ஓர் அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன்! - அறம் பொருள் இன்பம்!- சாருபதில்கள்-11

ஓர் அரிய வாய்ப்பை இழந்துவிட்டேன்! - அறம் பொருள் இன்பம்!- சாருபதில்கள்-11

கேள்வி: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் ஏன் அழைக்கப்படுவதில்லை?  

கே.சி. கட்டிமுத்து, சிவகாசி.      

பதில்: அழைக்கப்படுவதில்லை என்பது தவறு.  நான் தான் மறுதலித்து விடுகிறேன்.  ஏனென்றால், அதில் ஒரு முழுநாள் வீணாகி விடுகிறது.  பணமும் கொடுப்பதில்லை.  ஒரு முழுநாளை ஏன் வீணடிக்க வேண்டும்?  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைவது உண்மைதான்.  ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் அவனுடைய எழுத்தால் மட்டுமே அறியப்பட வேண்டும். ’உன் எழுத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இல்லை; தொலைக்காட்சியில் நீ ஓசியில் பேசினால் நாங்களும் ஓசியில் கேட்டுக் கொள்கிறோம்’ என்று சொல்லும் சூழலிலிருந்து நான் ஒதுங்கிக் கொள்ள நினைக்கிறேன்.  காசு கொடுத்தோ, நூலகத்திலோ என் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் வாசகர்கள் மட்டுமே எனக்குப் போதும். 

உதாரணமாக, நீங்கள் ரஜினியையோ கமலையோ ரசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அவர்களுடைய துறை நடிப்பு.  அதை விட்டு விட்டு அவர்கள் கிரிக்கெட் ஆடினால் ரசிப்பீர்களா?  ஏதோ தமாஷுக்கு ஒரு நாள் பார்க்கலாம்.  அதையே தொழிலாகக் கொண்டு வாரம் ஒருமுறை ஆடினால் பார்க்க முடியுமா?  அதேதான் என் கதையும்.  சரி, ஒருநாளை செலவழித்து கேமராவுக்கு முன்னால் அமரலாம் என்றால் ஒரு பைசா தர மாட்டேன் என்கிறார்களே, அப்புறம் அந்த வேதனை எதற்கு?  நான் ஒரு சினிமா நடிகனாக இருந்து 20 கோடி, 30 கோடி என்று சம்பளம் வாங்கினால் தொலைக்காட்சியில் போய் ஓசியில் முகத்தைக் காண்பித்து ஏதோ பேசி வைக்கலாம்.  நானோ எழுத்தாளன்.  எழுத்தாளனுக்கு இங்கே போதுமான ஊதியம் கிடையாது.  பல பத்திரிகைகளில் காசே கொடுப்பதில்லை.  புத்தகமும் ஆயிரமோ ரெண்டாயிரமோ தான் போகிறது.  ராயல்டி பணத்தில் டூத் பேஸ்ட் வாங்கலாம்.

எழுத்தாளனை இந்த ஊடகங்கள் எப்படி மதிக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு தொலைக்காட்சியிலிருந்து எனக்கு அழைப்பு.  காலையில் ஏழரை மணிக்கு நேரடி ஒளிபரப்பு.  அன்றைய தினசரிகளைப் படித்து அதை அரை மணி நேரம் அலசி விமர்சிக்க வேண்டும்.  இதற்கு நான் காலை நான்கு மணிக்கு எழுந்து தயாராக வேண்டும்.  வண்டி ஐந்தரைக்கு வரும். தொலை தூரத்தில் இருக்கும் தொலைக்காட்சி நிலையத்துக்கு ஆறரைக்கு வந்து செய்தித்தாள்களைப் படித்து ஏழரைக்கு நிகழ்ச்சி.  வீட்டுக்கு வந்து சேர ஒன்பதரை பத்து ஆகும்.  இடையில் பசி வந்து உயிர் போய் விடும்.  இப்படி இரண்டு வாரம் வர முடியுமா என்று கேட்டார்கள்.  ஆஹா, நம்முடைய பணப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது என்று எண்ணி அகமகிழ்ந்து எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டேன்.  என் கேள்வியே அவர்களுக்குப் புரியவில்லை.  அப்புறம்தான் விளக்கிக் கேட்ட பிறகு அப்படியெல்லாம் தருவதில்லை என்று சொன்னார்கள்.  இப்படி அழைத்தால் ஓடிப் போய் நிகழ்ச்சி செய்வதற்குப் பலரும் தயாராக இருப்பதாகப் பின்னர் கேள்விப்பட்டேன்.  எனக்கு அப்படிப்பட்ட புகழ் தேவையில்லை.    

