கலை மணக்கும் மாநகர்

மதுரைக்காரய்ங்க- 40

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி

  மதுரையின் கலை வளர்த்த செம்மல்கள் பட்டியல் மிகவும் நீளமானது. சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த நரசிம்மபாரதி என்பவர் சம்பூர்ண ராமாயணம் என்ற படத்தில் லட்சுமணனாக நடித்தார். பின்னர் அவர் பொன்முடி, திகம்பரசாமியார் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை எம்.என். ராஜம், பரவை முனியம்மா, கனிகா, நடிகர்கள் விஜயகாந்த், வாகை சந்திரசேகர், மண்வாசனை பாண்டியன், வில்லன் நடிகர் ராமதாஸ், காமெடி நடிகர்கள் வடிவேலு, விவேக், புரோட்டா சூரி ஆகியோரும் மதுரைக்காரர்கள். தமிழ் திரையுலகையே புரட்டிப்போட்ட கரகாட்டகாரன் ராமராஜன் மதுரை மாவட்டக்காரர். கேமரா மேனாக இருந்து நடிகராகியிருக்கம் இளவரசு மதுரைக்காரர்.

எஸ்.எஸ்.ஆர். : தமிழை கணீர் என உச்சரிக்கும் ஆற்றலும் ஆளுமையும் கொண்ட நடிகர் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன். சுருக்கமாகச் சொன்னால் எஸ்.எஸ். ராஜேந்திரன். 1928-ல் மதுரை சேடப்பட்டியில் பிறந்தவர்.

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜேந்திரன் 1947 ஆம் ஆண்டில் பைத்தியக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். எம். ஜி. ராமச்சந்திரன் ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரன் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் பின்னர் நடிக்க வாய்ப்பின்றி இருந்தவருக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.. அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆருடன் கொண்ட நட்பால், எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் இன்னும் நினைவில் நிற்பவை. இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர்.

பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் சின்னத்திரையில் நடித்தார். 1980களில் அன்பின் முகவரி என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் தங்கரத்தினம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார்.

அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர். 1962இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  நடிகை கனிகா.

 திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்பது இவரது இயற்பெயர். இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றவர். பின்னர் ராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.  திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த பைவ் ஃஸ்டாரின் கருப்பாடலைப் பாடினார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் படத்தில் சதாவுக்கும், சிவாஜி சினிமா சிரேயாவுக்கும் குரல் கொடுத்தார்.

   விஜயகாந்த் :  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் விஜயராஜ். என்றாலும் சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், அவருக்கு அனைத்துமே மதுரை ஆயிற்று. மதுரையில் தன் தந்தையின் அரிசி ஆலையை  கவனித்து வந்தார். இந்த விஜயராஜ் தான் இன்றைக்கு சினிமா - அரசியலில் தனி இடம் பெற்ற விஜயகாந்த்.  விஜயராஜ் என்ற தன் பெயரை அப்பொழுது வெற்றிப்பட நாயகனாக இருந்த ரஜினிகாந்த் பெயரின் சாயலில், விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். 1978 ஆம் ஆண்டில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.       2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை மதுரையில் துவக்கினார். துவக்கவிழாவுக்கு பிரமாண்டகூட்டம்..அதன் பின் நடந்தது வரலாறு.

வடிவேலு :   வைகைபுயல் என்றழைக்கப்படும் வடிவேலு 1960-ல் மதுரையில் பிறந்தவர்.  1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தன் மதுரைத் தமிழின் உச்சரிப்பு முறையால் தனக்கென தனி இடத்தை (தற்போது அவர் ஃபீல்டில் பரபரப்பாக இல்லாவிட்டாலும்) தக்க வைத்திருக்கிறார். இவரது கால்ஷீட்டிற்காக பெரிய பெரிய நடிகைகள் காத்திருந்திருந்த காலம் உண்டு. பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளார்.

விவேக் :1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ் சினிமாவில் என்டரி ஆன விவேக் இப்போது புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.  லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், ஊழல், மூட நம்பிக்கை போன்றவற்றை தனது நகைச்சுவையால் இடித்துரைத்ததால் இவரை சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

கதாசிரியர்கள்..

சோலைமலை

பீம்சிங், எம்.எஸ்.விசுவநாதன், கதாசிரியர் சோலைமலை, அப்போது தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஜி.என்.வேலுமணி ஆகிய நால்வரும் சேர்ந்து, 1958-ல் புத்தா பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை தொடங்கி, "பதிபக்தி" என்ற படத்தை தயாரித்தார்கள். சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, சந்திரபாபு, விஜயகுமாரி ஆகியோர் நடித்த இந்தப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அத்தோடு "ப" வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றன. 'பாகப் பிரிவினை', 'பாவ மன்னிப்பு', 'பதிபக்தி' போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர் மதுரையைச் சேர்ந்த சோலைமலை.

