திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 21

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 21

"இசை என்பது என்ன?  நம் மனதை சுத்தமாக்கிக் கொள்ள உதவி நம்மை தெய்வத்தின் அருகாமையில் கொண்டு சேர்ப்பது."  -  இசைஞானி இளையராஜா.

"மஞ்சி மனசுலு"வின் மூலமாக தெலுங்குப் படவுலகில் கால் பதித்த கே.வி. மகாதேவன் அங்கும் தனது வெற்றிக்கொடியை கிட்டத்தட்ட கால்  நூற்றாண்டுக்கும் மேலாக பறக்க விட்டார்.

தமிழ் "குமுதம்" படத்தின் ரீ-மேக் படமான மஞ்சி மனசுலு ஆந்திரத்தில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.  கண்டசாலா, பி. சுசீலா, ஜமுனாராணி, எஸ். ஜானகி ஆகியோர் பாடல்களைப் பாடி இருந்தனர்.

தமிழில் பயன்படுத்திய அதே மெட்டுக்களைத்தான் தெலுங்கிலும் மகாதேவன் பயன்படுத்தி இருந்தார் என்றாலும் இணைப்பிசையில் மட்டும் சிற்சில மாறுதல்களைக் கொடுத்திருந்தார் அவர்.

சில  பாடல்கள் குறிப்பாக "என்னை விட்டு ஓடிப்போக முடியுமா" பாடல் தமிழை விடவே தெலுங்கில் இனிமை சற்றுக்கூடுதலாகவே ஒலிக்கிறது.

தெலுங்கில் கே.வி. மகாதேவனின் இசைச் சாதனைகளைப் பற்றிக்கூறுவது என்றால் அதற்கே ஒரு தனி புத்தகம் எழுதவேண்டும். ஒரு காலகட்டத்தில்  தமிழை விடத்  தெலுங்கில் அவர் மிகவும் பிசியாக இருக்கும் அளவுக்கு தெலுங்குப் படவுலகம் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

1962-இல் தமிழில் மெல்லிசை மன்னர்களின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.  கர்நாடக ராகங்களின் அடிப்படைத் தன்மை மாறாமல் மேற்கத்திய இசைக் கலப்போடு கொடுக்க ஆரம்பித்த அவர்கள் பாணி ரசிகர்களை வெகுவாகக் கவர ஆரம்பித்தது.

அந்த மெல்லிசை அலையில் ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன் போன்ற இசை ஜாம்பவான்களே கரை ஒதுங்க ஆரம்பித்த நேரம்.

அதுவரை ஏ.வி.எம். நிறுவனத்தில் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்த சுதர்சனம் அவர்களே இந்தப் புதிய அலையின் காரணமாக அந்த நிறுவனத்தை விட்டே விலக நேர்ந்தது என்றால் அதன் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

ஆனாலும் அந்த பேரலையில் சிக்கிக்கொள்ளாமல் கே.வி. மகாதேவன் மட்டும் அழுத்தமாகக் கால் பதித்து நின்றார் என்றால் அதற்கு காரணம் அவரது தனித் திறமையும்,நிதானமுமே.

அறுபதுகள் முழுக்க ஒன்று மெல்லிசை மன்னர்கள் (பிரிந்த பிறகு எம்.எஸ். விஸ்வநாதன்) அல்லது கே.வி. மகாதேவன் என்றே தயாரிப்பாளர்கள் மாறி மாறிப் படை எடுத்துக்கொண்டிருந்தனர்.

மக்கள் திலகம், நடிகர் திலகம் என்று இரு உச்ச நட்சத்திரங்களின் ஆதரவும் அவரது நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள உதவியது.  இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு ராசியான இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவன் இருந்து வந்தார்.

"மாமா மியூசிக் போட்டா படம் நிச்சயம் சில்வர் ஜூப்ளிதான்" என்று பேசப்படும் அளவுக்கு கே.வி. மகாதேவன் இருந்தது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

அதற்கேற்ற மாதிரி அதிகமான வெள்ளிவிழாப் படங்களுக்கு இசை அமைத்த பெருமையும் அவருக்கு கிடைத்தது.

முதன் முதலாகப் படம் இயக்கம் இயக்குனர்களால் பெரிதும் விரும்பப் பட்ட ஒரு இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவன் இருந்து வந்தார்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அதுவரை கதை வசனம் மட்டுமே எழுதிவந்த ஏ.பி. நாகராஜன், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் ஆகியோர் இயக்குனர்களாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தபோது இசை அமைப்பாளராக அவர்கள் தேர்ந்தெடுத்தது கே.வி. மகாதேவனைத்தான்.

கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரிப்பில் கே.எஸ். கோபால கிருஷ்ணன் முதல் முதலாக இயக்கிய படம் தான் "சாரதா". இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்த பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி அடைந்த பாடல்கள்.

"ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன?" - பி. சுசீலா - பி.பி. ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசை பாடலை இன்றளவும் எல்லாத் தொலைக்காட்சிச் சானல்களும் ஒரு நாளில் ஒரு முறையாவது ஒளிபரப்பாமல் இருப்பதே இல்லை.  சரணங்களுக்கு இடையேயான இணைப்பிசையில் தாள வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தாமல் தந்தி வாத்தியக் கருவிகளான வயலின், சிதார் ஆகியவற்றை மட்டுமே மகாதேவன் பயன்படுத்தி இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

"கண்ணானால் நான் இமையாவேன்" - அன்பினால் ஒன்றுபட்ட இதயங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் பாடல்.  டி.எம்.எஸ் - பி. சுசீலா இணையும் இந்தப் பாடல் வரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மகாதேவன் அமைத்திருக்கும் இசை பாடலை கேட்கத் தெவிட்டாத பாடலாக நிலைநிறுத்தி விட்டது.

புகுந்த வீட்டுக்கு முதல் முறை வரும் மருமகளை வரவேற்கும் பாடல் "மணமகளே மருமகளே வா வா" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சரளா, எஸ். ஜானகியின் குரல்களில் மென்மையாக மனதை வருடும் இந்தப் பாடல் இன்றளவும் திருமண வீடுகளில் ஒலிப்பதே பாடலின் வெற்றிக்குச் சாட்சி.  கவிஞர் பஞ்சு அருணாசலத்தின் அருமையான வரிகளுக்கு அற்புதமான முறையில் உயிர் கொடுத்து உலவவிட்டிருக்கிறார் கே.வி.மகாதேவன்.

"கூந்தலுக்கு மலர் கொடுத்தாய் குளிர் முகத்தில் திலகமிட்டாய்" -  விரக தாபத்தால் கணவன் பாடுவதாக அமைந்த பாடல்.  டி.எம். எஸ். தனித்துப் பாடும் இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை அவரது மேதாவிலாசத்துக்கு மற்றுமொரு சான்று.

"தட்டுத் தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாடக் கொஞ்சும்" - சீர்காழி கோவிந்தராஜன் - எல்.ஆர். ஈஸ்வரி இணைந்து பாடியிருக்கும் பாடல்.  பல்லவி மட்டும் தபேலாவின் தாளக்கட்டுடன் மனதைத் தட்ட சரணங்கள் அனைத்தையுமே விருத்தங்களாக அமைத்து -  இந்தப் பாடலையும் ஒரு வெற்றிப்பாடலாக்கிக் காட்டியிருக்கிறார் கே.வி. மகாதேவன்.

இந்த இடத்தில் "சாரதா" படத்தின் மூலக் கருவைப் பற்றி சற்று சொல்லியே ஆகவேண்டும்.

முதலிரவுக்கு முன்பு ஏற்படும் ஒரு விபத்து கணவனை தாம்பத்திய வாழ்வுக்கு தகுதி இல்லாதவனாக ஆக்கி விடுகிறது.  உண்மை தெரிந்ததும் அவனே தன் காதல் மனைவிக்கு மறுமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறான்.

"கரணம் தப்பினால் மரணம்" - என்பதுபோல கன நேரம் சறுக்கினாலும் விரசம் என்று மக்கள் அதுவும் ரிபீட்டட் ஆடியன்ஸ் என்று கருதப்படும் தாய்க்குலம் ஒதுக்கிவிடக்கூடிய கதையம்சம் நிறைந்த கதையை லாவகமாகக் கையாண்டு ஒரு இடத்தில் கூட முகம் சுளிக்க வைக்காமல் அனைவருமே ஏற்றுக்கொள்ளக் கூடியவண்ணம் நேர்த்தியாக இயக்கி வெற்றிக்கோட்டை அறிமுக இயக்குனராக கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தொட்டார் என்றால் அதற்கு கே.வி. மகாதேவனின் இசை பக்க பலமாக இருந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

இப்படிப்பட்ட ஒரு நெருடலான கதைக்கு பின்னணி இசை எப்படி இருக்கவேண்டும்?

இளம் தலைமுறை இசை அமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள ஒரு ஆவணப் படமாக சாரதா படத்துக்கு மகாதேவன் இசை அமைத்திருக்கிறார்.

காட்சிகளின் உணர்வுகளைப் பெரும்பாலும் வசனங்களின் மூலமே சொல்லிவிடுவார் கே.எஸ்.ஜி.  என்றாலும் அந்த வசனங்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை பின்னணி இசையின் மூலம் துல்லியமாகப் புரியவைத்துவிட்டார் கே.வி. மகாதேவன்.

குறிப்பாக ஒரு முக்கியமான கட்டத்துக்கு மகாதேவனின் இசை எப்படி படத்தின் வெற்றிக்கு கை கொடுத்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே பின்னணி இசைக்கான இலக்கணம் புரிந்துவிடும்.

