என்னால் சென்றடைய முடியாத எழுத்தாளர்? அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 20

என்னால் சென்றடைய முடியாத எழுத்தாளர்? அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 20

கேள்வி: ஒரு எழுத்தாளரின் அல்லது ஒரு படைப்பின் வெற்றி என்பது எதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது? 

வெ.பூபதி, கோவை.

பதில்: இது போன்ற கேள்விகள் நம்மைச் சூழ்ந்துள்ள நச்சு சினிமா கலாச்சாரத்தின் காரணமாக நமக்குள் எழுகின்றன.  ஒரு எழுத்தின் வெற்றி அல்லது தோல்வி பற்றி அதை எழுதும் படைப்பாளி எப்போதுமே சிந்திப்பதில்லை.  

நோம்என் நெஞ்சே ! நோம்என் நெஞ்சே!

புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்

கட்குஇன் புதுமலர் முட்பயந் தாங்கு

இனிய செய்தநம் காதலர்

இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே ! 

இந்தக் குறுந்தொகைப் பாடலின் பொருள்: நெருஞ்சியின் புதுமலர் பார்வைக்கு இனிதாகத்தான் தோன்றும்.  ஆனால் அதன் முட்கள் துன்பம் விளைவிக்கக் கூடியவை.  அதுபோல நம் தலைவன் முன்பு நமக்கு இனிதாய் இருந்தான்.  இப்போது பரத்தையிடம் சென்று நமக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றான். 

அகநானூறில் வரும் ஆலங்குடி வங்கனார் எழுதிய ஒரு பாடல் இது: நெருப்பு எரிவதைப் போன்ற தாமரைப் பூக்கள் நிரம்பிய வயல்களிலே நெற்பொறிகள் தெறித்துக் கிடப்பது போல் விரவியிருக்கும் சிறிய மீன்களைத் தின்பதற்காக, பறப்பதை நிறுத்தி விட்ட முதிய கிச்சிலிப் பறவைகள் பையப் பைய அசைந்து வந்து நிற்கும். அத்தகைய மருத நிலத்தைக் கொண்ட ஊரனின் மனைவி என்னிடம் தன் கணவன் உறவு கொண்டிருப்பதாகச் சந்தேகப்பட்டு இருவரையும் பழிக்கிறாள்.  இதை நாம் சும்மா விடக் கூடாது.  வாருங்கள்… நம் வளைகளின் ஒலி முழங்க அந்தப் பக்கமாகச் சென்று வருவோம்.  அப்போது செழியனிடம் உணவு பெறும் பாணன் மத்தளத்தை அடிப்பதைப் போல் அவள் தன் வயிற்றில் அடித்துக் கொள்ளட்டும் என்று தன் பாங்கிகளைப் பார்த்துச் சொல்லுகிறாள் பரத்தை.  

இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த வார்த்தை முது சிரல்.  சிரல் என்பது கிச்சிலி எனப்படும் சிறிய வகை மீன் கொத்திப் பறவை.  ’தலைவி முதியவளாகி விட்டாள்.  அதனால் அவளால் தலைவனைத் தன்னிடமே பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை.  என் அழகைப் பார்த்துப் பொறாமை கொள்கிறாள்’ என்று பரத்தை சொல்லாமல் சொல்லும் உள்குத்து முதுசிரல் என்ற அந்த ஒரே வார்த்தையில் இருக்கிறது.  

