என் பெயர் யுவான் சுவாங் - போதியின் நிழல் 2

என் பெயர் யுவான் சுவாங் - போதியின் நிழல் 2

குவாங் தன் நரைத்திருந்த தாடியை மெதுவாக நீவிவிட்டு சற்று நேரம் உச்சி நோக்கிப் பார்த்த்துக்கொண்டிருந்தான்.பின் மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து குவளையில் தண்ணீர் முகந்து குடித்தான்.குடிசையில் கொடியில் தொங்கியை அங்கியை எடுத்து அணிந்துகொண்டான்.மறக்காமல் குறுவாளை எடுத்து இடுப்பில் செருகினான். அவனது முகம் சுருக்கங்கள் நிறைந்ததாக இருந்தது.

இடுங்கிய கண்களில் அசாதாரணமான உறுதி இருந்தது. அவனது பழுப்பான தோல் பல இடங்களில் கறுத்தும் வெளுத்தும் போயிருந்தது. அவன் ஒரு இடத்தில் தங்கி வாழ்பவனாகத் தோன்றவில்லை.சதா எங்கும் நிலையாக இல்லாமல் அலைந்து கொண்டே இருக்கும் நாடோடி சீனன் அவன். அவனைக் காண்போர் அவன் உடைகளையும் தேய்ந்து மெலிந்து போயிருக்கும் உருவத்தையும் கண்டே அவனது குணத்தை ஊகித்து விடுவர்.

கடந்த வாரம்தான் குவாங், இந்த நகருக்கு வந்தான். சீனத்தின் மேற்கு எல்லையில் உள்ள சிறுநகரம். இதைத்தாண்டி மேற்கே சென்றால் விரிந்த பாலை.அதையும் தாண்டினால், புதிய நகரங்கள், நாடுகள், மலைகள், ஆறுகள்... புதிய கலாசாரங்கள்...ஜம்புதீவிபம் எனப்படுகிற ஆரிய வர்த்தம்.
குவாங்.. சுமார் முப்பது தடவைகள் சீன எல்லையை மேற்காகக்
கடந்திருக்கிறான். பறவைகளும், விலங்குகளும் வசிக்காத, தண்ணீரே இல்லாத,கொடுமையான பாலையைத் தாண்டி இகு தேசம் என்கிற நாட்டுக்கும் போய் திரும்பியிருக்கிறான். அதையும் தாண்டிச் செல்லவேண்டும் என்று கனவு அவனுக்கு உண்டு. பலமுறை கனவுகள் கண்டு விழித்திருக்கிறான். இனந்தெரியாத தேசத்தில், மொழி தெரியாத பூமியில் தனியாக திரிவதுபோன்ற கனவுகள்.

சீனத்தில் ஆட்சி மாறியிருந்தது. இடையில் நிலவிய குழப்பம் முடிவடைந்து சுயி வம்ச ஆட்சி நிறைவுற்று, தாங் வம்சம் ஆட்சிக்கு வந்திருந்தது. நிலையான ஆட்சிக்கு பேரரசர் தாங் சுங் தயாராகி இருந்தார். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு இந்த வம்சம் ஆட்சி செய்யும் என்றுதான் குவாங் நினைத்தான். சீனத்தின் வடபகுதியில் இருந்த சாங் நகரம் தலைநகராக இருந்தது.

குவாங் பலமுறை போய்வந்த இடம்தான்.

‘‘எங்கு புறப்பட்டுவிட்டாய்?’’ குடிசைக்கு சொந்தக்காரி வழியை மறித்தாள். கடந்தவாரம்தான் அவளுக்கு சில பட்டுத்துணிகளைக் கொடுத்துவிட்டு இக்குடிசையில் தங்கியிருக்க அனுமதி பெற்றிருந்தான். பட்டுத்துணிக்கு மசியாத ஆள் அப்போது சீனத்தில் யாரும் இல்லை.

