அதிகாரத்தின் மீதான ஆசை மிகவும் கொடூரமானது - போதியின் நிழல் 17

அதிகாரத்தின் மீதான ஆசை மிகவும் கொடூரமானது - போதியின் நிழல் 17

இன்று என்னைக் காண தர்மபிரியரும் தர்மகாரரும் வந்திருந்தனர். அவ்விருவரும் பக்தாராவின் மிகப்பெரிய அறிஞர்கள் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தேன். தொலைவில் வரும்போதே அவர்களின் தோற்றம் அறிவின் சுடராக இருப்பதைக் காண முடிந்தது. ஆனாலும் எவ்வளவு அடக்கமாக இருந்தனர். அவர்களிடம் என் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள உதவவேண்டுமெனக் கூறியபோதுதான் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. கற்றவர்களிடம் உலகெங்கும் காணப்படும் பண்புதான் இது. அவர்கள் தாங்கள் கற்றவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது தாங்கள் கற்றது மேலும் மேலும் சுரக்கிறது என்பதை அறிகிறார்கள்.

இங்கு வருவதற்கு முன்பாக என் பயணம் எப்படி இருந்தது என்பதை உங்களுக்குச் சொல்லவேண்டும். சாமர்கண்டில் இருந்து புறப்பட்டதும் பல நகரங்களைக் கடந்தோம். வழியில் கடினமான ஒரு மலைப்பாதையைக் கடக்க வேண்டியிருந்தது. நீண்டபாதை. ஆனால் என்னுடன் இப்போது வழித்துணைக்குத்தான் நபர்கள் உள்ளனரே... ஆகையால் கவலையில்லை. அதைக் கடந்து நாங்கள் இரும்புக் கணவாய்க்கு வந்து சேர்ந்தோம்.
சிவப்பு நிறத்தில் இருந்த பெரும் மலைப்பாறைகளுக்கு இடையில் இருந்தது பாதை. இப்பாறைகளில் இரும்புத்தாது அதிகமாக இருப்பதால் வெட்டி எடுக்கப்படுகிறது. இதன் வழியில் பெரிய இரும்புக்கதவு போட்டு சாத்திவிடுவார்களாம். மணிகள் தொங்கும் அழகிய கதவு அது. எதிரிகள் இதைத்தாண்டி இதற்கு அப்பால் உள்ள தேசங்களுக்குப் படையெடுத்துச் செல்வதைத் தடுப்பதற்கு இயற்கை அரணாக இந்த கணவாய் இருக்கிறது.
இதைக் கடந்து குண்டூஸ் நகருக்கு வந்து சேர்ந்தோம். இங்குதான் நான் முன்னால் சந்தித்த கான் என்கிற அரசனின் மூத்த மகனான ஷேஹ் ஆட்சிப்பொறுப்பில் இருந்தான். அவனுக்கு கான் ஓலை அனுப்பியிருந்தான். இவன் காவ்சாங் மன்னனின் ராணியின் தங்கையை மணந்தவன் என்கிறபடியால் காவ்சாங் அரசனும் எனக்கு உதவும்படி அவனுக்கு ஓலை எழுதியிருந்தான்.
ஆனால் நான் வந்து சேர்ந்தபோது மன்னன் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாய் இருந்தான். அவனது ராணிகளில் மூத்தவள் இறந்துபோயிருந்தாள். என் வருகை பற்றிய செய்தி அவனுக்குப் போனதும் உடனே கூப்பிட்டு அனுப்பினான். நான் சென்றபோது அவனை தரையில் பெரிய இலைகளை விரித்துப் படுக்க வைத்திருந்தனர். உடல்முழுக்க பச்சிலைக் குழம்பு பூசப்பட்டிருக்க வீச்சம் அடித்தது. அவனது அறைக்குள் இருள் சூழ்ந்து இருந்தது. எனவே பெரிய எண்ணெய் விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. அருகே வைத்தியர் அமர்ந்து கண்களைமூடி ஏதோ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தார்.


