேண்டும், மூன்று வயதிருக்கும்போதே ஐந்து வயதாகிவிட்டது என்று சொல்லி என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆறாவது படிக்கும்போது எனக்கு ஒன்பது வயது. தொலைவில்உள்ள வயநாடு மாவட்டத்தின் ஏதோ ஊரிலிருந்து எங்களூருக்குவந்து சிலகாலம் எங்களுக்குப் பாடம் நடத்தினார் பேரழகியான அந்த ஆசிரியை. அவரது பெயர் நினைவில்லை.ஆனால் பாக்கு மரத்தின் இளம்பாளை போன்ற அவரது தோல் வண்ணமும் வகுப்பறைக்குள்ளே அவர் நுழையும்போது பரவும்மனோரஞ்சிதப்பூவாசமும்,ஏதோ குறும்புத்தனத்தைஉள்ளடக்கிஒளிரும் அவரது பளீர் புன்னகையும், அந்த வடிவான மூக்கின் கீழேலேசாக அரும்பியதங்கவண்ண முடியிழைகளும்ஒருபோதும் என்னால் மறக்க முடியாதவை.

அவர் நடத்திய பாடங்களும் எனக்குப் பெரிதாக நினைவில்லை. எப்படி நினைவிருக்கும்? பாடம் நடத்தும்போது கண் சிமிட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டு கனவின் மாயா லோகத்தில்தானே இருந்தேன்! திடீரென்று எங்கள் வகுப்பறையின் தரை கீழே செல்வதாகவும் அங்கே நானும் ஆசிரியையும் மட்டுமே இருப்பதாகவும் அவரது இடுப்பளவு உயரம்கொண்ட நான் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்பதாகவும் அடிக்கடி ஒரு பகல் கனவு எனக்கு வரும். இரவில் வரும் கனவு அதைவிட மோசமானது.

எங்கள் ஊர் எல்லையில் 'சாரதப் பாறா' என்ற ஒரு சின்னப் பாறையருவி இருந்தது. ஊர்ப்பெண்கள் பலர் அந்த நீரோடையில்தான் துணிகளைத் துவைத்துக் குளிப்பார்கள். ராத்திரிக் கனவில் நான் அங்கே செல்லும்போது குளிக்கவந்த ஊர்ப் பெண்களைப்போல் அரை நிர்வாணக் குளியலுடை அணிந்த ஆசிரியைஒரு பாறைமேல் நின்றுகுளித்துக் கொண்டிருப்பார். என்னைப் பார்த்து வசீகரப் புன்னகை பொழிவார். அதில் மயங்கிப் போகும் நான் அப்பாறை மேலே ஏறி அவரை எட்டித்தொட முயற்சிப்பேன். திடீரென்று நின்ற இடத்திலிருந்து மாயமாகி இன்னும் மேலே உள்ள ஒரு பாறைமேல் குளியலைத் தொடர்வார். அந்தப் பாறையின் மேலும் வலிந்தேறி அவரை நெருங்க முயலும்போது மறுபடியும் அவர் மாயமாகி மேலே உள்ள உயர்ந்தபாறை மேல் தென்படுவார். ஒருவழியாக அப்பாறையிலும் நான் ஏறிச்செல்லும்போது புன்னகையோடு என்னை நோக்கிக் கைநீட்டி நெருங்குவார். அவரை எட்டித் தொடுவதற்கு எனக்கு ஒரேயொரு நொடி மீதமிருக்கும்போது அந்தக் கனவு ஊடறுந்துபோகும்.

வீட்டில் ஒவ்வொரு வாரமும் அப்பா வாங்கிவந்த ‘மனோராஜ்ஜியம்' இதழில் நான் படித்த மெல்லிய கிளுகிளுப்புக் கதைகளும் அவற்றின் ஓவியங்களும்தாம் எனக்குள் அக்கனவு-களை உருவாக்கியிருக்கவேண்டும். பழைய‘மனோராஜ்ஜியங்'களை அவ்வப்போது பள்ளிக்கு எடுத்துச் செல்வேன். வகுப்பு இடை-வேளைகளிலும் சில சமயம் ஆசிரியருக்குத் தெரியாமல் வகுப்பு நேரத்திலும் அவற்றைப் படிப்பேன். ஒருநாள் மனோரஞ்சிதப் பூ ஆசிரியை எனது மனோராஜ்ஜியத்தைக் கையும் களவுமாகப் பிடித்தார். கடுங்காதல் இழையோட்டம் கொண்ட தொடர் நாவல் ஒன்றை நான் ஆழ்ந்து  படித்துக்கொண்டிருந்தபோதுதான் பிடிவிழுந்தது. நாவலுக்காக வரையப் பட்டிருந்த ஓவியங்களைநான் பார்த்துக் கொண்டிருந்ததாக எண்ணிய ஆசிரியை என்னை நிற்க வைத்துக் குற்ற விசா ரணைதொடங்கினார்.

‘இந்தப் புக்கு பேரென்னடா?'

‘மனோராஜ்ஜியம்'

‘ஓகோ.. இத வெச்சு என்னடா பண்ணிக்கிட்டிருந்தே?'

‘அது.. வந்து.. நானு... நாவல் படிச்சுக்கிட்டிருந்தே டீச்சர்'

‘ஓ.. நீ நாவலெல்லாம் படிப்பியோ? என்ன பேரு அந்த நாவலுக்கு?'

‘அம்ரித சும்பனம்‘. அதைக்கேட்டதும் ஆசிரியையின் நெற்றி சுளிந்தது.

‘அப்டீன்னா என்னடா?' நான் மௌனமாக நின்றேன்.

‘ஓங்கிட்டதா கேக்கறேன். அம்ரித சும்பனம்னா என்ன?'

‘அது.. அமு.. அமுதம் போல உள்ள முத்தம்'

‘இதெல்லாம் வேற தெரியுமா ஒனக்கு? யாரு எழுதிய நாவல்டா?'