ஆனால் நம்முடைய பிரச்சினை அது அல்ல.  பரத்தையிடம் சென்று வருவதும் அதைத் தலைவி ஏற்றுக் கொள்வதும் தான் சங்க கால மரபு.  தலைவியால் அதிகபட்சம் செய்ய முடிந்தது ஊடல் கொள்வதுதான்.  இப்படிப்பட்ட சமூகச் சூழலில் ஆண் கற்பு பற்றிப் பேசுகிறார் வள்ளுவர்.  அதேபோல் அதியமானும் நானும் கள் அருந்தினோம் என்று பாடுகிறார் அவ்வையார்.  வள்ளுவரோ கள்ளுண்ணாமை பற்றிப் பேசுகிறார்.  இதையெல்லாம் பார்க்கும் போது வள்ளுவரை ஒரு கலகக்காரர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.  ஆனால் வள்ளுவரிடமும் பெரும் பெண்ணடிமைத்தனம் காணக் கிடைக்கிறது.  தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.  கொழுந்தன் என்றால் இப்போது வேறு அர்த்தம்.  அதை எடுத்துக் கொண்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகி விடும்.  கொழுநன் என்றால் கணவன்.  இந்தக் குறளுக்கு அர்த்தம் தேவையில்லை.  இன்றைய காலகட்டத்துக்கு இந்தக் குறள் பொருந்துமா?  ஏன் ஒரு பெண் தன் கணவனைத் தொழுது எழ வேண்டும்?  கணவன் செத்தால் உடன் கட்டை ஏறும் மரபு உள்ள அந்தக் காலத்து நீதி இது.   ஆக, தன் காலத்து நியதிகளை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்த வள்ளுவரே பெண்ணடிமைத்தனம் தான் பேசுகிறார்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்.  ஆண்மகன் பரத்தையோடு வாழ்வதைச் சொல்லும் பாடலும் காலத்தை வென்று நிற்கிறது.  அதைத் தவறு என்று கண்டிக்கும் பாடலும் காலத்தை வென்று நிற்கிறது.  ஆனால் இடையில் வந்த எத்தனையோ பாடல்கள் காணாமல் போய் விட்டன.   எனவே, ஒரு படைப்பின் வெற்றிக்கு அதன் பாடுபொருள் காரணமாக இருப்பதில்லை.  காலம்தான் அதைத் தீர்மானிக்கிறது.  ஆனால் காலத்தை உத்தேசித்தும் கூட ஒரு எழுத்தாளன் தன் படைப்பை உருவாக்குவதில்லை.  

பிறகு ஒரு எழுத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதுதான் எது?   படைப்பாளியின் தரிசனம்தான் அதைத் தீர்மானிக்கிறது.  அந்த தரிசனத்தை அடைவது எப்படி?

சொல்ல மாட்டேன், அது ரகசியம்.   

கேள்வி: உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பகடி செய்து எழுதும்பதிவுகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா?  படித்திருப்பின் ஒரு எழுத்தாளராக/சகமனிதராக உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?

கிருஷ்ண சந்தர், மதுரை.

பதில்: நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரைத்தான் நம்மால் பகடி செய்ய முடியும் என்பது என் கருத்து.  எனவே என்னைப் பகடி செய்யும் எதையும் என்னால் ரசிக்க முடிகிறது.  சமீபத்தில் ஜன்னல் இதழில் ஜெயமோகன் என்னைப் பகடி செய்து எழுதியிருந்ததை ரசித்தேன்.  ஆனால் பலரும் என் மீது தீவிரமான வெறுப்பும் துவேஷமும் கொண்டு என்னைத் திட்டுவதாக எண்ணித் தம்மையே ரத்தம் வழிய வழிய பிறாண்டிக் கொள்கிறார்கள்.   அவர்கள் மீது நான் பரிதாபம் கொள்கிறேன்.  இப்படிப்பட்ட வெறுப்பின் நிழல் படிந்த எழுத்துக்களை நான் ஒருபோதும் படிப்பதில்லை.  அப்புறம் எப்படித் தெரியும் என்கிறீர்களா?  எனக்கு அதை மின்னஞ்சல் செய்வார்கள்.  ஓரிரண்டு வாக்கியங்களைப் படித்து விட்டு ரத்து செய்து விடுவேன்.  ஆனால் அவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும்.  

இன்னொரு முக்கிய விஷயம்.  ஒருவரைத் திட்டுவது மிகவும் எளிது.  பகடி செய்வதுதான் மிகவும் கடினம்.  ஏனென்றால், யார் ஒருவருக்குத் தன்னையே பகடி செய்து கொள்ள முடிகிறதோ அவரால்தான் மற்றவர்களையும் பகடி செய்ய முடியும்.  

கேள்வி: சுய முன்னேற்ற நூல்களைப் பற்றிய தங்கள் கருத்து என்ன சாரு? 

கேசவன் , மதுரை.

பதில்:  அம்மாதிரி புத்தகங்களை ரயில் நிலையங்களிலும் நடைபாதைக் கடைகளிலும் பார்த்திருக்கிறேன்.  அவற்றைப் படிப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.  மற்றபடி, ஒரு எழுத்தாளனாக வாழ வேண்டும் என்று முடிவு செய்த பிறகு முன்னேற்றத்தைப் பற்றி யோசிப்பது கூட முட்டாள்தனம்.    

