பின்னோக்கிய பயணம்!

பின்னோக்கிய பயணம்!

வாலிபனான பிறகு வாய்த்ததாக நினைவில் நிற்கும் முதல் பயணம் சோற்றானிக்கரை போனது. வங்கியில் பணியமர்ந்து, கை கொஞ்சம் நிரம்பியிருந்தது. வேண்டியவர்கள் குடும்பம் கிளம்பியபோது, உடனடியாய் முடிவெடுத்து அவர்களுடன் தொற்றிக்கொண்டேன். நள்ளிரவில் காணக் கிடைத்த குருதிபூஜை தந்த அனுபவம் அபாரமானது. விசித்திரமும் பயங்கரமும் ஒருங்கே நிரம்பியது. சுற்றிலும் சுழன்றாடும் தலைகள், நிலைமறந்து சுழன்ற ஆண் பெண் உருவங்கள், கணந்தோறும் விசை அதிகரித்துவந்த பஞ்சவாத்திய ஒலி, ஏகப்பட்ட தாந்திரீக முத்திரைகளுடன் பூஜை நிகழ்த்திய தந்திரி என எனக்குள் பத்திரமாய்ப் பதிந்துகிடக்கிறது அந்த இரவு.

அதைவிட, மறுநாள் காலையுணவுக்குப் பிறகு தனியாய்க் கிளம்பி, கோட்டயம் குமுளி கம்பம் தேனி பெரியகுளம் - இன்னும் இடையில் பெயர் மறந்துவிட்ட ஒரு கேரளச் சிற்றூரும் உண்டு - என்று அத்தனை இடங்களிலும் இறங்கி வேறு பேருந்துக்கு மாறிப் பயணம் செய்தது இன்னும் பெரிய சுவாரசியம். இறங்கிய இடத்திலெல்லாம் ஒரு கோப்பை தேநீரும் ஒரு சிகரெட்டும். அந்தப் பயணத்தில் கிடைத்த அலாதியான தனிமையையும் சுதந்திரத்தையும் ஒரு இம்மிகூட வீணாகாமல் ருசித்தேன். உண்மையில், பயணங்களின்மீதான தீராக்காதலை விதைத்தது அந்தப் பயணமாகவே இருக்க வேண்டும்.

தேதிகளும் மாதங்களும் வருடங்களுமேகூட மறந்துவிட்டாலும், எனக்குள் சேகரமாகி, தத்ரூபமான, தற்போதைய அனுபவமாக மீந்திருப்பவற்றைத் திரும்பிப் பார்க்க அலுப்பதேயில்லை.

சோற்றானிக்கரையில் யாரிடமிருந்தோ விடுபட்டு வெளியேறிய ஆவி என்னைத் தொற்றியிருக்கக்கூடும் - திகட்டத்திகட்டப் பயணங்களில் ஊறித் திளைத்தவரின் ஆவியாக அது இருந்திருக்கலாம்! அடுத்த பயணத்துக்கான உந்துதலை எனக்குள் கிளர்த்தியவாறிருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே காஷ்மீரப் பயணம் வாய்த்தது - மணமாகியிராத, சக ஊழியர்களான, மூன்று நண்பர்களுடன். திருமதி.காந்தி மெய்க்காவலர்களால் கொல்லப்பட்டு ஆறேழு மாதங்களே கடந்திருந்தன. ஒட்டுமொத்த வட இந்தியாவும் கோடை காரணமாகவும் மேற்சொன்ன நிகழ்வு காரணமாகவும் தகித்துக்கொண்டிருந்தது.

ஶ்ரீநகரிலிருந்து பஹல்காம் குல்மார்க் ஸோனமார்க் என்று நாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக உடன்வந்த உள்ளூர்க்கார மக்பூல், சர்வசாதாரணமாய்ச் சொன்னார்:

அடுத்தமுறை நீங்கள் காஷ்மீர் வருவதென்றால், பாஸ்போர்ட்டும் வீஸாவும் வேண்டியிருக்கும்.