‘‘புரவியை மேய்வதற்காக பக்கத்து ஆற்றங்கரையில் விட்டிருந்தேன். பிடித்துவரப்போகிறேன்’’

‘‘பார்த்துப்போ.. உனக்கோ வயதாகிவிட்டது. குதிரை உதைத்து படாத இடத்தில் பட்டுவிடப்போகிறது’’

குவாங் திரும்பிப்பார்க்காமல் நடந்தான். இப்பிரதேசப்பெண்களும் ஆண்களும் நல்ல உயரமானவர்கள். அவர்களுக்கு வாயும் மிகவும் நீளம். கடைவீதி குறுக்கிட்டது. புழுதி அடர்ந்த சாலையின் இருபுறமும் பல்வேறு பண்டங்கள் வந்து குவிந்திருந்தன. மாவு, சூடான கஞ்சி, கிழங்குகள், துணிகள், போர்க்கருவிகள், காய்கள், என்று எல்லாவற்றையும்


பார்த்துக்கொண்டே வந்தான். மூங்கில் கூடையில் சூடாக அரிசி மாவினால் ஆன அப்பத்தை விற்ற கிழவி ஈக்களை விரட்டியவாறு இருந்தாள். அவளிடம் நீண்ட வாளும் வேலும் வைத்திருந்த இரண்டு வீரர்கள் வம்பு பேசிக்கொண்டவாறே நின்றிருந்தனர்.

‘‘இவளைப் பார். எழுபது வயதுக்கும் மேல் ஆகிவிட்டது. கண் எப்படி நன்றாகத் தெரிகிறது?’‘

ஒருவன் மூங்கில் கூடையில் கைவிட்டு ஒரு பண்டத்தை எடுத்து தின்றான். கிழவி தவிர்த்தாள்.

தொப்பியைச் செய்தவாறே இன்னொருவன் கேட்டான்.

‘‘ஏய் கிழவி... இவ்வழியாக ஒரு உயரமான அழகான புத்த பிக்கு ஒருவர் போனாரா? பார்த்தாயா?’’

‘‘எனக்கு கிட்ட இருப்பவர்களையே சரியாகத் தெரியவில்லை. உன்னைப் பார்த்தால் மனிதனாகவே எனக்குத் தெரியவில்லை. எருமை மாடு போலத்தான் தெரிகிறாய்..இப்படி இருக்க என்னைக் கேட்கலாமா?’’

‘‘ இரு கிழவி... அவரைப் பிடித்து சிறையில் அடைக்கும் போது..அவருக்கு நீதான் உணவு கொடுத்தாய் என்று உன்னையும் பிடித்துக்கொண்டு போயிவிடுகிறோம்’’ சிரித்துக்கொண்டே இருவரும் போய்விட்டார்கள். இந்த உரையாடலைக் கவனித்தவாறே அருகில் இருந்த கிழங்குக் கடையை நோட்டம் விட்ட குவாங் மெல்ல ஊருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரையை நோக்கி நடக்கலானான்.

அவனுக்கு தன்னை அவர்கள் கேட்காதது நிம்மதியாக இருந்தது.

அந்த உரையாடல் குவாங்குக்கு பலனுள்ளதாகவே இருந்தது. காலையில் நடந்த சந்திப்பை குவாங் அசைபோட்டான்.

இந்த பிரதேசத்துக்கே புதிய உருவ அமைப்பைக் கொண்டிருந்த அயல்தேச மனிதன் ஒருவன் காலையில் குவாங் இருந்த குடிசைக்கு தேடி வந்திருந்தான்.
‘‘நல்ல குதிரை ஒன்று வேண்டும். விசாரித்தேன். உன்னிடம் இருப்பதாகச் சொன்னார்கள். நீண்ட தூரம் நிற்காமல் போகக்கூடிய பயணம் ஒன்றுக்குத் தேவை’’ என்றான் அவன்.

‘‘என் குதிரை இகு தேசத்துக்கு 15 முறை போய் வந்த குதிரை. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதில் ஏறிப்போகும் துணிச்சலும் உறுதியும் யாருக்கு இருக்கிறது?’

‘‘அப்பனே அதைப் பற்றி நீ கவலை கொள்ளவேண்டாம். உறுதியே வடிவாய் வந்த மனிதர் ஒருவரை நேற்றிரவு ததாகரின் ஆலயத்தில் கண்டேன். அவர்தான் பயணம் மேற்கொள்ளப் போகிறார்’

‘‘பிக்குவா?’’

