இன்று கழுத்தில் பூமாலை நாளை தூக்குக்கயிறு...

மதுரைக்காரய்ங்க- 32

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

தென்னாற்காடு மாவட்டத்தில் சோசலிஸ்ட் பிரசார சுற்றுப்பயணம்- ஜீவா, கே.பி. ஜானகி பங்கேற்கிறார்கள்" என அந்த துண்டு பிரசுரம் வெளியிட்டு அந்த பிரசாரப்பயணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜீவா கடிதம் எழுதவே, தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார் ஜானகி. ஆனால் அவரது கணவர் உற்சாகப்படுத்தி பிரச்சாரத்துக்குத் தயாராக்கினார்.  பிரசாரத்தின் போது ஜீவாவும் ஜானகியும் ஒரு காரில் பயணிக்க காவல்துறையினரும் அரசின் சுருக்கெழுத்தாளரும் மற்றொரு காரில் பின் தொடர்ந்தனர். அரசுக்கு எதிராக என்ன பேசினாலும் குறிப்பெழுதி உடனடியாக கைது செய்யவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்கள். பதினைந்து நாட்கள் இந்தப் பயணம் நீடித்தது. நானூறு கிராமங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசினர். இந்தப் பிரசாரப் பயணமே பின்னர் அவர் அரசியலில் உயர்ந்த இடத்தை வருவதற்கு வழிவகுத்தது.

பின்னர் ராஜபாளையத்தில் நடந்த காங்கிரஸ் அரசியல் மாநாட்டிலும், மதுரை, திண்டுக்கல்  ஆகிய இடங்களில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டிலும் ஜானகி பேசினார். மாநாடுகளில் ஜீவா எழுதிய பாடல்களை ஜானகி உணர்ச்சிவசப்பட்டு பாடும் போது மக்கள் தேம்பி தேம்பி அழும் குரல் கேட்கும்.

காங்கிரஸ் கட்சிக்குள் மகாத்மா காந்தி மற்றும் அவரது சீடர்களான புலாபாய் தேசாய், கே.எம். முன்ஷி போன்றோரின் தலைமையில் இருந்தோரின் கொள்கைகளை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். காதி மற்றும் கிராம கைத்தொழில்களை மையமாக வைத்து காந்தி உருவாக்கிய கிராமப்புற புனரமைப்புத் திட்டத்தை ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்த்தார். தீவிர மாறுதல் மூலமே இந்தியா முன்னேறும் என்றார் நேதாஜி.

 ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்திஜியின் ஆதரவாளரான பட்டாபி சீத்தாராமய்யாவை எதிர்த்து நேதாஜி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்த சோசலிஸ்டுகள் செயல்பட்டனர். நேதாஜி வெற்றி பெற்றார். வெற்றியைத் தொடர்ந்து நேதாஜி நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தார். நேதாஜியின் வெற்றி காந்திஜி உட்பட அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தைத் தந்தது. எனவே நேதாஜியின் வருகையை காந்தி ஆதரவு காங்கிரசார் புறக்கணித்தனர். (காங்கிரஸ்காரங்கன்னா சும்மாவா?)

நேதாஜி 1939-ல் மதுரை வந்தபோது பிரபல காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வரவேற்பளிக்கத் தயங்கினர். அவரது வருகையைப் புறக்கணித்தனர். ஆனால் குருசாமியைத் தலைவராகவும் ஜானகியை செயலாளராகவும் கொண்ட மதுரை நகர் காங்கிரசார் வரவேற்பளித்தனர். பசும்பொன் முத்துராமலிங்கதேவரும் ஜானகியும் உடன் வர மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கொடியை நேதாஜி ஏற்றினார். பின்னர் தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்திலும் அவர் பேசினார்.

நாளாவட்டத்தில் காங்கிரஸ் சோசலிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் மலர்ந்தன. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கம்யூனிஸ்ட் பக்கம் சென்றனர். தமிழகத்தில் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், பி. சீனிவாசராவ் உள்ளிட்ட சிலர் அடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்குழு சென்னையில் உருவாக்கப்பட்டது. பின்னர் இவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்திட தமிழகம் முழவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். நகர் தோறும் கிளைகள் அமைக்க முயற்சித்தனர். மதுரையில் 1940-ல் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கிளையில் ஏ. செல்லையா, வி. ராமநாதன், எஸ். குருசாமி, என். சங்கரய்யா, கே.பி. ஜானகி உள்ளிட்ட ஒரு சிலர் இடம் பெற்றனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் இவர்கள் புனைப்பெயருடன் செயல்பட்டனர். ஜானகியின் புனைப்பெயர் "பாட்டு". குருசாமிக்கு "தூத்துக்குடி" என்ற பெயர்கள் சூட்டப்பட்டன.

