காட்டுக்குள் படுத்திருந்த பைசன்!

காட்டுக்குள் படுத்திருந்த பைசன்!

உயிரில்லாத உடல்கள் பொய்சொல்வதில்லை. அவை சொல்லும் உண்மைகளை நாம் கவனமாகக் கவனித்தால் புரிந்துகொள்ளலாம். கால்நடை நோய்க்குறியியல் துறையைச் சார்ந்தவன் என்கிற முறையில் ஏராளமான விலங்குகளின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கும் அனுபவம்  உண்டு. மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில் தம் செல்லப்பிராணிகளின் உடலைக் கண்ணீரும் கம்பலையுமாகக் கொண்டுவந்து பரிசோதனை செய்யுமாறு சிலர் கேட்டுக்கொள்வது உண்டு. மனிதர்களுக்குப் பரவும் ஆபத்தான ரேபீஸ் நோய்த் தாக்குதல் என உறுதிப்பட்டால் உடனடியாக அதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு எச்சரித்து, மருத்துவர் அறிவுரையுடன் ரேபீஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிடுவதைத் தவறாது கடைப்பிடிப்போம். ஏனெனில் ரேபீஸ் நோய் மனிதர்களுக்கு வந்தால் சிகிச்சையே கிடையாது.  செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மிக அவசியம்.

சென்னையில் ஒரு மாட்டின் உடலைக் கொண்டு வந்தார்கள். சாலையோரம் மின்கம்பத்தில் கட்டி இருந்த மாடு அது. திடீரென இறந்து கிடந்திருக்கிறது. மழைக்காலம் என்பதால் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம், என்னவென ஆராயவேண்டும் என்றனர் காவல்துறையினர். பொதுவாக விலங்குகள் இறப்பில் புகார் எடுத்துக்கொள்ளப்பட்டால் சடலப்பரிசோதனைக்கான வேண்டுகோள் காவல்துறையில் இருந்துதான் வரும்.

மாட்டின் உடலைப் பார்த்தால் மின் தாக்குதலுக்கான அறிகுறி எதுவும் இல்லை. உடலில் எந்தபாகமும் கருகியோ எரிந்தோ போயிருக்கவில்லை. முறைப்படி உடலை அறுத்துப் பார்த்தபோது அதன் நெஞ்சுப்பகுதியில் ஆச்சரியம் காத்திருந்தது. அதன் நுரையீரலில் ‘ஆம்பிஸ்டோம்' என்கிற புழுக்கள் காணப்பட்டன. பொதுவாக மாடுகளின் வயிற்றுப்பகுதியில் காணப்படுபவை இவை. மாட்டின் உணவுக்குழாய் வழியாக வெளியே வந்து, தொண்டைப்பகுதியில் சட்டென்று மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் போய்விட்டிருக்கின்றன. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாடு இறந்துள்ளது எனக் கண்டறிந்தோம். பொதுவாக மாடுகளுக்கு வயிற்றில்தான் இப்புழுக்கள் இருக்கும். நத்தையின் மூலமாக பரவக்கூடியவை இவை. இவற்றை நுரையீரலில் கண்டது ஓர் அதிர்ச்சிகரமான அனுபவமாகவே அமைந்திருந்தது.திண்டுக்கல் பக்கமாக காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு எருதுகளில் சில இறந்து விட்டன. அதைப் பரிசோதித்த உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் கோமாரி நோய்த் தாக்குதல் எனகூறி இருந்தனர். ஆனாலும் வனத்துறை சார்பாக அதை உறுதிப்படுத்த ஒரு குழு அழைக்கப்பட்டது. அதில் நோய்க்குறியியலாளனாக நானும் இடம்பெற்று இருந்தேன். காலையில் அந்த வனப்பகுதிக்குப் போய்விட்டோம். கடினமான பாதை வழியாக மேலேறினோம். பகல் முழுக்கத் தேடினோம். ஒரு விலங்கையும் பார்க்க முடியவில்லை. பாறைகள் நிறைந்த பாதைகளில் பாதங்கள் வலித்தன. ஒரு காட்டெருதையும் காணவில்லை. பொதுவாக வன விலங்குகளுக்கு உடல் நலம் இல்லையெனில் கண்டுபிடிக்க முடியாது. அவை தாம் வேட்டையாடப்படக்கூடும் என்ற அச்சத்தில் தங்கள் நலக்குறைவை வெளிப்படுத்துவது இல்லை.மாலையில் மலையிறங்கி, அப்போதுதான் மதிய உணவையே சாப்பிடத் தொடங்கினோம். ஒருவர் பரபரப்பாக ஓடி வந்து. ‘சார் ஒரு பைசன்... கிடக்குது' என்றார்.

