இவர்கள்தான் எதிர்காலத்துக்கான அடிப்படை!!!

இவர்கள்தான் எதிர்காலத்துக்கான அடிப்படை!!!

ஆட்டத்தை முடிப்பவன் 6

சச்சின், கங்குலி, திராவிட், கும்ப்ளே என பெரிய ஆட்டக்காரர்கள் இருக்கையில் அந்த அணிக்கு கேப்டன் ஆக இருப்பது 26 வயது இளம் வீரனுக்குச் சிரமமே. ஆனால் இவர்களை எளிதாக தோனி கையாண்டது, மிகுந்த அரசியல் நிறைந்த இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிசயமே.

திராவிட் விலகியபிறகுதான் அந்த பதவி தோனிக்கு வந்தது. டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் இந்தியா சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது தோனியின் அணி. எடுத்த உடனேயே கடினமான அணியுடன் போட்டி. இந்த தொடரில் இந்தியா 2-4 என்ற கணக்கில் தோற்றுப்போனது.

திராவிட் இந்த தொடரில் சரியாக ஆடவில்லை. அவரை கடைசி ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாமல் விலக்கி வைத்தார்கள். தோனியைக் கேட்டதற்கு அவர் நிதானமாக,” அவருக்கு  ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று மட்டும் சொன்னார். இன்னொரு கேள்விக்கு,”டி20 கோப்பையில் எல்லோரும் இளைஞர்கள். 20 ஓவர் போட்டியின் அழுத்தத்தைச் சமாளித்து வேகமாகச் செயல்படுவது எளிதாக இருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டியில் எல்லோரையும் விரட்ட வேண்டி இருக்கிறது” என்று சொல்லியிருந்தார்.

இது முடிந்து அடுத்து ஆஸ்திரேலியா சென்றபோது ஒரு நாள் போட்டித்தொடரில் லட்சுமணும் கங்குலியும் நீக்கப்பட்டனர். திராவிட் கையில் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.  இருந்தது சச்சின் மட்டும்தான். இது இலங்கை ஆஸ்திரேலியா, இந்தியா மூன்று அணிகளும் ஆடிய முத்தரப்புப் போட்டி. இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் முன்னேறின. மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெல்லும் அணிக்கு கோப்பை. முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்றுவிட்டது! இந்த இரண்டிலும் சச்சின் 117, 91 ரன்களைக் குவித்து வெற்றிக்கு உதவியிருந்தார்!

“ இந்த கோப்பையை இழந்திருந்தாலும் இதே இளம் வீரர்கள் கொண்ட அணியையே தக்க வைத்திருக்கவேண்டும். இவர்கள்தான் எதிர்காலத்துக்கான அடிப்படை” என்று தோனி கோடிட்டுக் காண்பிக்கத்தவறவில்லை!

மூத்த வீரர்களைக் கழற்றிவிட்டால்தான் அணிக்கு ஒட்டுமொத்தமாக நல்லது என்பதை அவர் சூசகமாகவும் கொஞ்சம் வெளிப்படையாகவும் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அவர்களை ஒருபோதும் அவர் அவமதிக்கவில்லை! மூத்தவீரரான சச்சினிடம் எப்போதும் பணிவுடனும் மரியாதையுடனுமே நடந்துகொண்டார். சச்சினைத்தவிர வேறு யாரும் அவருடைய திட்டமிடுதலில் ஒரு பொருட்டாக இல்லை! அணித் தேர்வில் கண்டிப்பாக இருப்பது முக்கியமானதாக மட்டும் அல்ல. அதைத்தான் தோனி ஒரே வழியாக கருதினார்.

தோனி இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்குக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் டெஸ்ட் போட்டிகளுக்கு கும்ப்ளே கேப்டனாகவும் தோனி துணைக் கேப்டனாகவும் இருந்தனர். 2008-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஆட வந்தபோது டெல்லியில் நடந்த டெஸ்டின் முடிவில் கும்ப்ளே தன் ஓய்வு  முடிவை அறிவித்தார். இயற்கையாகவே தோனியின் வசம் டெஸ்ட் அணி கேப்டன் பதவியும் வந்து சேர்ந்தது. அதே தொடரில் தான் கங்குலியும் ஓய்வு பெற்றார்.