‘‘ஆம்’’

குவாங் சிரித்தான்.

‘‘போய் ஏதவாது மாட்டு வண்டி இருந்தால் அவருக்குப் பிடித்துக்கொடு. என் குதிரையெல்லாம் அவருக்கு ஆகாது.’’

அந்த கரிய மனிதன் இடுப்பில் கைவைத்தான். குவாங் சற்று கவலையோடு பார்த்தபோது, அவன் கையில் ஏதோ மின்னியது. பொன்!

‘‘இந்தா பிடி. நீ 20 குதிரை விற்றாலும் இவ்வளவு கிடைக்காது. இன்று மாலையே குதிரை வேண்டும். பயணத்துக்குப் பழக்கப்பட்ட குதிரை உன்னிடம் இருப்பதுபோல் இந்த பிரதேசத்துலேயே இல்லை என்பதை அறிந்துதான் வந்திருக்கிறேன். நீயும் குதிரையை விற்க ஆள் தேடிக்கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.’‘
கடைசி வரி குவாங்கின் கண்களை விரிய வைத்தது.

‘‘ மாலையில் ஆற்றுக்கு அருகே இருக்கும் புதர் அருகே வந்துவிடு. ஆளைப் பார்க்காமல் நான் குதிரையைத் தரமாட்டேன்.’’

கரியவன் தலையசைத்து அவசரமாகத் திரும்பிப்போய்விட்டான்.

வீரர்கள் தேடும் பிக்குதான் நம் புரவிக்கு ஆள் அனுப்பியவராக
இருக்கவேண்டும். அரசுப் படையினர் தேடும் ஆள் என்றால் நாம் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும், இந்த காலத்தில் துறவிகள் கூட குற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்களா? இந்த பிக்கு தலைநகரில் இருந்து வந்தவர் என்பதால் பெரியதாக ஏதும் தப்பு பண்ணிவிட்டாரா? ஏன் இவர்கள் எல்லாம் பௌதத ஆலயங்களில் தத்துவ விசாரம் செய்வதை விட்டுவிட்டு இப்படி பேரரசின் கண்காணிப்புக்கு ஆளாகிறார்கள். பிக்குகளை ஆதரிப்பவர் பேரரசர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பிக்கு பலே கைகாரர் போலிருக்கிறது.

என்ன இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் என்ற


முடிவுக்கு குவாங் வந்து சேர்ந்தான். முன்னே பின்னே தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிற இயல்பான உணர்ச்சி இத்தனை ஆண்டு பயணஅனுபவத்தில் குவாங்குக்கு இயல்பாகவே வந்திருந்தது. அத்துடன் அந்த கரிய மனிதனைக் கண்டதுமே குவாங் தனக்குள் எச்சரிக்கை மணி அடிப்பதை உணர்ந்திருந்தான். இந்த மனிதனைப் போய் தன்னிடம் அனுப்பி வைத்திருக்கிறாரே அந்த பிக்கு என்று ஓர் கணம் அவன் பரிதாபப்டவும் செய்தான். ஆனால் பிக்குவும் படைகள் தேடும் ஒரு மனிதர்தான் என்றதும் குவாங் இனம் இனத்தோடுதான் சேர்ந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

கடைத்தெருவை விட்டு விலகியதும் குவாங், நேராக ஆற்றை நோக்கி நடந்தான்.கொஞ்சமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சில நீர்ப்பறவைகள் அங்கங்கே நிற்க,ஒரு எருமை மாடு தண்ணீரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. குவாங்கின் குதிரை தண்ணீரைக் கடந்துபோய் அக்கரையில் சுவாரசியாமாக புல் தின்றுகொண்டிருந்தது. செம்மையான வண்ணத்தில் இளைத்த ஆனால் உறுதியான பிராணி. எஜமானுக்காக என்னவேண்டுமானாலும் செய்யக்கூடியது. புத்திசாலிப்புரவி. சாதாரணமான காலமாக இருந்தால் அதை விற்கமாட்டான்தான். இப்போது வயதாகி விட்டது, காலில் சக்கரம் கட்டி அலைந்ததுபோக எங்காவது ஓய்வெடுக்க விரும்பினான். இதை விட்டால் வேறு வழி இல்லை. வாங்குபவர் இதைநன்கு பராமரிப்பவராக இருந்துவிட்டால் மகிழ்ச்சிதான்.
குவாங் இரு விரல்களை வாயில் வைத்து மெல்லிய ஒலி எழுப்பினான். புரவி காதுமடல்களை நிமிர்த்தியது. இவன் திசை நோக்கித் திரும்பி தண்ணீரில் இறங்கி ஓர் அம்பு போல இவனிடம் வந்து நின்றது. அதன் முகத்தை தன் முகத்தோடு வைத்து அணைத்துக்கொண்ட குவாங், அதன் கழுத்தைத் தடவி முத்தமிட்டான்.