‘செம்பில் ஜான்'

ஆசிரியை கடுப்பாகிவிட்டதை என்னால் உணர முடிந்தது. அவர் சற்றுநேரம் யோசித்து இறுதியில் ஒரு முடிவெடுத்ததுபோல் ‘இவ்ளொவெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கிற நீயே ஒரு நாவல் எழுதலாமேடா.. அதேதான்.. நாளைக்கு நீ ஒரு கதை எழுதிக் கொண்டுவா. இல்லன்னா கிளாசுக்கே வரவேண்டா. ஓன் மனோராஜ்ஜியத்தோட வீட்டிலேயே ஒக்காந்துக்கோ‘ என்றுச்

சொன்னார். குழம்பிப்போனேன். நன்றாக மலையாளமும் ஓரளவுக்கு ஆங்கிலமும் படிப்பேன் என்பது உண்மை. ஆனால் படிப்பது மாதிரியா எழுதுவது?நாலுவரி வீட்டுப்பாடத்திலேயே நாற்பது எழுத்துப் பிழைகள் நமக்கு வரும். மிகமோசமான என் கையெழுத்து என்னாலேயே படிக்க முடியாது. நான் எப்படிக் கதை எழுதுவேன்?அன்றைக்கு வீடு திரும்பும் வழி முழுவதும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மிளகுத் தோட்டத்தில் கொடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அப்பாவிடம் ‘நாளைக்கு பள்ளியூடத்துக்கு எல்லாரும் ஒரு கத எளுதிக்கிட்டு வரணும்னு டீச்சர் சொல்லியிருக்காங்க‘ என்று கதையைமாற்றிச் சொன்னேன். ‘எந்த டீச்சர் டா?‘ என்று அப்பா கேட்டார்.நான் அந்த ஆசிரியையின் பெயரைச் சொன்னதும் முப்பது வயதைத் தாண்டாத அப்பாவின் கண்ணில் ஒரு மின்னல் அடித்ததா?இல்லையென்றால் பெரும்பாலான நேரங்களில் ஒரு கோபக்கார இளைஞராகவே காட்சியளிக்கும் எனது அப்பா எப்படி ஓர் இரவு முழுவதும் அமர்ந்து அந்தக் கதையை எழுதினார்?

‘கத எழுதிக்கிட்டு வந்தியாடா?‘

‘ஆமா டீச்சர்‘

‘எழுந்து நின்னு சத்தமா படி‘

நான் படிக்கத் தொடங்கினேன். ‘மானத்து மழக்காறுகள் உருண்டுகூடி...மணி நாலடிச்சு....‘ இரண்டு வரி படிப்பதற்குள் என் பின்னால் வந்து நின்ற ஆசிரியை, கதை எழுதிவைத்திருந்த நோட்டை என் கையிலிருந்துப் பறித்தெடுத்தார்.

‘இது நீ எழுதிய கதயாடா?'

‘ஆம்..ஆமா டீச்சர்'. அடுத்த கணம் அவரது கையிலிருந்த சூரல் பிரம்பு என் குண்டிமேட்டில் பதக் எனப் பாய்ந்தது. ஹூ.. நல்ல வலி.

‘உண்மையைச் சொல்லுடா பெருங்கள்ளா. காக்கா எச்சம் போட்டத விட அசிங்கமான கையெழுத்து ஒனக்கு. இது நீ எழுதியதாடா?'

‘ஆமா..இல்.. இல்ல டீச்சர்‘

‘யாரெழுதியது பின்ன?'

‘என்னோட அப்பா'

‘அது சரி. ஒங்கப்பா பெரிய எளுத்தாளரோ? நாளைக்கு நீ ஒன்னோட எழுத்தாள அப்பாவக் கூட்டிக்கிட்டு கிளாசுக்கு வந்தாப் போதும். என்ன?'

அப்பா மட்டும் வந்து என்ன சொல்லப்போகிறார்! அந்தக் கதையை அவர் சொந்தமாக எழுதவில்லை என்று எனக்குத்தானே தெரியும். செண்பகப்பாறைப் பொதுமக்கள் நூலகத்திலிருந்து ஒருமுறை அவர் எடுத்துக்கொண்டு வந்த 'ஒரு குடயும் குஞ்ஞுபெங்ஙளும்' எனும் சிறார் நாவலின் கதையைத் தழுவித்தானே இதை அவர் எழுதியிருந்தார். பள்ளிக்கூடத்திற்கு வந்த அப்பாவை இலக்கியத் திருட்டுக்காக ஆசிரியை கைது செய்தாரா, இல்லை அப்பா அவருடன் நட்பாகி விட்டாரா என்பது எதுவும் இப்போது நினைவில்லை. ஆனால் ஆசிரியையைக் கோபத்துக்கு ஆளாக்குதல், வகுப்பறையில் நாவல் படித்தல், பொய் சொல்லுதல் போன்ற மூன்று குற்றங்களுக்காக அன்றிரவு அப்பா என்னைச்சரமாரியாக அடித்துத் துவைத்தது நன்றாக நினைவிருக்கிறது.

சில மாதங்களுக்குப் பின் அந்த மனோரஞ்சிதப் பூ ஆசிரியை அங்கிருந்து மாற்றலாகிப்போனார்.அதில் வேதனையடைந்த நாங்கள் சில மாணவர்கள் சேர்ந்து அவரது புது முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினோம். நானே அதை எழுதுவேன் என்று அடம்பிடித்து எழுதினேன். ‘நீங்கள் எங்களை விட்டுப் போனதால் எங்களுக்குச் ‘சங்கடம்வருகிறது' என்று எழுத நினைத்தது எங்களுக்குச்‘சகடம் வருகிறது' என்றுத் தவறாக எழுதியிருந்தேனாம். ‘சகடம்' என்றால் வண்டி. அதைப் படித்த ஆசிரியை எனது இலக்கியத்திறன் மேம்பட்டதை எண்ணிவிழுந்து விழுந்து சிரித்தாராம். அப்பா ஒருமுறை அவரை எங்கேயோ பார்த்தபோதுதான் இதையெல்லாம் சொல்லிப் பற்ற வைத்தார் போலும். என்மேல் துளியளவுகூட அன்புகாட்டாத அந்த ஆசிரியையை ஒருபோதும் நான் வெறுத்ததில்லை. என்மனதில் எப்போதும் அவர் பூ வாசம் புறப்படும் பெண்ணாகவே இருந்திருக்கிறார்.

விமலாவின் காமுகன் ‘‘டேய்.... ஒழுங்கு மரியாதையா புத்தகங்களத் திருப்பிக் கொடுத்துரு. ஒனக்கான கடைசி எச்சரிக்கை இது. ஒங்கப்பாட்ட

சொல்லிட்டு லைப்ரரி ரூல்படி ஒம்மேல கடுமையான நடவடிக்கை எடுத்துருவேன்''. என்னை எங்கே பார்த்தாலும் இப்படிச் சொல்லிப் பயமுறுத்துவார் மானிச் சேட்டன். அவர் கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்துதான் சுற்றிக் கொண்டிருந்தேன். இருந்தும் சிலசமயம் அவர் முன்னால் வசமாகச் சிக்கிவிடுவேன். எண்ணற்ற கடைசி எச்சரிக்கைகள் கடந்த பின்னரும் அந்தப் புத்தகங்களை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எப்படி முடியும்? எல்லாம் விமலா எனும் பெண்ணால் வந்த வினை!

