இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.
இந்த வாரம் மதுரையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான காங்கிரஸுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த சம்பவம் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
தமிழகத்தில் 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என காங்கிரஸ் அறிவித்ததையடுத்து டென்ஷனானார் காங்கிரஸ் தலைவர் மூப்பனார். அதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் த.மா.கா.வைத் தொடக்கினார். 1996- பொதுத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்தது. இவர்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்தும் வாய்ஸ் கொடுக்க இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 39 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சியானது த.மா.கா. திமுகவுடனான கூட்டணி தொடர்ந்தது. 2001-தேர்தல் வந்தது. எந்தக் கட்சியுடன் கூட்டணி கூடாது எனச் சொல்லி தனிக்கட்சி துவங்கினாரோ அதே கட்சியுடன் (அதிமுகவுடன்) 2001 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்து 23 இடங்களில் வென்றது. மூப்பனார் மறைவுக்குப் பின்னர் த.மா.கா. கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சிறிதுகாலத்திலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தாய்க் கட்சியான காங்கிரசுடன் ஐக்கியமாகிவிட்டார்.. காங்கிரஸ் ஜோதியில் த.மா.கா. கலந்து சுமார் பனிரெண்டு ஆண்டுகளாகிவிட்டன. த.மா.கா. தலைவராக இருந்த வாசன் இன்றைக்கு மத்திய அமைச்சர். என்றாலும் பல்வேறு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் நெருக்கடி காரணமாக நிம்மதி தொலைந்து விட்டது அவருக்கு. காங்கிரஸ் தலைமையுடனான பிணக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். எனவே. மீண்டும் அவர் த.மா.கா. துவங்குவார் என்ற பேச்சு தமிழக அரசியலில் இறக்கைகட்டி பறக்கிறது.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மீது தமிழக மக்கள் ஏகக் கடுப்பில் இருக்கிறார்கள். இதை ரொம்ப லேட்டாக உணர்ந்த (?) தி.மு.க., காங்கிரசுடனான உறவை வேதனையுடன் துண்டித்துக்குக் கொண்டது. (ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலம் முடிய மூன்று ஆண்டுகள் இருந்தால் இந்தத் துண்டிப்பு நடந்திருக்குமா என்பது பொதுஜனத்தின் கேள்வி) மத்தியில் பதவியிலிருந்த தி.மு.க. அமைச்சர்கள் பதவியைத் துறந்தார்கள். (இதில் அழகிரிக்கு வருத்தம் என்கிறார்கள்) இலங்கை தமிழர் பிரச்னையால் காங்கிரஸ் என்றாலே தமிழகத்தில் மக்கள் எரிச்சலோடு பார்க்கும் நிலை நிலவுகிறது. மக்களின் நாடித்துடிப்பை அறிந்த மக்கள் தலைவரின் மகன் (அதுதாங்க வாசன்) இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். மத்திய அமைச்சராக இருந்தும் கூட ராஜபக்சேவின் வருகை விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது என்று அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றும் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் நலன் போன்ற விவகாரங்கள் குறித்து சூடாகவே விவாதித்தார் என்றும் செய்திகள் வெளியாகின.
ஏட்டிக்குப் போட்டியாக வாசனை காங்கிரஸ் தலைமையும் புறக்கணிக்கத் துவங்கியது. காங்கிரஸில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக தனது குடும்ப நண்பரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினாராம் வாசன்.
அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் தலைமை மீது வாசனுக்கு மேலும் சில வருத்தங்கள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதலே தாம் ஓரம்கட்டப்படுகிறோம் என்ற அதிருப்தி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு இருந்து வருகிறது என்கிறார்கள். அதிலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தமது ஆதரவாளர் யுவராஜா நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சகட்ட அதிருப்திக்குத் தள்ளப்பட்டார் வாசன். மேலும், விரைவில் முடிவடைய இருக்கும் தனது ராஜ்யசபா எம்.பி. சீட்டை வட மாநிலம் ஒன்றில் இருந்து பெற்றுத் தரவும் கட்சித் தலைமையை வாசன் கோரியிருந்தாராம். ஆனால் "மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக வேண்டியதுதானே" என்று ராகுல் கூறியிருப்பதாகச் செய்தி உலவுகிறது. இதையெல்லாம் மனதில் கொண்டு தான் முன்பு நடத்திய தமிழ் மாநில காங்கிரஸை துவக்கலாமா என்ற எண்ணம் வாசனுக்கு உதித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் தனிக்கட்சி துவங்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டினர். வாசனுக்கு ஆதரவான போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. பதறிப்போன உடனே அதை எதிர்த்தார் வாசன்.
"காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி தவறான தகவல்கள் பரப்புவோர் மீது தமிழக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் .இலங்கை தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதன் ஒருபகுதியாக இயக்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு தவறான தகவல் பரப்புவோர்களை அனுமதிக்க மாட்டேன். இத்தகைய செயல்கள் ஏற்புடையவை அல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது தமிழக காங்கிரஸ் கமிட்டி கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார் வாசன். (காங்கிரஸ் என்றைக்கு யார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது..)
ஆனால் அவரது குடும்பத்தினரோ "இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னையில், காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் செய்பாடுகளும் நடவடிக்கைகளும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது" என்ற காரணத்தை முன்வைத்து த.மா.கா.வை துவங்கிவிடலாம் என ஆலோசனைக் கூறி வருகிறார்களாம். அப்படி ஜி.கே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினால் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இளங்கோவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே காங்கிரசில் தங்குவார்கள். கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருக்கும் பல காங்கிரஸ் தலைவர்களும் வாசன் தலைமையிலான கட்சியில் இணையக் கூடும். இதேபோல் இலங்கைத் தமிழர் பிரச்சனையால் தமிழகத்தில் தலை காட்ட முடியாது என்று கருதக் கூடிய காங்கிரஸாரும் இதை சாக்காக வைத்து வெளியேறி நம்பக்கம் வரலாம் என்ற கணக்கை வாசன் தரப்பினர் போட்டிருக்கிறார்கள். சரி.. இதெல்லாம் நடக்கிறதா இல்லையா என காலம் பதில் சொல்லட்டும். அதற்குள்.. தமிழகத்தில் தே..ய்..ந்..து போய்க்கொண்டிருந்த காங்கிரசுக்கு புத்துயிர் கொடுத்த மதுரையில் நடந்த தமிழ்மாநில காங்கிரஸ் இணைப்பு மாநாட்டைப் பார்ப்போம். பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் மதுரையில் த.மா.கா. காங்கிரசுடன் இணைந்தது காங்கிரஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
தமிழகத்தில் காங்கிரசிலிருந்து த.மா.கா. விலகிய பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் அது த.மா.கா. தான் என்ற நிலை உருவானது. அத்தோடு த.மா.கா. செல்வாக்கோடு இருந்தது. காங்கிரஸ் பெயரளவில் இருந்தது. காங்கிரசுடன் த.மா.கா.வை இணைப்பது குறித்து மூப்பனார் இறந்தவுடனேயே இணைப்புப் பேச்சு வேகமாகக் கிளம்பியது. த.மா.கா. தலைவர் மூப்பானாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக காஙகிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூப்பனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பல முறை நான் அவரை சந்தித்து பேசினேன். உடல் நலம் அடைந்து தீவிர அரசியலுக்கு திரும்பியதும், த.மா.காவை காங்கிரசுடன் இணைக்கிறேன் என்று என்னிடம் மூப்பனார் கூறினார். (அப்படி போடு அரிவாளை..) ஆனால் இரண்டு கட்சிகளும் எப்போது இணையும் என்ற விவாதிப்பதற்கு இது ஏற்ற நேரம் இல்லை. த.மா.கா. காங்கிரசுடன் இணைப்பது குறித்த முடிவை த.மா.காவின் புதிய தலைமைதான்முடிவு செய்ய வேண்டும். என்றார். இதையடுத்து காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு குறித்த பேச்சு அதிகாரபூர்வமாகத் துவங்கியது எனலாம்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த இடத்துக்குக்கு காங்கிரசைக் கொண்டு வரவேண்டுமானால் த.மா.கா. இணைப்பு அவசியம் என காங்கிரஸ் துடித்துக் கொண்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க தொண்டர்கள் நிறைந்திருந்த த.மா.கா.வை தொடர்ந்து நடத்துவதில் அக்கட்சித் தலைமைக்கும் பிரச்னை இருந்தது. மாதம் முப்பது லட்சம் வரை செலவு செய்யவேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கட்சியில் இன்றைக்கு தலைவர்கள் தனித்தனி தீவுகளாகச் செயல்படும முஸ்தீப்பில் இறங்கிவிட்டார்கள் எனவே நல்ல நிலையிலேயே கட்சியை இணைப்பது நல்லது என த.மா.கா.வின் சீனியர்கள் சிலர் வாசனை நெருக்கடி கொடுக்க அவரும் ஒப்புதல் அளித்தார்.
