கருங்குரங்கை நினைக்காதே

செவக்காட்டு சொல்கதைகள் - 13

தனி மனித வாழ்க்கை , குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று எப்படிப் பார்த்தாலும் மனித வாழ்க்கைக்கு உளவியல் அனுகுமுறை என்பது மிக மிக அவசியம் , வீடு அலுவலகம் என்று எங்கும் எப்போதும் உளவியல் அடிப்படையில் பிரச்சனைகளை அனுகினால் எளிதில் நாம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மனித மனம் என்பது விசித்திரமான அமைப்பைக் கொண்டது . மனதின் ஆழத்தை யாராலும் அளந்து கூற முடியாது என்றாலும் சக மனிதர்களோடு பழகும் போது உளவியல் அடிப்படையில் பழகினால் அந்த நட்பு பலப்படும் என்று கூரிய சுப்புத்தாத்தா தன் வெத்திலைச்செல்லத்தை(பெட்டியை) மடியில் வைத்து , அதிலிருந்து இளம் வத்திலைகளை எடுத்து அதன் காம்புகளைக்கிள்ளி , அதன் நரம்புகளை உருவிக்கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார், தாத்தா.

ஒரு ஊர்ல ஒரு ராஜ இருந்தார் அவர் மகா பிடிவாதமான ஆள், தான் நினைத்ததை எல்லாம் செய்யனும் என்று நினைத்தார். “ தான் பிடிச்ச முயலுக்கு மூனுகால்” என்ற ரகம் அவர்.

ராஜாவின் மனம் அறிந்து அவரின் விருப்பப்படியே அவரின் மனைவியும் , மக்களும் நடந்துகொண்டார்கள்.

வீட்டில் மட்டுமில்லை, நாட்டில் ராஜாங்க காரியங்களிலும் தான் நினைத்ததை நினைத்தபடி நடத்திக்காட்ட வேண்டும் என்று எண்ணினார். ராஜாவின் பிடிவாத குணத்தை நன்கு தெரிந்து வைத்திருந்த , மந்திரி , பிரதானி முதலியவர்களும் ராஜாவின் விருப்பப்படியே காரியங்களைச்செய்து வந்தார்கள்.

ராஜாவின் குணத்தை யாராலும் மாற்ற முடியவில்லை , ராஜா சொன்னதற்கு எல்லாம் நாட்டில் உள்ள அரசாங்க அதிகாரிகளும் , “ஆமாம் சாமி” போட்டார்கள். ஏன் எதற்கு என்ற கேள்விகள் எல்லாம் அவரிடம் எடுபடாது ராஜா சொன்னா , சொன்னபடி செய்யவேண்டும். மன்னன் சொல்லுக்கு மறு சொல் கிடையாது , என்ற ரீதியில் அரசாங்க காரியங்களும் நடந்து கொண்டே இருந்தது.

வீட்டிலும் நாட்டிலும் ராஜாவின் அதிகாரம் செல்லும் , இயற்கையிடம் அவரின் அதிகாரங்கள் செல்லுபடியாகுமா.?

ராஜாவுக்கு எண்பது வயசுக்கு மேல் ஆகிவிட்டது , அவரின் பிள்ளைகள் எல்லாம் தோளுக்கு மூத்துவிட்டார்கள், ஏன்.  பேரன் பேத்திகள் கூட வாலிபப்பிள்ளைகளாக இருந்தார்கள். என்றாலும்  ராஜா தன் ஆட்சிப்பொறுப்பை விட்டுவிட வில்லை.

ராஜாவிடம் போய் , ராஜா உங்களுக்கு வயதாகிவிட்டது , எனவே ஆட்சிப்பொறுப்பை உங்கள் மூத்த மகனிடம் கொடுத்துவிடுங்கள் , மூத்த மகனுக்குப்பட்டம் சூட்டிவிட்டு நீங்கள்  ஓய்வெடுங்கள் என்று சொல்லும் துணிச்சல் யாருக்கும் இல்லை.

ராஜாவுக்கும், ஆட்சிப்பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. நாம் எப்போதும் இப்படியே இருப்போம் , நமக்குச்சாவே வரக்கூடாது என்று நினைத்தார்.

