பாட்டுக்கு நான் பாடுபட்டேன்...

பாட்டுக்கு நான் பாடுபட்டேன்...

முள்ளரும்பு மலர்கள் -4

மயிலாடும்பாறை ஊரில் ஒரு பெரிய இசை நிகழ்ச்சி. அதில் தமிழ்ப் பாடல்களைப் பாட என்னை அழைத்திருந்தார்கள். தமிழ், ஹிந்தித் திரைப் பாடல்கள் எனக்கு பெரும் மோகமாக மாறிவிட்டிருந்த காலம் அது.

புத்தம்புதிய பாடல்களைக் கேட்க பாட்டுக் கடைகளுக்கு முன்னால் சென்று நிற்பேன். கேட்கும் பாடல்களை மனப்பாடம் பண்ணிப் பாடித்திரிவேன். அதைக்கேட்ட சிலர் எங்கள் ஊரில் நிகழ்ந்த சில சிறு நிகழ்ச்சிகளில் பாட அழைத்தார்கள். பின்னர் தூரத்து ஊர்களிலிருந்தும் சில அழைப்புகள் வரத் தொடங்கின. டி எம் எஸ், மலேசியா வாசுதேவன், எஸ் பி பி ஆகியோர் பாடிய தாளவேகம் கொண்ட பாடல்களை மட்டுமே பாடுவேன். ஆர் டி பர்மன், பப்பி லஹிரி போன்றவர்கள் இசையமைத்து, அவர்களே பாடிய துள்ளலான சில ஹிந்திப் பாடல்களையும் பாடுவேன். மெதுவான மெல்லிசைப் பாடல்களைப் பாடினால் இந்த அரைகுறைப் பாடகனின் சாயம் வெளுத்துப் போகும்.

தமிழர்கள் அதிகமாக வாழும் ஏலத்தோட்டப் பகுதி மயிலாடும்பாறை. அங்கே சென்று தமிழ் ஆட்களுக்கு முன்னால் தமிழ் பாடல்களைப் பாடுவதை யோசித்தபோதே எனக்குக் கைகால் நடுங்கியது. என்னிடம் பாடச்சொன்ன பாடல்கள் எல்லாம் யேசுதாஸ் பாடியவை. சிந்துபைரவியின் தண்ணித் தொட்டி தேடிவந்த, படிக்காதவன் படத்தின் ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன், நல்லவனுக்கு நல்லவனில் வந்த வெச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே. எதுவுமே எனக்குத் தெரியாது. யேசுதாஸ் பாடிய பாடல்கள் எனது குரலில் நன்றாகவும் இருக்காது. ஆனால் ஒரு பெரிய மேடையில் பாடும் வாய்ப்பு முதன்முறையாக வந்திருக்கிறது. வருவது வரட்டும் என்று ஒப்புக்கொண்டேன். அவசர அவசரமாக எங்கிருந்தெல்லாமோ அப்பாடல்களைத் தேடிப்பிடித்து ஓரளவிற்குக் கற்றுக்கொண்டு ஒத்திகைக்குச் சென்றேன்.

துளியளவும் தன்னம்பிக்கையில்லாமல் தயக்கத்துடன் நான் உள்ளே சென்றதும் ‘ஷாஜியோட பாட்டப் பாப்போம்..‘ என இடி முழங்குவதுபோல் இசை நடத்துனரின் குரல் காதில் விழுந்தது. ‘மொதல்ல அந்த டூயட்.. வெச்சிக் கவா பாடுங்க'. அதோ மாநிறத்தில் முகப்பருக்கள் நிறைந்த முகமும் கவர்ச்சியான தோற்றமும்கொண்ட ஒரு ‘சுந்தரிச் சேச்சி' என்னுடன் ‘டூயட்' பாட வருகிறார்! எனது இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. இசை உயர்ந்து தாளம் முறுகியது. முதல் இரண்டு வரி ஒருவழியாகப் பாடினேன். இரண்டாவது வரியான ‘சொக்கத் தங்கத் தட்டப் போல‘ பாடியதும் ‘தப்பு.. அது அப்டி இல்ல' என்று பின்னாலிருந்து ஓர் ஆண்குரல்.