என்னைப் பார்த்ததும் அவன் கண்கள் சட்டென்று ஒளிபெற்றன.
‘‘பிக்குவே, என் நிலையைக் கண்டீரா? உங்களை எழுந்து வரவேற்கக் கூட திராணியின்றி கிடக்கிறேன். சில நாட்கள் என் தேசத்திலேயே தங்கி இருங்கள். என் உடல்நிலை குணமானதும் நானே உங்களை ஆரிய தேசம்வரை அழைத்துச் செல்லும் சேவையைப் புரிகிறேன்’’ என்றான்.
‘‘மன்னா, உங்களுக்கு எவ்வளவோ அரசகாரியங்கள் உள்ளன. அவற்றைக் கவனியுங்கள் எம்மைப் போன்ற ஏழைப்பிக்குவை மனதில் கொண்டு நீங்கள் இப்படிச் சொல்வது உங்கள் பெரிய மனதைக் காட்டுகிறது. உங்கள் உடல்நிலை விரைவில் குணமடையவேண்டும் என்பதே எமது இப்போதைய பிரார்த்தனை’’ அருகில் இருந்த வைத்தியர் தனது மந்திர உச்சாடனத்தை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கமண்டலத்தில் கொஞ்சம் நீர் எடுத்து மன்னன் மீது தெளித்தார். அவர் தெளித்த ஒரு சொட்டுநீர் மன்னன் உடலில் பட்டதும் பெருகி அவன் உடல் முழுக்க ஓடுவதைக் கண்டேன்.


வைத்தியர் என்னை நோக்கிப் புன்னகை புரிந்தார்.
‘‘நான் ஆரிய தேசத்து பிராமணன். அரசருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு நேற்றுதான் வந்து சேர்ந்தேன். என் மூலிகை மற்றும் மந்திர உச்சாடனங்களால் அரசரைக் குணப்படுத்திவிட முடியும் என்றுதான் கருதுகிறேன்’’ என்றார்.
‘‘ஆம் பிக்குவே, இவர் மிகவும் புகழ்பெற்ற வைத்தியர். மந்திர சிகிச்சைகளில் இவரை வெல்ல இப்பகுதியிலேயே ஆள் கிடையாது’’ இடையில் புகுந்த மன்னன் புகழ்ந்தான்.
நான் அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.
வைத்தியர் திடீரென உடலைக் குலுக்கினார். அவரது கைகள் காற்றில் எழுந்து ஏதோ சைகைகளைச் செய்ய விளக்கு அணைந்து இருள் சூழ்ந்தது. மீண்டும் சில நொடிகளில் வெளிச்சம் வந்து சேர்ந்தது. அரசன் குப்புறப்படுக்கை வைக்கப்ப்பட்டு இருந்தான். அவன் மீது மீண்டும் பச்சிலைக் குழம்பு பூசப்பட்டிருந்தது. நான் வைத்தியரிடம் விடை பெற்றுக்கொண்டேன்.


இரண்டுநாட்களில் அந்த வைத்தியரின் சிகிச்சைக்குப் பலன் கிடைத்தது. அரசன் எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டான். நான் தங்கியிருந்த இடத்துக்கே கூட வந்து என்னைக் கண்டு சென்றான்.
ராணி இறந்துவிட்டமையால் அவளது சகோதரியை சில நாட்களில் அவன் மணந்துகொண்டான். அதுதான் அவனது தவறான செயலாக முடிந்தது. இறந்த ராணியின் மூத்தமகனின் தூண்டுதலால் புதிய ராணி விஷம் வைத்து அரசனைக் கொன்ற சேதி என் காதுகளுக்கு வந்தது. மூத்தமகன் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தன் சிற்றன்னையையும் மணந்துகொண்டான். பல இடங்களில் அரசகுடும்பங்களில் இதுபோன்ற சதிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்ததால் மக்களும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இறந்த அரசனின் ஈமச்சடங்குகள் ஒரு மாத காலம் நடைபெற்றன. என்னாலும் அதனால் நாட்டை விட்டுக்கிளம்ப முடியவில்லை.
அந்த தினங்களில் ஒரு நாள் வைத்தியரைச் சந்தித்தேன்.
என்னைக் கண்டதும் காற்றில் இருந்து அழகிய பூ ஒன்றை வரவழைத்துத் தந்தார்.
‘‘பிக்குவே, வாழ்வின் முடிச்சுகள் அவிழ்க்க முடியாதவை. அரசனை சாவின் பிடியில் இருந்து நான் காப்பாற்றினேன். ஆனால் விதி என் மருந்துகளை விடக் வலிமையானது’’ என்றார்.
நான் மௌனமாக இருந்தேன்.


