இரு கூரிய வாட்களின் மோதல்! - போதியின் நிழல் 12

இரு கூரிய வாட்களின் மோதல்! - போதியின் நிழல் 12

ரத்தத்தையும் சிதறிய உடல்களையும் கண்டதும் அந்த பிக்குதான் எந்த அளவுக்குப் பதறிப்போய்விட்டார்? இப்படி இறப்பதற்குத்தானா இவர்கள் நம்மை விட்டு அவசரமாகக் கிளம்பினார்கள் என்று புலம்பித்தீர்த்துவிட்டார். அவரை அந்த இடம் விட்டுக் கிளப்பவே மிகவும் சிரமப்பட்டோம்.சற்று தூரம் பயணம் செய்தபோது தூரத்தே ஒகினி நகரம் தெரிந்தது. காவ்சாங் நகரில் இருந்து யுவான் சுவாங்குடன் என்னை மன்னர் துணைக்கு அனுப்பியபோது எனக்குப் பயணம் குறித்து அச்சம் இருந்தது உண்மைதான். ஆனால் இவருடன் பயணம் செய்யச்செய்ய இது ஒரு சாகச அனுபவமாகவே இருக்கிறது. ஒகினியின் கோட்டைச் சுவர்களில் எழுந்திருந்த கொடிகள் எங்களை வா வா வென அழைத்தன. எங்கள் குழுவின் வருகையை முன் கூட்டியே தெரிந்துகொண்டிருந்த அந்நகர மன்னரே கோட்டை வாயிலில் தன் பரிவாரங்களுடன் நின்று கொண்டிருந்தார். இதைக் கண்டதும் எவ்வளவு பெரிய பிக்கு ஒருவருடன் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஏற்கெனவே எம் மன்னர் பெரிய அளவில் மரியாதையை இப்பிக்குக்கு அளித்திருந்தாலும் மாற்று தேச மன்னர்களும் அளிக்கும்போது பெருமை கூடுகிறது அல்லவா?

ஆனால் எம் தேசத்துக்கும் ஒகினி தேசத்துக்கும் நல்லுறவு இல்லை. எம் நாட்டைச் சேர்ந்தகொள்ளையர்கள் தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களாக ஒகினி மக்கள் இருந்தனர். இதனால் எங்கள் மீது அவர்களுக்கு கோபம் இருப்பது இயல்புதானே?

இதை பிக்குவிடம் ரகசியமாக தெரிவிக்கவும் செய்தேன். அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். முகம் எந்த மாறுதலையும் காண்பிக்கவில்லை. தெளிந்த நீர்போலவே இருந்தார். சிறு அலைகூட இல்லை.

அம்மன்னனின் அழைப்பை ஏற்று ஒரிரவு மட்டும் அங்கே தங்கிவிட்டு பின்னர் புறப்பட்டோம். மேற்கு நோக்கிச் சென்று அகன்ற ஓர் நதியை படகுகள் மூலம் கடந்தோம். அடுத்து நாங்கள் எதிர்கொண்ட நகரம் கியுச்சி என்பதாகும். அந்நகரத்தின் கிழக்கு வாயில் எங்கள் வருகைக்காக விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்குள்ள மன்னர் ஆயிரக்கணக்கான பிக்குகளுடன் காத்து நின்று கொண்டிருந்தார். அவர்கள் அழகிய பூக்களை யுவான் சுவாங்குக்கு அளித்து வரவேற்றனர். யுவான் அப்பூக்களை அங்கிருந்த ததாகதர் சிற்பத்தின் காலடியில் சொரிந்தார். எங்கு இசை முழங்கி அப்பகுதி முழுவதும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியதாகக் காணப்பட்டது. புத்தரின் சொல் செழித்த நகராக அது விளங்கிற்று.

வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும்போதே கூட்டத்தைப் பிளந்துகொண்டு ஒரு முதிய துறவி கம்பீரமாக நடந்துவந்தார். எல்லோரும் வணங்கி அவருக்கு வழிவிட்டனர். மன்னரும் பவ்யமாக பணிந்து அவரை வரவேற்றார். நமது பிக்குவுக்கு அருகில் அவரையும் அமரவைத்தனர். அவர் யுவானிடம் ஏதோ சொல்ல, யுவான் அமைதியாக மறுமொழி கூறினார்.

நான் என் அருகில் இருந்த இளம் பிக்கு ஒருவரிடம் அவர் யார் என்று கேட்டேன்.‘‘அப்பனே.. உனக்குத் தெரியாதா? அவர்தான் மோட்சகுப்தர். இப்பகுதியிலேயே பௌத்த சாஸ்திரங்களில் கரை கண்டவர். பல்லாண்டுகள் ததாகதர் பிறந்த பூமியில் தங்கி கற்றுணர்ந்தவர். அவரை ஈடு இணையில்லாதவர் என்ற பெயரில் இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள்.’’ என்றார் அவர்.