திரும்பிப் பார்த்தேன். கன்னங்கரேலெனக் கறுத்த முகத்திற்குமேலே தடித்த கருப்புக் கண்ணாடியையும் வைத்து விரும்பத்தகாத தோற்றங்கொண்ட ஒருவன்தான் எனது பாட்டைக் குறை சொல்கிறான். மூஞ்சியும் முகரக் கட்டையும்! அவனை அடித்துக் கொல்லுமளவுக்கு எனக்கு கோபம் தலைக்கேறியது. ‘ஏதோ சின்னப் பையன் ஆசப்பட்டு பாட வந்திருக்கான். நீங்க ஒருமுற பாடிக்காட்டுங்க விஜயகுமார்..' என்று நடத்துனர் சொன்னதும் அவர் எழுந்துவந்து ‘ஒன் டூ த்ரீ ஃபார்' சொல்லி வெச்சுக்கவா பாடலை ஒரேயடியில்

அசத்தலாகப் பாடி முடித்தார். செம்மையான தமிழ் உச்சரிப்புடன் அற்புதமாகப் பாடினார் மனிதர். அந்த ஐந்தே நிமிடங்களில் விஜயகுமார் எனக்கு ஒரு கதாநாயகனாகவே மாறிப்போனார். ஏலப்பாறைத் தேயிலைத் தோட்டப் பகுதியில் பிறந்து வளர்ந்த தமிழர் விஜயகுமார். மலையாளமும் சிறப்பாகப் பேசுவார். அன்றைக்கு டி எம் எஸ், மலேசியா வாசுதேவன், எஸ் பி பி பாடல்களைப் பாடவந்தவர் நான் பாடவந்த யேசுதாஸ் பாடல்களையும் பாடி பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார். ஓரிரு ஹிந்திப் பாடல்களை பலவீனமாக நானும் பாடினேன்.

மீண்டும் சில மேடைகளில் விஜயகுமாரைச் சந்தித்தேன். தமிழ் மொழியின்மேல் எனக்கிருக்கும் மோகத்தைக் கண்ட விஜயகுமார் என்னிடம் தமிழிலேயே பேசினார். ‘மாப்ளே' என்று அழைத்தார். அரசு விவசாயத் துறையில் அவருக்குச் சிறிய வேலை இருந்தது. சின்ன வயதில் ஓடிவிளையாடும்போது தடுக்கிவிழுந்து அவரது இடதுகண்ணில் ஒரு காய்ந்த செடியின் அடிக்குற்றி துளைத்தேறி ஒரு கண் தகர்ந்து குரூபமாகிப்போனது. அதை மறைக்கத்தான் அந்தக் கருப்புக் கண்ணாடி. அன்பனும் அசத்தல் பாடகனுமாகயிருந்த விஜயகுமாரை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ந்த துக்கடா இசை நிகழ்ச்சியில் தேக்குமர வண்ணத்திலான ஒரு ஹார்மோனியத்தின்மேல் ஒரு சிறிய காசியோ மின்னிசைக் கருவியை வைத்து வாசித்துக்கொண்டிருந்தார் கலாராஜன். கரிய முகத்தின்மேல் துருத்தி நிற்கும் பாலுண்ணிகளும் மருக்களுமாகக் கறுத்துக் குறுகிய ஓராள். அந்நிகழ்ச்சியில் எனக்கு பாடக்கிடைத்த ஒரேயொரு ஹிந்திப் பாடலை நான் ஒருவகை அலறலாகவே பாடி முடித்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் கலாராஜன் என்னை அருகில் அழைத்து ‘ஒன்னோட பாட்டுல ஆயிரம் பிரச்னை இருக்கு. ஒனக்கு சுருதி நிக்கவேயில்ல. நல்லா பிராக்டீஸ் பண்ணணும். இந்தி பாட இங்கே ஆளில்ல. அதால சேந்து எதாவது பண்ணுவோம். அடுத்தவாரம் என்னெ வந்து பாரு' என்றார். அவரை நான் விடாமல் பிடித்துக்கொண்டேன். சில சின்னக் கச்சேரிகளிலும் ஐயப்ப சுவாமி பஜனைகளிலும் என்னைப் பாடவைத்தார், கலாராஜன்.   