செண்பகப் பாறை பொது மக்கள் நூலகத்தின் பொறுப்பாளரும் நூலகரும்தான் மானிச் சேட்டன். அன்பான மனிதர். யாரிடமும் கோபப்படாதவர். ஆனால் அவரையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியது பதினைந்து வயதிலிருந்த எனது சில வேலைகள்! அப்பாவின் பெயரில் நூலகத்திலிருந்துப் புத்தகங்களை எடுத்துகொண்டிருந்த எனது வாசிப்பார்வத்தைப் பார்த்து என்னையும் நூலக உறுப்பினராக்கியவர் மானிச் சேட்டன். ஒரு தடவை ஒரு புத்தகம்தான் கிடைக்கும். ஆனால் எனது ஆர்வத் தொல்லை தாங்க முடியாமல் சிலபோது இரண்டு புத்தகங்களை எடுக்க அனுமதிப்பார். முன்பு எப்போதோ வெளியூரிலிருந்து வந்து எங்களூரில் வேலை செய்த அதிகாரி ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த சில ஆங்கிலப் புத்தகங்களும்ஒரு தனி அடுக்காக அங்கே வைத்திருந்தார். அகதா கிறிஸ்டி,ஹேரோல்ட் ராபின்ஸ், பிரெடெரிக் போர்சித், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் போன்றவர்கள் எழுதிய களிப் புனைவு (Pulp fiction) வகையறாப் புத்தகங்கள்.அவற்றையும் அவ்வப்போது நான் புரட்டிப் பார்ப்பேன். கொஞ்சம் கொஞ்சம் படிப்பேன். ஆங்கிலம் படிப்பவர்கள் என்று ஊரில் யாருமில்லாததால் ‘நீயாவது இதைப் படிடா' என்று மானிச் சேட்டன் ஊக்குவிப்பார். 

விக்டோர் யூகோ (Victor Hugo), அலெஹான்ட்ரே டூமா (Alexander Dumas) போன்ற பிரஞ்சு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்து உலக இலக்கியங்களில் ஆர்வமுடையவனாக நான் மாறியிருந்தேன். ஒருநாள் நார்வே நாட்டு எழுத்தாளர் க்னூட் ஹாம்ஸுன் (Knut Hamsun) எழுதிய 'விசப்பு' (பசி) என்ற நாவலையும் மலையாள எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த எஸ் கே பொட்டெக்காட் எழுதிய விஷ கன்யக என்ற நாவலையும் எடுத்தேன். 1940களில் பெரும்பாலும் காடும் விலங்குகளும் காட்டுவாசிகளும் மட்டுமிருந்த வயநாடு மலைப்பகுதிகளுக்குக் குடியேறி அங்கே விவசாய நிலங்களை உருவாக்குவதற்காக இயற்கையுடன் போராடி, மலேரியா நோய்த்தொற்றால் முக்காலும் மாண்டுபோன மனிதர்களின் கதைதான் பொட்டெக்காட்டின் விஷ கன்யக.‘ன்யூட் ஹாம்ஸன்' என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த எழுத்தாளரை அதன்முன் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மிகுந்த ஆர்வத்துடன் அவரது ‘பசி'யைப் படித்தேன். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைப் போராட்டத்தின் கதை அது.

......தெளிந்த இந்தப் பகலில் எதாவது சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கொஞ்சம் எதாவது போதுமேஎன்று வெளியே வந்த என்னை அழகான அந்தப் பகல் பொழுதின் துல்லியம் குதூகலப்படுத்தியது. கிழிந்த பையுடன் கசாப்பு கடையின் முன்னால் மெலிந்து ஒடுங்கிப்போன ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்குஓர் இறைச்சித் துண்டைக் கடன் தருமாறு அவள் கடைக்காரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். நான் அவளைக் கடந்து சென்றபோது அவள் தலை தூக்கி என்னைப் பார்த்தாள். அவளது கீழ் ஈற்றிலிருந்த ஒரே ஒரு பல் சீழ் மஞ்சள் நிறத்தில் விரல்போல் துருத்தி வந்தது. ஒரு பச்சை இறைச்சித்துண்டின் கனவு அவளது கண்களை ரத்தச் சிவப்பாக்கியது. என்னுடைய பசி மரத்துப் போய் விட்டது. நான் வாந்தியெடுக்கத் தொடங்கினேன்......

இரண்டுப் புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்துமுடித்துத் திருப்பிக் கொடுக்க நூலகம் சென்றுகொண்டிருந்தேன். காமாட்சி வயல் கடந்து பாட்டுபாறை வாய்க்காலைத் தாண்டும்போது விமலாவின் வீட்டு முற்றத்தை எட்டிப் பார்த்தேன். அவள் தென்படவில்லை. பிற்பகல் மூன்றுமணி கடந்த நேரம். வயல்புறங்களுக்கும் தோட்டங்களுக்கும் மேல் மினுமினுக்கும் சூரிய ஒளியைத் தவிர ஆளரவமற்ற இடங்கள். வேகமாக நடந்தால் நாலு மணிக்குள்ளே நூலகத்தை அடையலாம். இதழ்களைப் படித்து, புத்தகங்களைத் தேடி எடுத்து இருளும்முன் வீடுதிரும்பலாம்.

மெலிதான மேடுபள்ளங்களில் சாய்ந்துகிடக்கும் காரிக்கொம்பு பாறையைக் கடக்கும்போது சூ... சூ.... என ஒரு சத்தம் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். மூச்சிரைக்க ஓடி வருகிறாள் விமலா. அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். அழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கோதுமை நிறத்தில் துடிப்புடன் வளரும் பதின்பருவப் பெண்மையின் வனப்பும் வசீகரமும் அவளுக்கிருந்தது. விமலாவும் நானும் முற்றிலும் மாறுபட்ட உயிர்கள். ஒருவர்மேல் ஒருவருக்குக் காதல் இருக்கவில்லை, நட்பும் இருக்கவில்லை. ஆனால் மோகம் இருந்தது. தூய்மையான பதின்பருவக் காமம்! யாருமற்ற கிராம வழிகளில் எங்கேயாவது அவ்வப்போது சந்தித்தோம். எதாவது ஒன்றைப் பேசினோம். அவள் பேசுவது எதுவுமே எனக்குப் புரியாது. நான் பேசுவது அவளுக்கும்.