1939-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது இட்லர் தாக்குதலைத் தொடர்ந்தார். பிரிட்டனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.  இந்த நெருக்கடியான சூழலை சாதகமாக்கிக்கொண்டால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமாகும் என காங்கிரசாரில் பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால் "நமது எதிரி சிரமத்தில் இருக்கும் போது அவர்களுக்கு நாம் மேலும் சிரமத்தைக் கொடுப்பது தர்மம் அல்ல" என காந்தி கூறினார். ஆனால் "யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்யுங்கள்" என  கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது. இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது.

சோசலிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் குருசாமி (ஜானகி) வீட்டில் கூடியது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான எஸ்.வி. காட்டே, ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நேரம் அது. கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் வீட்டை சுற்றி முற்றுகையிட்டு காட்டேவை கைது செய்தனர். பதறிப்போனார் ஜானகி.

அப்போது ஜீவா தன்னிடம் பேசியதை ஜானகி பதிவு செய்திருக்கிறார்." அரசியல் என்பது பாட்டும் பேச்சும் அல்ல அம்மா. இன்று பிரசங்க மேடை. நாளை தூக்குமேடை. இன்று கழுத்தில் பூமாலை. நாளை கழுத்தில் தூக்குக்கயிறு. எதையும் தாங்கும் மனோபாவம் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டும். எனச் சொன்னார்.." " எது வந்தாலும் நான் கொள்கைக்காக நிற்பேன்" என உறுதி கூறினேன்" என்கிறார் ஜானகி.

ஜானகியின் யுத்த எதிர்ப்பு பிரசாரத்தைக் கண்ட ஆங்கிலேய அரசு அவரை பொன்மலை சென்று தங்கும்படி உத்தரவிட்டது. ஜானகி அங்கே சென்றும் தன் பிரசாரத்தைத் தொடர்ந்தார். அங்கு பாலர் சங்கம் அமைத்து சிறுவர் சிறுமிகளுக்கு நாட்டு விடுதலை குறித்து விளக்கினார்.

பொன்மலையில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கோவை ராமதாஸ் எழுதிய "நிமிர்ந்து சண்டை போடு தோழா" என்ற பாடலை ஆவேசமாகப் பாடினார்.  மக்கள் ஆர்ப்பரித்தனர். "இது ஏகாதிபத்திய யுத்தம் இதன் ராணுவத்தில் யாரும் சேரக்கூடாது. யுத்த நிதி ஏதும் தரக்கூடாது.." என ஜானகியும் குருசாமியும ஆவேசமாகப் பேசினர். இதையடுத்து இருவரும் கைதானார்கள்.  தென்னிந்தியாவிலேயே யுத்த எதிர்ப்பு பிரசாரத்துக்காகத் தண்டிக்கப்பட்ட முதல் பெண் அரசியல்வாதி கே.பி. ஜானகியே.

இருவருக்கும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குருசாமி கண்ணனூர் சிறையிலும் ஜானகி வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  இருவருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை திலகர் திடலில் என் சங்கரய்யா, சோமயாஜிலு பங்கேற்ற கூட்டம் நடந்தது.

பெண் கைதிகளோடு பேசமுடியாமல் பழகமுடியாமல் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜானகிக்கு கண்ணனூர் சிறையிலிருந்த கணவர் குருசாமியிடம் இருந்து வரும் கடிதங்களே ஆறுதலைத் தந்தன. "சங்கீதத்தை விட்டுவிடாதே. தினமும் சாதகம் செய்..." என குருசாமி எழுதியிருந்த கடிதம் ஜானகிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்தது. தினமும் காலையில நான்கரை மணிக்கு எழும் ஜானகி பாரதியர் பாடல்களை உத்வேகத்தோடு பாடுவார். "நிமிர்ந்து சண்டை போடு தோழா" என்ற பாடல் சிறை முழுவதும் எதிரொலித்து எழுச்சியை ஏற்படுத்தியது.