1980களின் மத்தியில் மலையாளத் திரையின் உச்ச நட்சத்திரமும் எனது அப்போதைய அபிமான நடிகருமாகயிருந்த பிரேம் நஸீர் கேரள கலா யூனியன் எனும் அமைப்பை உருவாக்கினார். கலைத்துறையில் பணியாற்றும் அனைவருக்குமான அமைப்பு. அதன் இடுக்கி மாவட்டத் தலைவராக கலாராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்டக் கிளையின் தொடக்கவிழா நடக்கப் போகிறது. சாக்‌ஷாத் பிரேம் நஸீர் அவரே வந்து தொடக்கி வைக்கிறார்! கலா யூனியன் ஆர்கெஸ்ட்ரா வழங்கும் திரைப்பாடல் கச்சேரிதான் முக்கியக் கலை நிகழ்ச்சி. அதற்கான ஒத்திகையை ஆரம்பித்தனர். மாவட்டத்தின் சிறந்த பாடகர்கள்தாம் பாடுகிறார்கள். ஆதலால் எனக்குப் பாடும் வாய்ப்பு இல்லை!

பிரேம் நஸீருக்கு முன்னால் ஒருமுறை பாடியபின் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை. ஒரு பாடலையாவது எனக்கும் தரவேண்டி கலாராஜனிடம் கெஞ்சினேன். இறுதியில் ஒரேயொரு பாடலை மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் ஒத்திகையெல்லாம் பார்க்க நேரமிருக்காது என்றார்! அதற்குப் பாடாமலேயே இருக்கலாம். வாத்தியக் கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்காமல் பாடினால் எல்லாமே நாசமாகிவிடும். எனது பாட்டையும் எப்போதாவது ஒத்திகைக்கு எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தினமும் அங்கே சென்று நின்றேன். யாருமே என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பிரேம் நஸீரை அழைத்துவருவதற்குக் கலாராஜன் புறப்படும்முன் எனது மன்றாடல்களுக்குச் செவிமடுத்து ஒரேயொருமுறை அந்த ஹிந்திப் பாடலைத் தோராயமாகப் பார்த்தனர். மின்னிசைக் கருவியை வாசிக்க புதிதாக ஒருவர் இணைந்திருந்தார். எனக்கு முன்னமே பரிச்சயமானவர். ஒத்திகையின் இடைவேளையில் அவரும் நானும் ஓரிரு பாடல்களை வெறுமேனே சுருதி பார்த்துவைத்தோம்.

நிகழ்ச்சிநாள். பிரேம் நஸீர் வந்துசேர்ந்தார் என்ற செய்தி வந்தது. கச்சேரியின் இறுதிக்கட்ட ஒத்திகை நடக்குமிடத்திற்குக் கலாராஜன் வரும்போது நான் ஒரு புதிய தமிழ்ப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன். கலாராஜனுக்குக் கடுங்கோபம். ‘நிறுத்து.. இந்த பாட்ட யாரு ஓகே பண்ணான்? லிஸ்டுல இதெல்லாம் கெடயாதே! ஏழு பாட்டுக்காரும் முப்பத்திரெண்டு பாட்டும் இருக்கு. அதுக்கே நேரம் பத்தாது. நடுவுல நீ வேற பாட்டப் புகுத்திறியா? வெளியே போ'. அவர் என்னைக் கடுமையாகத் திட்டினார். பின்னர் சற்று சமாதானமாகி ‘சாஜீ.. நீ தப்பா எடுத்துக்க வேண்டா.. இன்னிக்கு ஒன்னோட எந்தப் பாட்டுமே இல்ல. மத்தவங்களோட பாட்டும் கொறைக்கப் போறேன். ஒண்ணுக்குமே நேரம் பத்தாது. இனிமே யூனியன் ஆர்கெஸ்ட்ரா நடத்தும் எல்லாப் புரோகிராமுக்கும் ஓன் இந்திப்பாட்டு இருக்கும். ஆனா இன்னிக்கு விட்டுடு'.

எனது இதயம் நொறுங்கிப் போனது. இருந்தும் கலாராஜனை என்னால் வெறுக்க முடியவில்லை. ‘நீ எதுவும் சாப்பிடல இல்ல? வா.. போயி ‘பருக்கன்' அடிக்கலாம்' என்று சொல்லி பலமுறை எனக்கு உணவை வாங்கித் தந்திருக்கிறார். ‘பருக்கன்' என்றால் வெறும் சாதமும் சாம்பாரும்தான். அதுக்கே பணமில்லாமல் உணவுக் கடையில் கடன் சொல்வதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு என்னைப் பாடவிடாமல் தடுப்பது நியாயமா? பிரேம் நஸீரின் முன்னால் பாடும் வாய்ப்பு இந்த வாழ்க்கையில் இனி எனக்குக் கிடைக்குமா? கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கிருந்து போகலாமா என்று

யோசித்தேன். ஆனால் பிரேம் நஸீரை ஒருகணமாவது பார்க்கணுமே.