இந்தக் காரணத்தினால்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மறுதலித்து வருகிறேன்.  இருந்தாலும் அவ்வளவாகப் பிரபலமாகாத சேனல்களில் கலந்து கொள்ளத்தான் செய்கிறேன்.  அங்கேயும் காசு கிடையாதுதான்.  ஆனாலும் கலந்து கொள்கிறேன்.  சமீபத்தில் அப்படி ஒரு சேனலின் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.  மதியம் ஒரு மணிக்கு படப்பிடிப்பு.  12 மணிக்கு வீட்டுக்குக் கார் வரும் என்றார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.  அவந்திகாவிடம் மதிய உணவு வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  ஒரு மணி வரை சத்தமே இல்லை.  நானே ஃபோன் செய்தேன்.  இதோ அனுப்புகிறோம் என்றனர்.  ஒன்றரைக்கு வந்தது.  இரண்டுக்கு அங்கே இருந்தேன்.  அவர் பெயர் வினோத்.  (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) போய்ச் சேர்ந்ததும் டீ சாப்பிடுகிறீர்களா சார் என்றார்.  எனக்கோ கொலைப்பசி.  அந்தப் பசியில் டீ சாப்பிட்டால் வாந்தி வந்து விடும்.  வேண்டாம் என்று சொல்லி விட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனிடம் பசிக் கொடுமை பற்றிச் சொன்னேன்.  அட, இவ்வளவுதானா  என்று சொன்னவர், வினோதை அழைத்து கொஞ்சம் அதிகார தொனியில் சாருவுக்கு லஞ்ச் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.  போய்ப் பார்த்தால் ஒரு ஹாலில் மீன், மட்டன், கோழி, சாம்பார், ரசம், கீரை, பொரியல் என்று ஏக தடபுடலாக விருந்து நடந்து கொண்டிருந்தது.  அன்றைக்கு மனுஷ்ய புத்திரன் மட்டும் ஆபத்பாந்தவனாக வந்து என்னைக் காப்பாற்றியிருக்காவிட்டால் படப்பிடிப்புத் தளத்திலேயே சுருண்டு விழுந்திருப்பேன்.   படப்பிடிப்பு முடிவடைய இரவு ஒன்பது ஆகியிருந்தது. 

விஷயம் அதோடு நிற்கவில்லை.  அடுத்த வாரம் வினோதிடமிருந்து ஃபோன்.  சார், அழகிய பெரியவனின் நம்பர் தர முடியுமா?  கொடுத்தேன்.  இரண்டு நாள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து.  சார், ஜெயமோகன் நம்பர் உங்களிடம் இருக்கா?  கொடுத்தேன்.  அடுத்த வாரமும் ஃபோன்.  சார், கிராமப்புறக் கலைஞர்களின் நலிவடைந்த வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சி.  உங்களுக்கு அப்படி யாரையாவது தெரியுமா? 

நான் அப்போது சாண்டோக்ய உபநிஷதத்தை சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலுமாகப் படித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன்.  ஆதி சங்கரரின் பாஷ்யம் வேறு.   நான்கு தினங்களாக அந்தப் படிப்பு ஓடிக் கொண்டிருந்தது.  ஃபோனை எடுத்து அப்புறம் பண்ணுகிறேன் என்று சொல்லி வைத்து விட்டேன்.  இரண்டு மணி நேரம் கழித்து அவரே அழைத்தார்.  நான் எடுக்கவில்லை.  அதோடு விடாமல் மறுநாளும் அழைத்தார்.  எடுத்தேன்.  மீண்டும் சொன்னார், நலிவடைந்த கிராமீயக் கலைஞர்களின் நம்பர்…

என் உடம்பில் உள்ள குருதி அவ்வளவும் மண்டைக்குப் போய் மண்டை வெடித்து விடும் போல் ஆகி விட்டது.  கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.  வந்த கோபத்தில் செத்தே போயிருப்பேன்.  கெட்ட வார்த்தை பயன்படுத்தவில்லை.  ஒரே ஒரு கேள்விதான் நெருப்பைக் கக்குவது போன்ற தொனியில் கேட்டேன்.  ரஜினி, கமலிடம் இப்படிக் கேட்பீர்களா? 

எழுத்தாளனை இந்தச் சமூகம் எவ்வளவு கேவலமாக நடத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம். 

குழந்தைப் பிராயம், குட்டிப்பையன், வாலிபன், இளங்கணவன், தந்தை, மாம்ஸு, பெருசு... இவற்றில் கேட்டதும்உடனே உங்கள் மனதிற்குள் மேலோங்கி வந்து கொண்டாட்டத்தைத் தரும் பிராயம் எது?

ஆர்.எஸ்.பிரபு, 
சென்னை- 90.

இதில் எதுவுமே இல்லை.  ஒவ்வொரு கணத்தையும் ஒரு எழுத்தாளனாகவே வாழ்ந்து கொண்டிருப்பதை மட்டுமே கொண்டாட்டமாகக் கருதுகிறேன்.    