ஓடிவந்து நின்ற விமலாவின் மூக்கு நுனியில் வியர்வைத் துளிகளாக சூரியன் மின்னியது. பாறைகளுக்கு மேல் பலகாலமாக மனிதர்கள் நடந்து வெளிர் பழுப்பு நிறத்தில் உருவான நடைபாதையில் நாங்கள் சேர்ந்து நடந்தோம். எனது கையிலிருந்து புத்தகங்களைப் பறித்துப் புரட்டிப் பார்த்தாள். ‘‘இதென்ன? எப்பப் பார்த்தாலும் நீ புத்தகம் படிச்சிட்டே இருக்கியே! இதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிறே? அப்டி என்ன இருக்கு இதுல? நீ வர்றதப் பாத்து வீட்டுக்குப் பின்னாடி நின்னிட்டிருந்தேன். அம்மாவோட கண்ணுல படாமக் கிளம்பறதுக்கு நேரமாச்சு'' நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள். யாராவது எங்களைப் பார்க்கிறார்களா என்று நான் நாலாபக்கமும் கண்ணோட்டினேன். பாறையிடுக்கில் நுரைந்து ஓடும் வாய்க்கால் நீரின் ஓசையும் பின்நேரப் பறவைகளின் ஒலிகளும் மட்டுமே அங்கிருந்தன.

வாய்க்காலின் கரையில் பெரிய கரும்பச்சை இலைகளுடன் அடர்ந்து நின்ற மேட்டுக் காப்பி மரம் ஓர் இலைக் குடிலாக எனக்குத் தோன்றியது. வளர்ந்திறங்கிய கிளைகள் மண்ணைத் தொட்டு நிற்கின்றன. அதன் கீழே நுழைந்தால் யார் கண்ணுக்குமே தெரியாது. நாம் அங்கே புகுந்திடலாமா என்று அச்சத்துடன் விமலாவைக் கேட்டேன். ‘‘ச்சீ..'' என்று சொன்னவள் உடனே ‘காப்பிக்குக் கீழே வெச்சு நீ என்னை என்ன பண்ணப்போறே?' என்றாள். அதோடு எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்த நான் அவளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். ‘ச்சீ போடா' என்று என்னைத் தள்ளிவிட்டாள். 'சரி போறேன்' என்று ஓடி வாய்க்காலைத் தாவிக் கடந்து திரும்பிப் பார்த்தேன். அதோ விமலா பின்னால் ஓடி வருகிறாள்! வெளிச்சம் குறைவான காப்பி மரத்தடியில் தவழ்ந்து புகுந்தேன். விமலாவும் ஓடி வந்து உள்ளே புகுந்தாள்.

கையிலிருந்த புத்தகங்களை ஒரு கல்லின்மேல் வைத்து அவசர அவசரமாக நான் விமலாவைக் கட்டியணைத்து என்னென்னமோ செய்ய முயன்றேன். ‘ச்சீ... உனக்கு வெக்கமே இல்லியா?' என்றெல்லாம் கேட்டு அவள் ஒரே நேரத்தில் எதிர்ப்பையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினாள்! இத்தகைய நேரங்களில் ஆணும் பெண்ணும் என்னென்ன செய்வார்கள் என்று புத்தகங்களில் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். அதில் எதைச் செய்யலாம் என்று யோசித்தபடி சில வீண்முயற்சிகளில் நான் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று மரத்தின் பின்னருகில் நாராயண வைத்தியரின் தோட்டப் பகுதியிலிருந்து யாரோ ஓர் ஆணின் உரத்த இருமலொலி கேட்டது. எனது பாதி உயிர் ஆவியாகப் பறந்தது. இருமலொலி நெருங்கி வருகிறது! வேறு எதுவுமே யோசிக்காமல் நான் தவழ்ந்து வெளியேறிதிரும்பிப் பார்க்காமல் ஓடினேன்.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. காப்பி மரத்தின் கீழிருந்து நான் இறங்கி ஓடுவதை யாராவது பார்த்திருப்பார்களா? அந்த இருமல்காரர் யார்? என்னையும் விமலாவையும் அவர் பார்த்திருப்பாரா? விமலாவுக்கு என்ன ஆயிருக்கும்? அவள் பிடிபட்டிருப்பாளா? ‘ஓன் கூட இருந்தவன் யாருடீ?' என்ற கேள்விக்கு அவள் என் பெயரைச் சொல்லியிருப்பாளா? ஒருவேளை சொல்லவில்லை என்றாலும் புத்தகங்களின்மேல் நூலகத்தின் முத்திரை இருக்கிறதே! நான்தான் என்று எளிதில கண்டுபிடிப்பார்கள். நூலகப் புத்தகங்களைக் காட்டில் எறிந்துவிட்டு பாட்டுபாறைத் தங்கம்மாவின் மகளுடன் காப்பி மரத்தின்கீழே உல்லாசத்திற்கு ஒதுங்கிய வெட்கம் கெட்ட நாய்!

இல்லை... எதுவுமே நடந்திருக்காது. விமலா என்னை விடத் தைரியமானவள். அவள் தப்பித்திருப்பாள்.. காலையில் சென்று புத்தகங்களை எடுத்துவிடலாம் என்று எனக்கே ஆறுதல் சொல்லிக்கொண்டு தூங்க முயலும்போது திடீரென்று மழை விழத்தொடங்கியது. இரவு முழுவதும் ஓயாமல் பெய்த அந்தக் கனமழையில் எனது புத்தகங்கள் உதிர்ந்துகரைந்து ஒழுகிப்போவதை நினைத்து நடுங்கினேன்.

விமலா சில சிறுகுழந்தைகளுடன் சில்லி விளையாடிக் கொண்டிருந்தாள். முன்தினம் என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொன்னாள். நான் ஓடிப்போன உடனே வேறு திசையில் வேகமாக ஓடி அவளும் வீடு போய்ச் சேர்ந்தாளாம். புத்தகங்களைப் பற்றி கேட்டபோது ‘எனக்கென்ன தெரியும்?' என்றாள். பயந்து நடுங்கித் தெறித்து ஓடும்போது நானே மறந்துவிட்ட புத்தகங்களை அவள் எப்படி நினைப்பாள்! காப்பி மரத்தின் கீழே கருகிப்போன இலைகள் நனைந்து மக்கி ஈரத்தில் பதுபதுத்துக் கிடந்தன. புத்தகங்களின் தடயமே அங்கு இல்லை! அந்தப் புத்தகங்கள் எங்கே போயின என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது!

‘‘புத்தகமென்பது வலுவற்ற ஓர் உயிரினம். அதைக் காலப்பழக்கத்தின் பிடியிலிருந்தும்வானிலையின் சதியிலிருந்தும் கொறித்துத் தின்னும் பூச்சிகளின் வாயிலிருந்தும்கவனமற்ற மனிதனின் எண்ணெய்ப் பிசுக்குப் படிந்த விரல்களிலிருந்தும்அவனது தீரா மறதிகளிலிருந்தும் காப்பாற்றுகிறவர் நூலகர்'' என்று உம்பேர்தோ எகோ (Umberto Eco) சொல்லியிருப்பது மானிச் சேட்டனைப் பற்றியேதான் என்று நான் பிற்பாடு பலமுறை யோசித்ததுண்டு. பொறுமை இழந்த மானிச் சேட்டன் நூலகத்திலிருந்து என்னை வெளியேற்றினார். அப்பாவிடமிருந்து புத்தகங்களின் விலையை வசூலித்தார். வழக்கம்போல் அப்பா என்னை வெளுத்து வாங்கினார்.