பள்ளிக்கூட மைதானத்தில் நிரம்பிக் குழுமிய மக்களிடம் பிரேம் நஸீர் பேசினார். இனி கலை நிகழ்ச்சிதான். மேடைக்குப் பின்னால் நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு பிரேம் நஸீர் வருகிறார். அவர் புறப்படப்போகிறாராம்! நஸீரின் முன்னால் பாடும் வாய்ப்பு யாருக்குமே இல்லை! எனக்கு பெரிய ஆசுவாசம். திடீரென்று ஏதோ ஓர் உளத்தூண்டுதலால் நான் பிரேம் நஸீரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன். கால்தொட்டுக் கும்பிடுகிறவர்கள் கேரளத்தில் பொதுவாக இல்லை என்பதனாலோ அக்கூட்டத்திலேயே இளையவன் நான் என்பதனாலோ தெரியவில்லை, அவர் என்னைக் கூர்ந்து கவனித்தார். நான் என்ன படிக்கிறேன், வீட்டில் யார்யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டார். கலைத்துறையில் என்ன செய்கிறாய் என்று கேட்டதற்குப் ‘பாட்டுப் பாடுவேன்' என்று சொன்னேன். உடன் ‘இன்னிக்கு இங்கே பாடுறியா?' என்று கேட்டார்.

‘இல்லை' என்று நான் சங்கடமாகச் சொன்னபோது அவர் கலாராஜனைப் பார்த்து ‘என்ன ராஜா? இந்தப் பையனுக்கு ஏன் பாட்டுக் கொடுக்கல?' என்றார். மூப்பும் மேடைப் பழக்கமும் உள்ள பாடகர்கள் அதிகம் இருப்பதால் புதியவர்களைத் தவிர்க்க நேர்ந்தது என்றார் கலாராஜன். ‘அப்போ புதியவங்களுக்கு யாரு வாய்ப்புத் தருவாங்க? இந்தப் பையனும் ஒரு பாட்டு பாடட்டுமே' என்று சொல்லிக்கொண்டு பிரேம் நஸீர் புறப்பட்டார். நெருக்கியடிக்கும் கூட்டத்தினூடாக சிரமப்பட்டு அவரை வாகனத்தில் ஏற்றி அனுப்பினார்கள். பிரேம் நஸீர் கிளம்பியதுமே நிகழ்ச்சிக்கு வந்த கூட்டம் பெரும்பாலும் கலைந்தது.

மீதமிருப்பவர்களின் நில்லாத கூச்சல் குழப்பங்களுக்கிடையே கச்சேரி நடக்கிறது. வேறொரு இசைக்குழுவின் உரிமையாளர்தான் ஒலியமைப்பு. அவர் வேண்டுமேன்றே செய்ததோ என்று சந்தேகம் வருமளவில் அந்நிகழ்ச்சியின் ஒலியமைப்பு கேவலமாகயிருந்தது. அத்துடன் கருவி இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தரக்குறைவும் சேர்ந்தபோது அந்தக் கச்சேரி பெரும்தோல்வியை தழுவும் நிலையாகியது. மணி என்ற பாடகனையும் என்னையும் தவிர அனைத்துப் பாடகர்களும் இரண்டு மூன்று பாடல்களைப் பாடி முடித்திருந்தனர். அத்தனைப் பாடல்களையும் பெரும் கூச்சலுடன் கூட்டம் நிராகரித்தது. மணியிடம் பாடுமாறு கலாராஜன் கேட்டார். ஆனால் தனது மைத்துனர் துபாயிலிருந்து கொண்டுவந்த ‘எக்கோ மைக்' பொருத்தி அதில் மட்டுமே பாடுவேன் என்று மணி அடம் பிடித்தார். ‘அந்தமாரி கண்ட்றாவி எல்லாம் என்னோட

சவுண்ட் சிஸ்டத்தில் அனுமதிக்க மாட்டேன்' என்று ஒலியமைப்புக்காரர் சொன்னாராம்.