ஆக, வெளிமாநிலப் பயணங்கள் உங்களைப் புதிய இடங்களுக்கு மட்டுமல்ல, செய்தித்தாள் மூலம் மட்டுமே அறியக் கிடைத்த அந்தந்த மாநில அரசியல் நிலவரத்துக்குள்ளும் அழைத்துச் செல்கின்றன. மேற்சொன்ன பயணத்தையும், உரையாடலையும் ஏதோவொரு சிறுகதையில் எழுதியிருக்கிறேன் என்று சன்னமான ஞாபகம்.

இப்படித்தான், கோழிக்கோடு பயணத்தில் இடைப்பட்ட பாரதப்புழையும், ஹம்ப்பியின் துங்கபத்திரையும் தலைக்கொன்றாய்க் கவிதைகள் வழங்கின. ஜம்முவிலிருந்து ஶ்ரீநகர்வரை எதிர்த்திசையில் பயணம் செய்த ஜீலமும் அதைநோக்கிய கடும் சரிவும் ஒரு சிறுகதை தந்தன. ரிஷிகேசத்தின் கங்கை ஓரிரு குறுங்கதைகள் தந்தாள். சிருங்கேரியின் துங்கா பரிசளித்தது ஒரு நாவலின் கணிசமான பகுதியை. நாகார்ஜுன கொண்டா நோக்கி இட்டுச் சென்ற யந்திரப்படகுப் பயணம் எனக்குள் விதைத்த நாவலின் முதல்வரியையே இன்னும் எழுதவில்லை - சன்னஞ்சன்னமாய் எனக்குள் வளர்ந்தவண்ணம் இருக்கிறது அது. வங்காளத்தின் நவ்தீப்பில் இணைபிரியாத பாம்புகள்போலப் பிணைந்து நகர்ந்த கங்கையும் ஜாலங்கியும் அவை தரும் படைப்பூக்கமும் என்றைக்கும் வற்றுவதற்கில்லை.

பொதுவாகவே, புனைகதை எழுத்தாளர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களிலொன்று, ஒவ்வொரு நிகழ்வுக்குமான வேளையையும் களத்தையும் துலக்கமாக, கூறியது கூறாமல், நிறுவிக்காட்டுவது. பொழுதுகளின் நிறங்களை, கதைக் களத்தின் நிலவியலை நூதனமாகவும் புதிதாகவும் ஆக்கித் தருபவை அந்நியநிலப் பயணங்கள். அதை முன்னிட்டே, இன்னும் இன்னுமென்று பயணம் மேற்கொள்ளும் ஆவல் மீறுகிறது. புதிய இடங்களை, புதிய முகங்களைப் பார்க்க நேரும்போது, எனக்குள்ளிருந்து புதிய மனிதன் ஒருவன் எழுவதாக உணர்கிறேன். புதிய உணவுகளை ருசிக்க முனையும் நாக்கும் புத்தம்புதியதேதான்!

தனியாகப் போனவை தவிர்த்து, ஜெயமோகனுடன் மேற்கொண்ட பயணங்கள் எனக்கு அளித்தவையும் அநேகம். குறிப்பாக, ருத்ரப்பிரயாகைவரை சென்றது மிகச் சிறப்பான பயணம். ஹரித்துவார் கும்பமேளாவை முன்னிட்டுப் போயிருந்தோம். லட்சோபலட்சம் ஜனங்கள் மண்டிய புராதனச் சிறுநகரில், உடல்களும் பார்வைகளும் மானாங்காணியாய் உரசித்தள்ள, தனித்த அடையாளமற்ற நபர்களாய்க் குறுக்கும் மறுக்கும் அலைந்தோம். கால்கள் சோரும்வரை நடந்து திரிந்த பிறகு, நதிக்கரையின் வெற்றுத்தரையில் படுத்து இரண்டு மணிநேரம் மட்டுமே உறங்கக்கிடைத்தது. என் ஊரின் என் தெருவில் குத்திட்டு அமரக்கூடத் துணியமாட்டேன். அந்நிய ஊரில் இருக்கும்போது உள்ளூரில் நிலைபெற்றிருக்கும் சுயபிம்பம் முற்றாகக் கலைவது எத்தகைய வசீகரம்! புதிய இடங்களுக்குப் போகும்போதெல்லாம், ஜெயமோகன் எனக்களித்த ஒரு வாக்கியம் உயிர்பெறும் :

