தேடி வந்த கிடேரி!

தேடி வந்த கிடேரி!

கொல்லிமலையில் இருந்து வந்திருந்தது அந்த கிர் பசுமாட்டின கிடேரி.  கம்பீரமான அந்த  விலங்கின் முகமும் தலையும் மிகக்கடுமையாக வீங்கி இருந்தது. யாரோ தேன் கூட்டை அது இருந்த பகுதியில் கலைத்துவிட, பாவம் அவை பாய்ந்து வந்து இதைப் பதம் பார்த்துவிட்டன. தாங்கமுடியாத வலியுடன் வண்டியில் ஏற்றி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. தேனீக்கடிக்கான சிகிச்சையை சரசரவென அளித்துவிட்டு, அதைக் கொண்டு வந்திருந்தவர் பக்கம் திரும்பினேன். அவர் முகத்தில் புன்னகை.

‘இந்த கிடேரியை உங்களுக்குத் தெரியவில்லையா?'

‘தெரியலையே'

‘ஒரு வருசம் முன்பு, அது குட்டியாக இருந்தபோது மூளைக்காய்ச்சல் வந்து காப்பாத்தினீங்களே?'

அட.. அதுவா இது. பசுங்கன்றுகளுக்கு மூளைக்காய்ச்சல் வந்து அவற்றைக் காப்பாற்றுவதும் அரிதாக நடப்பது என்பதால் எனக்கு நன்றாக  ஞாபகம் இருந்தது.  குழந்தை மருத்துவ நிபுணர் ஒருவரின் பண்ணையில் இருந்த கன்று அது. திடீரென ஒரு நாள் படுத்தபடுக்கை ஆகிவிட்டது. அதைக் கொண்டு வந்திருந்தார்கள். பக்கவாட்டில் படுத்திருந்த கன்றுக்குட்டி, தலையை மட்டும் தூக்கியவண்ணம் இருந்தது. பரிசோதனையில் அது மூளைக்காய்ச்சல் (Neonatal Meningitis) என்ற முடிவுக்கு வந்தேன். பதினைந்து நாட்கள் அங்கேயே சேர்த்து சிகிச்சை அளித்தோம். நன்கு குணமாகி துள்ளிக் குதித்தவாறு சென்றது மிகுந்த திருப்தியை அளித்திருந்தது.

‘திரும்பவும் வந்துவிட்டாயா?' என்று அதனிடம் கேட்டேன். தலையை அசைத்தது, வலியாலா என்னை அடையாளம் கண்டுகொண்டதாலா என்று தெரியவில்லை. வெற்றிகரமான சிகிச்சையை நோயாளி மறக்கலாம்; மருத்துவர்கள் மறப்பதில்லை!

ஓர் சிறிய லாரி அலறிக்கொண்டு வந்து அவசரமாக நின்றது. அதிலிருந்து ஓடிவந்தவரிடம் பதற்றம். ‘சார், ஆடுங்களை மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப்போனேன். போன இடத்தில் எல்லா ஆடுகள் சுருண்டு விழுந்துடுச்சி. ரெண்டு மூணு செத்துப்போயிட்டுது.. இருபது ஆடு லாரியில

சாவகிடக்குது சார்.. காப்பாத்துங்க' என்றார்.

ஆடுகளை இறக்கி தரையில் கிடத்தினார்கள். இன்னும் சில நிமிடங்களில் அவை இறந்துவிடலாம். வயிறு உப்பி, கண்கள் சிவந்திருந்தன. மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. நிற்கமுடியாமல் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்தன. உடனே என்ன செய்வதென்று முடிவெடுக்கவேண்டும். 

எங்கே மேய்ந்தன இவை? என்ற என் கேள்விக்கு அவர் சாலையோரம் புதிதாக வளர்ந்த புற்கள் என்றார்.

வறட்சிக்குப் பிந்தி மழை பெய்திருந்த காலம் அது. உடனே உள்ளூணர்வு மணி அடித்தது. சையனைடு விஷம்! பொதுவாக சோளச் செடி, மரவள்ளிக்கிழங்கு செடி போன்றவற்றை தின்றால்தான் இந்த பிரச்னை வரும். ஆனால் மழைக்குப் பிந்தையதாக உடனே முளைத்திருக்கும் களைச்செடிகளை உட்கொண்டாலும் இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. உடனே அதற்கான மருந்து சடசடவென எல்லாவற்றுக்கும் செலுத்தினோம்.  சற்று நேரத்தில் ஆடுகள் நிதானத்துக்கு வந்தன. எழுந்து சிறுநீர் கழித்தன. படுக்கைவாட்டில் வந்த ஆடுகள், லாரியில் நின்றவண்ணமே திரும்பிச் செல்லும்  காட்சிதான் எத்தனை இனிமையாக இருந்தது தெரியுமா?