கூட்டத்தின் பெரும் மறுப்புக் கூச்சலுடன் சுலோச்சனா தேவி ஒரு மலையாளப் பாடலைப் பாடிமுடிக்கும்போது மணியின் எக்கோ மைக்கைக் கையில் வாங்கி அதைப் பரிசோதித்துக்கொண்டு மேடைக்குப் பின்னால் நின்றிருந்தேன். ‘எல்லாப் பாட்டுக்கும் சகிக்கமுடியாத கூச்சலாச்சே... அடுத்த பாட்டு நீ பாடுறியா?' கலாராஜன் என்னிடம் கேட்கிறார்! எதையும் யோசிக்காமல் மணியின் மைக்கைக் கையில் வைத்துக்கொண்டு நடந்து மேடையேறினேன். ‘டேய்.. எம் மைக்கக் குடுத்திட்டுப் போடா.. அது எனக்கு மட்டும் பாடறதுக்குத் தான்டா...' என்று பின்னாலிருந்து மணி கத்துவதைப் பொருட்படுத்தாமல் கூட்டத்திற்குமுன் சென்று நின்றேன். கறுப்புக் கால்

சட்டையும் தளர்ந்து தொங்கும் கட்டம்போட்ட

சொக்காவும் போட்டுக்கொண்டு காற்றில் அசையும் தென்னங்கீற்றைப் போல் மெலிந்து ஒடுங்கிய ஒரு பையன் மேடையில் வந்து நிற்பதைப் பார்த்து ‘இவன் எதுக்கு இங்கே வந்தான்?' என்று யோசிப்பதுபோல் கூட்டம் சற்றே அமைதியானது.

கூட்டத்தைப் பார்த்ததும் எனது கால்கள் கடுமையாக நடுங்கத்தொடங்கின. அதை வெளிக்காட்டாமல் ‘இதைக் கொஞ்சம் கனெக்ட் பண்ணுங்க' என்று சொல்லி அந்த எக்கோ மைக்கின் கம்பிக் கயிற்றை ஒலியமைப்புக்காரருக்கு எறிந்துக் கொடுத்தேன். அதை இணைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. மைக்கின் எக்கோ பட்டனை முழுவதுமாகத் திரித்து வைத்துக்கொண்டு அதில் நான் ‘ஹலோ' என்று சொன்னதும் ‘ஹல ஹல ஹல ஹலொ ஹலொ ஹலோ ஓ ஓ ஓ...' என்று எதிரொலித்தது. அதுவரைக்கும் அம்மேடையில் கேட்காத அந்த விசித்திர ஒலியைக் கேட்ட கூட்டம் சத்தம்போடுவதை நிறுத்தி கவனிக்கத் தொடங்கியது.

‘அன்பானவர்களே... சமீபத்தில் வெளியான புன்னகை மன்னன் எனும் தமிழ்த் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய ஒரு பாடலைத்தான் பாடப்போகிறேன். ஆனால் மிகுந்த பதற்றத்துடன்தான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த மேடையில் இதுவரை பாடப்பட்ட எந்தவொரு பாட்டையுமே நீங்கள் ஆதரிக்கவில்லை. அதைரியப்படுத்தவும் ஊக்கமிழக்க வைக்கவும் யாராலும் முடியும். ஆனால் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் மனது இறைத்தன்மையுடையது. எளிய கலைஞர்களாகிய எங்களை உங்களது சகோதரர்களாக நினைத்து தயவுகூர்ந்து உற்சா கப்படுத்துங்கள். இனிவரும் ஒவ்வொரு பாடலையும் சிறப்பாகப் பாடி உங்களை மகிழ்விக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள்...' என்று ஒரு சிறு

பிரசங்கத்தையே நடத்தினேன். ஆனால் அதன் கருத்துகளோ வார்த்தைகளோ எதுவுமே என்னுடையதல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையார் எனும் ஊரின் தேவாலயத் திருவிழாவில் பாடவந்த இசைக் குழுவை இதைவிட மோசமாக மக்கள் கூச்சலிட்டு அவமதித்தனர். அப்போது அக்குழுவின் தலைவரான பாதிரியார் மேடைக்குவந்து இதே வார்த்தைகளைப் பேசி மன்றாடினார். அத்துடன் கூட்டம் கூச்சலை நிறுத்தி அமைதியானதை மனதில் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு துணிச்சலில் நான் செய்த சாகசச் செயல்தான் அந்த அதிகப் பிரசங்கம். ஆனால் கூட்டம் அதை ஏற்றுக்கொண்டது எனப்பட்டது. ‘நீ பாடுடா

செறுக்கா...', ‘நீ தைரியம்மா பாடு மகனே...' போன்ற சத்தங்கள் எழுந்தன. இசை ஆரம்பித்தது.

