லிஜோமோல் ஜோஸ்
லிஜோமோல் ஜோஸ்

எலி பிடிக்கக் கற்றுக்கொண்டேன்! - ’ஜெய்பீம்’ லிஜோமோல்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த லிஜோமோல் ஜோஸ் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியவரான லிஜிமோலுடன் எழுத்தாளர் ஷாஜி நடத்திய நேர்காணல்.

“ஜெய்பீம் படத்தில் நடித்தபோது இரவு எலி வேட்டைக்குச் செல்வோம். அப்போது பெண்களின் வேலை என்னவென்றால், பிடித்த எலியை பானையில் அல்லது பையில் போட்டு எடுத்துச் செல்ல வேண்டும். பறவைகள் வேட்டைக்கும் செல்வோம்.

நான் எலி பிடிக்கக் கற்றுக்கொண்டேன். நாற்று நடக் கற்றுக் கொண்டேன். இதெல்லாம் எனக்கு ரொம்பப் புதுசாக இருந்தது. இப்படியொரு சமூகம் இருப்பதே அப்போது எனக்கு தெரியாது. அவர்கள் எல்லாம் செங்கல் சூளையில் வேலைபார்க்கும் சமூகம்.

இரண்டு வாரங்கள் நடிப்புப் பயிற்சி என்று சொன்னார்கள். ஆனால், ஒரு மாதத்துக்கு மேல் சென்றது. எனக்கு தமிழ் பேசுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ‘எப்படி தமிழ் பேசி இந்த கேரக்டர்ல நடிக்கப் போறீங்க’ என அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே என்னைக் கேட்டார்கள். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. தினந்தோறும் நடிப்பு பயிற்சி முடித்துவிட்டு, இரவு அறைக்குப் போய் அழுவேன். என்னால் செங்கேணி கேரக்டர்ல நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஜெய்பீம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் மட்டும் அப்போது எடுத்தார்கள். அப்போது, கொரோனா ஊரடங்கு அறிவித்துவிட்டதால், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அதனால் வீட்டுக்கு வந்துவிட்டேன். இப்போதைக்குப் படப்பிடிப்பு இருக்காது என்று நினைத்து விரும்பியதை எல்லாம் சாப்பிட்டேன். பிறகு நானே, செங்கேணி கதாபாத்திரம் ஒடுங்கிய உடம்பு என்பதால், சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்.

ஞானவேல் சார், மணிகண்டன் சார் எல்லாம் கால் பண்ணி, “லிஜோ இப்போ நீ வீட்ல இருக்க…சே… நீ லிஜோவா இருக்கக் கூடாது. செங்கேணியா இருக்கணும்…செங்கேணியா யோசிக்கணும்” என்பார்கள். கூடவே என்னுடைய ஸ்கிரிப்ட்டைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். டயலக்ஸ் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. ஒவ்வொரு காட்சியிலும் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு நானே யோசித்துக் கொள்வேன். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பின்போது நான் செங்கேணியாகவே ஆனேன்.

படப்பிடிப்பு ஏறக்குறைய முடிகிற போதுதான், ஞானவேல் சார் என்னை டப்பிங் பேசச் சொன்னார். ”நீ தான் டா டப்பிங் பேசணும்…இவ்வளவு நடிச்சிருக்க…நீ பேசினாதான் சரியா இருக்கும்” என்றார். மற்றொரு நாள் சூர்யா சாரும் கேட்டார். அந்த படத்தின் டப்பிங் பேசி முடிக்கவே ஒருமாதம் ஆனது. எனக்கு டப்பிங் பேச நிறைய உதவி செய்தது மணிகண்டன் தான்.” என்று லிஜோமோல் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com