எழுத்துத் திருடன் பத்தாவது வயதில் எனது முதல் எழுத்து பிரசுரமானது. ஒரு கவிதை! எங்கள் ஊரில் இலக்கிய ஆர்வம் முற்றிப்போன சில இளைஞர்கள் கொண்டுவந்த ஒரு கையெழுத்து இதழில் எம்சன் என்பவர் எழுதிய ஒரு கவிதையைச் சுருட்டி அதில் கையிலிருந்து சில வார்த்தை வரிகளைப் போட்டு 'உல்டா' அடித்தது தான் எனது முதல் எழுத்து. யுவதீபம் எனும் ஓர் அச்சிதழில் அது வெளியானது. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் அந்த இதழில் பணியாற்றி வந்ததனால் மட்டும்தான் அது சாத்தியப்பட்டது. ஊர்ச் சேட்டன்மார்கள் கையெழுத்து இதழை வைத்துத் தேய்த்துக்கொண்டிருக்கும்போது இதோ நான் அச்சில் எழுதிவிட்டேன்! அது தந்த ஆர்வத்தில் ஓர் எழுத்தாளன் ஆகியே தீர்வேன் என்று கங்கணம் கட்டி இறங்கினேன். ஆனால் என்ன எழுதுவது?

தமிழ் படிக்க ஆரம்பித்தபிறகு ஒருநாள் ஜூனியர் விகடனில் தமிழ்நாட்டின் மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஆயிரக்கணக்கான எருமைகளை ஒரு கோவில் திருவிழாவில் பலி கொடுத்ததைப் பற்றிய விவரணை ஒன்றைப் படித்தேன். உடனடியாகஅதை மலையாளத்திற்கு மொழிபெயர்த்து ‘கேரள சப்தம்' எனும் புகழ்பெற்ற இதழுக்கு அனுப்பி வைத்தேன். தமிழோ எனது வயதோ தெரியாத அதன் ஆசிரியர், நான் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து எழுதியதாக நினைத்து அதைப் பிரசுரித்தார். 25 ரூபாய்க்கான காசோலையையும் எனக்கு அனுப்பி வைத்தார்! வாழ்க்கையில் முதன்முதலில் பார்த்த அந்தக் காசோலையைக் காசாக்க என்னால் முடியவில்லை என்றாலும் எழுதினால் பணம் கிடைக்கும் என்று தெரியவந்தது. (குறிஞ்சி பூப்பது போல் எப்போதாவது நிகழும் ஓர் அதிசயம் அது என்பதை அறியப் பலகாலமாகியது!)

பதினாறு வயதிருக்கும்போது எங்கிருந்தோ கையில் கிடைத்த ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ‘முதியவயது உடலுறவுக்கு ஒரு கைப்புத்தகம்' எனும் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். அந்த வயதின் காமக் கிளுகிளுப்பில் அதைப் படிக்க ஆரம்பித்த நான் அக்கட்டுரையை மொழிபெயர்த்து ‘குடும்ப டாக்டர்' எனும்ஆரோக்கிய மருத்துவ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு பெரிய பீரங்கிக் குழாய்க்கு இருபுறமும் ஒரு கிழவனும் கிழவியும் நிற்பதுபோன்ற அட்டைப் படத்துடன், அட்டைக் கட்டுரையாகவே அதைப் பிரசுரித்தனர்! இதழ்களை விற்கும் கடைகளின் முன்வரிசையிலேயே தொங்கிக்கிடந்த அவ்விதழின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த எனக்கு மிகுந்த அசிங்க உணர்வுஏற்பட்டது. ‘இதோ எனது கட்டுரை வெளிவந்திருக்கிறது‘ என்றுச் சொல்லி யாரிடமாவது இந்தக் கருமத்தைக் காட்ட முடியுமா?

சில வாரங்கள் கழித்து அவ்விதழின் ஆசிரியர் மனோகரனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ‘‘ஷாஜிக்கு, பழைய ரீடர்ஸ் டைஜஸ்டிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை சுட்டு எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பும்போது குறைந்த பட்சம் ‘நன்றி & ரீடர்ஸ் டைஜஸ்ட்' என்ற ஒரு குறிப்பையாவது வைத்திருக்கலாம். இத்தகைய திருட்டுக்கட்டுரைகளைப் பிரசுரிப்பது பலவகையான சட்டச் சிக்கல்களை வரவழைக்கக்கூடியது. அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்லை''. பீதியாகி ஒரு மூலையில் உட்கார்ந்துபோனேன்.ஆனால் அக்கடிதத்துடன் ஆசிரியர் 50 ரூபாய்க்கான காசோலையையும் வைத்திருந்தார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியமளித்தது.

வங்கிக் கணக்கு எதுவும் இல்லாததால் முழுத்தேங்காய் கிடைத்த நாயைப் போல் அக்காசோலையைப் பலமாதம் கையில் வைத்திருந்தேன். பண வறுமை மனிதனை எதுவும் செய்ய வைக்கும்! காசில்லாமல் திண்டாடிய நாளொன்றில் அந்தக் காசோலையை எடுத்துக்கொண்டு கோட்டயத்தில் உள்ள அவ்விதழின் அலுவலகத்திற்குச் சென்றேன். வரவேற்பு மேஜைக்குப் பின்னால் அமர்ந்திருந்து தட்டச்சு அடித்துக்கொண்டிருந்த அழகான பெண்மணி தனது வேலையைத் தொடர்ந்தபடியே என்னிடம் பேசினார்.

‘யாரு? என்ன வேணும்?'

‘மனோகரன் சாரைப் பாக்கணும்'

‘என்ன விஷயமா?‘நான் எதுவும் சொல்லாமல் தயங்குவதைப் பாரத்து

‘சரி சாருட்ட யாரு வந்திருக்குன்னு சொல்லணும்?'

‘அது.. வந்து...கொஞ்சநாள் முன்னாடி என்னோடக் கட்டுரை ஒண்ணு குடும்ப டாக்டரில் வந்திருந்தது'

திடீரென்று அவர் தட்டச்சு தட்டுவதை நிறுத்தினார். நான் சொல்வதை நம்பமுடியாமல்‘தம்பி என்ன

சொன்னே? நீ எழுதிய கட்டுரை குடும்ப டாக்டரிலா? அந்தக் கட்டுரையோட பேரு?' என்று கேட்டார். ஒரு பெண்ணிடம் அந்தக் கட்டுரையின் பெயரை எப்படிச்சொல்வேன்! எதுவுமே பேசத் திராணியில்லாமல் நான் விக்கிமுக்கி நிற்கும்போது உள்ளேயிருந்து அழகான தாடி வைத்த ஒரு மாநிற இளைஞர் வெளியே வந்தார். ‘இதான் மனோகரன் சார்.

