சத்துணவில் கோழிமுட்டை!

சத்துணவில் கோழிமுட்டை!

அப்போது சென்னை நந்தனத்தில் இருக்கும் கோழியின ஆராய்ச்சி மையத்தில் இணைப் பேராசிரியராக இருந்தேன். அது 1990 ஆம் ஆண்டு. தமிழக அரசு கால்நடைத்துறைக்கு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்கள். மாலை வீட்டில் ஓய்வாக இருந்தபோது அந்தத் துறையின் அமைச்சரிடம் இருந்து போன். அவர் என் கல்லூரியில் ஜூனியர்.

‘அண்ணா, பட்ஜெட் பார்த்தீர்களா? உங்கள் துறைக்கு சலுகை அறிவித்துள்ளோமே..?'

‘அப்படியா.. கவனிக்கவில்லையே..?'

‘என்னங்க இது... கோழித் தீவனங்களுக்கு விற்பனை வரி 4 சதவீதமாக இருந்ததை 2 சதவீதமாக குறைத்துள்ளோம்.. இது நல்ல விசயம் இல்லையா?‘

‘ஓ.. நல்ல விசயம்தான். ஆனால் இதனால்  கோழிப் பண்ணையாளர்களுக்கு பயன் இல்லை. தீவன நிறுவனங்களுக்குதானே நல்லது... முட்டை உற்பத்தியை இது அதிகரிக்கும் என்று சொல்வதற்கில்லை'

மறுமுனையில் அமைச்சர் சற்று அமைதி காத்தார். ‘அண்ணே, நீங்க நேரில் வாங்க பேசுவோம். எதாவது நல்ல திட்டம் கொண்டுவருவோம்.. நம்ம துறை வளார்ச்சிக்கு.. விவசாயிகளின் நன்மைக்கு என்ன சொன்னாலும் முதலமைச்சர் கலைஞர் ஏற்றுக்கொள்வார்' என்றார்.

ஒரு மாலை நேரம் நேரில் சென்றேன். முட்டைகளை சந்தைப்படுத்துவதில் அரசு உதவி செய்யவேண்டும் என்பது குறித்த திட்டங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென சத்துணவு பற்றி பேச்சு வந்தது. ஒரு யோசனை பளீரிட்டது.

‘சத்துணவில் வாரத்துக்கு ஒருமுறை மாணவர்களுக்கு முட்டை அளிக்கலாம். இளம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதாகவும் இருக்கும். முட்டைகளுக்கு நல்ல சந்தையும் உருவாகும்,' என்று கூறினேன்.

சற்று விவாதத்துக்குப் பின்னர் அமைச்சர் ஏற்றுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் சில தரவுகளைப் பெற்று, திட்டம் தயாரித்து அளித்தோம்.

கொடுத்த மறுநிமிடமே முதலமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் வழக்கம்போல நிதித்துறையில் தடங்கல்கள். வாரம் ஒருமுறை என்பதற்குப் பதிலாக இரண்டு வாரத்துக்கு ஒருமுறை என்று மாற்றி, அத்திட்டம் அமலாக்கப்பட்டது.

பின்னர் அது வாரத்துக்கு மூன்றுநாட்கள் என மாறியது. 2012-இல் நான் கால்நடை மருத்துவப் பல்கலைக்கு துணைவேந்தராக இருந்தேன். அப்போது ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தார். வாரம் 5 நாட்களும் பள்ளி மாணவர்களுக்கு முட்டை சத்துணவில்கொடுக்கலாமா என்று ஆலோசனை என்னிடம் கேட்கப்பட்டது. அப்போதைய மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரும் நானும் அதற்கு ஆதரவாகவே அறிக்கை கொடுத்தோம். இப்போது தினமும் முட்டை வழங்கப்பட்டு சத்துணவின் மூலமாக மாணவர்களின் புரதத் தேவை பூர்த்தியாகிறது.