‘‘ நீ அழைத்து வந்திருக்கும் இளம் பிக்கு மிகவும் புத்திசாலியாக இருக்கலாம். மோட்சகுப்தரிடம் எதுவும் பலிக்காது.... எந்த விவாதத்திலும் அவர் பிய்த்து உதறிவிடுவார். உன் ஆளிடம் சொல்லிவை’’ என்று இன்னொரு இளம்பிக்கு சொல்ல உடனிருந்தவர்கள் சிரித்தனர்.

வரவேற்புக்குப் பிறகு எமது சொந்த ஊரிலி இருந்து இங்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிக்குகளின் அழைப்பை ஏற்று அவர்களின் விஹாரத்தில் யுவான் உள்ளிட்ட எல்லோரும் தங்கினோம். சதா அவரை சந்திக்க யராவது வந்துகொண்டே இருந்தனர். மறுநாள் மன்னரின் அழைப்பை ஏற்று அவர் அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு சம்பிரதாயமான வரவேற்பும் பரிசுகளும் அளிக்கப்பட்டன. அங்கு நிலவிய பௌத்த முறைப்படி காட்டு வாத்து, கன்று, மான் ஆகியவற்றின் இறைச்சி உணவை மன்னர் அளித்து உண்ணுமாறு வேண்டினார்.

நான் வயிறு புடைக்க உண்ணலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால் யுவான் மறுத்துவிட்டார். மன்னர் முகம் சுண்டிப் போய்விட்டது.
‘‘ மன்னா, நான் பிக்குவான பள்ளியின் முறைப்படி மாமிச உணவை நான் அறவே உண்ணாதவன். இந்த மூன்றும் பௌத்த தர்மத்தின்படி அனுமதிக்கப்படுகின்றன என்பதை அறிவேன். ஆனால் நான் கடைப்பிடிக்கும் மஹாயான தர்மம் அதை அனுமதிப்பதில்லை. மன்னியுங்கள்’’ என்றார் யுவான்.

மற்ற மரக்கறி வகைகளை மட்டுமே அவர் உண்டார். இப்படி ஒரு வாய்ப்பை யாராவது தவறவிடுவார்களா என்று எண்ணியவாறு நான் அந்த மாமிச வகைகளை ஒரு கை பார்த்தேன். இந்த பிக்குவுடன் பயணம் செய்ய ஆரம்பத்ததில் இருந்து இறைச்சிக்குத் தட்டுப்பாடுதான். வாழ்க இம்மன்னர்!

உணவுக்குப் பின் யுவான் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு மோட்சகுப்தர் தங்கி இருந்த விஹாரத்துக்குச் சென்றார். மோட்சகுப்தர் மெத்தப் படித்த அறிஞர் என்பதால் அங்கு அவருக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது என்று ஏற்கெனவே நான்கூறினேன் அல்லவா? சாஸ்திரவிவகாரங்களில் அவர் சொல்லே கடைசிச்சொல். ஆகவே இரண்டு அறிவு ஜீவிகள் சந்திக்கப்போகிறார்கள் என்பதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறிய ஆவலாக இருந்தேன். அறிவுஜீவிகள் சந்திப்பென்றால் இரண்டு கூரிய வாட்களின் சந்திப்பாக பொறி பறக்கும் என்று அன்றுதான் அறிந்தேன். வயதில் மூத்தவராக இருந்தாலும் மோட்சகுப்தர் யுவான் சுவாங்கை எளிதாக எடை போட்டு ஏமாந்து விட்டார் என்பது எனக்குப் புரிந்தது.

யுவான் சுவாங்கைக் கண்டதும் மோட்சகுப்தர் ஆசனத்தில் இருந்து எழுந்துவந்து வரவேற்றார். அவரது பயணத்தைப் பற்றிக் கேட்டவர், மிகச்சாதாரணமாகச் சொன்னார்:
‘‘நீர் ஏன் அவ்வளவு தூரம் பயணம் மேற்கொள்கிறீர்? இங்கேயே சம்யுக்தாபிதர்மா, கோஷம், விபாஷம் எல்லாம் உள்ளன. அவற்றை நீர் இங்கேயே படிக்கலாம். ஆபத்தான பயணத்தைக் கைவிட்டுவிடுங்கள். உமது உடல் தாங்காது’’

அவரது உதடுகளின் ஓரத்தில் எளிய குறுநகை தவழ்ந்தது.
அவர் பேச்சைக் கவனத்துடன் கேட்ட யுவான், ‘‘ அது சரி.. இங்கே யோக சாஸ்திரம் உள்ளதா இல்லையா?’’ என்றார்.
மோட்சகுப்தர் இக்கேள்வியை ரசிக்கவே இல்லை. அவரது சிவந்த முகம் மேலும் சிவந்துபோயிற்று.

