கவிதை எழுதுவது ஒரு கலகச் செயல்பாடு

கவிதையின் கால் தடங்கள் - 18

“கவிதை எழுதுவதே ஒரு கலகச் செயல்பாடுதான். கலகம் அதிகாரத்தை மறுதலிப்பது. கவிதையோ சுதந்திரத்தைக் கொண்டாடுவது. இவ்வகையில் இரண்டும் நெருங்கிய உறவுடையவை.”

# கரிகாலன்

["நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள்" கட்டுரைத் தொகுப்பு, மருதா வெளியீடு (2005)]

O

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

o

“கவிதை அல்லது கவிதைக்கான அதிர்வுகள் எதுவென உணர்ந்து தேர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் எது கவிதையென எழுத்தில் சொல்லி வைக்க முடிவதில்லை. சொல்வது சிறிது காலத்திலேயே காலாவதி ஆகிவிடுகிறது. நவீன தமிழ்க் கவிதை தன்னை சதா புதுப்பித்துக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருப்பதால்.”

“கவிதை எழுதப்படுகிறது என்பதை விடவும் கவிதை கவிஞர்கள் மூலம் தன்னையே எழுதிப்பார்க்கிறது என்பதையே நம்ப விரும்புகிறேன்.”

# பூமா ஈஸ்வரமூர்த்தி

o

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகளில் சில:

01

என் அன்பை

என்

அன்பை

பொய்

என்று சொல்லுங்கள்.

அப்போதுதான்

இன்னும் ப்ரியமாய்

தொட முயல்வேன்.

02

எதுவுமே வேண்டாம்

எதுவுமே வேண்டாம்

நீயும் சிரி நானும் சிரிக்கிறேன்

அதுவேதான் எல்லாமும்.

03

சாவின் ருசி

சாவின் ருசி

உத்திரத்தில் ஒரு துளி போல

தொங்கிக் கொண்டிருக்கிறது

போகும் போதும்

வரும் போதும் 

தலையை வருடிக் கொடுக்கிறது

04

குழந்தைக்கு

நிலா காட்டும்

சாக்கில் நாமும்

வானம் பார்க்கலாம்

கைகளில்

குழந்தையிருக்க

வானம் யார் பார்ப்பார்?

05

பேனாவின்

அழகான நிழல்

எழுதவிடாமல் கவனம் சிதைக்கும்

06

உனக்காக

இல்லையென்றாலும்

அடர்ந்த ரோஜாவர்ணங்களில்

என் முத்தங்களை தெருவெங்கும்

வாரியிறைத்துவிட்டுத்தான் போவேன்.

07

மரணம் என்று சொல்

வேதனை என்று சொல்

கொடூரம் என்று சொல்

தண்ணீர் என்று சொல்

விவேகம் என்று சொல்

உற்சாகம் என்று சொல்

ரத்தருசி என்று சொல்

திருடும்கை என்று சொல்

சித்ரவதை என்று சொல்

பிணந்தின்னி என்று சொல்

காலையில் எழும்போதே காத்துக் கிடக்கும் நாய் என்று சொல்

விளக்கு இல்லாத ராத்ரியில் கொட்டின தேள் என்று சொல்

ரயில் ஏறி செத்துப் போன அவளின் கழுத்தில் கிடந்த சேதமில்லா மல்லிகையென்று சொல்

நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதலென்றும் சொல்லலாம்.

08

ஒருதரம் காதல்

என்னை மீட்டுத் தந்தது

ஒருதரம் புல்லாங்குழல்

என்னை மீட்டுத் தந்தது

ஒரு வண்ணத்துப்பூச்சியும்   

என்னை மீட்டுத் தந்தது

நான்தான்

அடிக்கடி தொலைந்துவிடுகிறேன்.

09

கடந்து செல்லும் 

சிறு பறவையின் நினைவு

நாளை நிச்சயம்

இதில் ஒரு கூடு கட்ட வேண்டும்

கடந்து செல்லும்

வண்ணத்துப்பூச்சியின் நினைவு

நாளை நிச்சயம்

தேனெடுக்க இங்கு வர வேண்டும்

கன்னி தெய்வத்தின் நினைவு

மேலும் ஒரு துளி நீர் வேண்டும்

நாளை பூப்பூத்துவிடும்

சிறு செடி மரமாகிவிடும்

நாளைய நினைவோடு நகரும் நத்தை

சிலந்தி பின்னிய வெண் கம்பியில்.  

10

கடிகாரம் சரியாக இயங்கவில்லை

சரி பண்ணித் தரவும்

இயங்கவில்லையா எப்படித் தெரியும்

ரயிலை அடிக்கடி தவற விடுகிறேன்

ஆறிப்போன உணவை உண்ண அமருகிறேன்

திரைப்படம் துவங்கியபின் நுழைகிறேன்

முடியும்போது செய்திகளைத் திருப்புகிறேன்

திரும்ப வரும்போதுதான் தபாலை வாங்குகிறேன்

நான் போகுமுன் தாலி கட்டி விடுகிறார்கள்

அப்போதுதான் மூடிய கடைமுன் பையுடன்

நிற்கிறேன்

நான் கடிகாரங்களை சரி செய்து தருபவன்

நீங்கள் வேகமாக நகருங்கள்.

கவிதைத் தொகுப்புகள்:

1. “பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்” தொகுப்பு, உயிர்மை வெளியீடு (2006)

2. “நீள் தினம் ” தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2011)

3.  “இல்லாத மற்றொன்று" தொகுப்பு, உயிர்மை வெளியீடு (2012)

****

கவிதையின் கால்தடங்கள் தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கள் தோறும் அந்திமழையில் வெளிவரும்

logo
Andhimazhai
www.andhimazhai.com