கிருஷி: ஒரு ‘நண்பேண்டா’ வெற்றியின் கதை!

கிருஷி: ஒரு ‘நண்பேண்டா’ வெற்றியின் கதை!

அவர்கள் நான்கு நண்பர்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் செய்து வந்த வேலைகளை உதறிவிட்டு தொழில்தொடங்க முடிவு செய்தார்கள். முதல் ஆண்டில் 40 கோடிக்கு வர்த்தகம் செய்தவர்கள், எட்டு ஆண்டு கழித்து இப்போது ஆயிரம் கோடிகளைத் தாண்டி வர்த்தகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர் இராமமூர்த்தி, மகராஜன், இரங்கநாதன், செல்வகுமார் ஆகியோர்தான் அந்த நான்கு நண்பர்கள். இவர்களின் நிறுவனம் கிருஷி தீவன நிறுவனம்.

இவர்களின் வெற்றிகரமான ‘நண்பேண்டா' கதையை இங்கே பார்க்கலாம்.

‘‘படிப்பு முடிந்ததும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடைத் தீவன நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன். 2013 ஆம் ஆண்டு இறுதியில் அங்கிருந்து விலக முடிவு செய்தேன். அப்போது வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேருவதற்கு பதிலாக நாமே தொழில் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் வந்தது. இதேபோல் தீவனத் துறையில் பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்த நண்பர்களான நாங்கள் நான்கு பேர் இதே எண்ணத்தில் இருந்தோம். சேர்ந்து தொழில் தொடங்கலாமே என்று முடிவு செய்து கிருஷி நியூட்ரிஷன் என்ற இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். முதலாம் ஆண்டில் நாற்பது கோடி ரூபாய் வியாபாரம் என்ற இடத்திலிருந்து தொடங்கி கடந்த ஆண்டு (20&21) ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்த அளவிற்கு வந்துள்ளோம்'' என்று உற்சாகமாகத் தொடங்குகிறார் கிருஷியின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ராமமூர்த்தி.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள கிருஷி நிறுவனம் கோழித் தீவனம், மாட்டுத்தீவனம், ஆட்டுத் தீவனம் என்று பல்வேறு கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்து தென் இந்தியாவில் முக்கியமான தீவன உற்பத்தி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஐநூறுக்கும் மேல் தொழிலாளர்கள், தென்னிந்தியாவில் 12 தீவன ஆலைகள் 700 விற்பனை மையங்கள் என்று கிளை பரப்பியிருக்கிறது.

இந்த நண்பர்களின் தொழில் கனவும், அதை நிஜமாக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும், சவால்களையும் அவர்களின் வார்த்தைகளிலேயே இனி காணலாம்.

‘‘பதினைந்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் இந்த துறையிலேயே மூழ்கி-யிருப்பதால் கால்நடை தீவன துறையின் தேவை, அதனுடைய சாதக பாதகங்கள் அனைத்தும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் திட்டமிடலும், அதை செயல்படுத்துவதும் எங்களுக்கு எளிதாக இருந்தது.

எங்களுடைய முதல் குறிக்கோள் தரமான தீவனத்தை அளிப்பது. அதற்காக மூலப்பொருட்கள் தொழிற்சாலைக்குள் நுழையும்போதே மாதிரிகளை எடுத்து சோதனை செய்து தரம் உறுதிப் படுத்தப்பட்ட பிறகே வண்டியிலிருந்து பொருட்கள் இறக்கப்படும்.

சோதனைகளுக்கு மிக நவீனமான NIR எனப்படும் நியர் இன்ஃரா ரெட் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர் கருவி பயன்படுத்தப்படுகிறது. பிறகு சேமிப்புக் கிடங்குகள், அரைவை ஆலை என்று ஒவ்வொரு கட்டத்திலும் நோய்க் கிருமிகள், மாசுக்கள் அண்டாத வகையில் தொடர்ச்சியாக சோதனைகளும் கண்காணிப்பும் உண்டு. மூலப்பொருட்கள் ஆலையில் நுழைவதிலிருந்து தீவனங்கள் ஆலையிலிருந்து வெளியேறும்வரை ஒரு மணி நேரத்திற்கொருமுறை பரிசோதனைகள் செய்யப்படுவதால் தரத்தை உறுதி செய்ய முடிகிறது.