சாப்பாட்டை அப்படியே கைவிட்டு, இருட்டுவதற்குள் அதைப் பார்க்கவேண்டும் என்று மலையேறினோம். நல்ல வேளையாக ஒரு ஜீப் கிடைத்தது. போய்ச் சேர்ந்தபோது புதர் ஒன்றின் மறைவில் அது படுத்துக் கிடந்தது. கிட்டேபோனால் அது ஓடிவிடலாம் அல்லது நம்மையே தாக்க முற்படலாம். இருப்பினும் வனத்துறை உதவியாளர் ஒருவர் துணிந்து அருகே சென்றார். அது அசையாமல் கிடந்தது. அரிவாளால் புதரை வெட்டி வழி ஏற்படுத்தி அருகே சென்றோம். அதன் உடலில் இருந்து ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை எடுக்கவும் நான் துணிந்து அணுகியபோது என்னை அனுமதித்தது. காட்டு விலங்கொன்று இப்படி அனுமதித்தது பெரு ஆச்சரியமே.  பிறகு அங்கிருந்த ஊர்க்காரர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அதற்கு தீவனங்கள் அளிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பினோம். ஆய்வகம் வந்ததும் அந்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. கோமாரி நோயே தான் என முடிவுகள் வந்தன. காட்டு விலங்கொன்றை அதன் வாழிடத்திலேயே எந்த மயக்கமருந்தும் அளிக்காமலேயே அணுகி, பரிசோதனைக்கான மாதிரிகள் எடுத்தது இன்றும் மறக்க முடியாத அனுபவமே.

