கவிஞர் அறிவுமதி
கவிஞர் அறிவுமதி

திரையிசைப் பாடலும் சிறையிசைப் பாடலும்

பெருவழிப்பாதை - 7
Published on

நாம் மொழியால் இணைந்துவிடக்கூடாது என்பதற்காக சாதியால் பிரித்தார்கள்.

நாம் இனத்தால் இணைந்துவிடக்கூடாது என்பதற்காக மதத்தால் பிரித்தார்கள்.

-இப்படி ஆறே வரிகளில் பல்லாண்டுகால இந்திய அரசியலைச் சொன்னவர் கவிஞர் அறிவுமதி. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் உலகத்தமிழ்ப்பீட விருது இவருக்குத்தான் அண்மையில் வழங்கப்பட்டது.

தன்கவிதைகளை அடையாளமாகக் கொண்டு தன்னை முன்னிறுத்திக் கொள்வதுதான் கவிஞனின் பணி. ஆனால் தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு தன்கவிதைகளை பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய பேராயுதமாக உயர்த்திப்பிடிப்பதுதான் அறிவுமதி கடந்துவந்த பாதை

விருத்தாசலம் வட்டாரத்தைச் சேர்ந்த சு.கீணனூர் என்னும் சிறுகிராமத்தில் ஒரு தி.மு.க. குடும்பத்தில் பிறந்தவர் மதியழகன். கல்லூரியில் படிக்கும்போது தன் நண்பன் அறிவழகனின் பெயரில் பாதியைச் சேர்த்துக்கொண்ட மதியழகன் அறிவுமதியானார்.

கவிஞர் மீரா வழி அப்துல்ரகுமானைச் சென்றடைந்தார். அறிவுமதி என் வார்ப்பல்ல, வளர்ப்பு என்று அப்துல்ரகுமான் அறிவிக்குமளவுக்கு கவிதையில் வளர்ந்தார். புல்லின் நுனியில் பனித்துளி என்னும் ஹைக்கூத் தொகுப்பு தமிழில் ஹைக்கூ வடிவத்தை ஆழமாகப்பதியச்செய்த தொகுப்புகளில் ஒன்றாகும்

அழகியலைப் பாடும்போது பனித்துளி யாகவும், அரசியலைப்பாடும்போது நெருப்புத்துண்டுகளாகவும் சொற்களைக் கையாளும் வல்லமை அவருக்கு வாய்த்தது.

பிரியமானவளே, அன்பான ராட்சசிக்கு, ஆயுளின் அந்திவரை போன்ற தொகுப்புகள் அன்றைய காதலர்களின் வேதப்புத்தகங்களாகத் திகழ்ந்தன.

நிரந்தர மனிதர்கள், அணுத்திமிர் அடக்கு, குப்பிகடித்த புலிப்பல் போன்றவை தரமான அரசியல் கவிதைத்தொகுப்புகளாகும். குப்பி கடித்த புலிப்பல் புலிகளின் தலைவருக்கு மிகவும் பிடித்த புத்தகமாகும்.

நட்புக்காலம் ஆண் பெண் உறவில் புதிய புரிதலை உருவாக்கியது, தாய்ப்பால், சங்கத்தமிழ் போன்றவை தொன்மத்தின் தமிழ்ச்சுவையைப் பதிவு செய்தன. இவையெல்லாம் அறிவுமதி என்னும் கவிஞனின் படைப்புகள். மொழியாலும், படைப்புத்திறனாலும் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

இதனால் அவர் மனநிறைவு பெற்றுவிடவில்லை. அரசியல், சமூக களச்செயல்பாடுகளில் நேரடியாகப் பங்குபெற்றார். எண்பது, தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த கவியரங்க வடிவத்தில் அறிவுமதி தமிழ்நாடு முழுவதும் பெரும்புகழ் பெற்றார், ஆயிரக்கணக்கானோர் கூடும் அந்நிகழ்வுகளை தமிழ்த் தேசிய அரசியல் பிரகடனத்துக்கான குரலாய் ஒலித்தார், அரசியல் கூட்டங்களைவிடவும் அறிவுமதி கவிதை வாசிக்கும் அரங்குகளில் குறிப்பெடுக்க உளவுத்துறையினர் வரத் தவறியதே இல்லை.

வாணியம்பாடி தோல்  தொழிலாளர்கள் மாநாடு நடத்த அரசு அனுமதி மறுத்தது. அதைக் கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசுக்கெதிராக முழக்கமிட்டு ஊர்வலம் போயினர். அதை வாழ்த்தி கவிதை வாசித்த அறிவுமதியும் ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அதில் நூற்று இருபது பேர் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அறிவுமதியும் தானாகச் சென்று கைதானார். போராட்டத்தை வாழ்த்த வந்த நீங்கள் ஏன் கைதாகிறீர்கள், இறங்கிப் போங்கள் என்று போராட்டக்குழுவின் தலைவர் சொன்னார். ஓர் அநியாயம் நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துவிட்டு என்னால் திரும்பிப் போகமுடியாது, நானும் உங்களோடு சிறைக்கு வந்தே தீருவேன் என்று 27 நாட்கள் தொரப்பாடி சிறையில் இருந்தார்

அப்போது அவர் இயற்றிப்பாடிய பாடல், போராளிகளின் தேசியகீதமாகப் புகழ்பெற்றது.

தொரைப்பாடி சிறையினுள்ளே, நானும் தூங்காம தூங்கையிலே வந்தது வந்தது ஞாபகம், வாடாத பூப்போன்ற உன்முகம்...

