உணர்வுகளின் கொந்தளிப்பிலோர் சமகால ஆவணம்..

இதமாய் பெய்யும் மழை 2

கொனாரக்பாட்டியின் ஊன்றுகோல்

கவிதை : த . பழமலய்

' சனங்களின் கதை ' ' குரோட்டோன்களோடு கொஞ்ச நேரம் ' போன்ற சாதனை தொகுப்புகளை தந்து இலக்கிய உலகில் மிகவும் பரவலாக , உன்னிப்பாக பேசப்பட்ட கவிஞர் பழமலய் தந்திருக்கும் பத்தாவது கவிதை தொகுப்பு ' கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்.."
ஒரு படைப்பாளிக்கு கவிதைக்கான விதை எங்கிருந்து கிடைக்ககூடும் ?
எதிலிருந்து தான் எல்லாவற்றிலிருந்துதான் என்பதை பதிலாக்கி
தொகுத்திருக்கும் - 64 - கவிதைகளும் வேறு வேறு செய்திகள் குறித்து -
தனி மனித விசாரம் , சமூக அரசியல் விமர்சனம் என பேசுகின்றன.
ஒரு குறிப்பிட்ட களத்தை மையமாகக் கொண்டு அந்த கருப்பொருள் சார்ந்த , அந்த அனுபவம் சார்ந்த கவிதைப் பதிவுகளே இது காணும் பழமலய் பாணியாக அறியபட்டு வருகிறது , அவர் வகுத்த விதியை அவரே மீறியிருக்கும் தொகுப்பு இது. கவிஞரின் படைப்பு உத்தி பலரும் அறிந்தது தான் உரை நடைக்குள் கவிதை பொதிந்த வெளிப்பாடுதான் அது.
தொகுப்பின் முதல் கவிதையான 'எழுத வேண்டிய கவிதை : இவைக் குறிப்புகள் ' என்பதில் செய்திக் குறிப்பு துண்டுகளே கவிதையென முன் வைக்கபடுகின்றன ,அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ் மீது செய்தியாளர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவத் தொகுப்புகளை தந்து இறுதி வரிகளாக எழுதுகிறார்.

" அல் - ஜெய்தியின் ஷூவை அழித்துவிட்டார்களோ
இருக்கிறதோ - அதற்கு பிறகும் செருப்புகளே இல்லாமல் போய்விடுமா என்ன..! - என்ற கேள்விக்கு பின்னாளில் விடையாகிறது ' வரிபுலி ' சிதம்பரத்தின் மீது வீசப்பட்ட செருப்பு , அதே நேரம் ஈராக்கிய செய்தியாளர்களின் சுரணையோடு , இந்திய குறிப்பாக தமிழக செய்தியாளர்களின் சூடு , சுரணை குறித்து அமைதியாக கேள்வி
எழுப்புகிறது.கவிஞரின் மூப்பும் , வயோதிகமும் உருவாக்குகிற அனுபவப் பதிவுகளும் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.
காலம் அழைத்து கொண்ட தந்தை தொடங்கி , செடிகளோடு பிரியங்காட்டும் பெயரன் சித்தார்த் வரை உறவுகளுக்கான ஏக்கம், உறவுகள் மீதான பெருமிதம் பொங்கி வழிந்தாலும், அதனுள்ளே நிலவுடைமை சிந்தனையின் தாக்கம் மறைந்திருப்பதையும் மறைக்க இயலவில்லை.


" அப்பா இல்லாத குறைக்கு - இவர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது ! " (பக் : 35)

" பேரப்பிள்ளைகளை பிரிந்திருப்பவர்களுக்கு
ஒட்டும் உறவுமே உண்டாக்கி விடுகின்றன
இழுத்து பிடித்து மடியில்
இருத்திக் கொள்ளத் தோன்றுகிறது " ( பக் : 31)
பலவற்றையும் பகுத்தறிவால் கேள்வி கேட்பவர்தான், கேள்வியேயின்றி அம்மா
சொன்னவுடன் ஓடைக்கரை கருப்பையும் , காத்த ஆயியையும் " குவார்ட்டர் கூட இல்லாமல் கல்பூரம் ஏற்றி கும்பிட்டு வருகிறார்.
திராவிட இயக்கம் விதைத்த பெருஞ்சிக்கலிது ! பெருதெய்வ வழிபாட்டை
மறுப்பவர்கள் , சிறு தெய்வங்களை கொண்டாடுவதின் பொருள் எமது
பகுத்தறிவுக்கு புலனாக வில்லை..
மக்கள் மழிப்பகம் - முதுமையின் முக்கிய பிரச்சனை ஒன்றினை நையாண்டியோடு
பேசுகிறதெனில் ' புறமுதுகு ' கவிதையில் நக்கல் வழிகிறது.
" ஏறக்குறைய அரைமுதுகுக்கு
இறங்கி அறிகிறார்கள்
இங்கு, வெயில் மழை படுவதில்
இருக்கிறதா எதாவது நன்மை.?