அந்த டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி நாக்பூரில் நடை பெற்றது. அதில் தோனி கங்குலிக்கு வித்தியாசமாக ஒரு மரியாதை செய்தார். கொஞ்ச நேரம் கங்குலியை அணியின் கேப்டனாக இருக்குமாறு செய்தார். கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக கங்குலி ரசிகர்கள் தங்கள் அபிமான வீரரை மீண்டும் கொஞ்சநேரம் கேப்டனாகக் கண்டு ரசித்தனர். அந்தப் போட்டியைக் காண கும்ப்ளேயும் வந்திருந்தார். இறுதியில் தொடரை வென்றதற்காக பார்டர் கவாஸ்கர் கோபபை வழங்கப்பட்டபோது அக்கோப்பையைப் பெற கும்ப்ளேயையும் தோனி அழைத்தது மிகச்சிறப்பான நிகழ்வாக, மூத்தவர்களுக்கு  மரியாதை செய்யும் நிகழ்வாக அமைந்தது.

”மூத்த அணி வீரர்கள் ஓய்வுபெற்று இளம் வீரர்கள் வந்து சேரும் தருணத்தில் தோனி காப்டனாக இருந்தார். அவர் மூத்தவீரர்களை நன்றாகவே நிர்வகித்தார்” என்று பாராட்டுகிறார் கும்ப்ளே.

லட்சுமண், கும்ப்ளே, கங்குலி, திராவிட், சச்சின், சேவாக், கம்பீர் என்று பல முக்கிய தூண்கள் விலக விலக இளம் வீரர்கள் உள்ளே வந்துகொண்டே இருந்தனர். இப்போதிருக்கும் அணியில் உள்ள வீரர்கள் அனைவருமே தோனியால் ஊக்கமளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்களே.

தோனி அணியில் வந்து சேர்ந்து விளையாடிய இரண்டாவது தொடர் பாகிஸ்தானுக்கு எதிராக. அதில் அவர் விசாகப்பட்டினத்தில் முதல் வீரர் ஆட்டமிழந்ததும் கங்குலியால் இறக்கப்பட்டு 148 ரன்களைக் குவித்தார். இதற்கு அடுத்த ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் அதாவது அவரது சொந்த மாநிலத்தில் நடந்தது. தோனியின் ஆட்டத்தைப் பார்க்க உள்ளூர் ரசிகர்கள் திரண்டு வந்துவிட்டனர். ஆனால் ஆட்டத்தில் தோல்வி. கங்குலி அப்போது ஒரு காரியம் செய்தார். பொதுவாக மூத்த வீரர்கள்தான் ஆட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள். கங்குலி தோனியை அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள அனுப்பினார்.

அன்றைக்கு தோனி ஒரு சில ஆட்டங்களே ஆடிய வீரராக இருந்தாலும் கூட அணியின் சரியான பிரதிநிதியாகப் பேசியது எல்லோருக்கும் பெரும் வியப்பு. தோற்றுவிட்டீர்களே.. ட்ரெஸ்ஸிங் ரூமில் மூட் எப்படி இருக்கிறது என்று ஒரு செய்தியாளர் கேட்டார். தோனி,” பாய்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டு ஆட்டங்கள் வென்றுள்ளோம். இன்றும் எல்லோரும் நன்றாகத்தான் விளையாடினார்கள்” என்றார். அவர் தன் சக ஆட்டக்காரர்கள் பாய்ஸ் என்று விளித்தது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது.

தோனியின் தன்னம்பிக்கை மிக ஆரம்பகட்டத்திலேயே வெளிப்பட ஆரம்பித்துவிட்டது!

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

மே   29 , 2019

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com