கேள்வி: அன்புள்ள குருவிற்கு, நீங்கள் தான் அடிக்கடி சக தமிழ் எழுத்தாளர்களான எஸ்.ரா., ஜெயமோகன் என உதாரணம் கூறுகிறீர்கள். ஆனால் மருந்துக்குக் கூட உங்களை அவர்கள் குறிப்பிடுவது இல்லை. போகட்டும்.  என்னைப்  பொறுத்தவரை,  நீங்கள் தான் எனக்குப் பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளையும்,  கோபி கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களையும் அறிமுகபடுத்திய ஆசிரியர்; மற்றும் என் வாழ்வியல் முறைகள் மேம்பட ஏறுபடியாய் இருந்தவர்.  2009-இலிருந்து உங்கள் வலைத்தளம் மற்றும் உங்கள் புத்தகங்கள் முலம் இலக்கியம், சமகால எழுத்து, லத்தின் அமெரிக்க எழுத்து, ஐரோப்பிய எழுத்து,இந்திய/சர்வதேச இசை என்று நான் கற்றுக் கொண்டது நிறைய.   

ஒரு முறை உங்கள் எழுத்து வசியத்தில் மயங்கி 'அ' என்ற பெயரில் ஒரு வெகுளியான கருத்தை அனுப்பிணேன்.  அதறகு நீங்கள் என்னிடம் உங்கள் பெயர் என்னவென்று அறிந்து கொண்டுஅனுமதி கேட்டு கட்டுரையாக வெளியிட்டீர்கள்,  உங்கள் எழுத்தின் ரஸவாதத்தை, விஸ்வரூபத்தை அப்போது தான் உணர்ந்தேன்.  இப்படி எனக்கு நீங்கள் வாழ்க்கையையும் எழுத்தையும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்.

உங்களிடம் ஒரு கேள்வி. உங்களைத் தவிர்ப்பவர்களையும் நீங்கள் ஏன் உதாரணம் காட்டுகிறீர்கள்?

Mayan

பதில்: உங்கள் பாராட்டுக்கு நன்றி.  உங்கள் பெயர் மயனா, மாயனா என்று தெரியவில்லை.  நமது கடிதப் போக்குவரத்தையும் அது சம்பந்தமாக நீங்கள் குறிப்பிடும் கட்டுரையையும் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com 

இப்போது உங்கள் கேள்விக்கு பதில்: எஸ்.ரா., ஜெயமோகன் இருவரும் என் நண்பர்கள்.  அவர்கள் ஏன் என் பெயரைக் குறிப்பிடுவதில்லை என்று எனக்குத் தெரியாது.  அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.  ஆனால் இருவரும் என் மீது மிகுந்த மதிப்பு உள்ளவர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.   ஸீரோ டிகிரி Jan Michalschi என்ற சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு long list-இல் இருந்த போது எஸ்.ரா. எனக்கு ஃபோன் செய்து, “ஸீரோ டிகிரிக்குத்தான் பரிசு கிடைக்கும் என்பது உறுதி” என்று சொன்னார்.  உண்மையான மதிப்பும் மரியாதையும் இருந்தால்தான் இப்படிச் சொல்ல முடியும்.  வெறும் போலி மரியாதை அல்ல இது.  மற்றபடி ஜெயமோகனும் நானும் இரண்டு துருவங்கள்.  இரண்டுமே இலக்கியத்துக்குத் தேவை.  

உண்மையில் நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால், ஒரு டெலஃபோன் டைரக்டரியைப் போல் அத்தனை எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிடும் பல்வேறு அன்பர்கள் வேண்டுமென்றே என் பெயரைத் தவிர்ப்பதுதான்.  ஆனால் அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே.  ஏற்கனவே சொன்ன உதாரணம்தான்.  ஒரு அலுவலக மேஜையில் ஜெயமோகனின் மகாபாரதமும் என்னுடைய காமரூப கதைகளும் இருந்தால் எதை எல்லோரும் எடுப்பார்கள்?  எதை எடுத்தால் மரியாதை?  