முன்னங்கால்களை மாற்றி மாற்றிவைத்து புரவியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

தொலைவில் புதர்கள் அசைந்தன. கரிய மனிதன் வெளிப்பட்டு அவனை நோக்கி வந்தான். அவன் பின்னால் ஒரு குதிரையும் வந்தது.

‘‘சொன்னபடி குதிரையுடன் நிற்கிறாயே.. நன்று’’ என்ற அந்த மனிதன் அருகில் வந்து குவாங்கின் பிராணியைப் பார்வையிட்டான். ஏனோ அவன்மீதான வெறுப்புணர்ச்சி குவாங்குக்கு அதிகரித்தது. நம்பத் தகுந்த ஆள் இல்லை இவன் என்ற எண்ணம் தோன்றியது.

‘‘ நன்று.... நீண்ட பிரயாணத்துக்குத் தகுந்த விலங்குதான்’’ என்றான் கரியவன்.

‘‘ஆனால் நான் இதைத் தருவதாக இல்லை.’’

‘‘ஏன்?’’

‘‘ இதில் பயணம் செய்ய இருப்பவரை அரசரின் வீரர்கள் தேடுகிறார்கள் அல்லவா?’’

கரிய மனிதன் முகம் மேலும் கறுத்தது.

‘‘ நண்பா, உலகின் மகத்தான காரியங்கள் எதிர்ப்பின் மூலமாகவே நடக்கின்றன.அமைதியே உருவான பிக்கு ஒருவர் பேரரரசின் தடையை மீறி மேற்கு நோக்கிப் பயணம் செய்ய உத்தேசித்திருக்கிறார். ததாகரின் புண்ணிய பூமியில் பயணம் செய்து அவரது தத்துவ நூல்களைக் கற்பதும் படியெடுப்பதும் அவர் நோக்கம்.இது ஒரு புனிதப்பயணம். இந்த சீன தேசமே அவரால் பயன்பெறும். இதற்கு நீ உதவ மாட்டாயா?’’

‘‘ஓ.. இவ்வளவுதானா? நான் இந்த பிக்கு ஏதோ அரசரின் வைர மோதிரத்தைத் திருடிவிட்டு ஓடிவந்ததாக அல்லவா நான் நினைத்தேன்?’’

‘‘ நீ ஏன் நினைக்கமாட்டாய். நாடு இருக்கும் நிலை அப்படி.’’

‘‘ சரி எங்கே அந்த பிக்கு? கூட்டி வா. அவரை. ஆளைப் பார்க்காமல் நான்
புரவியைத் தரமாட்டேன் என்று சொன்னேன் அல்லவா?’’

கரிய மனிதன் ஒரு நிமிடம் யோசித்தான்.

பின் புதரைப் பார்த்து ஏதோ சைகை செய்தான். இலைகள் அசைந்தன. சில வினாடிகள் கழிந்தன. குவாங் இனிய காற்று வீசுவதை உணர்ந்தான். அவன் கண்கள் புதரையே நோக்கின. ஒரு பெரிய கிளை ஒன்று ஆடியது. மெதுவாக வெண்ணிற ஆடை வெளிப்பட்டது. உயரமாக, அந்தி வெயிலின் பொன்னிறத்தில் மேலும் பொன்னிறமாக ஜொலித்த ஒரு மனிதர் வெளியே வந்தார். நீண்ட கைகள் மெல்ல அசைய, அவர் அருகில் வந்தார். அவரது முகத்தில் தெரிந்த அமைதி குவாங்கை உலுக்கியது.

