தார்ச்சாலையில் செல்லும்போது வழியில் கிடந்த ஓர் அட்டைப்பூச்சியைக் காட்டி... கவனமாக வாருங்கள் என்றார் வழிகாட்டி. தேக்கடியில் அதிகாலையில் வனத்துறை வழிகாட்டி எங்களை பறவைகளைக் காண்பதற்காக அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். இன்னும் முழுமையாக இருள் விலகியிருக்கவில்லை.ஒரு மரத்தின் உச்சியில் இருந்த சில சின்னக் குக்குறுவான் பறவைகளைக் காட்டினார். பைனாகுலரில் பார்த்தபோது அவற்றின் பச்சை நிற முதுகு (மிலிட்டரி பச்சை) தெரிந்தது. குறுக்கு வழியில் காட்டை ஒட்டி அழைத்துச்சென்றார். நிறைய வன தவிட்டுக் குருவிகள். அப்புறம் ஒரு வித்தியாசமான விசில் சத்தம். எங்கள் குழுவில் இருந்த பறவை ஆர்வலர் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தார். அது மலபார் விசிலிங் த்ரஷ்! (தமிழில் பாட்டுப்பாடும் ஓடைக்குருவி என்று போடுங்கள் என்கிறார் காட்டுயிர் ஆசிரியர் முகமது அலி). கருப்பும் பச்சையும் கலந்து குயிலைவிட கொஞ்சம் பெரியதாய் தரையில் அமர்ந்து துள்ளித்துள்ளி சென்றது. எப்படியாவது ‘பறவைகளின் ராஜா’வான இருவாச்சி எனப்படும் ஹார்ன்பில்லைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் பறவை நடையின்போது இருவாச்சி எதிர்ப்படவில்லை. ‘’அணை நீரில் படகுப்பயணம் செய்யும்போது இருவாச்சி பறந்து செல்வதைக் காணும் வாய்ப்பிருக்கிறது” என்றார் வழிகாட்டி.
ஏழரைக்கே படகு சவாரி தொடங்கியது. 142 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருந்தும் கேரள அரசு ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் முரண்டு பிடித்துக்கொண்டிருக்கும் பெரியார் நீர்த்தேக்கத்தில் படகு மிதந்து சென்றது. உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு விசாரணை இப்போது கேரளத்தின் அப்பீலில் முடிந்து உள்ளது. மீண்டும் 142 அடியே தண்ணீர் தேக்க தீர்ப்பு வருமானால் கேரளம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. ஆனால் கேரளம் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று தேக்கடியில் முளைத்திருக்கும் தங்குமிடங்கள்; விடுதிகள். இவையெல்லாம் நீர்மட்டம் உயர்கையில் தண்ணீருக்கு அடியிலும் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.
இளவெயிலில் நனைந்துகொண்டிருந்த ஒரு மொட்டைப் பாறையைச் சுட்டிக் காட்டிய வழிகாட்டி ஒருவர்.. சில நாட்களுக்கு முன் சிறுத்தை ஒன்று அந்த இடத்தில் படுத்திருந்து வெயில்காய்ந்ததாகக் கூறினார். படகில் இருந்த அனைவரும் அதைக் கண்டிருக்கிறார்கள்.
நீர்த்தேக்கத்தின் நடுவே தீவு போன்ற அமைப்புகள் உண்டு. அதில் ஒன்றில் திருவாங்கூர் மகாராஜாவின் அரண்மனை இருக்கிறது. இப்போது அது விடுதியாகச் செயல்படுகிறது. தங்குவதற்கு ஓரிரவுக்கு கட்டணம் எவ்வளவு என்று கேட்டால் மூர்ச்சை அடைவீர்கள்!
திடீரென்று எங்கள் பார்வைப் புலன்கள் கூர்மை அடைந்தன. தொலைவில் ஓர் இருவாச்சி பறந்து மலையைக் கடந்தது!
படகில் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் ரத்தம் குடித்துப் பருத்த அட்டை ஒன்று கிடந்தது. வழிகாட்டி அதை எடுத்து நீருக்குள் போட்டார். யார் காலைக் கடித்தது என்று தெரியவில்லை. அவசரமாக எங்கள் கால்களைப் பரிசோதித்தோம். எதுவும் தெரியவில்லை. அறைக்குத் திரும்பிய பின்னர்தான் தெரிந்தது அட்டையார் குறிவைத்தது எங்கள் பறவை ஆர்வலரை. அவரது ஜீன்ஸ் ரத்தத்தால் நனைந்திருந்தது. நண்பர்கள் அவரிடம் அட்டை கடித்தால் இதயத்துக்கு ரொம்ப நல்லது என்று சொன்னது மட்டும் அவருக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிந்தது.
மண்பானை மணம்
குமுளியிலிருந்து திண்டுக்கல் வரும் வழியில் சாலைப்புதூரில் இருக்கின்றன மண்பானையில் சமைத்துப் பரிமாறும் சில கடைகள். அதில் ஒரு கடைக்குப் போன் செய்து நாங்கள் ஐவர் வருகிறோம் என்று நண்பர் முன்கூட்டியே புக் செய்தார். கடையுள் கரிய மண்பானைகளில் சோறு வெந்துகொண்டிருந்தது. வாழை இலையில் கறிக்குழம்பும் கரண்டி ஆம்லேட்டும்தான் மெனு. நாவின் சுவை நரம்புகளுக்கு நல்ல அனுபவம். நண்பர் ஒருவர் கரண்டி ஆம்லேட்டால் கவரப்பட்டு மூன்று ஆம்லேட்டுகளைக் கபளீகரம் செய்தார். அப்போது நண்பரின் கைபேசி அழைத்தது. “நீங்கள் சொன்னமாதிரி ஐந்துபேருக்கு உணவு தயாராக வைத்திருக்கிறோம். இன்னும் ஆளைக் காணவில்லையே?” என்றது எதிர்முனை. அவசரத்தில் கடை மாற்றி நுழைந்திருக்கிறோம். சரி..சரி...பசி கடை அறியாது.
சரணம்
காஞ்சிபுரத்தில் சில கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அதில் உலகளந்த பெருமாளின் பிரமாண்டம் சொல்லில் வடிக்க இயலாத அனுபவத்தை அளித்தது என்றால் தியாகி பள்ளிக்கு அருகில் இருக்கும் கருக்கினில் அமர்ந்த அம்மன் கோவில் வளாகத்தில் இருக்கும் பூமிஸ்பரிச முத்திரையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை வேறொரு அனுபவத்தை அளித்தது. அருகே தியானக் கோலத்தில் இன்னொரு சிலை. இரண்டுக்கும் சந்தனப் பொட்டு வைத்திருந்தார்கள். புத்தம் சரணம்!
செப்டம்பர், 2013