எது எப்படியோ , நம் பெண்களுக்கு இதில் , இவ்வளவு இளகிய மனம் கூடாது."பெண்ணியம் பேசுகிற பெரும்பாலோர்க்கு மிகப் பொறுமையுடன் பதில் சொல்ல வேண்டியிருக்கும் படைப்பாளி.
" என்று தொலையும் " - கவிதை இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தை நாடக தன்மையோடு பதிவு செய்கிறது .
' ஒப்படைத்தல் ' - நூல்களைச் சேமிப்பவர்களின் வயிற்றில் புளி கரைப்பது !
எனக்கு பிறகு இந்த நூல்கள் யாருக்கு போகும் . என்ன வாகும் ? ஒவ்வொரு நூல் நேசருக்கும் உருவாகும் கவலை இங்கு கவிதையாகி இருக்கிறது.


' பருவ மழை - கவிதை மழையின் கோரத்தாண்டவத்தை பதிவு செய்து
" வட கிழக்கு பருவமழையில்
இடியும் சுவர்கள் தான் எத்தனை.!
மக்கள் - இளையர்கள் - முதியார்கள்
சிக்கி மடிகிறார்கள்
பார்க்கையில் , படிக்கையில்
நசுங்குகிறேன் நான்.."
(பக் : 65) என கவிஞரின் ஆற்றாமையை பதிவு செய்கிறது.
" அடுத்தவர் கவலையும்
என் கவலையாக இருக்கிறது "
" ஓ நீங்கள் கவிஞரா...? " (பக் ; 33)
என கவிஞனின் கவிமனம் பிடிபடும் தருணத்தில் இன்னொரு கவிதை வந்து வாசகனின் கன்னத்தில் அறைகிறது.
" கூரை ஒழுகலாம், சுவர்கள் இடியலாம் !
காய்வது நனையலாம், கால்நடை சாகலாம்,
மழை ! மழை. அது பெய்யட்டும்..!
ஆப்கன் , ஈழம் போன்ற சமகால வரலாற்றுத் துயரங்கள் பலவும் பதிவாகி
இருக்கின்றன இத்தொகுப்பின் உன்னதமான வரிகள் மிளர்கின்றன. அவ்வரிகள்
" கரிய மையால் எழுதுவது தான் சரி.
துயரத்தை இருட்டால் தான்
மொழிபெயர்க்க முடியும் " என்ற
கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல் - ஒரு காவியத் தன்மையோடு எழுதபட்ட சிறந்ததொரு படைப்பு.
2002 ல் தொடங்கி 2008 வரை எழுதியவற்றையெல்லாம் தொகுக்கும் ஆவலில் ' பழமலய் தடம் ' பாதைமாறியதை உணர முடிகிறது.
பின்னட்டைபடி , இந்நூல் கவிஞரின் பத்தாவது கவிதை தொகுதி , உரை நடை சேர்த்து பதினான்காம் நூல் .
பக் : 128ன் கணக்குபடி கவிதையாய் ஒன்பதாவது நூலாகவும் , மொத்தத்தில் 17 வது நூலாகவும் திகழ்கிறது , சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிற கவிஞரின் தயாரிப்பில் குறைவரலாகாது என்ற ஆதங்கத்தில் எழுதபட்டதிது.
சமகால நவீனக் கவிதைகள் புரிவதில்லை , புரியும் படி எழுதவில்லை என்ற
குற்றசாட்டுகளுக்கு பதிலாக ஓர் சமகால ஆவணமாக ,அணைவர்க்கும் திறக்கும்
கதவாக இருக்கிறது இந்த நூல், ஊன்றிப் படிக்கும் ஒவ்வொரு வாசகனுமிதை
உணரக்கூடும்.

- அன்பாதவன்

அன்பாதவனின் சொந்த ஊர் விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரை என்று பரந்துபட்டு இயங்கும் அன்பாதவனின் எழுத்துக்களை சிறுபத்திரிக்கைகளில் அடிக்கடி பார்க்க முடியும்.அன்பாதவன் மதியழகன் சுப்பையாவோடு இணைந்து 'அணி' என்கிற கவிதைக்கான சிற்றிதழை நடத்துகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com