"என்னுடைய தாத்தா (அம்மாவின் சித்தப்பா) எம்.எஸ்.சோலைமலை, தமிழ் திரைப்பட உலகில் கொடிக்கட்டி பறந்த கதாசிரியர். திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதிலும் சிறப்பாக செயல்பட்டவர். பீம் சிங்கினுடைய பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர். பீம் சிங் அவர்களின் திரைப்படத்தில், தமிழ் மற்றும் தமிழர் வாழ்வு சார்ந்த, குறிப்பாக மதுரை மாவட்டம் சார்ந்த வாழ்க்கை வரலாறு பெரியளவில் பதிவானதற்கு என்னுடையா தாத்தா ஒரு முக்கிய காரணம். " என்கிறார் ஓவியர் டிராஸ்கி மருது.

 பாலமுருகன்

 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதாசிரியர் பாலமுருகன் குறித்து அவரை நன்கு அறிந்தவர்களிடம் பேசியபோது வியந்து போனோம்.   போடி ஜமீன்தாரின் கார் டிரைவர் வேலுத்தேவருக்கும் காளியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் சுந்தரபாண்டியன். சுந்தரபாண்டியன் பார்க்க களையாக இருந்ததால் மகனை சினிமாவில் சேர்த்துவிடவேண்டும் என்பது தாயின் விருப்பம். மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவரை மதுரை சித்ரகலா மூவிடோனில் தனக்கு தெரிந்தவர் மூலம் சேர்த்துவிட்டார் அவரது தாய். அப்போது அவர்கள் குமரகுரு என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதில் பாலமுருகனாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரபாண்டியனுக்குக் கிடைக்க அதன் பின் அவர் பாலமுருகனானார். அடுத்து தாய்நாடு என்ற படத்தில் இளவரசர் வேடம். ஆனால் சினிமாவை பெரிதாக நம்பமுடியவில்லை. எனவே மகனை சக்திநாடக சபாவில சேர்த்துவிட்டார் காளியம்மாள். அப்போது அந்த நாடக சபாவில் சிவாஜி, எஸ்வி.சுப்பையா, நம்பியார் உட்பட பலர் நடித்துக் கொண்டிருந்தனர். நாடகத்தில் நடித்துக்கொண்டே  நாடகங்களை எழுத ஆரம்பித்தார் பாலமுருகன்.

 அவரது அமைதி என்ற நாடகத்தில் முத்துராமனின் மனைவியான சுலோசனா கதாநாயகியாக நடித்தார். திலகம் நாராயணசாமி கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து கற்சிலை, மணப்பெண், அன்புக்கோயில் போன்ற பல நாடகங்கள் எழுதி நடித்தார். சேஷாத்திரி குழுவினருக்காக "நீதி பிழைத்தது" என்ற நாடக அரங்கேற்றம் மு.வ. தலைமையிலும் "வெற்றித்தூண்" என்ற சரித்திர நாடகம் சி.பா. ஆதித்தனார் தலைமையிலும் நடந்தது. இருவரது பாராட்டும் பாலமுருகனுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்தது.

   "அண்ணாவை போய் பார்.." என மதுரை தி.மு.க.வில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த மதுரை முத்து பாலமுருகனுக்கு ஒரு பரிந்துரை கடிதம் கொடுத்தார். இவரும் அண்ணாவைப் போய் பார்த்தார். அண்ணாவுக்கு இவரைப் பிடித்துப் போயிற்று. தனது நாடகக்குழுவில் சேர்த்துக் கொண்டதோடு கட்சி வளர்ச்சிக்காக ஒரு நாடகம் எழுதச் சொல்ல "சந்திரோதயம்" என்னும் நாடகத்தை எழுதிக்கொடுத்தார். அதில் துரைராஜ் என்ற பாத்திரத்தில் அண்ணாவும் வரதன் என்ற வேடத்தில் பாலமுருகனும் நடித்தனர். இவரது நாடகத்திறமையைக் கண்ட அண்ணா "இனி நடிப்பதை விட்டு நாடகம் எழுதுவதில் கவனத்தைச் செலுத்து" என்றார் இவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

 இவர் மதுரையில் நாடகம் போட்டுக்கொண்டிருந்தபோது நாடோடிமன்னன் படம் வெற்றி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை தனது நாடகத்தைப் பார்க்குமாறு அழைத்தார். நாடகம் முடிந்தும் எம்.ஜி.ஆரிடம் தன் மகனுக்கு பெயர் வைக்குமாறு கூறினார். எம்.ஜி.ஆரும் சந்திரமோகன் என்று பெயர் வைத்தார்.