மனிதன் நினைத்தபடியெல்லாம் வாழ முடியுமா என்ன? ஒரு நாள் ராஜாவுக்கு உடல் நலக்குறைவு வந்தது , உடனே அரண்மனை வைத்தியர் வந்து ராஜாவின் கையைப்பிடித்துப்பார்த்தார். ராஜாவுக்கு இப்போது வந்திருப்பது மருந்து கொடுத்து தீர்க்க முடியாத ஒரு வித ஆட்கொல்லி நோய் என்று தெரிந்து கொண்டார்.

தனக்கு மரணமே வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பிடிவாத குணம் கொண்ட ராஜாவிடம் உள்ளதை உள்ளபடிச் சொல்ல முடியுமா? எனவே தனக்குத்தெரிந்த பச்சிலைகளையும் , மருந்துகளையும் கொடுத்து ராஜா பத்தியமாக இருங்கள் என்றார்.

முரண்டு பிடிக்கும் குணாம் உடைய ராஜா அரண்மனை வைத்தியர் கொடுத்த மூலிகைகளையும் மருந்துகளையும் சாப்பிட்டார், ஆனால் பத்தியம் காக்க மறுத்து விட்டார்.

நாளாக நாளாக ராஜாவுக்கு நோய் முற்றியது , என்றாலும் அவரின் ஆணவமும் , பிடிவாத குணமும் மாறவில்லை , “அரண்மனை வைத்தியர்  கொடுத்த மருந்தால் என் நோய் குணமாகவில்லை எனவே அவரைப்பிடித்து சிறையில் அடைத்துவிட்டு வேறு ஒரு வைத்தியரை அழைத்து வந்து எனக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லுங்கள் “ என்றார்.

“மன்னன் சொல்லுக்கு மறு சொல் ஏது? எனவே அரண்மனை வைத்தியரை பிடித்து சிறையில் அடைத்து விட்டு வேறு ஒரு வைத்தியரை அரண்மனைக்கு கூட்டி வந்து ராஜாவுக்கு வைத்தியம் பார்க்கச்சொன்னார்கள்.

புதிதாக வந்த வைத்தியரும் ராஜாவின் கையை பிடித்துப்பார்த்து விட்டுத் தனக்குத் தெரிந்த மருந்துகளை கொடுத்தார்.

புதிதாக வந்த வைத்தியரை அரண்மனையிலேயே தங்கி ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க சொன்னார்கள். புதிதாக வந்த வைத்தியருக்கு அரண்மனையில் ராஜ உபசாரம் நடந்தது. அரண்மனை விருந்தில் திழைத்தார் புதிய வைத்தியர்.

புதிய வைத்தியரும் தனக்கு தெரிந்த அளவில் ராஜாவுக்கு வைத்தியம் செய்தார், ஆனால் ராஜாவிற்கு வந்த நோய் முற்றியதே தவிர நோய் குணமாகிர வழி தெரியலை , எனவே “புதிய வைத்தியனையும் சிறையில் அடைத்து விட்டு இன்னொரு பெரிய வைத்தியனை அழைத்து வாருங்கள் என்ரு மந்திரிக்கு உத்தரவிட்டார் ராஜா.

பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் “ என்பது போல் காரியங்கள் நடந்தது.அரண்மனை விருந்தில் திழைத்து கிடந்த வைத்தியரை ராஜாவின் உத்தரவுப்படி சிறையில் அடைத்துவிட்டு , வேறு புதிய வைத்தியரைத்தேடி பிடிக்கும் வேலையில் இறங்கினார்கள். அரண்மனைச் சேவகர்கள்.

சிறையில் அடைபட்ட பிறகுதான் புதிய வைத்தியருக்கு , இத்தனை நாளும் அரண்மனையில் விருந்து கொடுத்து உபசரித்தது வெட்டப்போகிற ஆட்டிற்கு பூமாலை போட்டது போலதான் என்ற உண்மை புரிந்தது.

