சுவையான சமையல் குறிப்புகள்-1

சுவையான சமையல் குறிப்புகள்-1

 ஒக்காரை :

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையின்போதும் மாப்பிள்ளை மறுவீட்டு அழைப்பின் போதும் செய்யப்படும் ஒரு இனிப்பு வகைகளில் ஒன்று இது.

தேவையானவை:

கடலைப்பருப்பு– 2 கப்
வெல்லம் – 2 கப்
தண்ணீர் – 1 கப்
நெய் – ¼ கப்
ஏலம் - சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
உலர்திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

நன்கு ஊறவைத்தக் கடலைப்பருப்பைத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து மண், தூசி என ஏதாவது இருப்பின் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் வெல்லம் கரைந்தத் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதி வந்து பொங்குபதத்தில் இறக்கிவைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து சிறிது நெய் ஊற்றி அரைத்த கடலைப்பருப்பை கைவிடாமல் உசிலி கிளறுவதுபோல் கிளறவும். பின்னர் வெல்லக்கரைசலை ஊற்றிக் கிளற உதிரி உதிரியாக வரும். அதனை ஒரு தட்டில் கொட்டி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை இவற்றுடன் ஏலப்பொடியை சேர்த்து கிளறி பரிமாறவும்.

கடலைப் பருப்பை நீண்டநேரம் ஊறவைத்தால்தான் தண்ணீர் ஊற்றாமல் அரைக்க முடியும். கடலைப்பருப்பில் செய்யப்படுவதால் புரதச் சத்தும், வெல்லம் சேர்ப்பதால் இரும்புச் சத்தும் நிரம்பியது. நெய் அதிகம் தேவைப்படாத பதார்த்தம். கடலைப்பருப்பில் செய்யும் இந்த ஒக்காரையை பயத்தம்பருப்பிலும் செய்யலாம். பயத்தம்பருப்பில் செய்தால் மெதுவாக இருக்கும். இந்த இனிப்பு ஒக்காரை அதிக சத்துள்ளது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.

தொகுப்பு: பொடிசி

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com