சிவாஜி நாடகமன்றத்துக்காக "நீதியின் நிழல்" என்ற நாடகத்தை எழுதிக்கொடுத்தார். சிவாஜி நடித்தார். மும்பையில் இந்த நாடகம் நடந்தபோது அதனைப் பார்க்க வந்து பரவசமான இந்தி திரைப்படத்துறையினர் சிவாஜியை தோளில் சுமந்து ஆடினர். பின்னர் சிவாஜிகணேசன் நடித்த அன்புக்கரங்கள் படத்துக்கு கதை எழுத படம் சக்ஸஸ் ஆனது. தொடர்ந்து ஏறுமுகம். தேவர் பிலிம்ஸ்சின் துணைவன். மாணவன் மற்றும்  முகூர்த்தநாள், டீச்சரம்மா, மகனே நீ வாழ்க, நிலவே சாட்சி ஆகிய படங்களுக்கும் கதை  எழுதினார்.

  சிவாஜி நடித்த எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி போன்ற படங்கள் இவர் கதைவசனத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றன. மதுரையில் நடந்த ராமன் எத்தனை ராமனடி வெற்றிவிழாவில் பேசிய சிவாஜி, "உங்க ஊர் (மதுரை) பையன் தான் இந்த படத்துக்கு ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் கதைவசனம் எழுதியவர்" என பாராட்டினார்.  இவரது கதைவசனத்தில் தயாரான "பட்டிக்காடா பட்டணமா" மிகபெரிய வெற்றிப்படம். காமராஜர் இந்தப் படத்தை பாராட்டினார். காமராஜருடன் நெருக்கம் கொண்டிருந்த பாலமுருகன் அவர் மறைவையடுத்து அவர் குறித்து புத்தகம் எழுதினார். அதன் வெளியீட்டு விழாவில் சிவாஜியும் ஜி.கே. மூப்பனாரும் கலந்து கொண்டனர்.

இவர் எழுதிய கதை ஒன்றை தெலுங்கு தயாரிப்பாளர் "சோங்காடு" என்ற பெயரில் சினிமா எடுத்தார். மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு திரைத்துறையானது இவரது பத்து கதைகளை சினிமாவாக்கியது. அதில் ராமாநாடு தயாரிப்பில் நாகேஸ்வரராவ் நடித்த பிரேம்நகர் மிகப்பெரிய வெற்றிப்படம். அதன் நூறாவது நாள் விழா சென்னையில் நடைபெற்றபோது இவர் வாழ்த்துரை வழங்கி பேசுகையில் இந்தக் கதை தமிழில் தயாரானால்  வெள்ளிவிழா கொண்டாடும் என்றார். அதேபோல இந்தப்படம் தமிழில் வசந்தமாளிகை என்ற பெயரில் தயாரானது. சிவாஜி வாணிஸ்ரீ நடித்து வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

      "ஒரு நாடக நடிகரின் வாழ்க்கையை கதையாக எழுதேன்.." என சிவாஜி இவரிடம் கேட்டுக்கொள்ள அதன் பேரில் இவர் எழுதிய கதை "ராஜபார்ட் ரங்கதுரை" என்ற பெயரில் சினிமாவாக வெளிவந்தது. "பொண்ணுக்குத் தங்கமனசு" படத்திற்கு ஒரு ஹீரோவை பி. மாதவன் தேடிக்கொண்டிருக்க அவரிடம் விஜயகுமாரை அறிமுகப்படுத்தியவர் பாலமுருகன். அதுமட்டுமில்லாமல் அவருக்கு விஜயகுமார் என்ற பெயர் வைத்தவரும் அவர் தான். அதற்குக்காரணம் ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி விஜயகுமார் என்ற பெயரில் தான் சினிமா நாயகனாகி வெற்றி பெறுவார். எனவே தான் அந்த பெயரைச் சூட்டினேன் என்றார் பாலமுருகன். விஜயகுமார் இன்றைக்கும் சினிமா, சின்னத்திரைகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறார்.       அண்ணா முதல்வரானதும் லாட்டரி சீட்டைக் கொண்டு வந்தார். அதை மையமாக வைத்து இவர் எழுதிய கதைதான் "கண்ணே பாப்பா".

