சிவந்த மண் - போதியின் நிழல் 23

சிவந்த மண் - போதியின் நிழல் 23

‘‘பாலவர்மரே கேளும். ததாகதரின் தர்மம் செழிக்க அசோக மகாராஜா பாடுபட்டு உழைத்ததைப் போல தன் உழைப்பையும் கொடைகளையும் கொடுத்தவர் கனிஷ்க ராஜா. அவர் ஆண்ட நாடான காந்தாரத்திலும், அவர் தலைநகரான புருஷபுரத்திலும்(பெஷாவர்) சில நாட்கள் இங்கு வருவதற்கு முன்பாக அலைந்து திரிந்து ததாகதரின் சுவடுகளின் ஞாபகச் சின்னங்களை தரிசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். ஆரிய தேசத்தில் இருப்பவர்களை எண்ணிப் பொறாமைகூட வந்தது. சதா புத்தர் பிரானைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்க மட்டும்தான் எம் சீன தேசத்தில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதுவோ போதிசத்துவர்களும் புத்தர்களும் பிறந்த மண். உலவிய பூமி. சுவாசித்த காற்று. அருந்திய நீர். என் உள்ளம் எம்மாதிரியான ஒரு எழுச்சியை அடைந்து பெருமிதம் அடையும் என்பதை நீரே சிந்தித்துப்பாரும்.
இங்குள்ள மக்களிடம் ஏதோ ஆன்ம சக்தி உள்ளது. அதனால்தான் உலக மனங்கள் அனைத்தையும் உய்விக்கும் அபூர்வ சிந்தனைகள் இங்கே பிறக்கின்றன.

சிந்து மகாநதியின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த காந்தாரம் பல அறிஞர்கள் பிறந்து பௌத்தத்துக்கு வலு சேர்க்கும் சூத்திரங்களையும் சாஸ்திரங்களையும் அளித்திருக்கிறார்கள். ஆகையால் அங்கு ததாகதரின் தர்மம் செழிப்பாக இருந்ததைக் கண்டேன்.

புருஷபுரத்தில் புத்தரின் பிச்சைப்பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்தூபியை எழுப்பி இருந்தார்கள். அதை தரிசித்தேன். ஆனால் அந்த பாத்திரம் அங்கில்லை. அந்நகரின் இன்னொரு பகுதியில் சுமார் 100 அடி உயரமான ஒரு போதிமரத்தையும் கண்டேன். இவ்வுலகம் இதுவரை கண்டுள்ள நான்கு புத்தர்களும் இம்மரத்தின் கீழ் அமர்ந்துள்ளனர் என்று சொன்னார்கள். இன்னும் வரப்போகும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஆறு புத்தர்களும் கூட இம்மரத்துன் அடியே அமர்வார்கள். அப்படியொரு பாக்கியம் இதற்கு. நான்கு புத்தர்களின் சிலைகளையும் மரத்தின் அடியில் வைத்திருந்தார்கள். கண்களை மூடி அம்மரத்தின் காற்றை ஆனந்தமாக சுவாசித்தேன்.

அருகிலேயே மிகப்பெரிய ஸ்தூபி ஒன்று உள்ளது. வைரங்களும் பொன்னும் பொதிந்த 400 அடி உயரமான ஸ்தூபி. கனிஷ்கர் கட்டிய மகாஸ்தூபி. இதற்கு சற்றுத் தள்ளி வெண்ணிறத்தில் 18 அடி உயரத்தில் ஒரு சிலை ஒன்று நிற்கிறது. வெள்ளைக் கல்லில் வழவழவென்று செதுக்கப்பட்ட சிலை. அங்கொரு மூத்த பிக்குவைக் கண்டேன். அவர் கூறியது சற்று வியப்பாக இருந்தது. சில இரவுகளில் இந்த சிலை மகாஸ்தூபியைச் ச்ற்றி வலம் வருமாம்.

