அநித்தியத்திற்கெதிரான சதிதான் கவிதை

கவிதையின் கால் தடங்கள் - 20

அநித்தியத்திற்கெதிரான சதிதான் கவிதை. எனவே கவிஞனைக் காலம் காலமாய் தீர்க்கதரிசி என்று வரலாறு கூறி வருவது மிகைப்படுத்தல் அல்ல.

# பிரம்மராஜன்

("வார்த்தையின் ரஸவாதம்" கட்டுரைகள், உயிர்மை வெளியீடு)  

எம். யுவன் கவிதைகள்

“கவிதை என்பது கருப்பொருள் மட்டுமே, உருவத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்ற இடத்துக்கு நவீன தமிழ்க்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது.”

# எம். யுவன்
 

எம். யுவன் கவிதைகளில் சில:

01

குறிப்பு

கிளியென்று சொன்னால்

பறவையைக் குறிக்கலாம்.

பச்சையைக் குறிக்கலாம்.

மூக்கைக் குறிக்கலாம்.

பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச்

சிறையைக் குறிக்கலாம்.

சமயத்தில் அது

கிளியையும் குறிக்கலாம்.

02

என் புது வீட்டில்

குடியேறின மூணாம் மாசம்

தானும் வந்து சேர்ந்தது

அந்தக் குருவி.

தலைவாரப் போகும் போது

கண்ணாடியில் அலகு பார்த்து

கொத்திக் கொண்டிருக்கும்.

பாத்ரூமில் இருப்பதறியாது

கதவைத் திறந்தால்

வீரிட்டலறி விரட்டும்.

பால் தயிர் மிளகாய்ப் பொடி

பாயசம் புளி சகலமும்

ருசி பார்க்கும் முதல் ஆளாய்.

தரையில் கொட்டிப்

பொறுக்கும் குழந்தையுடன்

பிரியமாய் பொரியைப்

பகிர்ந்துண்ணும்.

நேற்று முதல் நாங்கள்

ஒரே இலையில்

சாப்பிட்டு வருகிறோம்.

அந்தக் குருவியின் வீட்டில்தான்

இப்போது குடியிருக்கிறேன்.

03

உருமாற்றம்

கொக்கின் பெயர் கொக்கு

என்றறிந்த போது

வயது மூன்றோ நாலோ

கொக்கென்றால் வெண்மையென

பின்னால் கற்றேன்.

அழகு என பறத்தல் என

விடுதலையென போக்கின் கதியில்

தெரிந்து கொண்டது.

வேலையோ வெய்யிலோ

வார்த்தையோ வன்முறையோ

உறுத்தும்போது கொக்கு

மிருதுவென உணர்ந்தது.

அவரவர் வழியில் வளர்கிறோம்

கொக்கு அடுத்து என்ன

ஆகும் எனும் மர்மம்

உடன் தொடர.

04

ஆல்பர் காம்யுவின் இரண்டு வாசகர்கள்

மற்றபடி

எனக்கும் கரப்பாம் பூச்சிக்கும்

வசிக்கக் கிடைத்தது

இதே உலகம்தான்.

புத்தக அலமாரியைத்

திறந்தவுடன் இறங்கிப் போன

கரப்பாம் பூச்சிக்கும்

ஆல்பர் காம்யுதான்

அபிமான எழுத்தாளர்..

நான் அடிக்குறியிட்ட வரிகளில்

முட்டையிட்டு வைத்திருக்கிறது.

என்ன, அதைவிட

சிலவரிகள் அதிகம் படித்திருப்பேன்.

சிலதடவை அதிகம் புணர்ந்திருப்பேன்.

சிலதடவை கூடுதலாய் உண்டிருப்பேன்.

சிலதடவை.

05

தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே

தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தொலைந்ததின் ரூபம்

நிறம் மணம் எதுவும்

ஞாபகமில்லை.

மழையில் நனைந்த பறவையின்

ஈரச் சிறகாய் உடஹ்ரைத் துடிக்கும்

மனதுக்கு

தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.

எனக்கோ பயமாயிருக்கிறது

தேடியது கிடைத்தபின்னும்

கிடைத்தது அறியாமல்

தேடித் தொலைப்பேனோ என்று. 

06

பங்களிப்பு

இந்த வரியை
நான் எழுதும்போது
கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.
கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.
சில பேர் சத்தியத்துக்காக
சிலபேர் காரணமறியாமல்.
கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.
சிலபேர் சாவதற்காக
சிலபேர் கொல்லப்படுவதற்காக.
மீதிப்பேர் இடைவெளியை
நிரப்பவென்று ஏதேதேதோ
செய்து விட்டார்கள்
ஒருவருமே கவனிக்காது
கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு
என்னுடைய பங்களிப்பாய்
ஒரு பதினாறு வரிகள்.

07

விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்
அறையப்படாத சவப்பெட்டி
என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்.
ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி
மொழியின் புதைமணலில்
கழுத்திறுக மூழ்கும்
முட்டாள் ஜென்மம் என்றும்.
இரவின் வைரம் விடிந்
ததும் காக்காப்பொன்னாக
மறுகும் லோபியாய்
தூண்டிமுள்ளில் மாட்டி
கூடைக்குச் சேரும் மடமீனென்று.
நழுவிப்போகும்
கணத்தின் சிலிர்ப்பை
ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்
வீணைத்தந்தி என்று.
அல்லது
இரா.சு.குப்புசாமி,
23 செக்கடித்தெரு,
மேலகரம்,
காறையூர் (வழி)
என்று.

08

கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

09

விரைதல்

சற்று முன்

லாரிச் சக்கரத்தில்

அரைபட்டது ஒரு பன்றி.

திரியும் பன்றிகளும்

விரையும் வண்டிகளும்

மலிந்த ஊரில்

விபத்துகள் அதிசயமா?

தவிர

இல்லாது போனவற்றுக்

கெல்லாம் நின்று வருந்த

அவகாசமற்ற

அவசர வாழ்க்கை

எனது. என்ன,

சற்று முன்னுக்குச்

சற்று முன்

நிர்ணயம் பெறாத

புதிர்க் கணங்களொன்றில்

விரைந்து கொண்டிருந்தோம்

அது மரணத்தை நோக்கி

நான் போஸ்ட்டாபீசை

நோக்கி.

கவிதைத் தொகுப்புகள்:

1. "முதல் 74 கவிதைகள்" தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2005)

2. "தோற்றப்பிழை" தொகுப்பு, உயிர்மை வெளியீடு (2009)

கவிதையின் கால்தடங்கள் தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கள் தோறும் அந்திமழையில் வெளிவரும்

logo
Andhimazhai
www.andhimazhai.com