அரண்மனைச்சேவகர்கள் ராஜாவுக்கு வைத்தியம் செய்ய வேறு புதிய வைத்தியரைத்தேடி அலைந்தார்கள் , அதற்குள் அரண்மனை வைத்தியர் சிறையில் இருக்கிறார் என்ற செய்தியும் , புதிதாக வைத்தியம் செய்ய வந்த வைத்தியரும் ராஜாவுக்கு பார்த்த வைத்தியம் பலிக்கவில்லை என்பதால் அவரும் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்ற செய்தியும் , நாடு முழுவதும் பரவியது , எனவே அரண்மனைக்கு சென்று ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க எந்த வைத்தியரும் முன் வரவில்லை.

அரண்மனைச்சேவகர்கள் , புதிய வைத்தியரைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள் , ஏற்கனவே வைத்தியம் பார்த்து வந்தவர்கள் அரண்மனைச் சேவகர்கள் வந்து கெட்டபோது “ஐயா எனக்கு வைத்தியம் பார்க்கவே தெரியாது ! என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டார்கள்.

ராஜாவுக்கு வைத்தியம் பார்த்து சிறை செல்ல எந்த வைத்தியரும் தயாராக இல்லை. அரண்மனைச் சேவகர்களோ எப்படியாவது ஏதாவது ஒரு வைத்தியரைப் பிடித்துக் கொண்டு  அரண்மனைக்குச் சென்று ராஜாவின் முன்னால் நிறுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் வைத்தியர்களை சல்லடை போட்டுத் தேடினார்கள். எந்த வைத்தியரும் ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க முன் வரவில்லை!

கடைசியில் ஒரு வைத்தியர் “நானாச்சி” என்று முன் வந்தார், ஆனால் வந்த வைத்தியர் எனக்குத் தினமும் ஒரு பொற்காசு கூலியாகத்தரவேண்டும் , நான் சொல்கிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு ராஜா நான் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும் . என் நிபந்தனைகளை ராஜா மீறி விட்டார் என்றால் நோய் குணமாகாது. , பிறகு என் மேல் குத்தம் சொல்லி என்னைச் சிறையில் அடைக்ககூடாது , என்னுடைய நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான் நான் அரண்மனைக்கு வந்து வைத்தியம் பார்ப்பேன் என்றார்.

அரண்மனைச் சேவகர்கள் , எப்படியாவது வைத்தியரை ராஜாவின் முன்னால் கொண்டு போய் நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்து வைத்தியரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள்.

வைத்தியர் அரண்மனைக்குச் சென்றார் ராஜாவின் நாடிபிடித்துப்பார்த்தார் , ராஜாவுக்கு, தீராத நோய் வந்து முற்றிய நிலையில் இருப்பதை புரிந்து கொண்டார். அத்தோடு ராஜாவின் பேச்சுத் தோரணையில் இருந்து மரணம் இல்லாத வாழ்வு வாழவேண்டும் என்று அவர் நினைப்பதையும் புரிந்து கொண்டார்.

நாம் ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து , அதனால் அவர் இறந்து விட்டால் , ராஜாவின் பிள்ளைகள் நம்மை உயிருடன் விடமாட்டார்கள் , எனவே ராஜாவை முதலில் அரண்மனையில் இருந்து வெளியே கிளப்ப வேண்டும் , வெளியே உலகத்தில் நோயாளியாக இருக்கிற மக்கள் படுகிற பாட்டையும் , அவர் நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டும் , அத்தோடு மனிதர்களுக்கு மரணம் என்பது இயற்கையானது என்பதையும் ராஜா புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய வைத்தியர் ராஜாவிடம் அரசே நான் உங்களுக்கு வைத்தியம் பார்க்கத்தயாராக உள்ளேன் , ஆனால் அந்த வைத்தியத்தை என்னால் அரண்மனையில் இருந்து பார்க்க முடியாது , நான் குடியிருக்கும் ஊரில் ஒரு வைத்திய சாலை உள்ளது, நீங்கள் அங்கு வந்து தங்கினால் நான் உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன் அத்தோடு சில நிபந்தனைகளுடன் தான் நான் உங்களுக்கு மருந்து கொடுப்பேன் நீங்கள் அந்த நிபந்தனைகளை மீறினால் நான் கொடுக்கும் மருந்து வேலை செய்யாது பிறகு என்னைப்பிடித்து சிறையில் அடைக்கக் கூடாது என்றார்.