இந்தியாவில் கால் நடைகளின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் பால் உற்பத்தியில் உலக நாடுகளில் இந்தியாதான் முதலிடத்திலுள்ளது. ஆனால் கலப்பின பசுக்கள் அதிகமான அளவிற்கு நம்முடைய பால் உற்பத்தித் திறன் அதிகமாகவில்லை. காரணம், மாடுகளின் மரபணு  சக்திக்கேற்றவாறு சரியான ஊட்டச்சத்துள்ள தீவனங்களை நம்முடைய விவசாயிகள் கொடுப்பதில்லை. எங்களுடைய இலக்கு, கால்நடை வளர்ப்போர் எல்லோரும் சரியான சத்துள்ள தீவனத்தை பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கி மற்ற நாடுகளுக்கு பால் பொருட்களை நாம் ஏற்றுமதி செய்யுமளவிற்கு வர வேண்டும் என்பதே. அதற்காகத்தான் தனியாக கால்நடை மருத்துவக் குழுவையே வைத்துள்ளோம்,'' என்கிறார் மருத்துவர் இராமமூர்த்தி.

கிருஷியின் முதன்மை செயல் அதிகாரியும் நிறுவனர்களில் ஒருவருமான மகராஜன் வியாபாரக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் நினைத்ததைப் போல் குடும்ப வியாபாரத்தை நடத்த முடியாததால் கால்நடை தீவனதுறையில் விற்பனையாளராக நுழைகிறார். அதில் நல்ல அனுபவம் பெற்ற பிறகு கிருஷி தொடங்குகிறார்கள். ‘‘விஷயம் தெரிந்த, ஒரே அலைவரிசையுள்ள நல்ல நண்பர்கள் அதுவும் ஒரே துறையில் கிடைப்பது அதிர்ஷ்டம். எங்களுக்கு அது அமைந்தது. முதலில் நான்கு நண்பர்கள் சேர்ந்து தொடங்கினோம். பிறகு மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டோம். 2013 இறுதியில் முப்பது தொழிலாளிகளுடன் ஒரு நாளைக்கு நாற்பது டன் தீவனம் உற்பத்தி செய்யும் ஆலையை லீசுக்கு எடுத்துதான் நிறுவனத்தை தொடங்கினோம். முதலிலேயே பெரிய ஆலையை கட்டி வியாபாரம் தொடங்குமளவிற்கு அன்றைக்கு பணமும், நேரமும் இல்லை. இந்த தொழிலில் விநியோகஸ்தர்கள், பொருட்--களை வழங்குபவர்கள் ஆகியோரிடம் எங்களுக்கு இருந்த நல்ல பெயர்தான் இந்த நிறுவனத்தை காப்பாற்றி வளர்த்து வருகிறது. வங்கிகளை விட எங்களுக்கு பொருட்களை வழங்குபவர்களின் உதவி பெரியதாக இருந்தது. மற்றவர்களுக்கு ஒரு வாரம் கடன் என்றிருந்தபோது எங்களுக்கு பதினைந்து நாட்கள் என்று கடன் கொடுத்து உதவினார்கள். அவர்கள் இல்லாமல் எங்கள் வளர்ச்சி இல்லை.

 தீவனம் வாங்குபவர்களை வெறும் வாடிக்கையாளர்களாக நாங்கள் பார்ப்பதில்லை. எங்கள் தொழிலில் பங்குதாரர்களாக பார்த்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வந்ததால் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறது எங்களுக்கும் உதவியாக இருக்கிறது.

எங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருமே தங்களுடைய நிறுவனமாக எண்ணி பணிபுரிவது எங்களுடைய மற்றொரு பலம். கொரோனா காலத்தில் முக்கிய பணியாளர்கள் யாருமே வீட்டிற்கு செல்ல வில்லை. அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணிகள் நடைபெற்றன. எனவே எங்கள் தீவன ஆலைகளை ஒருநாளும் நிறுத்தவில்லை; பண்ணை-யாளர்களுக்கு தட்டுப்பாடின்றி தீவனம் அளிக்கும் சேவையைப் பாதிப்பில்லாமல் செய்யமுடிந்தது.

கால்நடை தீவன தொழில் என்பது மிகக்குறைவான லாபம் கொண்ட தொழில். மூலப்பொருட்களின் விலை நிலையாக இருப்பதில்லை. உதாரணமாக சோயா விலை டன் முப்பதாயிரத்திலிருந்து ஒரு இலட்ச ரூபாய் வரை இப்போது வந்து நிற்கிறது. கடுமையான தட்டுப்பாடு. அதற்காக தீவன விலையை உடனடியாக உயர்த்த முடியாது. சில நேரங்களில் நஷ்டத்திற்கும் பொருட்களை விற்க வேண்டி இருக்கும். இது போன்ற சவால்களை எதிர் கொண்டுதான் தொழிலை நடத்த வேண்டியுள்ளது,'' என்கிறார் மகராஜன்

‘‘அடுத்த கட்டமாக தற்போது பண்ணை கறிக்கோழி வளர்ப்பை சிறிய அளவில் ஆரம்பித்திருக்கிறோம். அதை விரிவுபடுத்தி தாய்க்கோழி வளர்ப்பு, மூலப்பொருட்கள் வியாபாரம் என்று படிப்படியான திட்டங்களை வைத்துள்ளோம்'' என தங்கள் அடுத்த கட்டம் பற்றி விவரிக்கிறார் இவர்.

பொதுவாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் ஆர்வம் குறைவாக இருப்பது பற்றி பேச்சு திரும்பியது.

‘‘தமிழக இளைஞர்கள் அதிகம் தொழில் தொடங்க வராததற்கு காரணம் பெற்றோர் தான். தன்னுடைய பையன் கஷ்டப்படக்கூடாது, பிரச்னை இல்லாம வாழணும் என்று அவர்கள் நினைப்பதால் தான் இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவதில்லை. இந்தியா போன்று வளரும் நாடுகளில் வரும் காலத்தில் அனைவருக்கும் அரசாங்கமோ தனியாரோ வேலை கொடுப்பதென்பது முடியாத காரியம். அதிகமான படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன் வர வேண்டும். உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். ஈடுபடப் போகும் துறையில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பா சொத்தை வீணாக்காமல் பயிற்சியும் அந்தந்த துறைகளில் அனுபவமும் பெற்ற பிறகு தொழில் தொடங்க வேண்டும் என்றே நான் சொல்லுவேன்.'' என்று இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார் மகராஜன்.

கிருஷி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மேலாளர் மருத்துவர் புவனேந்திரபாபு கிராமப்பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டை வளமாக்கவும்,தொழிலில் சிறக்கவும் முடியும் என்கிறார்.

‘‘கிருஷியில் இப்போது 17 விதமான கால்நடை, கோழித் தீவனங்கள் தயாரித்து பண்ணையாளர்களுக்கும் விவசாயி- களுக்கும் விற்பனை செய்கிறோம்.

இன்றைக்கு கால்நடை தீவன உற்பத்தி நிறுவனங்கள் அல்லது அதை வாங்க கூடியவர்கள் சுத்தமாக ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்த துறை எந்தளவிற்கு ஒருங்கிணைக்கப்பட்டதாக மாறுகிறதோ அன்று உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

பெரும்பாலான தீவன உற்பத்தி நிறுவனங்கள் தீவனங்களை உற்பத்தி செய்வது, அதை விற்பனை செய்வது என்ற அளவில் மட்டும் தான் உள்ளன. ஆனால் கிருஷி கள அளவில் வேலைபார்க்கும் அளவிற்கு பல்நோக்கு மருத்துவக் குழுவைக் கொண்டுள்ளது. விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் ஐயங்களைப் போக்கினால், மாட்டுக்கும் சரியான அளவில் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும் என  விவசாயிகள் நினைப்பார்கள். வெறும் வைக்கோல் போட்டால் பால் கொடுக்கும், ஆனால் அந்த பால், பாலுக்குடைய குணங்களுடன் இருக்காது என்ற விழிப்புணர்வு  விவசாயிகளுக்கு உண்டாகும்.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், சொல்லிக் கொள்ளும் அளவிற்குப் பால் ஏற்றுமதியில் இந்தியா முன்னேற்றம் அடையவில்லை. காரணம், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு, நம்முடைய பால் உற்பத்தி முறையில் பெரிய அளவிற்கு நம்பிக்கை இல்லை.

இன்றைய சூழலில் எல்லா விவசாயிகளையும் தங்கள் கால்நடைகளுக்கு தீவனம் பயன்படுத்த வைக்கும் அளவிற்குக் கொண்டுவந்தாலே பெரிய விஷயம். அதுவே வெற்றி என்று நினைக்கிறேன்,'' என்று  சொல்கிறார் மருத்துவர் புவனேந்திர பாபு.

கிருஷி நிறுவனத்தின் இன்னொரு பலம், ஆரம்பத்தில் நான்கு நண்பர்களாகச் சேர்ந்து தொழில் தொடங்கினாலும் தங்களை நம்பி வந்து நிறுவனத்தில் சேர்ந்த மேலும் பலரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பது தான்!

கிளம்புவதற்கு முன் பெருந்துறை சிப்காட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் கிருஷியின் புதிய தீவன ஆலையை சுற்றி வந்தோம். நோக்கம் பெரிதாக இருக்கும்போது வளர்ச்சி பெரிதாக இருப்பதில் ஆச்சர்யமில்லைதானே!

செப்டம்பர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com