தன்னையும் அறியாமல் மண்டியிட்டுப் பணிவதை உணர்ந்தான்.
மிகவும் இளம் துறவி அவர் என்பதையும் மிக மேன்மையான குலத்தைச் சேர்ந்த கற்றறிந்த அறிஞரான பிக்கு ஒருவரின் முன்னே நிற்கிறோம் என்பதையும் குவாங் நொடியில் புரிந்து கொண்டுவிட்டான். அவர் மீது இருந்த அவநம்பிக்கைகள் அனைத்தும் விலகி பணிவு அவனைச் சூழந்துகொண்டது.

‘‘ நண்பரே, நான் லோயாங்கில் பிறந்தவன். ததாகரின் அருட்பணியைச் செய்யும் துறவி. என் பெயர் யுவான் சுவாங்’’

குவாங் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இது நடக்கும் என்று
முன்பே தான் அறிந்திருப்பதான உணர்வு அவனுக்கு வந்திருந்தது.

‘‘ மாமனிதரே, இப்புரவி அறிவில் சிறந்தது. தம்மை எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும் சுமந்து செல்லும். ஆனால் தாம் செல்லும் வழியின் அபாயங்களை அறிவீரா?’’

‘‘அபாயம் இன்றி எதுவும் இல்லை’’

கரிய மனிதன் குறுக்கிட்டான்.

‘‘ இம்மனிதன் பலமுறை எல்லையைக் கடந்து சென்று திரும்பியவன். இவன் புரவியும் அனுபவம் மிக்கது. குவாங், மேற்கு நோக்கிய பாதை பற்றிச் சொல்’’

‘‘ மிகவும் கடினமான ஆளரவற்ற பாதை. கெட்ட ஆவிகள் அலையும் பாலை அது.சுட்டெரிக்கும் காற்று வீசும். பெருங்குழுவாகச் செல்லும் பயணிகளே திசை
மாறிச் சென்று இறந்து போயிருக்கிறார்கள். தனியாகச் செல்லும் தாங்கள் எப்படி கடப்பீர்கள்? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! அருள் சொட்டும் தங்கள் முகம் அப்பயணத்தின் கடுமையைத் தாங்காது’’

‘‘ இந்த ஏழைப் பிக்கு மேற்கு நோக்கிப் பயணித்து பிராமணர்களின் தேசத்தில் தர்மத்தின் தடங்களை தரிசிப்பதென்று முடிவு செய்துள்ளேன். என் முடிவு உறுதியானது. வழியில் இறந்தாலும் இறப்பேனே தவிர, கிழக்கு நோக்கி திரும்பேன்’’ மிக உறுதியாகச் சொன்னார் யுவான் சுவாங்.

‘‘குவாங், நானும் இப்புனிதர் உடன் செல்லவிருக்கிறேன். இப்போது நேரமில்லை. இன்றிரவே கிளம்பவேண்டியிருக்கிறது’‘ என்றான் கரிய மனிதன். தலையசைத்துக் கேட்டுக்கொண்ட குவாங், புரவியை இரும்பினாலான செவ்வண்ணம் பூசப்பட்ட சேணத்தைப் பூட்டி பிக்குவிடம் அளித்தான்.

‘‘மேற்குச் சாலைகளை இவ்விலங்கு நன்கு அறியும். பதினைந்து முறை சென்றிருக்கிறது.’’ என்ற குவாங்,, கடைசியாக ஒருமுறை புரவியை முத்தமிட்டான். பிக்குவை நோக்கிப் பணிந்த அவன் திரும்பிப் பார்க்காமல் ஆற்றிலிருந்து திரும்பி நடந்தான். சற்று தூரம் வந்த பிறகு திரும்பிப் பார்த்தான். பிக்குவும் குதிரையும் காணாமல் போயிருந்தனர். அடடா... அந்த கரியவனைப் பற்றி பிக்குவிடம் நாம் எச்சரிக்காமல் விட்டுவிட்டோமே என்று
நினைத்துக்கொண்ட அவன், தன் குடிசையை நோக்கி நடையைக் கட்டினான்.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
போதியின் நிழல்1 - பிரம்மதத்தன்

logo
Andhimazhai
www.andhimazhai.com