அங்கிருந்து வடகிழக்காகப் புறப்பட்டேன். சில நாட்கள் பயணத்துக்குப் பின் புஷ்கலாவதி நகருக்கு வந்து சேர்ந்தேன். அங்கு அசோகன் கட்டிய ஸ்தூபி ஒன்று உள்ளது. நான்கு புத்தர்களும் தர்மத்தை போதித்த இடம் அது என்பதை நினைவுகூறவே அங்கு இந்த ஸ்தூபி நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நகரத்தின் இன்னொரு பகுதியில் இருந்த விஹாரம் ஒன்றில் அசோகர் எழுப்பிய இன்னொரு ஸ்தூபி. இங்குதான் ததாகதர் தன் முந்தைய பிறவிகளில் போதிசத்துவராக தர்மகாரியங்களைச் செய்திருக்கிறார். ஆயிரம் பிறவிகளை இங்கே அவர் மன்னராகப் பிறந்து கழித்துள்ளார். தன் கண்களைக் கூடப் பிடுங்கி தானமாக அவர் அளித்த கதைகளைக் கேட்டேன். இவை நடந்த இடங்களில் எல்லாம் ஞாபகச் சின்னங்களை அமைத்துள்ளனர். எல்லா இடங்களிலும் தண்டனிட்டு வணங்கினேன்.

அங்கிருந்து வடகிழக்காக வரும் வழியில் ஆறுகளையும் மலைகளையும் கடந்தோம். சுபாவாஸ்து நதிக்கரையில் இருந்த ஒரு நகரில் தன் உடலை காளிராஜாவுக்கு புத்தர் கொடுத்த இடம் உள்ளது. புத்தர் அப்போது ஷாந்திரிஷியாக பிறந்திருந்தார். இன்னும் வடகிழக்காக நான் வரவர குளிர் அதிகமாகிவிட்டது. சுவாவாஸ்து நதி உற்பத்தியாகும் ஏரிக்கரைக்கு வந்தேன். அங்கு புத்தரின் காலடிச்சுவடி ஒரு பாறையில் இருந்ததைக் காண்பித்தனர்.


இந்த ஏரியில் அபாலாலா என்கிற நாகம் வாழ்ந்துவந்தது. அதை புத்தர் வென்ற பின்னர் இந்த காலடிசுவட்டை விட்டுச்சென்றதாக சொன்னார்கள். அந்த நதியின் சுவடைப் பின்பற்றிச் சென்றால் ததாகதர் தன் காவி ஆடையைத் துவைத்த இடம் வருகிறது. அங்கு துவைத்ததன் சுவடுகள் கல்லில் மென்மையாகப் பதிந்திருப்பதைக் கண்டு உணர்ச்சிப் பெருக்கில் நான் விம்மினேன். பாலவர்மரே, உணர்ச்சிகளை எந்நேரமும் கட்டுக்குள் வைக்கவேண்டும் என்றுதான் மனிதன் விரும்புகிறான். ஆனால் மனித மனம் எழுச்சிகொள்ளும்போது அவை தடைகளை உடைத்துக்கொண்டு ஒரு பேரருவியாகப் பாய்கின்றன.

அங்கிருந்து வரும் வழியில் ததாகதர் தன் முற்பிறவியில் யட்சன் ஒருவனுக்காக, அவனது பாடலால் மகிழ்வுற்று மரத்திலிருந்து விழுந்து தன் உடலை ஈந்த இடத்தைக்கண்டேன்.

இன்னும் கொஞ்சம் தள்ளி வந்தால் ததாகதர் மைத்ரி பாலர் என்ற பெயரில் ஒரு அரசனாக வாழ்ந்த இடம் குறுக்கிடுகிறது. ஐந்து யட்சர்களுக்கு தன் உடலை கத்தியால் வெட்டி அவர் கொடையாக அளித்த பூமி அது. இங்கு அசோக மஹாராஜா ஒரு ஸ்தூபியைக் கட்டி இருக்கிறார்.
இன்னும் சற்றுத் தூரம் பயணித்தால் சுயம்புவாக எழுந்த முப்பது அடி உயர ஸ்தூபி உள்ளது. ததாகதர் ஏதோ ஒரு பிறவியில் தர்மத்தைப் போதித்தார். அவர் விலகிச்சென்ற பிறகு இவ்விடத்தில் ஸ்தூபி தானாகவே எழுந்து நிலைகொண்டது என்று எனக்குக் கூறப்பட்டது.