‘மாமாவுக்கு குடும்மா குடும்மா அடி ஒண்ணே ஒண்ணு,

உன் மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு...'

துள்ளலான அப்பாடலை எப்படியோ ஒருவழியாகப் பாடி முடித்தவுடன் கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியது. ‘இனி எல்லாப் பாட்டும் நீ பாடினாப் போதும்டா மோனே...' என்றெல்லாம் யார்யாரோ சத்தமாகச் சொல்வதைக் கேட்டேன். பின்னர் இரண்டு ஹிந்திப் பாடல்களையும் பாடினேன். மணியின் எக்கோ மைக்கின் சிறப்பா அல்லது பாடிய பாடல்களின் துள்ளல் வேகமா அல்லது சின்னப்பையன் எனும் பரிவினாலா என்று தெரியவில்லை, அன்றைக்கு நான் பாடிய மூன்று பாடல்களுமே நேயர்களுக்குப் பிடித்துப்போயின.

எனது இறுதிப் பாடலுக்கு முன்பு ‘இது இந்த மேடையில் எனது கடைசிப் பாடல். எனக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு ஆயிரம் நன்றிகள்' என்று தெரிவித்தேன். அது கூட்டத்திற்குச் சம்மதமாகவில்லை எனப்பட்டது. கலாராஜன் என்னிடம் வந்து ‘சாஜீ.. நீ இன்னும் ரெண்டுமூண்ணு பாட்டு பாடுடா' என்று சொல்கிறார்! ஒத்திகை பார்த்த பாடல்கள் வேறு எதுவுமில்லை என்று அவரை நினைவுபடுத்தினேன். ‘தெரிந்த ஏதாவது பாடு' என்றார். ஒத்திகை பார்க்காமல் பாடினால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த விஷப் பரீட்சைக்கு முயலாமல் நிகழ்ச்சி முடியும்முன்னே மேடையின் பின்வாசல் வழியாக அங்கிருந்து கிளம்பினேன்.

சிலகாலம் கழித்து ஒருநாள் ‘கல் ராஜு' என்னைத் தேடிவந்தான். பாம்பனார் எனும் ஊரிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் கிட்டார் கலைஞன் ராஜு. தமிழன். சோற்றில் கல் கடிப்பதுபோல் பாட்டில் அடிக்கடி சுருதிப் பிழை வாசிப்பதால் அவனுக்குக் கிடைத்த பட்டப்பெயர் ‘கல் ராஜு' என்பது. நெருங்கிவரும் சிவராத்திரி அன்றைக்கு ஒரே இரவில் இரண்டு கச்சேரிகளை நடத்த ஒப்பந்தம் எடுத்திருக்கிறான். ஹிந்தி பாட என்னை அழைக்கத்தான் வந்திருக்கிறான். பாம்பனார் கோவிலிலும் அங்கிருந்து ஒருமணி நேரம் தொலைவிலுள்ள பசுமலைக் கோவிலிலும்தாம் கச்சேரிகள். முதல் நிகழ்ச்சி மாலை ஆறரை மணிக்கு. அடுத்தது இரவு பத்தரை மணிக்கு.

நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்பு ஒத்திகை. அக்காலத்து கிராமத்துக் கச்சேரிகளின் ஒரு முக்கியக் கவர்ச்சிப் பொருள் ஜாஸெட் என்று அழைக்கப்பட்ட ஜாஸ் டிரம்ஸ். அதைக் கொட்டுகிறோமோ இல்லையோ பெரிய பெரிய பல முழவுகளைக் கொண்ட அச்சாதனம் மேடையில் இருக்கவேண்டும். கோட்டயம் ஊரின் பெயர்பெற்ற டிரம்ஸ் கலைஞன் ஜேக்கப் கொட்ட வந்தார். ஆனால் டிரம்ஸ் மட்டும் வரவில்லை. ரோசி எனும் இளம்பெண்தான் முக்கியப் பாடகி. அவளுடன் துணைக்கு வந்திருக்கும் அவளது அப்பாவும் ஒரு பாடகராம். தமிழ் மட்டும்தான் பாடுவாராம்! பணம் கொடுக்காமல் தமிழ் பாட ஆள் கிடைத்த மகிழ்ச்சி ராஜுவுக்கு.