போகும் இடத்திலெல்லாம் நமது உள்ளூர் வசதிகளின் ஞாபகத்தைத் தூக்கிக்கொண்டே அலையக்கூடாது; கிடைத்த வசதிகளோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும்.

என்றான்! கங்கைக்கரையில் உருண்டுகொண்டிருந்த அந்த இரவில் மேற்படி வாக்கியம் இன்னொருதடவை மேலெழுந்தது.

கும்பமேளாவின் உதிரிக் காட்சிகள், அசையும் உருவங்கள் கொண்ட புகைப்படங்கள்போல எனக்குள் நிரந்தரமாகப் பதிந்துகிடக்கின்றன. முக்தித் தலத்துக்குத் தன் தாயை உப்புமூட்டை தூக்கிவந்த இளைஞனின் விசித்திரமான உருமால்; தூய வெள்ளுடையில் வந்த ஆண்கள் குழுவில் ஒவ்வொருவரின் காதுமடல் குழிவுகளையும் நிரப்பியிருந்த விநோதமான பித்தளைக் காதணி; விலங்கினத்தின் சரளத்துடன், பிற உடல்மீது உரசுகிறோம் என்ற உணர்வேயற்று, சகஜமாக உராய்ந்து நகரும் ஆண்களும் பெண்களும்; அவரவர் பிராந்திய உடையில் கடந்து செல்கிற, மேலாடையைவிட முக்காட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இளம்பெண்கள்; வசந்தகுமாரின் நுட்பமான காமிராவில், முகம் முழுக்கச் சுருக்கமும், பொக்கைவாய் முழுக்கப் புன்னகையுமாய்ப் பதிந்த வடகிழக்கு மூதாட்டி; பொன்முலாம் பூசிய மூக்குக்கண்ணாடி, பவுடர் பூசிய முகத்தில் அரசாங்க உயரதிகாரி போன்ற பாவனை, அதேபோன்ற உடல்மொழி கொண்ட திகம்பரரை அங்கங்கே மறித்துக் காலில் விழுந்து ஆசிபெற்ற ஜனக்கூட்டம்.

ஒருகணம், திகைத்தேன். அவரளவு சுதந்திரமாகத் திரியவிடாமல் என்னை உடைக்குள் பொதிந்துவைக்க மனிதகுலம் கடந்துவந்திருக்கும் தொலைவு முழுவதையும் ஒரே கணத்தில் உதிர்த்துவிட்டு, விலகி வழிவிடும் கூட்டத்தின் நடுவில் அவரை அம்மணமாய் நடந்துசெல்லத் தூண்டியது எது - தீரமா; குகைக் காலகட்டத்துக்குத் திரும்பத் துடிக்கும் ஆழ்மனத்தின் ஆவேசமா; ஒருபொழுது உரையாடலுக்கு மட்டும் பரிச்சயமான உள்ளூர்க்காரர் விளக்கியதன்படி, நேர்த்திக்கடன் நிறைவேற்றம் மட்டும்தானா; அலகு குத்தி ஆடுவதிலோ, காவடி எடுப்பதிலோ மேற்சொன்னதில் இருக்கிற அளவு உளவியல் சிடுக்கு உண்டா; அல்லது, இவை எதுவுமேயின்றி, இலக்கற்ற மொண்ணைத்தனமா என்ற கேள்வியையெல்லாம் சாவகாசமான பொழுதில் கேட்டுக்கொள்ளலாம் - அத்தனை பெரிய கூட்டத்தில், விளைந்த ஓர் ஆணுடல் அம்மணமாய் நடப்பதை நேரடியாய்ப் பார்க்கும்போது கிடைத்த திகில் எந்தக் கேள்வியைவிடவும் பெரியது...