வழியில் தாலியோ (தாரில்) என்கிற பள்ளத்தாக்கு குறுக்கிட்டது. இங்கொரு அழகான மைத்ரேயே போதிசத்துவரின் 100 அடி உயரமான மரச்சிலையைக் கண்டேன். பொன்னிறத்தில் மிககம்பீரமாக தெய்வீக அம்சத்துடன் இருந்தது. இந்த தெய்வீக அம்சத்துக்கு ஒரு காரணமும் இருக்கிறது. இச்சிலையை பிக்கு மத்யாந்திகர் செய்ய விரும்பினார். இதற்காக ஒரு திறமை வாய்ந்த கலைஞனையும் அவர் தேர்வு செய்தார். மைத்ரேயேரை இதுவரை யாரும் கண்டதில்லை அல்லவா? அதற்காக அவர் தன் ஆன்ம வல்லமையால் துஷித சொர்க்கத்துக்கு அக்கலைஞனை அனுப்பி மைத்ரேயரைக் கண்டு வர அனுப்பினார். இந்த சிலையை மைத்ரேயர் போலவே வடிப்பதற்காக மூன்றுமுறை துஷித சொர்க்கத்துக்குச் செல்லும் வாய்ப்பு அக்கலைஞனுக்குக் கிட்டியது.

இங்கிருந்து தெற்காகப் பயணம் செய்தபோது சிந்து நதியைக் கண்டேன். பெரும் கடலென அகன்றிருந்தது அது. இங்கிருந்து பார்க்கையில் அக்கரையே தெரியவில்லை. தெளிவான குளிர்ந்த நீர், அசுரவேகத்தில் அச்சுறுத்துவதாகப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. ஆரிய தேசத்திலிருந்து யாரேனும் அரிய சொத்துக்களுடன் இந்நதியைக் கடந்தால் இது அவர்களை விழுங்கிவிடும் என்று சொல்கிறார்கள். உண்மையா பாலவர்மரே?.... உமக்கு எங்கே தெரியப்போகிறது? நீர் தென்னாட்டுக்காரர் அல்லவா?
நதியைக் கடந்தால் தட்சசீலம் வருகிறது. மிகப்பெரிய கல்விமையம். இந்துக்களின் சாஸ்திரங்கள் கற்பிக்கப்படும் இடமாக புகழ்பெற்றிருந்த இடம். இதனருகே அசோகரால் அழகாகக் கட்டப்பட்ட ஸ்தூபி ஒன்றுள்ளது. எப்போது குளிர்ந்த ஒளி இந்த ஸ்தூபியில் கசிகிறது.

இந்த ஸ்தூபிக்கும் ஒருகதை இருக்கவேண்டுமே என்று தானே கேட்க நினைக்கிறீர்கள்? நிச்சயமாக உண்டு. இங்கு ததாகதர் முற்பிறவியில் சந்திர பிரபா என்ற பெயருடைய மன்னராகப் பிறந்திருந்தார். போதிசத்துவர் என்னும் தகுதியைப் பெற்றிருந்த அவர், முழுமையான அரியஞானத்தை எய்தும் பொருட்டு தன் தலையை அவர் இங்கே வெட்டிக்கொண்டார்.
ததாகதரின் முற்பிறவிச்சமபவ்ங்களால் என் பயணம் இப்பகுதியில் நிறைந்திருந்தது நண்பரே, அவரது முற்பிறவிகள் சொல்வதெல்லாம் ஒன்றேதான். தானம் செய், அன்பு செய், அள்ளிக்கொடு. உன்னிடம் எதுகேட்டாலும் கொடு. கண்ணைக் கேட்டாலும் பிடுங்கிக் கொடு. தசையைக் கேட்டால் வெட்டிக்கொடு.

வரும் வழியில் உதிரச்சிவப்பாய் இருந்த ஒரு பகுதியைக் கண்டேன். மரங்களும் இலைகளும் புற்களும் கூட சிவந்திருந்தன. நீரும் சிவந்திருந்தது. அது ததாகதர் ஏழு பசித்த புலிக்குட்டிகளுக்கு தன் உடலைத் தின்னக் கொடுத்த இடம். அவரது குருதி ஆறாகப் பாய்ந்து அப்பகுதியை நனைத்தது. அதன் சிவப்புதான் இன்னும் படர்ந்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் எனக்கு எடுத்துச் சொன்னார்கள்.


பாலவர்மரே, உங்கள் தேசத்தின் அருமை உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ.. என் பயணத்தில் என் உள்ளம் நெகிழாத ஒரு நாள் கூட இல்லை என்னும் அளவுக்கு ததாகதரின் தர்மம் செழித்து ஒரு மழைக்கால வனமென இங்கே படர்ந்துள்ளது. அந்த தர்மமே நம் இருவரையும் இந்த காசுமீர மண்ணில் சந்திக்கவும் வைத்திருக்கிறது.

புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி....சங்கம் சரணம் கச்சாமி!!!’’ -பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

logo
Andhimazhai
www.andhimazhai.com