அவரது பாடல்கள் வேலைக்காகாது என்று எனக்கு ஆரம்பத்திலேயே தோன்றியது. பாடக் கடினமான கிட்டப்பா, சின்னப்பா ரகப் பாடல்களைத்தான் பாடுகிறார். கேட்க நன்றாகவே இல்லை. ‘புதிய தமிழ்ப் பாட்டு எதுவுமே தெரியாதா?' என்று கேட்டதற்கு ‘தெரியுமே.. எது வேணும்? ‘உள்ளத்தின் கதகுகள் கண்கெளெடா, இங்கே உயர்வுக்குக் காரணம் பெண்கெளெடா..' என்று படுகிழவன் போன்ற தனது குரலில் தப்புத் தப்பாகப் பாடிக்காட்டினார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடலைத்தான் புதுப்பாடல் என்று நினைத்துவைத்திருக்கிறார்! பெரும்பாலும் தமிழர்கள் வாழும் ஊர்களில்தாம் அந்த இரண்டு கச்சேரிகளுமே. தமிழ்ப் பாடல்களை நன்றாகப் பாடவில்லை என்றால் எல்லாமே நாசமாகிவிடும். நிகழ்ச்சிநாள் காலையில்தான் ராஜு அந்த ரகசியத்தை எங்களுக்குச் சொன்னான்.

‘கோட்டயம் டௌனிலிருந்து வரும் பல்லவி இசைக்குழுன்னுதா கச்சேரி எடுத்திருக்கே. யாரு கேட்டாலும் நீங்க எல்லாரும் கோட்டயம்காரங்க தான்னு சொல்லணும்'. கொட்டுவதற்கு டிரம்ஸ் இல்லாமல், தமிழ் பாட சரியான பாடகன் இல்லாமல் பல்லவி ஆர்கெஸ்ட்ரா, கோட்டயம் -1 என்ற துணிப் பதாகை கட்டிய வாடகை வாகனத்தில் கோவிலின் முன் நாங்கள் சென்றிறங்கும்பொழுது அங்கே ஒரு ரணகள ரகளை நடந்துகொண்டிருந்தது. திருவிழா ஏற்பாட்டாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்துத் தேயிலைத் தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்க்கும் சுப்பையாவின் தம்பி ராஜு அங்கிருந்தும் இங்கிருந்தும் ஆளைச் சேர்த்து ‘செட்டப்' செய்த கச்சேரிக் குழுதான் கோட்டயம் பல்லவி என்கின்ற இல்லாப் பெயரில் வந்திறங்கியிருக்கிறது என்று அனைவருக்கும் அதற்குள்ளேயே தெரிந்துவிட்டிருந்தது.

இவன்களை மேடையேற விடமாட்டோம் என்று சிலர் கத்தினர். ‘நான் மட்டும்தா இங்கேருந்து. மித்த எல்லாருமே கோட்டயம்காரங்க தா' என்று ராஜு சொன்னவுடன் சிலர் எங்களை விசாரணை செய்யத் தொடங்கினர். ஒருவர் என்னிடம் வந்து ‘டேய் எலும்பா... ஓம் மூஞ்சி எனக்கு நல்லாத் தெரியுதே! நீ கட்டப்பனைக்காரன் தானேடா?' என்று கேட்கிறார். டிரம் அடிக்க வந்தவரைத் தவிர அனைவரும் சமீபத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள்தாம் என்ற உண்மை அம்பலமானது. குழுச் சண்டை வலுவடைந்து நாலாபக்கமும் கெட்டவார்த்தைகள் பறந்தன. யாரோ காட்டிய கருணையினால் எட்டரை மணியளவில் நாங்கள் மேடையேறினோம். இசைக் கருவிகளை எடுத்துவைத்து ஒலிப் பரிசோதனை ஆரம்பித்தபோதுதான் ஜாஸெட் இல்லை என்பதைக் கூட்டம் கவனித்தது. ‘டேய்.. ஃபிராடுகளா.. எங்கேடா ஜாஸெட்? ஜாஸெட் இல்லாம ஒரு நாறியும் இன்னிக்கு இங்கே பாட மாட்டா'. மீண்டும் எல்லாமே கைவிட்டுப் போயின.