‘‘சீனத்தேசத்து அறிஞரே, மனிதன் காமத்துக்கு அடிமையாகி உழல்கிறான். உமது ததாகதர் உபதேசித்தபடி காமத்தை வென்று பிக்குவாகி, இப்பிறவியுடன் உமது வாழ்வின் சுழற்சியை முடித்துக்கொள்ள நீர் முயற்சி செய்கிறீர்கள். இந்த அரசனைப் பாருங்கள். அவன் உடல் நலம் பெற்றதும், பெண்களின் மூச்சுக்காற்றே உன் மீது இன்னும் ஓராண்டுக்குப் படக்கூடாது என்று கூறினேன். மூடன். அரியாசனத்தில் ராணி அமரும் இடம் காலியாக இருக்கக் கூடாது என்று நொண்டிச் சாக்கு சொல்லி, காமத்தின் பாதையில் அவனே வலிய சென்று வீழ்ந்தான். அவளோ முதிய அரசனை விட இளவரசனே வேண்டும் என்று விஷம் வைத்துவிட்டாள். அதிகாரத்தின் மீதான ஆசை மிகவும் கொடூரமானது. அதைவிட காமத்தின் கரங்கள் மிகவும் வலிமையானவை. அவை இம்மை,மறுமை எதுபற்றியும் சிந்திப்பதில்லை. சுய திருப்தி என்னும் தீரா ஆற்று வெள்ளம் மனித வாழ்வை அடித்துச் செல்கிறது’’ அப்பிராமணர் தூய சமஸ்கிருதத்தில் சொன்னார்.
‘‘வாழ்வு குறித்த உமது அறிவு எம்மை பிரமிக்கச் செய்கிறது. உயிர் காக்கும் வைத்தியர் மட்டுமல்ல நீர். வாழ்வின் நிலையாமை பற்றியும் இவ்வளவு அறிந்துள்ளீரே..’’ என்றேன்.


‘‘சிந்து நதியைக் கடந்து உமது ததாகதர் பிறந்த பூமிக்கு வாரும். எல்லா இடங்களிலும் ஞானம் பூத்துக்கிடப்பதைக் காண்பீர். என் பேச்சு அப்போது உமக்கு பிரமிப்பூட்டுவதாய் இருக்காது. எம் தத்துவ மரபு அவ்வளவு ஆழமானது.’’ என்றார் அவர் புன்னகையுடன்.
பின்னர் தம் பல்லக்கில் அமர்ந்து என்னிடம் விடைபெற்றார். அவரது சீடர்கள் பல்லக்கைத் தூக்க அது ஒரு யானையைப் போல் மெல்ல நகர்ந்து சென்றது. அது கண்ணுக்கு மறையும் வரை அதையே பார்த்த வண்ணம் இருந்தேன். என் கையில் அவர் கொடுத்துச் சென்ற பூ இருந்தது. ஏ, ஆரிய வர்த்தத்து ஞானமே, விரைவிலேயே உன்னை வந்து சந்திக்கின்றேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். அப்பூ மேலும் பூத்து சிரித்தது.
மன்னனின் ஈமச்சடங்குகள் முடிந்தபிறகு புதிய அரசனிடம் விடை பெறச்சென்றபோதுதான் அவன் பக்தார் நகருக்குச் சென்றுபார்த்து விட்டு செல்லுமாறு என்னிடம் சொன்னான். அக்கணமே அவனைக் காணவந்திருந்த பக்தார் நகர பிக்குகள் குழாமுடன் இணைந்து குண்டூஸ் நகரை நீங்கினேன்.
இன்று பக்தாராவில் ததாகதரின் ஞானத்தின் துளிகளை இந்த அறிஞர்களுடன் சுவைக்கிறேன். வெல்க ததாகதரின் தர்மம்!


-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com