காங்கிரசோடு த.மா.கா. இணைப்பு பேச்சு எழுந்தபோதே இது காங்கிரசுக்குத் தான் ஆதாயம் என்றார்கள் த.மா.காவினர். அது உண்மை தான் அந்தநேரத்தில் (இப்போது மட்டும் என்ன வாழுதாம்?) தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனப்பட்டுக் கிடந்தது. அப்போது காங்கிரசில் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவர் என்னிடம், "இணைப்பு என்பது எங்களுக்கு லாபகரமாக இருக்கும். காங்கிரசிற்கு அனைத்து மாவட்டங்களிலும் தலைவர்கள் இருக்கிறார்களேயொழிய சொல்லிக்கொள்ளும் நிலையில் செல்வாக்கு பெற்றவர்களோ கட்சி தலைமையை மதிப்பவர்களோ இல்லை. சமீபத்தில் திருச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர் கூட்டிய மாவட்டத் தலைவர் கூட்டத்துக்கே பதினோரு மாவட்டத் தலைவர்கள் தான் வந்தார்கள்.
மாநிலத் தலைவர் இளங்கோவன் மதுரை வந்தால் அவர் பின்னாடி கட்சிக்காரனின் இரண்டு கார்கள் தான் போகுது. கார்பரேஷன் எலக்ஷன்ல ஜெயித்த காங்கிரஸ்காரர் ஒருவர் அப்படியே அ.தி.மு.க. போயிட்டாரு. மதுரையில் காங்கிரஸ்காரங்க அதிகம் என்பதற்காக இப்போது உறுப்பினர் அட்டை வேகவேகமாகக் கொடுக்காங்க. திண்டிவனம் ராமமூர்த்தி தலைவராக இருந்தபோது அச்சடிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை இப்போது புழக்கத்திற்கு வருது, இந்த அட்டையை யாரும் விலைகொடுத்து வாங்கிக்கிடலாம் இருபத்தைந்து அட்டை ஐம்பது ரூபாய் தான்.
கட்சிப் பொறுப்பாளர்கள் கூட கட்சி நடத்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. உதாரணத்துக்கு மதுரை மாவட்டத்தில் சுதந்திரதினம், குடியரசு தினம், நேரு பிறந்தநாள் என ஆண்டுக்கு நாற்பது நிகழ்சசிகளை காங்கிரஸ் சார்பில் நடத்துகிறோம். ஆனால் இதற்கெல்லாம் வருபவர்கள் பத்திலிருந்து இருபத்தைந்து பேர் தான். மதுரை நகரில் மட்டும் எழுபத்திரண்டு வார்டுகள் உள்ளன. (இப்போது இது நூறாகியிருக்கிறது) ஒவ்வொரு வார்டிலும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்.. என குறைந்த பட்சம் பத்து நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதைத் தவிர நகர் அளவிலான தலைவர், செயலாளர், ஏ.சி.சி. மெம்பர் என மதுரையில் மொத்தம் சுமார் எண்ணூறு நிர்வாகிகள் இருப்பார்கள். ஆனால் நகர் அளவில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இருபத்தைந்து பேர் தான் மற்றவங்களுக்கு விசிட்டிங் கார்டு பர்பசுக்குத் தான் கட்சிப் பொறுப்பு. த.மா.கா. இணைந்தால் கட்சி வலுப்படும் என்று ஆதங்கப்பட்டார்.