சிறையில் "சி" வகுப்பு தண்டனை கைதியாக இருந்தார் ஜானகி. காலையில் அரிசிக்கஞ்சி, மதியம் ஒரு கட்டி சோறு, முள்ளங்கி குழமபு. இரவிலும் இதே உணவு தான். இவையனைத்திலும் நெல்லும் கல்லும் கலந்திருக்கும். சாப்பிடமுடியாமல் சிரமத்துக்குள்ளானார். காலையில் பட்டினி கிடந்தார். மதியமும் இரவும் சிறிது மோர் கலந்த சோறு உண்டார். அவருக்கு ஆஸ்துமா நோய் தொற்றிக்கொண்டது.  அவருக்கு சிறையிலுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைத் தரப்பட்டது. வேலூர் பெண்கள் சிறையிலிருந்து "கடன்காரர்கள் சிறை" என்றழைக்கப்பட்ட கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் ஜானகி.  அங்கு கைதிகளை சித்ரவதை செய்து வந்த உதவி ஜெயிலரை எதிர்த்து போராட்டம் நடத்தினார். சிறையில பெற்ற ஆஸ்துமா இறுதிவரை அவரை விட்டு விலகவில்லை. 

சிறை தண்டனை முடிந்து நோய்வாய்ப்பட்டு ஜானகி கடலூர் சிறையிலிருந்தும் குருசாமி கண்ணனூர் சிறையிலிருந்தும் வெளி வநதனர். மீண்டும் இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும ஏராளமானோருக்கு உணவு அளித்து உபசரித்ததாலும் கட்சிச் செலவுக்கு பணத்தை வாரி இறைத்ததாலும் வீடுகளையும் சொத்துகளையும் விற்க வேண்டிய நிலைக்கு ஆளானார் ஜானகி. மதுரை மண்டையன் ஆசாரி சந்திலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அப்போதும் செலவிற்கு சிரமப்பட்டார். "குடும்பத்தைப் பராமரிப்பதற்காக பட்டுச்சேலைகள் கூட ஒவ்வொன்றாக சரிகை விலையளவுக்கு விற்கப்பட்டன" என ஜானகி குறித்து எழுதும் போது என். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

மதுரையையடுத்த திருப்பரங்குன்றம் அருகிலுள்ள மொட்டையரசு என்ற இடத்தில் 1940-ல் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முகாமை நடத்தியது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அந்த முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏ.கே. கோபாலன், சுப்பிரமணிய சர்மா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினர். தொண்டர்படை பயிற்சியும் மாநாட்டில் அளிக்கப்பட்டது. பல நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் கலந்து கொண்ட் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் பொறுப்பை ஜானகி ஏற்றுக்கொண்டார். தன் நகைகள் சிலவற்றை விற்று செலவழித்தார். கடைசியில் இது கம்யூனிஸ்ட் முகாம் என போலீசிற்கு தெரியவர ஏ.கே. கோபாலனைக் கைது செய்ய வந்தது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.

தொடர்ந்து யுத்த எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக மீண்டும் ஜானகி கைதானார். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த என்.எஸ். ருக்மணி, பழனி பங்கஜம், அம்மு சுவாமிநாதன் உள்ளிட்ட மலபார், கேரளா பகுதிகளைச் சேர்ந்த முப்பது பேர் கைது செய்யப்பட்டு அந்தச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த முறையும் தென்னிந்தியாவில் பாதுகாப்புச் சட்டப்படி முதல் முதலாகக் கைது செய்யப்பட்டது ஜானகி தான். ஒன்பது மாத கடுமையான சிறைத்தண்டனைக்குப் பிறகு வெளியேவந்தார்.

யுத்தத்தின் காரணமாக மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கவில்லை. மண்ணெண்ணை, விறகு போன்ற பொருட்கள் பதுக்கப்பட்டு வந்தன. இவற்றைக் கண்டுபிடித்து பொதுவிநியோகமுறையில் மக்களுக்குக் கிடைத்திட போராடினார் ஜானகி.

1943-ல் இந்தியாவை உலுக்கியது கொடூர வங்காளப் பஞ்சம். லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்தனர். நிவாரண நடவடிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கியது. நாடுமுழுவதும் உணவு, மருந்து பொருட்களை சேகரித்து வங்கத்துக்கு அனுப்பப்பட்டது. மதுரையும் இந்தப் பணியில் பங்கு கொண்டது. மதுரை காக்கா தோப்பு தெருவிலுள்ள கட்சி அலுவலகத்தில் துணிகளும் மருந்தும் குவிந்தன. கே.பி. ஜானகி மற்றும் தியாகி மணாளன் ஆகியோர் "வங்கம் பாரடி" என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினர்.  வங்க பஞ்சத்தை விவரிக்கும் கண்காட்சியும் மதுரையில் நடந்தது. இதில் ஜானகியின் பங்கு அளப்பரியது.

