காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம் கவிதை

கவிதையின் கால் தடங்கள் 9

கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை.

# சமயவேல் (01.05.2010)


ஆத்மாநாம் கவிதைகள்

“கவிதையை நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது.
கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும்.
கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.
கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.”

# ஆத்மாநாம் என்ற எஸ்.கே.மதுசூதன் (1951-1984)


 
சென்னையில் பிறந்தவரான ஆத்மா நாம் ‘ழ‘ இதழைத் தொடங்கியவர்.‘காகிதத்தில் ஒரு கோடு‘ என்ற ஒரு புத்தகமும், அவர் இறந்த பிறகு கவிஞர் பிரம்மராஜன் அவர்கள் தொகுத்து வெளியிட்ட ‘ஆத்மாநாம் கவிதைகள்‘ என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளது. தனி மனிதனுக்கும் சமுகத்திற்கும் உலகிற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும், தனி மனிதனின் அவலங்கள் வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றியும் கவிதை வாயிலாக தீவிரமாகப் பேசி வந்த ஆத்மாநாம்,  இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று, தன் 33 ஆம் வயதில் (1984 ஜுலை மாதம் பெங்களுரில்) இறந்தார்.

33 வயது வரையே வாழ்ந்த ஆத்மாநாம் மொத்தம் எழுதிய கவிதைகள் 147. இப்போதும் ஆத்மாநாம் தம் கவிதைகளோடு, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்பதற்கு ஆதாரங்களாய் சில:

1) சுகுமாரனின் கவிதைத் தொகுப்பொன்றில் ஆத்மாநாம் மறைவை வைத்து ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது..


2) விருட்சம் வெளியீடாக “ஸ்டெல்லா புரூஸ்” எழுதிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு "என் நண்பர் ஆத்மாநாம்"


3) 2012-ல் வெளியான ராணிதிலக்-ன் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு "நான் ஆத்மாநாம் பேசுகிறேன்"

“ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது.”

# சுந்தர ராமசாமி

ஆத்மாநாம் கவிதைகளில் சில:
 
01
முத்தம்

முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தத் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக
தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்
உங்களைப் பார்த்து
மற்றவர்களும்
அவரவர்
நண்பிகளுக்கு முத்தம்
கொடுக்கட்டும்
விடுதலையின் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும்
மறந்துவிட்டு
சங்கமமாகிவிடுவீர்கள்
பஸ் நிலையத்தில்
ரயிலடியில்
நூலகத்தில்
நெரிசற் பூங்காக்களில்
விற்பனை அங்காடிகளில்
வீடு சிறுத்து
நகர் பெருத்த
சந்தடி மிகுந்த தெருக்களில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி
கைவிடாதீர்கள் முத்தத்தை
உங்கள் அன்பைத் தெரிவிக்க
ஸாகஸத்தைத் தெரிவிக்க
இருக்கும் சில நொடிகளில்
உங்கள் இருப்பை நிரூபிக்க
முத்தத்தைவிட
சிறந்ததோர் சாதனம்
கிடைப்பதரிது
ஆரம்பித்து விடுங்கள்
முத்த அலுவலை
இன்றே
இப்பொழுதே
இக்கணமே
உம் சீக்கிரம்
உங்கள் அடுத்த காதலி
காத்திருக்கிறாள்
முன்னேறுங்கள்
கிறிஸ்து பிறந்து
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து
இருபத்தியோறாம் நூற்றாண்டை
நெருங்கிக் கொண்டிருக்கிறோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து
சுத்தமாக
முத்தம்
முத்தத்தோடு முத்தம்
என்று
முத்த சகாப்தத்தைத்
துவங்குங்கள்
 

02
ஏதாவது செய்
ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.

03
ஐயோ
 
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்

04
சில எதிர்கால நிஜங்கள்
 
அரிசி மூட்டையிலிருந்து சிதறிய
அரிசி மணிகள் போல்
தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த
சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்
மொசைக் தரையில் தவறிப்போன
ஒற்றை குண்டூசி போல்
இவற்றைப் போல் இன்னும்
ஆயிரக்கணக்கான போல்கள்


05
காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன் 
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.