பலபேரின் பாதம் தொட்டுக் கும்பிட்டு மன்னிப்புக் கோரி கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக ஒன்பது மணிக்குக் கச்சேரியை ஆரம்பித்தோம். கூச்சலிட்டும் அஸ்தானத்தில் கைதட்டியும் கூட்டம் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தது. நாங்களும் அபசுருதியும் அவதாளமுமாகப் பாடிக்கொண்டிருந்தோம். ரோசி பாடத் தொடங்கியபோது ‘அடியே ஓசீ.. ஓம் பாட்டாவது மைராவது.. திரும்பி நின்னு பாடுடீ.. ஓம் பின்னழகாவது எங்களுக்குக் காட்டுடீ' என்றெல்லாம் ஆள்கள் கத்தினர். ரோசியின் அப்பா பாடிய ‘யாருக்காக, இது யாருக்காக' பாடலை தொடக்கம் முதல் ஒடுக்கம் வரை கூச்சலிட்டு விரட்டியது கூட்டம். நேரம் இரவு பத்தரை. அங்கிருந்து தொலைவில் இருக்கும் பசுமலைக் கோவிலில் கச்சேரி ஆரம்பிக்கவேண்டிய நேரம்...

‘இன்னோர் அரங்கிலும் இன்றைய இரவு எங்களுக்குக் கச்சேரி இருப்பதால் அடுத்துவரும் ஒரு பாடலுடன் இந்தக் கச்சேரி முடிவடைகிறது,' என்று ஒலிபெருக்கியில் அறிவித்தோம். அப்போது பலர் திரளாக மேடையை நோக்கி வருவதைக் கண்டேன். ‘எங்கள் சின்ன ராசா‘ படத்தில் வந்த ‘அடிடா மேளம் எடுடா தாளம் இனிதா கச்சேரி ஆரம்பம்' நான் பாடிமுடித்ததும் அவர்களில் ஒருவர் மேடைமேல் பாய்ந்தேறி என் கையிலிருந்து மைக்கைப் பறித்தார். ‘நண்பர்களே.. இனிதான் கச்சேரி ஆரம்பம் என்று பாடுவதைக் கேட்டீர்கள் அல்லவா? ஆக இனிமேல்தான் கச்சேரி ஆரம்பமே. நாம் நிறுத்தச் சொல்லும்வரை இவர்கள் இங்கே பாடுவார்கள். நாங்க நிறுத்தச் சொல்ற வரெ பாடிக்கிட்டே இருக்கணும். கேட்டியாடா மாங்கா மண்டைகளா' என்று எங்களிடம் குமுறிக்கொண்டுதான் அவர் மேடையை விட்டு இறங்கினார்.

‘அவன்டெ ஆம்மேடெ அடிடா மேளம்' என்று அலறிக்கொண்டு ஒருவன் ஒரு பட்டாக்கத்தியை மேடைப் பலகைமேல் குத்தி இறக்கினான். ‘இனி ஒரு மலையாளம் பாட்டு வரட்டும்.. அடுத்தது ஒரு இந்தி... இப்ப ஒரு தமிழ்...' என உத்தரவுகளைப் போட்டு பலவந்தமாகப் பாடவைத்தனர். வாயில் வருவது கோதையின் பாடல் என்பதுபோல் தெரிந்ததும் தெரியாததுமான பலப்பல பாடல்களைப் பாடிக்கொண்டேயிருந்தோம். இறுதியில் இரவு பன்னிரண்டரை மணிக்குதான் அந்த கடுங்காவல் பாட்டுத் தண்டனையிலிருந்து எங்களை விடுதலை செய்தனர்.

கும்மிருட்டினூடாக நிலம் தொடாமல் பாய்ந்த எங்களது வாகனம் ஒன்றரை மணிக்கு பசுமலை தேயிலைத்தோட்ட நுழைவாயிலை அடைந்தது. கோவில் மைதானத்திலிருந்து கிளம்பிப் போகும் மக்களைத் தூரத்திலிருந்தே பார்த்தோம். ஒருசிலர் எங்கள் வாகனத்திற்குக் கை நீட்டினர். ‘நீங்கள் பாட்டுக் கச்சேரிக் குழுவா?... ‘ஆமா அண்ணே'  ‘அப்டீன்னா அந்தப் பக்கமே போகாதே. அங்கே பயங்கரமான அடிதடி நடந்திட்டிருக்கு. நீங்க நேரகாலத்துக்கு வராததால இங்கே பெரும் கலவரமாகிப்போச்சு...அவங்க ஒங்களக் கொல்லாம விடமாட்டாங்க..'

(இக்கட்டுரையின் இறுதிப் பகுதி அடுத்த இதழில்)

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com