பால் நிற இரவின் மேல் சொட்டிய இரு துளி தேநீர்
எனது கனவுகளின் சிறகுகளில் ஒன்று உதிர்ந்து விலகி
உனது வெண்முக்காடாகப் பறந்து அலைதிரளும்
நளின நெளிதலுக்குள்
நிலா மறைவதும் தெரிவதுமாக
வெட்கமுற்று வெளிர்கையில்
பால்நிற இரவின் சிற்றலைகள்
நம் பாதம் நனைத்து விண்மீள்கிறது
இரவின் தடாகத்தில்
இருமருங்கும் மிதக்கும் சன்னல்கள்
வழியே
பறந்து வந்து கிடந்த
கிழிந்த ஒளித்துண்டுகள் மேல்
நாம் இணைந்து நடக்கையில்
அக் குறுந்தெருவின் அணிகலன்கள் ஆனோம்
நீயும் நானும்
பனித்துளிகளால் குளித்து முடித்திருந்த
உனது இல்லம்
நின் அழகு வதனத்தின்
அமைதியையும் நாணத்தையும் சூடியிருந்தது
உதடு குவித்து ஊதிய
உன் கட்டளைக்குப் பணிந்து
தூசிகள் பறந்தொதுங்க
நீ சுட்டிய இருக்கையில் அமர்கிறேன்
உள்ளறையிலிருந்து வந்தபோது
உன் கைகள் பூங்கொத்துபோல
ஏந்தித் தந்த
சித்திரப் பூ தையல் ஆல்பம் -_
ஏடுகளைப் புரட்டுகிறேன்
இரவின் ரகசியக் கைகள்
எண்ணங்களைப் புரட்டுவது போல
மஞ்சள் பச்சை ரோஸ் நிறங்களில்
நீ வனைந்த குறு ஆடை வடிவங்கள்
பலமழைப் பருவங்கள் காத்திருந்த
வகைவகையான வானவில்களை
கத்தரித்து வந்து ஒட்டி இருக்கிறாய்
காதலின் நறுமணம்
கமகமத்து ஆவியாகிவிடும் என
நீ தந்த தேநீரை
அருந்தச் சொல்லி அவசரப்படுத்தினாய்
உனது ஊரின்
தூரக்கிழக்கு இருள்வெளிக்குள்
மின்தொடர்வண்டியின் சர வெளிச்சங்கள்
நீந்திப் போயின பெருமீன் கூட்டமென
தழைத்த இரவின் கருத்த கிளைகளை
விலக்கியும் ஒதுக்கியும் வழியமைத்து
பரிவுடன் அழைத்து வந்தாய்
வழியனுப்ப
உன் இமைகள் வரைந்த
பிரிவின் வரிகள்
கண்களில் பதிந்து ஒளிர்ந்தன
மலைப்பரப்பில் தேங்கிய சிறுமேகம் போல
உன் மார்புச் சரிவில் தூங்கிய
யாரோவொரு குழந்தையின்
துவண்ட கைகளில் முத்தமிடுகையில்
என் இதழ்களின் ஈரம்
உன் இதயத்தில் பனித்தூவலாகப் பொழிந்தது
நிலவு மறுவொருமுற
மேகமுக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டது
(என் பிரியமான இஸ்லாமியத் தோழிக்கு)
*********
மலைராணிக்கு ஒரு பாடல்
மலையரசியின்
நெளிந்தலையும் பசுங்கூந்தல்
படியச் செருகிய கொண்ட ஊசிகளில்
பேன்களாக ஊர்ந்து போகிற
பேருந்துகளும் வாகனங்களும்
தேயிலைச் சரிவு கன்னப் பரப்புகளில்
தேங்கிய
ஆயிரமாயிரம் முத்தங்களின்
ஈரப்பதிவுகள
வாரியள்ள வந்த இளஒளி
நாணி ஒதுங்கி முகம் பொத்துகிறது
அவ்வப்போது
அவளது
ரகசிய ஆசைப்பாடல் வரிகள்
எண்ணிறந்த முலைக்காம்புகளில்
சிற்றருவிகளாக வழிந் போவதை
செங்குத்துப் பாறைகள்
அள்ளி அணிந்துகொண்டன
பனித்துகள்களால் நெய்த
நீள்வெண்துகில் நழுவிச் சரிவதை
யுகம் யுகமாக
இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறாள் அவள்
பறந் போகும் திடமேகங்கள்
படர்ந்து பொழிந் போகினும்
ஓயாத காதல் மயக்கத்தால்
ஒளிரும் பள்ளத்தாக்கை பரப்பிவிரித்து
மல்லாந்து கிடக்கிறாள் மலையரசி
_ ஏலகிரி மலையின் நினைவிற்கு
*********
ஒருநாள் நகரம்...
கலங்கிய குளம் மெல்லத் தெளிந்து வருவதுபோல
புலர்ந் கொண்டிருக்கையில்
இரவின் தடாகத்தில்
உயரே துள்ளித் தாவிய
விடிமீன்
நெடிய குன்றின் நெத்திச் சுட்டியாக
அசைகிறது
தொடுவான நிறங்களினுள் கூடமர்ந்த
பறவகளின் பாடல்கள்
பகலின் எல்லைமேல் மோதி உதிர்கின்றன
மலர்ச்செடிகள் முகிழ்த்த
புன்னகைகளைக் கொய்தவள்
முன்னிரவுப் புணர்வின் நாணத்தை
சேர்த்த் தொடுத்துத்தெடுத்து வந்திருக்கிறாள்
சந்தைக்கு
மனிதப் பாதங்கள்
நெய்த தூசுவலைகள்
வண்ணங்கள் மேல் விரிந்து விழுந்து
விரவி அசைகின்றன
வியாபாரக் கூக்குரல்களின்
கூர் விளிம்புகளில் பறவைகளின் பாடல்கள்
அறுபட்டு வீழ்கின்றன
கனித்தோட்டங்களில் திருடிய நிறங்களை
அலகுகளில் ஏந்திப் போகின்றன பறவைகள்
தொடுவானக் கூடமைக்க
*********
நீயற்ற ஊரில்
நீயாகித் தெரிந்த பூத்த மரங்கள்
கண்ணீர்த் துளிகளென உகுத்த
பழுப்புநிற இலைகள்
கால்களுக்குக் கீழே
நொறுங்கி இசைக்கிறது
உனது பெயரை ஒரு பாடலாக ஒலிக்கும்
சங்கீதக் குறிப்புகளாக
முக்காடு தோரணவாயில் ஒளிரும்
உனது முக்கோண முகமாக
இரயில் சன்னலில் தெரியும்
தேய்ந்த நிலவின் உதயம்
துயரத்தின் சாம்பல் பொழிகிற
தூரத்து மலைகள் மீது
- கூத்தலிங்கம்
கூத்தலிங்கம் புதிய பார்வையில் உதவி ஆசிரியர். குழந்தைகளுக்கு கதைசொல்லல் தொடர்பாக தமிழகம் முழுவம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரம் குழந்தைகளிடம் படைப்பாற்றலை அவர்களிடயே வளர்க்கும் முகமாக பணியாற்றியிருக்கிறார். குழந்தைகளுக்காக அயல்தேச நாட்டுப்புறக் கதைகள் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. வெவ்வேறு இலக்கியப் பத்திரிக்கைகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
வாழ்க்கையில் ஏற்படும் வலிகளும் அழகியலும் இவரை கவிதை எழுதத் தூண்டுவதாகக் குறிப்பிடுகிறார்.
ஆகஸ்ட் 17, 2007