சுவையான சமையல் குறிப்புகள்-3
முளைகட்டியபயிறு சாலட் :
நவராத்திரியின்போதுதான் பயறுகளை வைத்து சுண்டல் செய்ய வேண்டும் என்றில்லை. பயறுவகைகளை எப்போதும் சுண்டலோ, சாலடோ செய்து சாப்பிடுவது அவசியம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – 1 கப் (முளைகட்டியது)
கொண்டைக்கடலை – 1 கப் (முளைகட்டியது)
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
மேலே தூவ:
ஓமப்பொடி (காரபூந்தி)
வேர்க்கடலை
மிக்ஸர்
(இவற்றில் ஏதேனும் ஒன்றை மேலே தூவி பரிமாறலாம்)
எப்படி முளைகட்டுவது?
ஏழு, எட்டு மணிநேரம் ஊறவைத்து ஒரு காட்டன் துணியில் முடிந்து வைத்து விடவேண்டும். ஏழு எட்டு மணிநேரத்தில் முளைகட்டிவிடும். ஊறவைத்து எடுத்து ஹாட்பாக்ஸில் வைத்தாலும் சீக்கிரம் முளைகட்டிவிடும். வெயில்நேரத்தில் விரைவாகவும், குளிர்காலத்தில் தாமதமாகவும் முளைகட்டுதல் நிகழும்.
செய்முறை: ஊற வைத்த பயிறுகளை நன்கு அலசி துணியில் கட்டிவைத்து முளைகட்டச் செய்ய வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பரப்பி தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச்சாறு, உப்பு தூவி ஒன்றாகக் கலந்துகொள்ளவேண்டும். பரிமாறும் முன் அதன்மேல் வேர்க்கடலை, காரப்பொரி, மிக்ஸர் இவற்றில் ஏதேனும் ஒன்றைத்தூவிக் கொள்ளலாம்.
பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது அவ்வளவு நல்லது. வெயில்காலத்திற்கேற்ற சில்லென்ற இந்த சாலட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
குறிப்பு: முளைகட்டிய பயிறுவகைகளை வேகவைக்காமலே சாப்பிடலாம். விரும்பினால் வேக வைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். பயறுகளை மட்டும் வேக வைத்து இறக்கி வைத்து மற்றவற்றை ஒன்றாகக் கலந்து பரிமாறலாம்.
தொகுப்பு: பொடிசி
(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும். சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)