என். டி. ராஜ்குமார் கவிதைகள்

கவிதையின் கால் தடங்கள் - 30

“ராஜ்குமாரின் கவிதைகள் சித்தரிக்கும் உலகம் தனித்துவத்தின் கூறுகளைக் கொண்டிருக்கும் அதே அளவுக்கு எதிர்நிலையால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. அது விவரிக்கும் / கொண்டாடும் பண்பாடு எதிர் வழிபாட்டு (negative  cult ) மரபால் ஆனது. மாந்த்ரீகம் அதன் அடிப்படை அம்சமாகும்.”

# ரவிக்குமார் 

என். டி. ராஜ்குமார் கவிதைகளில் சில:

01

அவள் எனக்குப் பசி தீர்த்தவள்

நீ காமம் தீர்த்தவள் 

எருமைபோல வளர்ந்த நான்

அவளுக்குக் குழந்தை

எனக்கு என்னைப் போலல்லாத

ஒரு பிள்ளை வேண்டும்

பற்றியெரிகிற தீயை

புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே

ஓங்கிய கையை நிறுத்திவிடு

மூச்சுத் திணறுகிறது

சூசகமாய் ஒருவார்த்தை சொல்

சோற்றில் விஷம் வைத்து

என் அம்மாவைக் கொன்று விடுகிறேன்.   

02

 மகன் ஒரு விளையாட்டுக்கார் வாங்கக் கேட்கிறான்

அது கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கிறது

நானொரு நுங்கு வண்டி செய்துகொடுக்கிறேன்

அவனொரு கொட்டு வாங்கக் கேட்கிறான்

அது குளிசாதனம் பொருந்திய

கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கிறது

பாம்புத் தோலில் நானொரு தாளம் செய்துகொடுக்கிறேன்

அவனொரு நாய் பொம்மை வாங்கக் கேட்கிறான்

இருக்கலாம் புதருக்குள்ளிருந்து 

ஒரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்து கொடுக்கிறேன்

அது அவன் பின்னால் வாலாட்டிக் களிக்கிறது மேலும்

அது மோப்பம் பிடிக்கக் கற்றுக்கொடுக்கிறது. 

03

நான் சாத்தானின் குழந்தை 

நாயும்

பேயும்

பிசாசும்தான் எனது தெய்வம்

எனது தலைவன் கருப்பழகன்

சதிகார ராமனை

நேரில்நின்று குத்தி மலத்திய

காட்டாளன்.

04

இன்று அல்லது இப்போது அல்லது இந்த நொடியில்

ஏதேனும் ஒன்றிங்கு நிகழப்போகிறது

சமூகத் துரோகியென்றோ

அனாதைப் பிணமென்றோ தூக்கியெறிய

அவர்கள் எங்களை

மிகக் கடினமாகவோ அல்லது ஒரு

சுண்டெலியைப் போலவோ நசுக்கக்கூடும்

அல்லது நாங்களொரு 

பயங்கரமான கொலையாளியாக மாறவேண்டும்

ஏனெனில்

எதற்கும் துணிந்துவிட்ட நாங்களிந்த நாட்டில் 

நிம்மதியாக வாழ வேண்டியிருக்கிறது

05

வேட்டையாடித் தின்றுகொண்டிருந்த 

வேலனுக்குத் தெரியும்

தேவயானையைக் காண்பித்து 

ஆரூடத்தைத் தட்டிப்பறித்த கதை.

இப்போது குறத்தி சொல்வது குறி

சுப்ரமண்யர்கள் சொல்வது

ஜோஸ்யம்.

06

பிதுர்தோஷம் மாற

அப்பா படத்தில் மாலையிட்டு

பாயாசம், பப்படம் சோறு எடுத்து

காக்கைக்கு கொண்டு வைக்க

உள் பயத்தோடு

பிகுசெய்து போகும் காக்கை

பின்

கா...கா...சொல்லி

காகம் வந்து சோறு தின்று போனபின்பு

பிள்ளைகள்வந்து உண்ணும்

மறுநாள் வரும் காக்கை 

ஒரு பிடி சோற்றுக்காய் 

கா...கா...வென கரையும்

அப்பாவைப்போல்.  

07

பிரம்மத்திற்குள் மறைந்திருந்தோ

ஒரு சாராருக்கு மாத்திரம் தெரிந்த மொழிக்குள்

ஒளிந்திருந்தோ கதைகள் பேசாமல்,

கோழைவாயோடு

வெற்றிலைக் குதப்பிக்கொண்டே

பரட்டைத்தலையோடு திரியும்

தங்கசாமியின் உடலில் புகுந்து

திங்கு திங்கென்று ஆடிக்கொண்டே

எல்லாருக்கும் தெரிந்த மொழியில்

குறிகள் சொல்லி, பன்னிக்கறி தின்று

சாராயம், சுருட்டு குடித்துக் கொண்டே

சேரிகளில், பொறம்போக்குகளில்

சாக்கடையோரங்களிலாயிருக்கும் எங்கள்

சனங்களின் சாமி.

08

இளநீர் கொடுத்ததால்

முதுகில் தடவிக்கொடுத்த ராமனின்

கோடுகளோடு சுதந்திரமாய் திரியும் அணில்

மூத்திரம் பெய்து கொடுத்து வாங்கிய சாபத்தோடு

மனிதர்களிடம் கல்லெரிபட்டோடும்

ஓணானென்றும் கேட்ட கதைகள்

பாட்டிக்கு யாரோ சொல்லி

யாரோவுக்கு யாரோ சொல்லி

துருத்தப்பட்டவைகளே

அணில் அழகானது

ஓணான் அழகற்றது.  

கவிதைத் தொகுப்புகள்:

1. “கல் விளக்குகள்” தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், காலச்சுவடு வெளியீடு (2004)

logo
Andhimazhai
www.andhimazhai.com