ருத்ரப்பிரயாகை செல்லும் வழியில், சுமார் அரை கிலோமீட்டர் ஆழத்துக்குச் சரிவில் இறங்கிப்போய், ஐஸ்போலக் குளிரும் நீர்ப்பரப்பின் ஓரம், பேரழகும் பிசிறற்ற உருண்டை வடிவமுமாய்ச் சிதறிக் கிடந்த கூழாங்கற்களைப் பொறுக்கத் தொடங்கினேன். பயணத்தின் அந்தத் தருணம், என்னை பால்யத்தை நோக்கித் தூக்கிச் சென்ற காலயந்திரமோ என்று இப்போது தோன்றுகிறது. ஒவ்வொருவர் ஆழ்மனத்திலும் இறந்தகாலம் நோக்கிப் புறப்பட்டுப்போகும் விழைவு இருக்கத்தான் செய்யும்போல என்று சமாதானம் கொள்கிறேன் - மேற்படி திகம்பரர் இன்னும் புதிதாய்த் தென்படுகிறார்...

பயணம் தொகுத்துச் சேகரிக்கும் காட்சிகளுக்கு வரையறையும் இல்லை; தாட்சண்ணியமும் இல்லை. கொடும் வெயிலில் காருக்குள் அமர்ந்து டெல்லி திரும்பும்போது, முஸாபர் நகரில் கொதிக்கும் தார்ச்சாலையில் வெற்றுக்காலுடன் சாவகாசமாக நடந்துசென்றவர்களை நினைத்தால் இப்போதும் எழும் தகிப்பு; ஜலந்தர் தேவிகோவில் வளாக வாசலில் சமுத்திரம்போலப் பரந்திருந்த வாணலியில் மிதந்த குலாப்ஜாமூன்கள்; ராஜமுந்திரியில் கோதாவரியின் அகலம் கொடுத்த மிரட்சி; குவஹாத்தியில் அதைவிடப் பலமடங்கு அதிக பிரமிப்பை வழங்கிய பிரம்மபுத்திரை. காசிரங்காவில் யானைமீது சவாரித் தொட்டிலில் அமர்ந்து வனத்துக்குள் போகும் வழியில், சாவகாசமாகப் படுத்திருந்த காண்டாமிருகம் சுதாரித்துத் தலைநிமிர்த்திய மாத்திரத்தில், அவசரமாகப் பின்வாங்கிய யானை...

சோமேஸ்வர் காட்டுக்குள் ஈரத்தரையில் பார்த்த, கிட்டத்தட்ட ஒரு லிட்டர் நீர்பிடிக்கும் ஆழம்கொண்ட, பசிய புலித்தடம்! சற்றுமுன்தான் அது கடந்துசென்றிருக்க வேண்டும் என்று வழிகாட்டியான வன அலுவலர் கூறிய நொடியில் என் முதுகுத்தண்டில் ஓடிமறைந்த மின்சாரம்!

மற்றொரு முறை பத்ரிநாத் சென்று திரும்பும்வழியில், ஜிம்கார்பெட்டின் நினைவு பொங்கி, அவர் புழங்கிய கட்வால் பிராந்தியத்தில் சும்மா ஒரு நடை காரில் சென்று திரும்பினேன். அப்போதும் அங்கே புலிகளின் நடமாட்டம் இருந்ததா தெரியாது - ஆனால், சோமேஸ்வர் வனப் புலியின் ஈரப் பாதத்தடம் எனக்குள் மீண்டு நிரம்பியது!