கோவை அருகே காடைப்பண்ணை ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். பொதுவாக காடைகளுக்கு நோய்கள் குறைவாக வரும் என்பது நம்பிக்கை. ஆனால் அங்கு பல வளர்ந்த காடைகள் ‘இன்பெக்‌ஷியஸ் கொரைசா' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் இறந்த காடைகளின் உடல்களில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்துக் கொண்டேன். அந்த பண்ணையைச் சுற்றிப் பார்த்தபோது ஆயிரக்கணக்கான காடைகள் தவிர்த்து, சில கோழிகளையும் வளர்த்துவந்ததைக் கண்டேன். அந்த கோழிகளில் சிலவற்றுக்கும்  ‘இன்பெக்‌ஷியஸ் கொரைசா' தாக்குதல் இருந்ததைப் பார்த்தேன். காடைகளுக்கு இந்த நோய் எப்படி வந்தது எனப் புரிந்தது. கோழிகளை அப்புறப்படுத்திவிடுமாறு அறிவுரை அளித்தேன். அவர்கள் ஆசைப்பட்டு வளர்த்தாலும் விளைவுகளை எண்ணித் தவிர்க்கவேண்டும் என்பது அறிவுரை. அதுமட்டுமல்ல, அங்கிருந்து எடுத்து வந்த தீவன மாதிரிகளை ஆராய்ந்ததுபோது, செலவைக் குறைக்க புரதச் சத்து குறைந்த தீவனத்தை அளிப்பது புரிந்தது. அதில் சில மாறுதல்களைப் பரிந்துரைத்தபோது காடைப்பண்ணையில் சில மாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இன்னொரு முட்டைக் கோழிப்பண்ணைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே போய்ப் பார்த்தபோது ஓரளவு வளர்ந்த கோழிகள் கூட ஒருவிதமான வாத நோய்க்கு ஆட்பட்டிருந்தன. கால்கள் இழுத்துக் கொண்டு நடக்கமுடியாமல் கிடந்தன. பொதுவாக குஞ்சுகளுக்குத் தான் இப்படி வரும். ரைபோபிளேவின் என்கிற பி2 வைட்டமின் குறைபாட்டில் இது ஏற்படும். ஆனால் ஓரளவு வளர்ந்த கோழிகளில் இது காணப்படாது. வழக்கம்போல் மாதிரிகளை எடுத்துக்கொண்டு கிளம்புபோது. பாதிக்கப்பட்ட ஒரு கோழியையும் எடுத்துக்கொண்டேன். ஆய்வகத்தில் வைத்து சில நாட்கள் கண்காணித்து,சொல்கிறேன் என எடுத்து வந்தேன். இங்கே வைத்து அதற்கு பி2 வைட்டமின் சத்தை கடையில் வாங்கிக் கொடுத்துப் பார்த்தபோது இரண்டே நாளில் சரியாகி கம்பீரமாக நடக்க ஆரம்பித்துவிட்டது. தீவனமும் சாப்பிட தொடங்கியது. பிறகென்ன? பண்ணைக்குத் தகவல் சொல்லி எல்லா கோழிகளுக்கும் அந்த நுண் சத்து அளிக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நாமக்கல்லில் பணிபுரிந்தபோது, கோவை அருகே ஓர் ஊரில் இருந்து கால்நடை மருத்துவர் ஒருவர் ரத்தமாதிரிக்குப் பதிலாக நோயுற்ற ஆட்டையே தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். பெரிய எண்ணிக்கையிலான ஆடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். இந்த ஆட்டைப் பலிகொடுத்து, அதன் உறுப்புகளை ஆராய்ந்து நோய்க்காரணியைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  அதற்கான அனுமதியையும் அதன் உரிமையாளர் கொடுத்திருந்தார். இருப்பினும் நோயுற்ற விலங்கைக் கொல்வது எங்கள் பணி அல்லவே.  அதன் ரத்தத்தை மட்டும் எடுத்து ஆராய்ந்து, ரத்த ஒட்டுண்ணிகள் இருப்பதைக் கண்டறிந்தோம். உடனே அவருக்கு முன்னாலேயே சிகிச்சை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ள, எப்படிச் செய்வது என செய்துகாட்டினோம். மருந்து சரியான அளவில் கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்த ஆட்டின் உடல்நிலையில்  முன்னேற்றம் கண்டது. அவர் நன்றி சொல்லி திரும்பிச் சென்றார்.  அனைத்து ஆடுகளுக்கும் அதே சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். அன்றைக்கு பல ஆய்வக வசதிகள் கிடைக்காத காலகட்டம் அது.

பொதுவாக கோழியினங்களுக்கு வழங்கப்படும் உணவுகளைத் தாக்கும் பல்வேறு பூஞ்சைக் காளான்கள் உருவாக்கும் நச்சுகளைப் பற்றித்தான் நான் ஆய்வு செய்திருந்தேன். இந்த நச்சுகளில் நீண்டகாலம் ஆய்வு செய்து குறிப்பிடத்தகுந்த அளவுக்குப் பங்களித்துஉள்ளேன். பணி ஓய்வு பெறுவதற்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சித்தமருந்துகளின் பயன்பாடு பற்றி ஆய்வு செய்தோம். வேப்பிலைச்சாற்றைப் (Neem Leaf extract) பயன்படுத்தி ஆய்வக எலிகளில் நாங்கள் செய்த சோதனையில் எலிகளில் மார்பகப் புற்றுநோய்க்கட்டிகளைக் குணப்படுத்துவதில் அவற்றின் பங்களிப்பு தெரியவந்தது. அதேபோல் இடிவல்லாதி மெழுகு என்கிற சித்த மருத்துவத் தயாரிப்பையும் பரிசோதித்தோம்.  எலிகளில் மூன்றில் ஒரு  பங்கு விலங்குகளில் மட்டுமே புற்றுநோய் கட்டிகள் காணப்பட்டன. மீதி இரு பங்கு எண்ணிக்கையிலானவற்றுக்கு கட்டிகள் வரவில்லை. இந்த ஆய்வுகளை மேலும் புதிய மாணவர்கள் அடுத்த கட்டங்களுக்கும் மேல் மட்டங்களுக்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

(பேராசிரியர் சி.பாலச்சந்திரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்).

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com