வாழ்க்கை நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ள வாய்ப்புகள் அளித்துக் கொண்டே உள்ளது!

வாழ்க்கை நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ள வாய்ப்புகள் அளித்துக் கொண்டே உள்ளது!

சமீபத்தில் எங்கள் பேட்ச் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் வாட்ஸப் குழுமத்தில் நாம் சிவில் சர்வீஸுக்குத் தேர்வாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன எனக் கூறி இருந்தனர். அந்த தேதி ஜூன் 16. ஆம். சில தினங்கள் மறக்க முடியாதவை. அதில் ஒன்று 1996 ஆம் ஆண்டு ஜூன் 16.

அப்போது நான் குடும்பத்துடன் சென்னை பெரம்பூரில் வாடகை வீட்டில் பெற்றோர், மனைவி வைதேகி, குழந்தையுடன் வசித்து வந்தேன். அன்று காலையில் எழுந்தவுடன் அருகே உள்ள கடைக்குச் சென்று ஹிந்து பேப்பரை வாங்கினேன் அப்போதெல்லாம் தேர்வு முடிவுகளை செய்தித்தாளில்தான் பார்க்க முடியும். தேர்வானவர்கள் பட்டியலில் ஒவ்வொரு பெயராகப் படித்துக் கொண்டே வந்தேன். என் பெயரும் அதில் வந்திருந்தது. அதுவும் தேசிய அளவில் நல்ல ரேங்கில். ஐ.எஃப்.எஸ் எனப்படும் இந்திய அயலுறவுப் பணியைத்தான் என் முதல் விருப்பமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதுவும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. எனவே வீட்டுக்குத் திரும்பி தகவல் சொன்னேன். எல்லோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. கட்டியணைத்து மகிழ்ந்தார்கள். உறங்கிக் கொண்டிருந்த மகனை முத்தமிட்டேன்.

பிறகு வீட்டில் இருந்த சில்லறைகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த பிசிஓவுக்குச்சென்று உறவினர்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன். பிறகு என்னுடைய ஆசிரியர்களுக்கு போன் செய்தேன். அப்போதுதான் முக்கியமான ஒரு படிப்பினை எனக்குக் கிடைத்தது. அது எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டிய படிப்பினை.

என் கல்லூரி ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு தகவல் சொன்னபோது, ‘உண்மைதானா? நிஜம்தான் சொல்றியா?' என இரண்டு முறை கேட்டார்கள். பிறகு வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால் என் பள்ளி ஆசிரியர்கள் யாருமே நான் ஐ.எப்.எஸ். பணிக்குத் தேர்வாகிவிட்டேன் என்பதை நம்பவில்லை. இரண்டு முறை சொன்னேன். மூணுமுறை சொன்னேன். காலையிலேயே கிண்டல் பண்றியா எனக்கேட்டவர்கள் பிறகு தான் ஓரளவு தயக்கத்துடன் நம்பினார்கள். வாழ்த்து சொன்னார்கள்.

இந்த சம்பவத்தை நான் பலரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். பலரும் பலவிதமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் தெளிவுபடுத்த விரும்புவது என்ன?

இது வெற்றி - தோல்வி குறித்த கதை அல்ல. பள்ளி, கல்லூரியில் ஆசிரியர்கள் நம்மை எப்படி மதிப்பிடு-கிறார்கள் என்பது குறித்த கதையும் அல்ல.

நாம் விரும்பினால், நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள, புதிதாய் வார்த்தெடுத்துக்கொள்ள, வாழ்க்கை வாய்ப்புகளை அளித்துக்கொண்டே உள்ளது என்பது பற்றியது இது.

என்னுடைய ஆசிரியர்கள் என்னுடைய செயல்பாட்டைப் பார்த்து என்னை மதிப்பிட்டிருந்தார்கள். அதுவும் சரியாகத்தான் மதிப்பிட்டிருந்தார்கள். நாமும் பிறரை அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில்தான் மதிப்பிடுகிறோம். ஆனால் தவறு எங்கே நடக்கிறது?

நம் செயல்பாட்டின் அடிப்படையில் செய்யப்படும் மதிப்பீட்டை நாம் நம் தகுதியின் மதிப்பீடாக, திறமையின் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளும்போதுதான் தவறு நடக்கிறது.

ஒருவகையில் இந்த மதிப்பீட்டை நம் திறமையின் மீது நம் தகுதியின் மீது நாமே ஏற்றிக்கொள்கிறோம். தொடர்ந்து நம் திறமையை வளர்த்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறோம். நம் தகுதியைப் பெருக்குவதை நிறுத்திவிடுகிறோம். ஒரு கட்டத்தில் நமக்கு இதெல்லாம் வேண்டாம்; இது சரிப்பட்டு வராது எனத் தோன்றிவிடுகிறது. இந்த இடத்தில்தான் நாம் விழித்துக்கொள்ளவேண்டும்.

நம்முடைய திறமை - தகுதி என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை நாம் தான் வளர்த்தெடுத்து நல்ல செயல்பாடாக வெளிக்காட்ட வேண்டும். அப்போது பிறர் நம் செயல்பாட்டை மறுபடி மதிப்பிடும்போது அதில் இருக்கும் பெரிய வேறுபாட்டை இடைவெளியை உணர்வார்கள். அதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். அவர்களுக்கு நம் திறமையை நாம் எவ்வளவு பாடுபட்டு நீரூற்றி வளர்த்திருக்கிறோம் எனத் தெரியாது.

இது ஒரு புழுவை புழுவாகப் பார்த்ததற்கும் அது கூட்டுக்குள் போய் தன்னை பட்டாம்பூச்சியாக வளர்த்து வெளியே வந்தபோது பார்ப்பதற்குமான இடைவெளி. இதைத்தான் இருபந்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியர்களுக்கு போன் செய்தபோது நான் உணர்ந்தேன். ஆஹா.. நாம் நடுவில் பட்ட கஷ்டம் அவர்களுக்குத் தெரியாதே எனப் புரிந்துகொண்டேன்.

என்னுடன் சென்னையில் இந்திய ரயில்வே அலுவலகத்--தில் பணியாற்றிய நண்பர் கோபால கிருஷ்ணன், எனது முகநூலில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். கனிவான சொற்களில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்களில், அந்தக் காலத்தில் நான் என்னைத் தயார் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆக்ஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com