கர்நாடகத்தில் மாபெரும் குளத்தின் நடுவே இருந்த ஜைனக் கோவில். அதற்கு இட்டுச்சென்ற, ஒருவர்பின் ஒருவர் மட்டுமே அமருமளவு அகலமும், முப்பதுபேர்வரை வரிசையாய் அமர நீளமும் கொண்ட தோணி. தொடர்ந்து திகம்பரர்களின் சிலைகளையும், ஓரிரு இடங்களில் திகம்பர உருவில் எதிர்ப்பட்ட முனிகளையும் பார்த்து நிர்வாணம் தொடர்பான கூச்சம் கொஞ்சங்கொஞ்சமாக உதிரத் தொடங்கி, சிரவணபெலகோலாவின் பிரம்மாண்ட அம்மணச் சிலையைத் தரிசித்தபொழுதில் முற்றாகக் கழன்றுவிழுந்ததை உணர்ந்தது. அப்புறம், பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமஸ்தகாபிஷேகத்தின் பகுதியாக ஆயிரத்திச் சொச்சம் லிட்டர் வாசனைத் திரவியங்களால் துறவி அரசனின் சிலை குளிப்பாட்டப்பட்டபோது அருவிச் சாரல்போல எங்கள்மீது படிந்து மணந்த இளம்பழுப்புத் துமிகள்... அவற்றின் அபூர்வமான கலவை வாசனை...

ஆமாம், காட்சிகள் மட்டுமல்ல, ஒலிகளையும், மணங்களையும்கூடப் படிமங்களாய்ப் பதிய வைத்திருக்கின்றன என் பயணங்கள். இசைக்கடவுளாக எனக்குப் புலப்படும் அமரர் பீம்ஸேன் ஜோஷி ஆண்டுதோறும் நடத்திவந்த ஹிந்துஸ்தானி இசைவிழாவுக்கு முதல்முறையாய்ப் போனேன். தொடர்ச்சியாக நாலு நாட்கள். கிட்டத்தட்ட நாற்பது கச்சேரிகள். சாயங்காலம் நாலு மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு தாண்டியும் நடப்பவை. ரயிலில் ஊர்திரும்பியபோது, அந்த இரவு முழுவதும் என் தலைக்குள் தபலா ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது - தம்பூரின் மிழற்றலும்தான்! இதை எழுதும் இந்த வேளையிலும் என் பின்னந்தலையில் அவை ஒலிக்கின்றன!

பூட்டான் பயணத்தில், ஒரேவிதமான தேசிய அலங்காரத்தின் பிரகாரம் வடிவமைக்கப்பட்ட வாசல்களும் ஜன்னல்களும் கொண்ட சாலைகளை வியந்தபடி, ஒரு உணவகத்தை நோக்கி மாடியேறிப் போனோம். உணவின் ருசி அத்தனை சிறப்பாய் இல்லை. சீக்கிரமே விழுங்கிவைத்துவிட்டு, புகைப்பதற்காகப் படியிறங்கிவந்தோம். பொது இடங்களில் புகைப்பதற்குத் தடை உள்ள நாடு. ரகசியமாய்ப் புகைக்கும் உத்தேசத்துடன், உணவகக் கட்டிடத்தின் பின்புறம் சென்றோம்.

பின்புறத் தெருவின் காட்சி, பிரதான சாலையின் காட்சிக்கு நேர்மாறாய் இருந்தது. புறா எச்சங்களும் உதிர்ந்த இறகுகளும் போக, அந்தத் தெருமுழுக்க மண்டியிருந்த பறவை வீச்சமும் இன்றுவரை எனக்குள் மீந்திருக்கிறது.

அதேபோல, சிம்லாவில் ஏதோவொரு பகுதியில் நடக்கும்போது, சடாரென்று முகத்தில் மோதிய வற்றல்குழம்பு மணம். அது வெறும் பிரமையோ என்றுகூடப் பலதடவை வியந்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரையில் அடுக்கப்பட்டிருக்கும் அத்தனை தகவல்களுமே அப்படியொரு பிரமைச் சாயல் கொண்டவைதாம்!

மே, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com