கேள்வி: இந்தியாவை குப்பைக் கூளங்கள் இல்லாத நாடாக ஆக்க முடியுமா? சாத்தியம் உள்ளதா?

முகுந்தன், கோவை.

பொதுவாக வெளிநாடு சென்று வருபவர்களுக்கு நம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய மறு கணமே தோன்றும் எண்ணத்தைத்தான் மோடியும் பிரதிபலித்திருக்கிறார்.  ஆனால் பாவம், புற்று நோய்க்கு ஷாம்பூ மருந்தாக முடியுமா? 

ஒரு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை அதை சுத்தம் செய்ய வேண்டிய துப்புரவுப் பணியாளர்களின் மாத ஊதியம் 6000 ரூ. பணி நிரந்தரம் கிடையாது.  ஒரே நொடியில் பணியிலிருந்து நீக்கி விடலாம்.  இந்த வேலைக்காக அந்தப் பணிப் பெண்கள் வெகுதொலைவிலிருந்து வர வேண்டும். என் நண்பர் ஒருவர் ஒரு மேட்ரிமனி நிறுவனத்தில் பணி புரிகிறார்.  மாத சம்பளம் நாலு லட்சம்.  இவ்வளவுக்கும் அவர் தன்னை மிடில் க்ளாஸ் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்.  சமீபத்தில் ஒரு கோடி ரூபாயில் ஒரு ஃப்ளாட் வாங்கினார்.  இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வை நீங்கள் வளர்ச்சி அடைந்த எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.  இதை ஓரளவாவது சரி செய்யாமல் இங்கே ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. 

நாட்டில் நெடுஞ்சாலைகளைத் தவிர வேறு எங்குமே சரியான சாலைப் போக்குவரத்து கிடையாது.  இந்தியா முழுவதிலுமே சாலைகள் சரியாக இல்லை.  கற்காலத்தில் வாழ்கிறோமோ என்ற கவலையை உண்டாக்குவதாக இருக்கின்றன சாலைகள்.  ஒரு அடி ஆழத்துக்குப் பள்ளம் இருப்பதெல்லாம் சர்வ சாதாரணம்.  சென்னையில் எங்கே பார்த்தாலும் சேரிகள்.  சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கும் கூவத்தைச் சுற்றிலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட  குடிசைகள்.  பத்துக்குப் பத்து அடி தான் ஒரு குடும்பத்துக்கே வாழ்விடம்.  இவர்களிடம் போய் நீங்கள் குப்பை போடாதீர்கள் என்று சொன்னால் எப்படிப் போடாமல் இருப்பார்கள்?

பிறந்த குழந்தைக்கு என்ன தெரியும்?  மேலே சொன்ன சேரியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு நான்கு வயதில் நல்ல கல்வியை இந்தச் சமூகம் தருகிறதா?  கல்வியில் சமத்துவம் செய்யாமல் குப்பை போடாதே என்றால் என்ன அராஜகம் இது? பணக்காரனின் குழந்தைக்கு எல்கேஜியில் சேர்க்க ஐந்து லட்சம்.  அந்தக் குழந்தை அஞ்சு வயதிலேயே பிரிட்டிஷ்காரன் மாதிரி இங்க்லீஷ் பேசுகிறது.  என் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் குழந்தைக்கு இந்தக் கல்வி கிடைக்கிறதா?  நான் தினமும் என் வீட்டு வாசலில் காணும் காட்சி இது: சென்னையின் மேட்டுக்குடியினர் படிக்கும்  பிரபலமான ஒரு பள்ளி என் வீட்டுக்கு எதிரே உள்ளது.  அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு முதுமலை யானைகள் சரணாலயம்தான் ஞாபகம் வருகிறது.  ஒவ்வொரு குழந்தையும் அப்படித்தான் யானை யானையாக இருக்கின்றன.   அதே சமயம் என் வீட்டைச் சுற்றிலும் பல ஏழைப் பள்ளிகள் இருக்கின்றன.  அங்கே படிக்கும் பனிரண்டாம் வகுப்பு மாணவி கூட சவலைப் பிள்ளை மாதிரி இருக்கிறாள்.  அந்தக் குழந்தைகளின் கால்களில் நான் செருப்பையே பார்த்ததில்லை.

கல்வி என்பது எப்போது எல்லா குழந்தைகளுக்கும் சமமாக அளிக்கப்படுகிறதோ அப்போதுதான் இந்தியாவில் ஒரு கடுகு அளவு மாற்றமாவது வரும்.  அதுவரை குப்பை போடாதே, சிகரெட் குடிக்காதே என்று சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. 