வேறு எந்த வைத்தியமும் முரட்டுப்பிடிவாத குணம் கொண்ட ராஜாவுக்கு வைத்தியம் பார்க்க முன் வந்தால் வேறு வழியின்றி ராஜாவும் தன் வாழ்நாளில் முதன் முதலாக வைத்தியர் போகும் நிபந்தனைக்கு கட்டுபடச் சம்மதித்தார்.

மறுநாளே வைத்தியரின் சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் ராஜா தங்குவதற்கு என்று தடபுடலான ஏற்பாடுகள் நடந்தன. ராஜாவை குதிரை வண்டியில் ஏற்றி வைத்தியரின் வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்று அவருக்கென்று அங்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அறையில் தங்கவைத்தார்கள் .

வைத்தியர் மறு நாளே தன் வைத்தியத்தை ஆர்ம்பித்தார், சில சூரணாங்களையும் ராஜாவிடம் கொடுத்து அரசே இந்த மருந்துகளை இன்று காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் , மருந்துகளைச் சாப்பிடும் போது நீங்கள் கருங்குரங்கை நினைக்க கூடாது , இது ஒன்றுதான் நிபந்தனை  என்றார்.

ராஜாவும் ‘சரி’ என்றார் , ஆனால் ஒவ்வொரு வேளையும் மருந்து சாப்பிடும் போது ராஜாவுக்கு கருங்குரங்கின் ஞாபகம் தான் வந்தது , அது மனித இயல்பு.

அன்று மாலை வைத்தியர் ராஜாவைப் பார்த்து அரசே மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை நினைத்தீர்களா ? என்று கேட்டார், ராஜாவும் ஆம் என்றார். என்னதான் முயன்றாலும் மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கின் ஞாபகம் வந்து விடுகிறதே, மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கின் ஞாபகம் வராமல் இருக்க ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வைத்தியரிடம் கேட்டார் ராஜா.

வைத்தியர் “அதற்கெல்லாம் மருந்து கிடையாது , நீங்கள் அடுத்த வேளையாவது கருங்குரங்கை நினைக்காமல் மருந்து சாப்பிடுங்கள் அப்போதுதான் நோய் முழுமையாக குணமாகும் என்றார்.

இப்படியாக ராஜா பலநாட்களாக கருங்குரங்கை நினைத்தபடியே மருந்து சாப்பிட்டார், வைத்தியரின் இல்லத்தில் இருந்து சிகிச்சை பெறும் போது நோயால் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைவதைப்பார்த்தார் , மரணம் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது என்பதைப்புரிந்து கொண்டார்.

எத்தனை விதமான நோயில் மக்கள் எப்படி எல்லாம் துன்பப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து , ராஜா மனமாற்றம் பெற்றார்.

சில மாதங்கள் வைத்தியரின் மருத்துவமனையில் தங்கி இருந்து கருங்குரங்கை நினைத்தபடியே மருந்துகளை சாப்பிட்டு வந்தார்.

ராஜா நோய் முற்றிய நிலையில் ஒரு நாள் மரணத்தருவாயை அடைந்தார். ராஜா தன் கடைசி ஆசையாக தன் பிள்ளைகளிடம் “சிறையில் இருக்கும் வைத்தியர்களை விடுதலை செய்து விடுங்கள் எனக்கு இதுவரை வைத்தியம் செய்த இந்த வைத்தியருக்குத் தக்க சன்மானம் கொடுங்கள் .

நாட்டில் உள்ளா ஏழை எளிய மக்கள் பலன் பெறும் வகையில் ஊர் தோரும் மருத்துவமனைகளை அமைத்து இலவசமாக மக்கள் வைத்தியம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று கூறிவிட்டுக் கண்களை மூடினார்.

ராஜாவுக்கு எதார்த்தத்தை உணரவைத்த வைத்தியரை அனைவரும் பாராட்டினார்கள்....

(இன்னும் சொல்வார்)

செப்டம்பர்   13 , 2014  

logo
Andhimazhai
www.andhimazhai.com