மிதுன் சக்ரவர்த்தி - மாதுரி தீட்சித் நடித்த பியார் கா மந்திர் என்ற சினிமாவுக்கான கதை திரைக்கதையை எழுதினார். இதன் வெற்றியைத் தொடர்ந்து பியார் கா தேவா படத்திற்கு கதை எழுதிக் கொடுத்தார். ஜிஜேந்திரா, ரிஷிகபூர், ரஜினிகாந்த் நடித்த "தோஸ்தி துஷ்மன்" படத்தின் கதை இவரதுதான். ரஜினிகாந்த் நடித்த சங்கர் சலீம் சைமன், என் கேள்விக்கென்ன பதில் படங்களும் இவரது கதையால் உருவானவை.

சொந்தப்படம் எடுக்கும் ஆசை இவரைத் தொற்றிக்கொள்ள மாணிக்கத்தொட்டில் என்ற படத்தைத் தயாரித்து நஷ்டப்பட்டார். இயக்குநர் ஆசை இவருக்கு வந்தது. ஜெய்கணேஷை கதாநாயகனாக்கி மகராசி வாழ்க என்ற படத்தை இயக்கினார். கதாநாயகி கே.ஆர். விஜயா. பின்னர் சீமாவை கதாநாயகியாக நடித்த காமசாஸ்திரம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். சின்னக்குயில் பாடுது என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினார்.சிவகுமார் நடித்த இந்த படத்தை பி. மாதவன் இயக்கியிருந்தார். இவர் பணியாற்றிய கடைசி படம் இதுதான். தற்போது எழுபத்தைந்து வயதைக் கடந்த நிலையில் சென்னையில் வசித்து வருகிறார்.

  மதுரையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். பட்டிமன்ற நடுவர். கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். இன்றைக்கு பதினான்கு படங்களில் நடித்திருக்கும் நடிகர். தொடர்ந்து நடித்தும் திரைப்பட கதைவசனம் செம்மையாக்குதலுக்குத்  துணையாகவும் இருந்து வருகிறார். அவரிடம் பேசினோம்..

’’ஒரு காலத்தில் சினிமா என்பது மேல்தட்டு மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. கல்வியாளர்கள், படித்தவர்கள் சினிமாவுக்குள் நுழைந்தவுடன் அதற்கான அங்கீகாரம் தானாக வந்தது.. பாரதிதாசன், வா.ரா., இளங்கோவன் போன்றவர்கள் திரைப்படத்துறைக்கு வந்தார்கள். ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதினர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றனர்.

   கல்வியாளர்கள் வந்தது போல பட்டிமன்றத்தில் பேசியவர்களும் திரைப்படத்துக்கு வந்தார்கள். விருமாண்டி திரைக்கதை செம்மையாக்கும் பணிக்காகச் சென்ற எனக்கு அதில் ஒரு ரோல் கிடைத்தது. கமல் நடிக்கச் சொல்லித்தந்தார். நடித்தேன். இந்றைக்கு பதினான்கு படங்கள் நடித்தாயிற்று. நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆடுகளம் படத்தில் சேவல்சண்டை வைத்தால் சென்சாரில் பிரச்னை வரும் என இயக்குநர் கருதினார். ஆனால் சேவல்சண்டை குறித்த தகவல்கள் பண்டை இலக்கியங்களில் இருப்பதோடு மக்களின் மரபு சார்ந்த விளையாட்டாகவும் உள்ளது என்பதை ஆதாரத்துடன் அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தேன். அதுபோல ஆடுகளத்துக்காக மதுரை மொழிநடையில் டயலாக் எழுத உதவிகரமாக இருந்தேன். விருதுவாங்கிய "காஞ்சிபுரம்" படத்திற்காகவும் திரைக்குப் பின்னால் பணியாற்றியிருக்கிறேன்.

இப்போதெல்லாம் சென்னையைப் போலவே, மதுரையிலும் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு தொடர்கிறது. சினிமாத் தொடர்பான விழாவைக் காண சென்னையை விட மதுரையில் அதிக ரசிகர்கள் கூடுவது கோடம்பாக்கத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் சென்டிமென்டாக மதுரை என்றால் ஹிட்.. அத்தோடு ரசிகர்களின் ஆசியும் அபரிமிதமாக இருப்பதால் கோடம்பாக்கத்தின் பார்வை மதுரை மீது ஒட்டுமொத்தமாக விழுந்திருக்கிறது. அதனால் மதுரையை முழுமையாக பயன்படுத்திட முன்வந்திருக்கிறார்கள். அதேநேரத்தில் மதுரையை மையமாக வைத்த மண் சார்ந்த சினிமாக்களுக்கு உலக அளவிலான தமிழர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ” என்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com