இன்னொரு பிரச்சினை, ஊழல்.  ஊழலைச் சொல்லி பதவிக்கு வந்த மோடி தில்லிக்குப் போனதும் மன்மோகன் சிங்காக மாறி விட்டார்.  மிகப் பின் தங்கிக் கிடந்த குஜராத்தை இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக மாற்றிய அதே மோடி தில்லிக்குப் போனதும் அர்விந்த் கெஜ்ரிவாலாக மாறி துடைப்பத்தைப் பிடிக்கிறார்.  அதனால்தான் புற்றுநோய்க்கு மருந்து ஷாம்பூவா என்று கேட்கிறேன்.  வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலைக் கொடு என்று உச்சநீதி மன்றம் கேட்ட போது கொடுப்பது கஷ்டம் என்று மோடி அரசு பதுங்கியதைப் பார்த்து நாடே வியந்தது. 

இப்போது கூட பாருங்கள், பால் விலை லிட்டருக்குப் பத்து ரூபாய் ஏறி விட்டது.  ஒரே காரணம், அந்த நிர்வாகத்தில் நிலவும் ஊழல்.  தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்த ஒரு ஆள் கட்சியின் பலத்தில் அந்த நிர்வாகத்துக்கே தலைமைப் பீடத்தில் அமர்ந்து ஊழல் செய்து அதன் பலனை (நஷ்டத்தை) இப்போது மக்கள் அனுபவிக்கிறார்கள். 

கோஆப்டெக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் நடந்தது.  அங்கே மாற்றப்பட்டார் சகாயம்.  ஒரே ஆண்டில் அந்த நிறுவனம் லாபம் சம்பாதிக்கிறது.  காரணம், ஊழலை ஒழித்தார்.  உடனே ஒரே இரவில் வேறு இடத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.  இப்படி இந்தியா முழுவதுமே ஊழலில் தத்தளிக்கிறது.  இதைச் சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார்.  ஆனால் அவரால் இதை எதிர்த்து ஒரு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.  காரணம், சமீபத்தில் ஆய்வாளர் ராமச்சந்திர குஹா எழுதியது போல்  இந்தியாவுக்கு நல்ல முதல்வர்களே தேவை.  மோடி மிகச் சிறந்த முதல்வர்களில் ஒருவராக இருந்தார்.  நல்ல முதலமைச்சர்களால்தான் மாநிலத்துக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும். 

இப்படிப்பட்ட ஆதாரமான பிரச்சினகள் இருந்தாலும் குப்பையை ஒழிக்க ஒரு எளிமையான குறுக்கு வழி உள்ளது.  குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே குப்பையைக் கண்டபடி போடுவது குற்றம் என்று கற்பிக்கப்பட வேண்டும். 

கேள்வி: ராணுவ ஒழுங்குடன் வாழும் உங்களுக்கு எப்படி இதயத்தில் பிரச்சினை?

கஜலட்சுமி ஸ்ரீதர், ஈரோடு.

பதில்: அலோபதி மருத்துவத்தின் மீதான வெறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டிய ஆஸ்ப்ரின் மாத்திரையை உட்கொள்ளவில்லை.  என்னுடைய கட்டுப்பாடான உணவுப் பழக்கமும், மூலிகைகளும் போதும் என்று நினைத்தேன்.  ஆனால் என் ரத்தம் மிகவும் அடர்த்தியானது என்றபடியால் ஆஸ்ப்ரினை நிறுத்தியிருக்கக் கூடாது என்று இப்போது தெரிந்து கொண்டேன்.  கொடுத்த விலைதான் அதிகம்.  உடல்நலம் அல்ல; நவம்பர் இரண்டாம் தேதி உத்தர்காண்டில் உள்ள தானாச்சூலி என்ற ஊரில் Literature Studio என்ற அமைப்பின் மூலம் நடக்க இருந்த ஒரு முக்கியமான ஐந்து நாள் இலக்கியக் கருத்தரங்கில் கலந்து கொள்ள தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒரே எழுத்தாளன் நானாக இருந்தேன்.  இஸ்ரேலிலிருந்து Amir Or கலந்து கொள்கிறார்.   எத்தனையோ விவாதங்களுக்குப் பிறகு இந்தத் தேர்வு நடந்திருக்கிறது.  ஆங்கில மொழிபெயர்ப்பில் என் எழுத்தைப் படித்து விட்டு என்னைத் தேர்ந்தெடு்த்திருக்கிறார்கள்.  நைனிட்டால் பக்கத்தில் இமயமலை அடிவாரத்தில் Te Aroha என்ற அற்புதமான இடத்தில் ஐந்து நாள் தங்கி இலக்கியம் பேசும் அரிய வாய்ப்பை இழந்து விட்டேன்.  அதன் இணைப்புகள் கீழே:

https://www.facebook.com/LiteratureStudio?ref=br_tf

https://www.facebook.com/tearohadhanachuli

(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com