இந்த அழுகாச்சி குரல்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க.. தன் தந்தையை நம்பி காங்கிரஸை விட்டு வெளியேறிய தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மீண்டும் காங்கிரசில் உரிய பதவிகள் பெற்றுத் தர கடும் முயற்சியில் இறங்கினார் வாசன். தமிழக காங்கிரஸ் விவகாரத்தை கவனித்து வரும் மேலிடப் பார்வையாளர்களான ரமேஷ் சென்னிதலா, ஆஸ்கர்பெர்னாண்டஸ் ஆகியோர் பலமுறை சென்னை வந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். வாசனும் டெல்லி சென்று சோனியா காந்தியையும் மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப்பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அமர்த்த அக் கட்சி ஒப்புக் கொண்டது.
தா.மா.க. இணைக்கப்பட்டால் பீட்டர் அல்போன்ஸ் அல்லது என்.எஸ்.வி. சித்தனுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்கவேண்டும் என்ற பேச்சும் அப்போது இருந்தது. அதுபோல எழுபது சதவீத நிர்வாகிகள் த.மா.கா.விலிருந்து வந்தவர்களுக்குத் தரவேண்டும். அதேநேரத்தில் இளங்கோவன், தங்கபாலு, வாழப்பாடி (அப்போது உயிரோடு இருநதார்) ஆகியோர் தங்களது மாவட்டங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கலாம் என்பதற்கு த.மா.கா. வினர் உடன்பட்டார்கள். ஆனால் மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிப்பது எங்கள் விருப்பம் என காங்கிரஸ் தலைமைச் சொன்னதை த.மா.கா. தலைவர்களால் மறுக்கமுடியவில்லை.
காங்கிரஸ் வசம் இருந்து பின்னர் த.மா.கா. கைக்கு மாறிய கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே உடனடியாக உடன்பாடு ஏற்படவிலலை. இந்த விவகாரத்தினால் இணைப்பு கால தாமதமானது. சொத்து தொடர்பாக இருதரப்பினரும் ஒரு சமரசத்துக்கு வந்துவிட்டதையடுத்து இணைப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டின. தனது கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்களுடன் வாசன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து இறுதிச் சுற்று பேச்சு நடத்தினார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த இளங்கோவன் சோனியா காந்தியால் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். பேச்சுவார்த்தை எல்லாம் முடித்ததும் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைக்கும் விழாவை 2002 சூலை 14-ம் தேதி மதுரையில் நடத்தலாம் என த.மா.கா. சொன்னார்கள்.. சென்னையில் நடத்தினால் சோனியா உள்ளிட்டோர் வந்து செல்ல வசதியாக இருக்கும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் கூறியபோது த.மா.கா. தலைவர்கள் இணைப்பு மாநாடு மதுரையில் தான்.. என பிடிவாதமாக இருந்தார்கள். அதற்குக் காரணம் குமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் த.மா.கா. வலிமையோடு இருந்தது. அதுமட்டுமில்லாமல் மூப்பனார் உயிரோடு இருந்தபோது பிரமாண்டமான காமராஜர் பிறந்தநாள் விழாவை மதுரையில் தான் நடத்தினார். 1999-ல் ஊழலும் வேண்டாம் மதவாதமும் வேண்டாம் என மூப்பனார் அறிவித்தது மதுரையில் தான். மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தொண்டர்கள் தரிசனத்தை வாசன் துவங்கியது மதுரையில். உள்ளாட்சி பிரச்சாரத்தைத் துவங்கியதும் மதுரை எனவே சென்டிமென்டாக மதுரை ஒர்க்அவுட் ஆகும் என்றார்கள் கடைசியில் மதுரையில் இணைப்பு மாநாடு என முடிவானது.
நீண்ட விவாதத்துக்குப் பின்னர் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இணைப்பு விழா நடத்துவது என முடிவானது. அதற்காக விளையாட்டு ஆணையத்துக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால் இவர்கள் விண்ணப்பித்து இருபது நாட்களுக்குப் பிறகு விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிரவேறு நிகழ்ச்சிகளுக்கு மைதானம் தரப்பட மாட்டாது என்று ஆணையம் கைவிரித்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மற்றும் தமாகவினர் வேறு இடத்தைத் தேடத் தொடங்கினர்.
(தொடரும்)
சஞ்சனா மீனாட்சி மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், தமிழின் முக்கியமான செய்தித்தாள்கள், வார இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் எழுதும் இத்தொடர் வாரந்தோறும் புதன் அன்று வெளிவரும்.