கோழியினப் பேராசிரியர் என்பதால் பெரும்பாலும் என்னுடைய ஆய்வும் களப்பணியும் அதைச் சுற்றியே அமையும். என்னுடைய பி.எச்.டி படிப்பும் ஜப்பானிய காடை வகைகளில் உடல் எடை வளர்ச்சியில் உணவுச் சூழலின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றியே அமைந்தது. காடைகளுக்கு 26 சதவீத புரோட்டின் இருக்கும் உணவு வழங்கவேண்டும். ஆனால் அதைவிட குறைவாக புரோட்டின் இருக்கும் ப்ராய்லர் கோழியின் தீவனங்களை காடைகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த சூழலில் காடைகளின் வளர்ச்சி பற்றிதான் என் ஆய்வு அமைந்தது. அந்த காலத்தில்(1984) காடைகளின் எடை என்பது ஐந்து வாரங்களில் 105 கிராம் என்ற அளவை எட்டும். 1992 இல் என்னுடைய பி.எச். டி ஆய்வு முடிக்கையில் அதில் ஐந்து வாரங்களில் காடைகளின் உடல் எடை 130 கிராம் எட்டும் அளவுக்கு அந்த காடைகளின் திறனை அதிகரித்திருந்தேன். அதன் பின்னர் தொடர்ந்து இந்த ரக காடைகளை இனப்பெருக்கம் செய்து ஆய்வினைத் தொடர்ந்துகொண்டே இருந்தேன். 2001- வரை நந்தனம் கோழியின ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தேன். அப்போது தனியார் நிறுவனங்களுக்கும் இந்த காடைகளின் முட்டைகளை அளித்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினோம். இந்த தொடர் ஆராய்ச்சிகள் விளைவாக காடை இரகங்களின் உடல் எடை பெருக்கம் அதிகரித்தது, இப்போது சுமார் நான்கு வாரங்களிலேயே அவை 230 கிராம் என்ற அளவை எட்டிவிடுகின்றன. 360 கிராம் தீனி சாப்பிட்டால் காடைகளின் எடை 100 கிராம் எட்டும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. இப்போது 100 கிராம் எடைக்கு 240 கிராம் தீனி சாப்பிட்டால் போதும் என்ற அளவுக்கு திறன் அதிகரிக்கப்பட்ட காடை இரகங்கள் உள்ளன. உலக அளவில் ஜப்பானிய காடைகளில் இந்த அளவுக்கு சிறப்பாக எடைகூடும் ரகங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்!

அந்த சமயத்தில் நிறைய பண்ணையாளர்களை காடைகள் வளர்க்கச் சொல்லியும் அவற்றை பெருக்கச் சொல்லியும் ஆலோசனை கூறிவந்தேன். பலர் காதுகொடுக்கவில்லை. தாராபுரத்தில் இருந்த எஸ்.ஆர்.எஸ் என்ற நிறுவனத்தார் மட்டும் அக்கறை காட்டினார்கள். உமி நிரப்பப்பட்ட பையில் 200 காடை முட்டைகளை என்னிடமிருந்து அவர்கள் வாங்கிச் சென்றனர். அவற்றை கோழி முட்டைகள் பொரிக்கும் எந்திரங்களில் பொரிக்கவைத்து வளர்த்தனர். இன்று அவர்களின் திறன் என்ன தெரியுமா? வாரத்துக்கு நான்கரை லட்சம் காடைகளை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். உலகிலேயே அதிகமாக ஜப்பானிய காடை உற்பத்தி செய்யும் நிறுவனம் அவர்கள்தான். இந்தியாவைப் பொருத்தவரை காடை உற்பத்தியில் முன்னிலை வகிப்பது தமிழ்நாடு. இங்கிருந்து கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்ட்டிரா வரை காடைகள் செல்கின்றன. இது ஒரே இரவில் நிகழ்த்தப்பட்ட சாதனை அல்ல. நிறைய சவால்கள் இருந்தன. அவற்றை எல்லோருமாக சேர்ந்து எதிர்கொண்டோம்!