 பேசிக்கோங்க' என்று இன்னும் மலைப்பு மாறாத அந்த வரவேற்புப் பெண்மணி சொன்னார்.

மிகவும் தாழ்ந்த குரலில் மெல்லிய நடுக்கத்தோடு என்னை நான் மனோகரனுக்கு அறிமுகம் செய்தேன். முதலில் சற்றுமே நம்பிக்கையில்லாமல்என்னைப் பார்த்த அவர் பின்னர் ‘அட! நீங்கதானா அந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் ரைட்டர்?‘ என்று மலைப்புடன் கேட்டார். வெளிறிப்போன நான் பலவீனமாக 'ஆமா' என்று சொல்லிக்கொண்டு எனக்கு வந்தக் கடிதத்தையும் காசோலையையும் அவரிடம் காட்டினேன். அதைப் புரட்டிப் பார்த்த அவர் சத்தமாகச் சிரித்தபடியே ‘அட அவரா நீங்க! சரி, எதுக்கும் உள்ளே வாங்க' என்று என்னை அழைத்தார்.

ஒரு பத்திரிகையின் அலுவலகத்தை முதன்முதலில் பார்க்கிறேன். விசாலமான அறை, சத்தமாகச் சுழலும் மின்விசிறிகளின்  கீழ் பலாண்களும் பெண்களும் வேலை செய்துகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அனைவருமே ஏதேதோ எழுதுகிறார்கள். எல்லாரும் எழுத்தாளர்களாகத்தான் இருக்கவேண்டும்! குட்டென்பெற்கின்  அச்சு இயந்திரம் எங்கே? மனோகரன் அங்கே வேலை செய்துகொண்டிருந்த சிலரிடம் என்னைச் சுட்டிக்கொண்டு சிரித்தபடியே ஏதோ பேசினார். அவர்கள் அனைவரும் இப்போது என்னைத்தான் பார்க்கிறார்கள். சிலரது முகங்களில்ஒருவகை அதிசயம். சிலர் சிரிக்கிறார்கள். மலையோரத்தில் வீசும் மழைக்காற்றில் வளைந்து நெளியும் காற்றாடி மரத்தைப்போல் மெலிந்த உடம்புள்ள,மீசை முளைக்காத ஒரு பையன். உடலுடன் சற்றுமே ஒத்துப்போகாமல் அசைந்து தொங்கும் சொக்காவும் ஆங்காங்கே கறைபடிந்த வெள்ளை வேட்டியும் கட்டித் தயங்கிப் பதறி நிற்கும் இந்தப் பதினாறு வயதுக்காரன் எழுதிய ‘முதியவயது உடலுறவுக்கான கைப்புத்தக'த்தை நினைத்துச்சிரிக்காமல் வேறென்ன செய்ய?

ஜனனி பிரசுரம் என்கின்ற பெயரில் பல இதழ்களை நடத்திக்கொண்டிருந்த அக்குழுமத்தின் தலைவர் தாமஸ் டி அம்பாட் அப்போது மலையாள களிப்புனைவு இலக்கியத்தின் பேய் மற்றும் துப்பறியும் கதை எழுத்தாளர்களில் உச்ச நட்சத் திரமாக இருந்தவர். நான் அவரது வாசகனோ ரசிகனோ இல்லை என்றாலும் அவரது புகழைப் பற்றியும் வெகுஜன இலக்கியத்தில் அவருக்கிருந்த இடத்தைப் பற்றியும் அறிந்திருந்தேன். அவரது அறைக்குள்ளே என்னை அழைத்துச்

 சென்றார் மனோகரன். ‘வந்த விஷயம் என்ன?' என்று தாமஸ் டி அம்பாட் என்னிடம் கேட்டார். ‘காசோலை மாற்றுவதற்கு எனக்கு வழியேதும் இல்லாததால் அதன் பணம் கிடைக்குமா என்று கேட்க வந்தேன்' என்று வெட்கித் தலைகுனித்து சொன்னேன். என்னுடைய ஊர், வீடு, அப்பா, அம்மா, மற்ற விவரங்கள் எல்லாம் விரிவாகக் கேட்டார். ‘சின்ன வயசுல கொஞ்சகாலம் நான் உங்க ஊர்ப் பக்கம் வந்துதங்கியிருக்கேன்' என்று சொன்னார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நம்ம ஊருக்கும் பிரபலமான எழுத்தாளர்ஒருவர் வந்து சென்றிருக்கிறாரா!

‘சாப்பிட்டியா?' என்று கேட்டார். வெற்றுத் தன்மானம் உண்மையைச் சொல்ல அனுமதிக்கவில்லை.எனக்குத் தேநீர்  வரவைத்துத் தந்தார். பேச்சுக்கிடையே ஒருமுறைகூட நான் சுட்டு எழுதிய கட்டுரையைப் பற்றி அவர் கேட்கவே இல்லை. நான் புறப்பட எழுந்தபோது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை என்கையில் தந்தார். ‘இது இனிமே நீ சொந்தமா எழுதப்போகும் ரைட் அப்களுக்கு ஒரு அட்வான்ஸாவேஇருக்கட்டும்‘ என்றுச்

சொன்னார். நான் வெளியே வரும்போது அவரும் என்னுடன் அலுவலகத்திற்கு வெளியே வந்தார். தனது புல்லட்மோட்டார் சைக்கிளில் சாய்ந்துநின்றவாறு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு ‘நீ கோட்டயம் டௌணுக்கு வரும்போது சும்மா இங்கேயும் வந்திட்டுப் போ' என்று சொல்லி என்னை வழியனுப்பினார்.

எப்போது கோட்டயம் போனாலும் ஜனனி பதிப்பகம் செல்வதை நான் வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் ஊரில் இருந்தால் ஐந்து நிமிடமாவது என்னைச் சந்திப்பார். ‘சாப்பிட்டியா? சாயா குடிச்சியா?' எல்லாம் கேட்பார். கிளம்பும்போது ‘பஸ் டிக்கெட்டுக்குப் பணம் இருக்கா?' என்றுகேட்பார். இல்லை என்று அறிந்தால் ஐந்து பத்து வலுக்கட்டாயமாகக்கையில் வைத்துத் தருவார். எனது வாழ்க்கையில் நான் முதன்முதலில் சந்தித்த புகழ்பெற்ற எழுத்தாளர் அவர். எண்ணற்ற ரசிகர்களும் பொருளாதார வசதிகளும் அவருக்கிருந்தன. எந்தவொரு பயனும் என்னால் அவருக்கு இருக்கவில்லை. இருந்தும் அம்மனிதர் எல்லையற்ற கருணையையும் அன்பையும் என்மேல் காட்டினார். எதற்காக?