வெள்ளை வெளேரென இருந்த ஹலிகார் காளை அது. நான் பார்க்கும்போது அதன் மூக்கில் இருந்து தொடர்ச்சியாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. விசாரித்தபோது அதன் உரிமையாளரால் எதையும் சொல்ல முடியவில்லை. அவர் சொன்ன எதுவும் காரணத்தைக் கண்டுபிடிக்க உதவவில்லை. பாம்பு ஏதேனும் கடித்திருக்குமா என காயத்தைத் தேடினால் அப்படி எதுவும் தெரியவில்லை. கடித்து இருந்தாலும் காளை மாடுகளில் கடிவாய் எதையும் காணுதல் சிரமம். சிறு விலங்குகளில் மட்டுமே அதைக்காண முடியும். ரத்தத்தை எடுத்து

பரிசோதனைக்கு அனுப்பினோம். 20 நிமிடமாகியும் ரத்தம் உறையவில்லை என்றார்கள். விரியன் வகையைச் சேர்ந்த பாம்புதான் கடித்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து, உடனே விஷமுறிவு மருந்துகளுடன் சிகிச்சை தொடங்கினோம். மாடு பிழைத்துக்கொண்டது. இந்த சிகிச்சை அனுபவத்தை வைத்து ஓர் ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பித்தேன்.

கரூர் பக்கமிருந்து அந்த மாடு வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டிருந்தது. அங்குள்ள மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அரிசிச் சோறு சாப்பிட்டு, வயிற்றில் தேங்கி, அசிடோசிஸ் என்கிற பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்யும் மருந்துகளை அளித்தபிறகும் அது சரியாகி இருக்கவில்லை என்பதால் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். மாடு எழமுடியாமல் படுத்துவிட்டிருந்தது.  எப்போதும் கதை முடிந்துவிடும் நிலையில் இருப்பதால் உரிமையாளர் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தார். உடனே சிகிச்சை அளித்தாக வேண்டும். மாட்டை  பரிசோதித்தபோது அதன் கருவிழி பெரிதாக விரிந்து இருந்தது. அதன் ஆசனவாய் சுருக்கு தசைகள் பலமிழந்து போயிருந்தன. அசிடோசிஸ் ஏற்பட்டால் அதன் பக்கவிளைவாக வரும் கால்சியம் சத்துக் குறைபாடாக இருக்கவேண்டும் என கண்டறிந்தேன். உடனே சிகிச்சையைத் தொடங்கி, கால்சியத்தை அளித்தோம். ஓரிரவு கழிந்தது. காலையில் அது சுற்றுப்புறத்தை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்து, மதியமே எழுந்து நின்று, வைக்கோலை கடிக்க ஆரம்பித்தது. சாகும் நிலையில் இருந்த மாடு எழுந்து நடந்து சென்றதைக் கண்ட உரிமையாளர் நன்றி சொன்னபோது, அவரது விழிகளில் ஈரம்!

கும்பகோணம் பக்கம் ஒரு பண்ணையில் இருந்து அழைத்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான மாடுகள் இருக்கும் இடம்.  கைவிடப்பட்ட மாடுகளை பாதுகாத்து வளர்க்கும் இடம்! அவர்களின் பிரச்னை, மாடுகள் அனைத்துமே குறைவாக சாணி போடுகின்றன. அதுவும் கட்டி கட்டியாகப் போடுகின்றன என்பதுதான். என்ன காரணம் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. நானும் போய்ச் சுற்றிப்பார்த்தேன். பிறகு சில மாடுகளின் மலக்குடலைப் பரிசோதனை செய்தபோது காரணம் புலப்பட்டது. குடலைச் சுற்றி கொழுப்பு கட்டியாகி அடைத்து இருக்கிறது. பாறாங்கல் போல் கொழுப்பு இறுகி, குடல் சுருங்கி விட்டதால் சாணம் வருவது  சிரமமாகி கட்டிப்பட்டு விட்டது. Abdominal Fatnecrosis என்போம் இதை. இதற்கு காரணமாகச்

சொல்லப்படுவது, அவற்றுக்கு அளிக்கும் உலர்தீவனத்தில் இருக்கும் ஒரு வகை நுண்ணுயிரிகள்.  உலர்தீவனத்தை மாற்றிவிடும்படி ஆலோசனை அளித்தேன். பண்ணையில் இருந்த மீதி மாடுகள், அதுவும் இதுவரை பாதிக்கப்படாதவற்றை காப்பாற்றவே இது உதவும். நோயைக் கண்டறிந்துவிட்டதில் மகிழ்ச்சி இருந்தா லும் இந்த குறிப்பிட்ட விஷயத்தில்  பாதிக்கப்பட்டவற்றுக்கு

சிகிச்சை என்று அளிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் சற்று வருத்தமான செய்திதான்!

(மருத்துவர்  எஸ். சிவராமன்,

கால்நடை மருத்துவ சிகிச்சைத்துறை உதவிப்பேராசிரியர், நாமக்கல். நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

ஆகஸ்ட், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com