‘‘ஏன் அந்த நூலைப் பற்றி இங்கே பேசுகிறீர்? அது புத்தரின் உண்மையான சீடர்கள் படிக்க அருகதை அற்றது’’ யுவானுக்கும் கோபம் வரும் என்பதை நான் அப்போதுதான் கண்டேன்.

‘‘ உம்மை மெத்தப் படித்தவர். விஷய ஞானம் உடையவர் என்று கருதி இருந்தேன். ஆனால் இப்போது அக்கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது. எங்கள் தேசத்திலும் கோஷமும் விபாஷமும் உண்டு. அவற்றைக் கற்றபோது அவற்றின் மொழியிலும் ஆழத்திலும் போதாமை இருப்பதைக் கண்டு நான் வருத்தம் கொண்டேன். எனவே தான் மஹாயானத்தின் யோகசாஸ்திரம் கற்பதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். அடுத்த புத்தராக இங்கு வர இருக்கும் உள்ள போதிசத்துவரான மைத்ரேயர் உபதேசித்த யோகசாஸ்திரத்தை பயனற்ற புத்தகம் என்று சொல்லும் உமக்கு அடிப்பாகமே அற்ற நரகக் குழி குறித்த அச்சமே இல்லையா?’’ சீறினார் யுவான்.

மோட்ச்குப்தர் இதை எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் யுவானை ஒரு மாணவனை குரு பார்ப்பதுபோல் இன்னும் அலட்சியமாகப் பார்த்தார். எதையும் அலட்சியம் செய்யும்போது மனிதன் தவறிழைக்கிறான்.


‘‘விபாஷம் மற்று பிற சூத்திரங்களை நீர் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. அப்படி அறிந்திருந்தால்தானே ஆழமான அம்சங்கள் அதில் இல்லை என்று கூறமுடியும்?’’

அடடா... மோட்சகுப்தர் தானாக வந்து மாட்டுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். வயதானால் மூளை மழுங்கிவிடும் என்பது இதுதானோ? யுவான் எழுந்தார்.

‘‘ நீவிர் கூறிய இந்த சூத்திரங்களை நீர் தற்சமயம் அறிந்திருக்கிறீரா?’’
மோட்சகுப்தர் கர்வத்துடன் சிரித்தார் .

‘‘ அனைத்தையும் தெள்ளத்தெளிவாக யாம் அறிவோம். எம்மைப் பற்றி நீர் அறியாமல் இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது’’
யுவான் கோஷத்தின் ஆரம்ப சூத்திரத்தைக் கூறினார்.

‘‘மோட்சகுப்தரே, இதற்கு அடுத்த பகுதியைக் கூறுவீராக’’ என்றார்.
பெரியவர் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. தடுமாறினார். பின் சமாளித்து சிலவரிகளைக் கூறினார். அதற்கு மேல் எதையும் கூற முடியவில்லை. அவருக்கு வியர்த்தது.

‘‘நீர் என்னை வேறு பகுதிகளிலிருந்து சோதித்து அறியலாம்.’’
வேறுபகுதிகளிலிருந்து யுவான் கேட்டவற்றுக்கும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை.

‘‘நீர் சொல்லும் வரிகள் அந்த சாஸ்திரத்தில் இல்லவே இல்லை’’ என்று சாதித்தார் மோட்சகுப்தர்.

மன்னரின் உறவினரான ஒரு பிக்கு அங்கு அமர்ந்திருந்தார். அவர் உடனே சுவடிகளைப் பரிசோதித்து யுவான் கூறும் பகுதிகள் சரியானவையே என்றார். அதை எடுத்து வாசித்தும் காட்டினார்.

பெரியவர் பதட்டமடைந்தார். அங்கிருந்த பட்டுத்துணியை எடுத்து முகத்தைத் துடைத்தார். ‘‘வயதேறியதால் ஞாபகமறதி ஏற்படுகிறது. நீங்கள் இளைஞர்கள் ஞாபக ஊற்று உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது’’
அந்த மோதலில் யுவான் சுவாங்தான் வென்றார். அந்நகரின் பிக்குகள் அவரை வியந்து பார்த்ததை நான் கண்டேன். மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள, பனி படர்ந்த மலைப்பாதைகள் உருகி வழிவிட்டால்தான் அந்நகர்விட்டுச் செல்ல முடியும். ஆனால் இன்னும் பனி உருகவில்லை. எனவே சுமார் அறுபது நாட்கள் அந்த நகரிலேயே நாங்கள் தங்கினோம். மோட்சகுப்தர் எங்கள் எதிரிலேயே வரவில்லை. வந்தாலும் தலையசைப்புடன் சென்றுவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com