மஞ்சள் பளிங்கு மலையினூடே எங்கள் மலைக் கிராமங்களின் சில சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஜனனியில் சில கட்டுரைகளை எழுதினேன். எது எழுதினாலும் அதன் நீளத்துக்கு ஏற்றவாறு பத்திலிருந்து இருபத்தைந்து ரூபாய் அஞ்சல் பணம் அனுப்பி வைப்பார். பின்பு தீபிக நாளிதழிலும் பச்சிம தாரக, பௌரதுவனி, ஞாயிறாழ்ச்ச போன்ற வார இதழ்களிலும் எழுதினேன். ‘இடுக்கி மழைக்காடுகளில் ஐப்பசிக் கோடை', ‘இன்னும் உயராத இரட்டையார் அணை', ‘மறையூரில் மகாமாரி' போன்று பத்திரிகை ஃபீச்சர் பாணியிலான குறிப்புகள்தாம் அதிகம் எழுதினேன்.

சிலகாலம் கழித்து ஒருநாள் கோழிக்கோடுபேருந்து நிலையத்தில் வைத்துநான் குடும்ப டாக்டர்மனோகரனைச் சந்தித்தேன். அங்கே மஹாராணி ஓட்டலில் தனது புதிய நாவலை எழுதுவதற்காகத் தங்கியிருந்த தாமஸ் டி அம்பாட்டைப் பார்க்க வந்திருந்தாராம். தாமஸ் சார் இங்கே இருக்கிறாரா? நான் நேரடியாக அந்த ஓட்டலுக்குச் சென்றேன். அவரது அறையைத் தேடிப்பிடித்துக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்ததும் ஆச்சரியமாக ‘ஷாஜீ, நீ எப்டி இங்கே?' என்று கேட்டார். அறைக்குள் என்னை அமரவைத்து குடிக்க 'நாரங்ஙா வெள்ளம்' வாங்கித் தந்தார். அவரோ திராட்சை வண்ணத்திலான எதோ மதுவை குறைவான அளவில் அருந்திக்கொண்டிருந்தார். கட்டில்மேலும் மேஜைமேலும் பல தலைப்புகளிலான ஆங்கில இதழ்கள், தடிமனான ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கறுப்புப் புத்தகம் (ஆடூச்ஞிடு ஆணிணிடு),ஆர்தர் ஹெய்லி, சிட்னி ஷெல்டன் போன்றவர்களின் சில குற்றவியல் நாவல்கள் போன்றவை விரவிக் கிடந்தன. நான் பெருங்குழப்பத்துக்கு ஆளானேன். தாமஸ் டி அம்பாட்டும் திருடித்தான் எழுதுகிறாரா?

ரவி பேலட்

எனது நியாயமான சந்தேகத்தை  உணர்ந்துகொண்டதுபோல் ‘இதுபோன்ற புத்தகங்களைப் படித்து அவற்றிலிருந்து தகவல்களைச் சேகரிப்பதன் வழி நமக்கு அதிக அறிவும் புரிதலும் கிடைக்கும். அவை எழுத்தில் உதவும்' என்று எனக்குப் புரியவைத்தார்.தொடர்ந்து வாசிப்பதால் மட்டுமே எழுத்தாளர்கள் உருவாக முடியும் என்பதை உணர்த்தினார். படித்தபுத்தகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை அடியொற்றி நாம் எழுதுவது தவறல்ல என்பதையும் அவரிடமிருந்துதான் அறிந்துகொண்டேன். ஆர்தர் ஹெய்லி, சிட்னி ஷெல்டன் போன்ற பெயர்களை முதன்முதலில் அன்றுதான் பார்த்தேன். புதுமணம் மாறாத அப்புத்தகங்களைப் புரட்டியவண்ணம் நெடுநேரம் அவருடன் செலவிட்டேன். ஹெய்லியின் ஓவர்லோட் நாவலை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த அவர் அப்புத்தகத்தை எடுத்து என்கையில் தந்து ‘‘நீயே வெச்சுக்கோ, படிச்சுக்கிட்டுச் சொல்லு'' என்றார்!

‘அட! ஷாஜி இங்கே வந்திட்டானா?‘ என்று கேட்டுக்கொண்டு மனோகரன் உள்ளே வந்ததும் தாமஸ் டி என் கையைக் குலுக்கி ‘சரி ஷாஜீ, சந்திப்போம், நீ நெறய படி, கொஞ்சமா எழுது‘ எனச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.எங்கே போகலாம்? கையில் இருக்கும் சொற்பப் பணத்தை வைத்துக்கொண்டு வீடு திரும்ப முடியாது. கண்ணூரில் சில உறவினர்கள் உள்ளனர். அங்கு செல்லலாமா? ஓரிரு நாட்கள் அங்கே தங்கி ஓவர்லோட் படித்துமுடித்த பின்னர் கட்டணப்பணத்தை யாரிடமாவது கேட்டுவாங்கி வீட்டிற்குக் கிளம்பலாமா? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டு ஓட்டலுக்கு வெளியே நான் நின்றுகொண்டிருந்தபோது மனோகரன் வந்து என் முதுகைத் தட்டினார். ‘ஷாஜி போயிருக்க மாட்டான், அநேகமா கீழேதான் இருப்பான்னு தாமஸ் சார் சொன்னாரு. சரி, ஒரு ரிப்போர்ட் விஷயமா நான் வயநாடு வரைக்கும் போறேன். ஒனக்கு வேற வேலை ஏதும் இல்லன்னா எங்கூட வா. வயநாட்டக் கொஞ்சம் சுத்திப் பாக்கலாம்'' என்றார். நமக்கென்ன வேலை? நான் ஆனந்தமாக அவருடன் கிளம்பினேன்.

முதன்முதல் வயநாட்டுப் பயணம். பேருந்து மலைப் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. குளிர்காலக் காற்று விம் விம்மென்று எங்களை அறைந்துசென்றது. வழியில் நாலாபக்கமும் மலைகள் தலைதூக்கி வருவதைக் கண்ட மனோகரன் ‘இந்த மலைகளில் எதைப் பார்த்துதான் வயலார் 'வயநாடன் மஞ்ஞள் மலயிலூடே, மானந்தவாடிப் புழயிலூடே' என்று எழுதினாரோ என்னமோ' என்று சொன்னார். நானோ வயநாட்டுக்காரியான எனது மனோரஞ்சிதப் பூ ஆசிரியை இதில் எந்த மலைக்குப் பின்னால் பிறந்து வளர்ந்திருப்பார் என்றுயோசித்துக்கொண்டிருந்தேன்.