காடைகளைப் போல் நாட்டுக்கோழியினப் பெருக்கத்திலும் நான் கவனம் செலுத்தியிருக்கிறேன். இந்தியாவில் மொத்தம் 19 வகை நாட்டுக்கோழி இனங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்துக்கே உரிய நாட்டுக்கோழி இனம் என்று எதுவும் இல்லை. கடக்நாத், அசீல், அங்கிலேஷ்வர் போன்ற இனங்கள் எல்லாம் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவை. மும்பையில் உள்ள மத்திய கோழி வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து அசீல் கோழிகளின் முட்டைகளை வாங்கி வந்தோம். இங்கே அவற்றைப் பொரிக்க வைத்து, பெட்டைக் கோழிகளை மட்டும் தேர்வு செய்துகொண்டோம். இவற்றுடன் இணை சேர்க்க, தமிழ்நாடு, தென் ஆந்திரா பக்கமாக கிராமம் கிராமமாகப் பயணம் செய்து தரமான சேவல்களைச் சேகரித்தோம். 2003 முதல் 2006 வரை பல தலைமுறைகளாக இந்த கோழிகளைச் சேர்த்து உற்பத்தி செய்தோம். அசீல் இனக்கோழிகளிடம் சண்டைபோடும் குணம் உண்டு. அவற்றை வளர்க்கையில் இதனால் பிரச்னைகள் வரும். ஒருமுறை 120 கோழிக்குஞ்சுகள், மூன்றே வாரம் வயதுடையவை, ஒரே இடத்தில் விட்டிருந்தோம். ஏதோ பெரிய விடுமுறை வந்தது. அச்சமயம் ஓரிருநாட்கள் கவனிக்கவில்லை. இவை அனைத்துமே ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு எல்லாமே இறந்துவிட்டன. அந்த அளவுக்கு சண்டைத் திறன் கொண்டவை. பிறகு அவற்றை தனித்தனியாக வைத்து வளர்த்து சமாளித்தோம்.

 அசீல் இனக்கோழிகளின் கறி ருசியாக இருக்கும். ஆரம்பத்தில் கறிக்காக மட்டும் அவற்றைத் தேர்வு செய்திருந்தோம். பின்னர் சண்டை போடும் திறன், அடைக்கு உட்கார்ந்து முட்டை போடாமல் இருக்கும் குணம் ஆகியவற்றைக் கண்டறிந்து குறைத்தோம். இப்போது வரும் ரகங்களில் இந்த பிரச்னைகள் இல்லை. முன்பு ஆண்டுக்கு 30 முட்டைகள் போட்டவை, இன்று 135 முட்டைகள் வரை தருகின்றன. இடையிலேயே அடைகாக்கிறோம் என்று உட்காருவதில்லை. ப்ராய்லர் அளவுக்கு இவை வேகமாக வளராது ஆனாலும் நாட்டுக் கோழி கறி விலை அதிகம் என்பதால் லாபமாக இருக்கிறது. இப்போது தமிழகத்தில் வாரத்துக்கு ஐந்து லட்சம் நாட்டுக்கோழிகள் உற்பத்தி ஆகின்றன. சுமார் ஏழரை லட்சம் கிலோ கறி விற்பனைக்கு வருகிறது.

குறைந்த அளவு முதலீட்டில் செய்யப்படும் பண்ணைத் தொழில்களை ஊக்கப்படுத்த வாத்துகள், வான்கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்த முயற்சிகள் செய்தோம். வாத்துப் பண்ணைத் தொழிலுக்கு வரவேற்பு இல்லை. ஆனால் வான்கோழிக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது. ஒரு காலத்தில் அனைத்து ஓட்டல்களிலும் வான்கோழி பிரியாணி உண்டு. வான்கோழி இரகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை. அதில் நிறைய உள் இனப்பெருக்கம் செய்திருப்பதால் அவற்றின் முட்டை உற்பத்தித் திறன் குறைந்து விட்டது. அவற்றின் குஞ்சு பொரிப்பு விகிதமும் உயராததால் லாபம் ஈட்ட இயலவில்லை. வான்கோழிகளின் புதிய ரகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும். அதிலும் அவற்றில் உள்ள பெரிய, நடுத்தர, சிறிய எடை கொண்ட ரகங்களில் சிறிய ரகங்களைக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தி உற்பத்தி செய்தால் லாபம் தரும் வகையில் இருக்கும் என்பது என்னுடைய கருத்து. வான்கோழி சந்தை பெரிய அளவில்வளரும் வாய்ப்புள்ளதாகும்.

பொதுவாக கோழித் தொழிலில் உணவூட்டம் என்பதுமிகக் கூர்மையான அளவில்வளர்ந்துள்ளது. மனிதர்களுக்குக் கூட அப்படிக் கிடையாது. கோழிப்பண்ணைகளில் வயதுக்கேற்ப தீவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ப்ராய்லர், முட்டைக்கோழிகளுக்கு வெவ்வேறு வயதுக்கு ஏற்ப தீவன மூலப்பொருட்கள் மாறுபாடு செய்யப்படுகின்றன. புரதம், எனர்ஜி, அமினோ அமிலங்கள், கால்சியம் பாஸ்பரஸ் விகிதம் என்று அவை சாப்பிடும் அளவைப் பார்த்து அளிக்கப்படுகின்றன. பெரும்பாலான நோய்களை இந்த தீவனங்களில் மாறுபாடு செய்தே கட்டுப்படுத்தி விடலாம். திருமூலரின் உணவே மருந்து என்ற கூற்று கோழித் தொழிலில்தான் சிறப்பாக பயன்பாட்டில் உள்ளது எனக்கூறலாம்.