06
வெளியேற்றம்
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவே.

07
நன்றி நவிலல்


இந்தச் செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு.

08


நாளை நமதே


கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்
இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது
சிந்தனையாளர் சிறு குழுக்கலாயினர்
கொள்கைகளை
கோஷ வெறியேற்றி
ஊர்வலம் வந்தனர் தலைவர்கள்
மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று
மெல்லக் கொல்லும் நஞ்சை
உணவைப் புசித்தனர்
எளிய மக்கள்
புரட்சிப் போராட்டம்
எனும் வார்த்தைகளி னின்று
அந்நியமாயினர்
இருப்பை உணராது
இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர்
என் சக மனிதர்கள்
இந்தத் துக்கத்திலும்
என் நம்பிக்கை
நாளை நமதே.
 


09


நான்


இருபத்தி இரண்டு ஆண்டுகள்
படிப்பு வேலை தொழில்
எல்லாம் பார்த்தாகிவிட்டது
சந்தித்த முகங்கள்
மறக்கத் துவங்கியாயிற்று
என் தாய் இப்பொழுது விதவை
வானொலிப் பெட்டிகள் மாற்றப்பட்டு
வானொளிப் பெட்டிகள் வந்து விட்டன
கோடிக்கணக்கான வார்த்தைகள் சேர்ந்து
எங்கும் கவிதைகளாகத் தெரிகின்றன
பழைய புதிய இலக்கியங்கள்
வெளிவந்த வண்ண மிருக்கின்றன
கட்சிகள் உடைந்து
ஏராளமாய்ப் புதிய கட்சிகள்
தோன்றியுள்ளன
ஏராளமான தலைவர்கள் இறந்துள்ளனர்
புதிய புதிய தலைவர்கள் உருவாகி வருகின்றனர்
தெருக்களின் பெயர்கள் மாறி வருகின்றன
புதிய நகர்ப்புறங்கள் உருவாகியுள்ளன
விஞ்ஞானத்தில்
மெய்ஞ்ஞானத்தில்
ஏராளமான சாதனைகள் நிகழ்கின்றன
பல போர்களை
உலகெங்கும் பார்த்தாகிவிட்டது
இதோ உலகப்போர்
இதோ உலகப்போர்
என்ற அச்சம் பலமுறை வந்து விட்டது
இனி போரே இல்லை
இரு பக்கமும் சமம்
என்ற குரலும் பழகி விட்டது
அணுப் போருக்குப் பின்
புதிய சமுதாயம்தான்
என்றும் அச்சுருத்தியாகி விட்டது
இருந்தும்
இன்னும் ஒருமுறை கூட
அண்டை வீட்டானுடன் பேசியதில்லை.

10


எழுதுங்கள்
 
எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை
உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்
உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை
வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்.
 
 

11
தரிசனம்
 
 கடவுளைக் கண்டேன்
 எதையும் கேட்கவே தோன்றவில்லை
 அவரும் புன்னகைத்துப்
 போய்விட்டார்
 ஆயினும்
 மனதினிலே ஓர் நிம்மதி.
 
 

12
சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

13
சுற்றி
 
அரச மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?
 
 

ஆத்மாநாம் கவிதைத் தொகுப்புகள்:

1. ஆத்மாநாம் படைப்புகள் - பதிப்பாசிரியர்: பிரம்மராஜன், காலச்சுவடு பதிப்பகம் (2002)

****

அறிமுகக்குறிப்பு  :

செல்வராஜ் ஜெகதீசன் 1969ம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.தற்சமயம் பணி நிமித்தம் (மின் பொறியாளர்)அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.

”அந்தரங்கம்” (2008), “இன்னபிறவும்”(2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்”(2010) , நான்காவது சிங்கம் (2012) ஆகிய கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன.

கவிதையின் கால்தடங்கள் தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கள் தோறும் அந்திமழையில் வெளிவரும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com