கல்பட்டாவில் இறங்கினோம். சாப்பிட்டோம். திடீரென்று மனோகரன் ‘அப்போ சரி ஷாஜீ, நீ கிளம்பு, மீண்டும் சந்திப்போம்!‘ என்று சொன்னார். நான் குழம்பி நிற்கையில் அவர் என் சட்டைப்பையில் கொஞ்சம் பணத்தை வைத்துவிட்டு ‘‘வயநாட்டை நீயே கொஞ்சம் சுத்திப் பாரு, ஏதாவது எழுதக் கெடைக்கும்'' என்று சொல்லியபடி அருகிலுள்ள ஒரு கட்டடத்தின் மாடிப்படி ஏறிப்போனார். ஓரிருநாள் வயநாட்டில் சுற்றித் திரிந்தேன். பின்னர் கண்ணூரில் உள்ள உறவினர் வீட்டுக்குப் போனேன். ஒருவாரம் கழித்து ஊர் திரும்பினேன். தாமஸ் டி அம்பாட்டுதான் வயநாட்டுப் பயணத்தில் என்னையும் கூட்டிச் செல்லவும் செலவுக்குப் பணத்தைத் தரவும் மனோகரனுக்குச் சொன்னார் என்பதைப் பலகாலம் கழித்து அறிந்துகொண்டேன்.

அதன் பிறகு ஒருபோதும் தாமஸ் டி அம்பாட்டை நான் பார்கக்கவில்லை. கார்கள் இருந்தபோதிலும் இருசக்கர வாகனங்களை நேசித்த அவர் தனது புல்லட் பைக்கில் ஏறி நெடுந்தொலைவுப் பயணங்கள் போக விரும்பினார். ஒருநாள் காலையில் புல்லட்டில்

செல்லும்போது கோட்டயம் நகருக்கு நடுவே நடந்த கோரமான சாலைவிபத்தில் சிக்கி அங்கேயே பரிதாபமாக இறந்துபோனார். அப்போது அவருக்கு 42 வயது. பதிற்றாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் ஏதோ ஒரு புத்தம்புதிய புத்தகத்தின் வாசனைபோல் எனது நீங்கா நினைவுகளில் வாழ்கிறார் அந்த எழுத்தாளர்.

(வளரும்...)

ஜூலை, 2021

முள்ளரும்பு மரங்களின் முழுப்பெயர் முள்ளரும்புக் கூம்பு தேவதாரு அல்லது ப்ரிசில்கான் பைன்.மிகக் கடுமையான வானிலைச் சூழல்களில் வளரும் மரங்கள் இவை. மழையே பெய்யாமல், ஒன்றும் விளையாமல் வறண்டுலர்ந்த குத்துயர மலைப்பாறைப் பகுதிகளில் இவை வளர்கின்றன. வெள்ளைச் சுண்ணாம்பு கற்களின்மேல் வேரூன்றி அணுவணுவாக, நூற்றாண்டுகளினூடாகத் தலை நிமிர்த்துகின்றன. ஒருபோதும் பசுமை மாறாத இந்த ஊசியிலை மரத்தின் வாழ்நாள் சாதாரணமாக 5000 - 6000 ஆண்டுகள்! அதாவது உலகின் மிகவும் பழமையானதும் இன்றும் உயிருடனிருப்பதுமான ஒரேயொரு உயிரினம் முள்ளரும்பு மரங்கள். 

இந்த அதிசய மரத்தின் கன்றுகள் பல நூற்றாண்டுகாலம் புதிதாக  முளைப்பதில்லை! இளஞ்செடிகள் துளிர்விட்டு இனப்பெருக்கம் நடப்பது ஆயிரம் ஆண்டுகளில் எப்பொழுதோ ஓரிருமுறை! மிகவும் மந்தமாகத்தான் இம்மரத்தின் வளர்ச்சி. ஆனால் இதன் இலைகளும் அரும்புகளும் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் உதிராமல் பசுமையுடன் நீடித்து நிற்பவை. நில்லாமல் வீசும் காற்றுகளாலேயோ சுட்டெரிக்கும் வெய்யிலாலேயோ உறைத்து ஊறவைக்கும் கடும் பனியினாலேயோ முள்ளரும்பு மரங்களை எதுவும் செய்துவிட முடியாது. விலங்குகளோ கிருமிகீடங்களோ மரத்தண்டைச்  சிதிலப்படுத்தும் காளான்களோ இம்மரத்தைச் சேதப்படுத்த முடியாது. 6000 ஆண்டுகள் பசுமையாக வாழ்ந்து, பின்வரும் நூற்றாண்டுகளினூடாகக்கொஞ்சம் கொஞ்சமாக இறக்கும்போதும் மீண்டும் பல்லாயிரம் வருடங்கள் தனது வேர்களில் ஆழ்ந்து அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது இம்மரம்.

ஒட்டுமொத்தமும் காய்ந்துபோன பின்னும் 9000 ஆண்டுகள் வரைக்கும் கரும்பாறைபோல் நீடித்து நிற்கக் கூடிய இந்த முள்ளரும்பு மரத்தை அரைமணி நேரத்தில் தரைமட்டமாக்குகிறான் மனிதன். 1964ல் அமேரிகாவில் ப்ராமித்யூஸ் எனும் பெயரில் அழைக்கப்பட்ட ஒரு முள்ளரும்பு மரத்தை டொனால்ட் கேரி என்பவர் மிகச் சாதாரணமாக மின்ரம்பத்தால் அறுத்து வீழ்த்தினார். அமேரிக்க வனத்துறையினரின் ஒத்தாசையும் அதற்கு இருந்தது! வானிலை ஆராய்ச்சிக்காக என்று பின்னர் அறிவிக்கப்பட்டது! டொனால்ட் கேரி இறந்தபோது அவனுக்கு வயது 70. அதாவது 5000 ஆண்டுகள் வாழ்ந்த மரத்தை அரைமணி நேரத்தில் வெட்டிச் சாய்த்த மனிதன் இவ்வுலகில் வாழ்ந்தது வெறும் 25,550 நாட்கள். 

இலக்கியம், இசை, ஓவியம், தத்துவம், திரைப்படம் குறித்தான இத்தொடருக்கு ‘முள்ளரும்பு மரங்கள்' என்று பெயர் வைப்பது எதனால் என்று இப்போது என்னால் சரியாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இதைத் தொடர்ந்து எழுதுவதன் வழியாக நானும் தொடர்ந்து வாசிப்பதன் வழியாக நீங்களும் அதைக் கண்டடையலாம் என்றே நம்புகிறேன். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com