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி டீன் ஆக இருந்தபோது விடுதியும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மகளிர் விடுதிக்கு என்று சில விதிகள் உண்டு. அந்த விதியை மீறும் மாணவிகளுக்கு தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும். அத்தனை மாணவிகளையும் சொந்தக் குழந்தைகள்போல் கண்டிப்பாகப் பாதுகாக்கும் கடமையும் எனக்குத்தான் உண்டு. சில மாணவிகள் எத்தனை அபராதம் விதித்தாலும் அதைக் கட்டிவிட்டு வழக்கம்போல் விதிகளை மீறிக்கொண்டே இருப்பார்கள். பொறுக்க முடியாமல் ஒரு மாணவியை விடுதியில் இருந்து ஒரு மாதத்துக்கு மட்டும் இடைநீக்கம் செய்தேன்.

பார்த்தால் மறுநாளே அம்மாணவியின் தாய் தந்தையர் என்னைத் தேடி வந்துவிட்டனர். ‘எங்கள் குழந்தைமீது எங்களுக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன்?' என என்னிடம் மோதியதோடு இல்லாமல் நடவடிக்கையை ரத்து செய்யுமாறு கோரினர். விதிகளை ஒரு மாணவிக்காகத் தளர்த்தினால் அங்கிருக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பாதிப்பாக அமையும் எனச் சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை. பல இடங்களில் இருந்தும் அழுத்தங்கள் வந்தும் நான் உறுதியாக இருந்துவிட்டேன். சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணின் பெற்றோர் வந்து அலுவலகத்தில் காத்திருந்தனர். அவர்களிடம் ஆவேசம் குறைந்திருந்தது. மன்னிப்புக் கேட்டு, மாணவியை அனுமதிக்கக் கோரியபோது மறு பேச்சு இன்றி அனுமதித்தேன்.

கடந்த 2014&2015 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எஸ்.ஆர்.எஸ். ஆப்பிரிக்கா என்ற இந்திய இறைச்சிக் கோழி நிறுவனத்துக்கு ஆலோசகராக சென்றிருந்தேன். ருவாண்டாவில் இரு இன மக்களிடையே 1994ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரும் இனப் போராட்டம் நடந்து 100 நாட்களில் சுமார் 10 இலட்சம் மக்கள் கலவரத்தில் அடித்தே கொல்லப்பட்டது வரலாறு.  நான் அங்கே சென்ற போது இறைச்சிக் கோழி வளர்ப்பில் மிகவம் பின்தங்கியிருந்தது. அண்டை நாடான உகாண்டாவிலிருந்து இந்திய நிறுவனம் ஒன்றால் தரமான குஞ்சுகள் பெறப்பட்டாலும் பராமரிப்பு, தீவனம் ஆகியவை விஞ்ஞான ரீதியில்வழங்கப்படாததால் இறைச்சிக் கோழிகள் 11 வார வயதில் 1.5 கிலோ வளர்ச்சியையே அடைந்தன. ஒப்பீட்டளவில் இது மிகக்குறைவாகும்.

 அங்கும் ஒப்பந்த முறை கோழி வளர்ப்பை அறிமுகப்படுத்தி, அந்நாட்டு இளைஞர்களுக்கு பராமரிப்பு முறை குறித்த பயிற்சியை பண்ணைகளிலேயே வழங்கினோம். தேவைப்படும் சத்துக்களடங்கிய தீவன வகைகளை உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்தே தயாரிக்கும் முறையை கற்றுக் கொடுத்தோம். இரண்டு ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் அந்நாட்டில் வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகள் ஐந்து வார வயதில் இரண்டு கிலோ எடையை அடையும்படி வளர்த்துக் காட்டினோம். இதைத் தொடர்ந்து அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் உறைபதனப்படுத்தப்பட்ட ஒரு கிலோ அளவிலான இறைச்சியையே வாங்கி பழக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், 1.6 முதல் 1.8 கிலோ எடையுள்ள இறைச்சி அதே விலையில் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்!

(மருத்துவர் ஆர். பிரபாகரன், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com