அப்பாவைக் காணோம்ன்னு கேட்டியா, நானும் வருவேன்னு தூங்காம பாத்தியா... அழவேண்டாம் மகளே, என் அன்பான மகளே

நீமட்டும் மகளல்ல, நீ மட்டும் உறவல்ல பாரெங்கும் உள்ள பாட்டாளி பெற்ற மகளெல்லாம் மகளே, நமக்கு உலகெல்லாம் உறவே...

திரையிசைப்பாடல்கள் எழுதுவதற்கு முன்பே, அவர் எழுதிய சிறையிசைப்பாடலை அவர் பாடிக்கேட்டால் பெருமிதமும், கண்ணீரும் ஒருங்கே வரும். ஈழப்போராட்ட காலத்தில் அவர் வாசித்த ஒரு கவிதைக்காக வழக்குத் தொடுக்கப்பட்டு, பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு நடந்து, பின் அந்த வழக்கு தள்ளுபடியானது.

திரையிசையில் பாடலாசிரியராக அழகழகான பாடல்களை அவர் படைத்தார்.

”முத்தமிழே, முத்தமிழே.. முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன..” பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் இசைஞானி அவர்களின் இசையில் வந்த இந்தப் பாடல் தொடங்கி அவர் எழுதிய எல்லாப் பாடல்களையும் ஆங்கிலச் சொற்கள் கலவாமல் எழுதவேண்டும் என்ற வைராக்கியத்தோடு எழுதினார்.

சிறைச்சாலை, தேவதை போன்ற பாடல்கள் தமிழ்ச்சுவையை அள்ளித்தந்தவை.

கவிதையே தெரியுமா... (ஜெயம்), எங்கே செல்லும் இந்தப்பாதை(சேது), அழகூரில் பூத்தவளே, என்னை அடியோடு சாய்த்தவளே(திருமலை) என்பனபோன்ற பாடல்கள் இன்றும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

இலக்கியம், திரைப்பாடல்கள் எதையும் அவர் பொருள்தேடும் நோக்கத்தோடு பயன்படுத்தியதில்லை.. தானாகப் பொருள்சேரும் நேரத்தில் அதனை உதறிச்செல்வதே அவரது இயல்பு.

உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன், இல்லாயின் பிறர் இல்லம் தட்டுவேன்- என்னும் கவியரசர் கண்ணதாசன் வரிகள் அறிவுமதிக்கு முற்றிலும் பொருந்தும்.

உள்ளேன் அய்யா என்ற பெயரில் அவர் ஒரு படத்தை இயக்குவதற்காக, புதுவையைச் சேர்ந்த அற்புதம் என்னும் தயாரிப்பாளர் ஒரு அலுவலகத்தை வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தார். அந்தப்படம் தள்ளிப்போனது, ஆனால் 73, அபிபுல்லா சாலை, தி.நகர் என்ற முகவரியிலிருந்த அந்த அலுவலகம் பல கவிஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், திரைப்பட இயக்குநர்களுக்கும் முகவரியானது.. பழநிபாரதி, கபிலன், நா.முத்துக்குமார், யுகபாரதி போன்ற இளம்கவிஞர்களெல்லாம் அறிவுமதியிடம் பயிற்சி பெற்றவர்களே.

சீமான், பாலா, சுந்தர்.சி, திருமாவேலன், இரா.கண்ணன், தாமிரா, செழியன், ஆர்தர் வில்சன், விஜய்மில்டன், இசாக், கவிதாபாரதி, செல்வபாரதி, தேன்மொழி, தபூசங்கர், நிழல் திருநாவுக்கரசு, ஆசு, எஸ்.சண்முகம் என்று தொடங்கி இன்று பல்துறையிலும் ஆளுமைகளாக் இருக்கின்ற பலருக்கும் அறிவுமதி உந்துதலாக இருந்திருக்கிறார். 

அய்யா நல்லகண்ணு, வைகோ, அப்துல்ரகுமான், பாலுமகேந்திரா, பாரதிராஜா, தொல்.திருமாவளவன், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, தாணு, ட்ராட்ஸ்கி மருது, வீர சந்தானம் முதலிய பல்வேறு ஆளுமைகள் உரிமையோடு அந்த அலுவலகத்திற்கு வந்து போயிருக்கிறார்கள்

தமிழ்ப்பற்றும் தமிழ்தேசியப்பற்றும் கொண்ட அறிவுமதி ஈழப்போரை முன்னிட்டு இனி திரைப்பாடல்கள் எழுதமாட்டேன் என்று அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் தனியே பயணம்செய்து அவர் கண்டுபிடித்துக் கொண்டுவந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள் பலநூறு பேர் இருப்பர்.

மற்ற கவிஞர்கள் கவிதைகளைப் படைத்தார்கள், அறிவுமதி மட்டும் எண்ணற்ற படைப்பாளர்களைப் படைத்தார்... தங்கள்தங்கள் துறைகளில் அவரால் உருவாக்கப்பட்டவர்கள் உள்ளேன் அய்யா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து தமிழ்ப்பாடல் உலகம் முழுக்கவும் தமிழ் இருக்கும் மண்ணிலெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது, 

அவர் சென்னையைத் துறந்து மீண்டும் தான் பிறந்துவளர்ந்த கிராமத்திற்குத் திரும்பச்சென்று, தமிழ்ப்பண்பாடு, தொன்மம், தனித்தமிழ் வளர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். 

சுருங்கச் சொன்னால், கவிஞராக வாழ்வதை விடவும், கவித்துவமாக வாழ்வதுதான் அறிவுமதியின் தனித்தன்மையாகும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com