செய்திச்சாரல்: பிப்ரவரி, 2022

எல்லையில் ஒரு சந்திப்பு

பஞ்சாப்பில் இந்திய பாகிஸ்தான் எல்லைதாண்டி பாகிஸ்தானுக்குள் 3 கிமீ போனால் இருக்கும் குருதுவாரா ஒன்றுக்கு விசா இல்லாமல் இந்திய சீக்கிய புனிதப் பயணிகள் செல்ல அனுமதி உள்ளது. இந்த வழி கர்தர்பூர் காரிடார் என்று அழைக்கப்படுகிறது. சீக்கியர்களால் புனித தலமாகக் கருதப்படும் இந்த தலத்துக்குச் சென்று வழிபடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாக்- இந்தியாவின் எல்லை தாண்டி வாழும் நண்பர்கள் உறவினர்களின் உணர்வுபூர்வமான சந்திப்புகளும் இங்கே நிகழ்கின்றன. காதலர்கள் சந்திக்கும் சம்பவங்களும் உண்டு.

தங்கள் எண்பது வயதுகளில் இருக்கும் முதிய சகோதர்கள் இருவர் சந்தித்துக்கொண்ட அரிய நிகழ்வு சமீபத்தில் நடந்தது. பு947-இல் இந்தியா பாக் பிரிவினையின் போது ஒரு சகோதரர் பாகிஸ்தானுக்குப் போக, இன்னொருவர் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். முஸ்லிம்களான இருவரும் ஒருவரை ஒரு கட்டித் தழுவி, அன்பை பரிமாறிகொண்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பாலிவுட் திருமணம்

பாலிவுட் நடிகையும் நாகின் சீரியல் நடிகையுமான மௌனிராய், சூரஜ் நம்பியார் என்னும் தொழிலதிபரை மணந்துள்ளார். கோவாவில் ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த இத்திருமண படங்கள் இணையத்தில் பரவலாகப் பார்க்கப்பட்டன. கொரோனா காலத்திலும் கொண்டாட்டம் குறையவில்லை!

தடுப்பூசி ஆடுகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களைத் தூண்ட என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கிறது? ஜெர்மனியில் 700 ஆடுகளைப் பிடித்து பெரிய ஊசி வடிவில் நிற்க வைத்துள்ளனர்.  இந்த ஆடுகளின் உரிமையாளர் பல நாட்கள் ஆடுகளுக்கு பயிற்சி அளித்து இந்த வடிவில் நிற்க வைத்துள்ளார். மனிதன் சொல்லியே கேட்காதவர்கள் ஆடு சொல்லியா கேட்பார்கள்? இருந்தாலும் முயற்சியைப் பாராட்டலாம்!

ஒரு மில்லி ‘ஹெராயின்’ சாப்பிடுங்க!

கொரோனாவுக்கு மருந்தாக மலேரியாவுக்கு அளிக்கும் குளோரோகுயினை கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டபோது, அந்த மருந்து படுவேகமாக உலகம் முழுக்க எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த மருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று பிறகு சொல்லிவிட்டார்கள். வரலாற்றில் இப்படி தண்டமாக,தீயவிளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை சாப்பிடுவது தொடர்ந்து நடந்துள்ளது. கொக்கைன் இப்போது போதைப் பொருளாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை பல் வலி, மார் சளி போன்றவற்றுக்கு இதைத்தான் மருந்தாக கடைகளில் விற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். மயக்க மருந்தாகப் பயனாகும் குளோரோபார்மை ஆஸ்துமாவுக்கும் சளிக்குமான மருந்தாக 1975 வரை விற்றுவந்துள்ளனர்.  ஆஸ்பிரினை தயாரித்த அதே குழுவினர்தான் ஹெராயினையும் தயாரித்தனர் என்றால் நம்புவீர்களா? நிமோனியா மருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இதையும் கொடுத்துவந்துள்ளனர். 1924-இல் தான் ஹெராயின் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது! இவற்றுடன் ஒப்பிடும்போது குளோரோகுயின் எவ்வளவோ தேவலாம் என்கிறீர்களா?

பதிப்புத் திருட்டு!

பிரிட்டனில் உள்ள பதிப்பகம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார், இத்தாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சமீபத்தில் நியூயார்க் விமானநிலையத்தில் வந்து இறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஐந்தாண்டுகளாக அவர் செய்துவந்த ஒரு குற்றத்துக்காகவே இந்த கைது.

அப்படி என்னதான் செய்துவிட்டார் என் கட்சிக்காரர் யுவர் ஆனர்?

உலகெங்கும் இருக்கும் எழுத்தாளர்களின் இதுவரை பதிப்பிக்கப்படாத புத்தகங்களின் எழுத்துப் பிரதியை இவர் பல மோசடி பெயர்களின் கணக்குத் தொடங்கி பெற்றுவந்துள்ளார். இவரிடம் ஏமாந்து கையெழுத்துப் பிரதியை அனுப்பியவர்களில் புலிட்சர் விருது பெற்ற ஒரு எழுத்தாளரும் உண்டாம்! பதிப்பக உலகில் இருக்கும் பிரபலங்களில் பெயரில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, இந்தப் பிரதிகளை அவர் பெற்றுவந்துள்ளார்! இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சு0 ஆண்டுகள் தண்டனை உண்டாம்! இந்த எழுத்துப்பிரதிகள் எடிட் செய்யப்படாதவை. இவற்றை வைத்து என்ன செய்யத்  திட்டமிட்டிருந்தாரோ அவர்?

பிப்ரவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com