சென்னை பி அன்ட் சி மில்லுக்கு அடுத்தப்படியான மதுரை ஹார்வி மில்லில் போனஸ் பிரச்னையை முன்வைத்து 1944-ல் போராட்டம் நடந்தது. அந்த ஆலையில் ஆண்களுக்கு இணையாக எண்ணிக்கையில் பெண்களும் வேலை பார்த்தனர். அவர்களது பிரச்னையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜானகி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.  ஒரு மாதத்துக்குப்பின்னர் வெளியே வந்த அவர் பெண் தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்வூட்டி அவர்களை அரசியல் இயக்கத்தில் ஈடுபட வைக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டார். மதுரையில்  மணிநகரம், அரசரடி, பூந்தோட்டம் ஆகிய இடங்களில் இருந்த வாசகசாலையில்  பெண்களுக்கென கூட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையில் இன்றும் கட்சிக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஜானகி தான்.

1944-ம் ஆண்டு மதுரை வைகையாற்றில் மாபெரும் கைத்தறி மாநாடு நடந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் வேண்டும். குறைந்த விலையில் நூல் டிப்போ மூலம் விநியோகிக்க வேண்டும் நெசவாளர்களுக்கு வீட்டு வசதி செய்யப்படவேண்டும் போன்ற பல முக்கிய கோரிக்கைகளை இம்மாநாடு தான் முதல் முறையாக முன் வைத்தது. வி.ஆர். சித்தா, ஆர்.கே. சாந்துலால் உள்ளிட்டோருடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியவர் ஜானகி. கட்சியின் முடிவுபடி 1944-ல் மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத்தை உருவாக்கும் வேலையில் ஜானகி ஈடுபட்டார். கிராமம் கிராமமாகச் சென்று விவசாய பெண்களை சந்தித்தார். பேசினார். அவர்கள் ஜானகியை ஜானகியம்மா என வாஞ்சையுடன் அழைத்தனர். பின்னர் அவர் வாழும் காலம் வரை ஜானகியம்மா என்றே அழைக்கப்பட்டார். அதே நேரத்தில் நிலப்பிரபுக்களுக்கும் வசதிபடைத்தவர்களும் ஜானகியம்மா பெயரைக் கேட்டு நடுகினர்.

சுதந்திரம் பெற்று சில மாதங்களில் மதுரை நகராட்சிக்கான தேர்தல் நடந்தது. ஜானகியம்மா ஐந்தாவது வார்டில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக பிரபல தலைவர் சீனிவாச வரத அய்யங்காரும் தொடர்ந்து போட்டியிட்டு வரும் முனீஸ்வர அய்யரும் போட்டியிட்டனர். ஜானகியம்மா இந்தத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 26 நகர் மன்ற உறுப்பினர்களில் எட்டு பேர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி காங்கிரசுக்கு அச்சத்தைத் தந்தது.  கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டது. நாடு முழுவதும் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். மதுரையில் கே.டி.கே. தங்கமணி, ஜானகியம்மா, குருசாமி, ஏ.பி. பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கைதாயினர். ஜானகியம்மா மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் தோழர்கள் மதுரையில் மாரி, மணவாளன், தில்லைவனம் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சேலம் சிறையில் கம்யூனிஸ்ட் கைதிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மதுரையில் பாலு தூக்கிலிடப்பட்டார். சென்னை சிறையில் உண்ணாவிரதமிருந்த லட்சுமி மரணமடைந்தார்.

அனைத்து சிறைகளிலும் போலீஸ் தடியடி நடத்தியது.வேலூர் ஆண்கள் சிறையில் இருந்த ஜீவா, வி.பி. சிந்தன், கே. ரமணி, கே.டி.கே. தங்கமணி, கே.எஸ். பார்ததசாரதி. குருசாமி போன்றோர் தடியடிக்கு ஆளாகினர். இதைக் கண்டித்து பெண்கள் சிறைவாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக்கண்ட பெண்கள் சிறை நிர்வாகம் ஜானகியம்மாவை தனிச் சிறையில் அடைத்தது. அடிகளும் விழுந்தன. இப்படி கம்யூனிஸ்ட் மீது பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது,

(தொடரும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com