என்னுடையது transgressive எழுத்து.  அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கும்.  ஆனால் என் எழுத்தை நபக்கோவ் மற்றும் கேத்தி ஆக்கரோடு ஆங்கில விமர்சகர்கள் ஒப்பிடுகிறார்கள்.  அதைத்தான் எனக்குக் கிடைக்கும் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.  தமிழ்நாட்டில் புத்திஜீவிகளிடமிருந்தும் சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடமிருந்தும் கிடைக்காத அங்கீகாரத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.  அப்படிக் கிடைத்தால் அதற்காக நான் செய்து கொள்ள வேண்டிய சமரசங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது.   

கடைசியாக ஒரு முக்கிய விஷயம்.  மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களைப் பற்றிய என் மதிப்பீட்டுக்கு அளவுகோலாக இருக்கவே கூடாது.  இருந்தால் நான் மிகவும் பலகீனமான ஆள் என்று அர்த்தம்.  என் இடம் எனக்கு மிக நன்றாகத் தெரியும்.  

கேள்வி: இயற்கை மீதும், சக ஜீவிகள், ஜீவராசிகள் மீதும் மனிதர்கள் அன்பு கொள்ள என்ன செய்ய வேண்டும்?

இராஜலட்சுமி.ஸ்ரீ, ஈரோடு  

பதில்: ஐரோப்பியர்கள் 1945 வரை ஒருவரை ஒருவர் வெறுத்து போர் செய்து லட்சக் கணக்கில் தங்களை அழித்துக் கொண்டவர்கள்.  ஆனால் இப்போது மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை பாராட்டுகிறார்கள்.  ஐரோப்பிய யூனியனைப் பார்த்தால் தெரியும்.  ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போக வீசா, பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை.  இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் போகும் போது இருக்கும் கெடுபிடி கூட அங்கே இல்லை.  ஒரே கரன்ஸி வேறு.  அவர்களுக்குள் எப்படி அந்த மாற்றம் நிகழ்ந்தது?  அங்கே யாரும் மரங்களை வெட்டுவதில்லை.  ஜீவராசிகளைத் துன்புறுத்துவதில்லை.  பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதில்லை.  திடீரென்று அவர்களுக்குள் என்ன மாயாஜாலம் நிகழ்ந்தது?  அவர்கள் அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்.  நம்மிடம் அந்த வரலாற்று உணர்வு இல்லை.  நேற்று என்பது நம்முடைய அகராதியிலேயே இல்லை.  எதிர்காலம் என்பதும் இல்லை.  இன்றே, இந்தக் கணமே எல்லாம்.  இவ்வளவுக்கும் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய தேசம் இது.  

நம் இந்தியர்களிடையே ஒரு அடிப்படையான மாற்றம் நிகழ உடனடியாகச் செய்ய வேண்டியது என்னவெனில், பள்ளிக்கூடங்களிலிருந்தே பல்லுயிர் ஓம்புதல் என்ற கோட்பாட்டை வளர்க்க வேண்டும்.  பேராசை பெருநஷ்டம் என்பதை உணரச் செய்ய வேண்டும்.  அதற்கு சமூகத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஊழலை மட்டுப்படுத்த வேண்டும்.  பணத்தின் மீதான பேராசையே இங்குள்ளவர்களின் ஆன்மாவை அழித்தொழிக்கிறது.  

இது எல்லாவற்றையும் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்தெடுக்க வேண்டும்.  ஆனால் இங்குள்ள பெண்கள் குழந்தையை வயிற்றில் தாங்கும் போதே வன்முறை, பொறாமை, கோபம், வன்மம், துவேஷம், பேராசை, அடுத்தவனைக் கெடுத்தல் என்ற எல்லா துஷ்டத்தனங்களையும் போதிக்கும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போது எப்படி நல்ல குழந்தைகள் பிறக்கும்?  

கேள்வி: தங்களின் கனவுப் படைப்பு என்ன?ராஜேஸ் ஆரோக்கியசாமி.

பதில்: மிலோராத் பாவிச் தான் என்னால் சென்றடைய முடியாத எழுத்தாளர் என்று நினைக்கிறேன். செர்பியாவைச் சேர்ந்தவர்.  அவர் எழுதிய Dictionary of Khazars மற்றும் Last Love in Constantinople: A Tarot Novel of Divination என்ற நாவல்களைப் போல் எழுத முடியுமா என்பதே என் முன்னால் நிற்கும் மகத்தான சவால்.  இரண்டாவது நாவல் டாரட் கார்ட் விளையாடும் முறையில் எழுதப்பட்டது.   

(பரிசுக்குரிய கேள்வி வெ.பூபதி, கோவை)

(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com