மனைவிக்கு மறுமணம்  செய்துவைக்க முடிவெடுத்த கணவன் தனது தாயிடம் அதைப் பற்றிக்கூறும் கட்டம்.  பழமையில் ஊறிய அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற தயக்கத்துடன் தனது முடிவை அவன் வெளிப்படுத்துகிறான்.  அதைக் கேட்டதும் அந்தத் தாய் கூறுகிறாள்:

"சம்பந்தம்!  நீ பிறந்த போது எவ்வளவு சந்தோஷப் பட்டேனோ அதை விட அதிகமான சந்தோஷத்தை இப்போதாண்டா அனுபவிக்கிறேன்."

கணவன் முனைவது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  ஏனென்றால் அவன் ஒரு ஆண்மகன்.  ஆனால் ஒரு பெண்.  அதுவும் வயது முதிர்ந்த ஒரு தாய் -  பழமைக் கோட்பாடுகளிலே ஊறிப்போன ஒரு பெண்மணி - தன் மகன் உயிருடன் இருக்கும்போதே மருமகளுக்கு மறுமணம் என்பதை ஏற்றுக்கொண்டு அதுவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது என்பது ரொம்பப் பெரிசு.  சத்தியமாக அன்றைய காலகட்டத்தில் (நினைவிருக்கட்டும் படம் வெளிவந்த வருடம் 1962!) யாராலும் நினைத்தே பார்க்கமுடியாத ஒரு விஷயம்.

படம் பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்காரவைத்த இந்தக் காட்சியில் மகனின் தயக்கத்தையும் தாயின் நுணுக்கமான மன உணர்வுகளையும் பின்னணி இசை மூலம் கே.வி. மகாதேவன் அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருந்தார்.

கே.எஸ்.ஜி-க்கு மட்டும் என்று அல்ல.  கே.வி. மகாதேவனுக்குமே "சாரதா" படம் ஒரு மைல்கல் என்றால் அது மிகையே அல்ல.

************

 “ராணி சம்யுக்தா”  -  டி. யோகானந்த்   இயக்கத்தில் கவியரசு கண்ணதாசன்  கதை

  வசனம் பாடல்களை எழுத எம்.ஜி.ஆர் - பத்மினி இணைந்து நடித்த படம்.

கே.வி. மகாதேவனின் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றளவும் காற்றலைகளில் கானம் பாடிக்கொண்டே இருக்கின்றன.

"ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா"  - டி.எம்.எஸ் - சுசீலாவின் குரல்களில் செவிகளில் இனிமை சேர்க்கும் ஒரு டூயட்.  பாடலை "பீம்ப்ளாஸ்"  ராகத்தில் அமைத்த கே.வி.மகாதேவன் சரணங்களுக்கு இடையேயான இணைப்பிசைக்கு சுத்ததன்யாசி ராகத்தைப் பயன்படுத்தி இருப்பது புருவத்தை உயர்த்த வைக்கிறது. 

"சித்திரத்தில் பெண் எழுதி"  - ஜமுனாராணி பாடியிருக்கும் இந்தச் சோகப் பாடல் அவரது இசைப் பயணத்தில் ஒரு மறக்க முடியாத பாடல். 

"ராணி சம்யுக்தா படத்துலே 'சித்திரத்தில் பெண்ணெழுதி' என்று ஆரம்பிக்கிற ஒருபாட்டு.  இந்தப் பாட்டுக்கு மாமா பயன்படுத்தின வாத்தியங்கள் மொத்தமே பதினாலுதான். ஆனா பாட்டைக் கேட்டா நெறைய வாத்தியங்களை  பயன்படுத்தி இசை அமைச்ச மாதிரி இருக்கும்.  என்னாலே மறக்கவே முடியாத ஒரு பாட்டு. எனக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்த பாட்டு."  என்று இந்தப் பாடலைப் பற்றி ஜமுனா ராணி "சினிமா எக்ஸ்பிரஸ்" மாத இதழில் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிந்துபைரவி ராகத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு அற்புதமான பாடலை மனதை வருடும் வண்ணம் கொடுக்க கே.வி.மகாதேவனால் மட்டுமே முடியும்.

"அழகு நிலா"  என்று இன்னொரு படம்.

பி.பி. ஸ்ரீனிவாஸின் குரலில் "சின்னச்சின்ன ரோஜா  சிங்கார ரோஜா" - என்றொரு பாடல்.  சின்னக் குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல். 

பஹாடி ராகத்தைப் பயன்படுத்தி வார்த்தைகளுக்கே வலிக்காதபடி பட்டுவிரிப்பில் மெத்தென்று பாதங்களை வைப்பதைப்  போல கே.வி. மகாதேவன் அமைத்திருக்கும் இசைக்காகவே கேட்கவேண்டிய பாடல் இது.

***************

அதுவரை கதை வசனம் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ஏ.பி. நாகராஜன் இயக்குனராக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த படம் "வடிவுக்கு வளைகாப்பு"

சிவாஜி கணேசனும் சாவித்திரியும் ஜோடியாக நடித்த படம். நண்பர் வி.கே. ராமசாமியுடன் கூட்டாக ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கிய படம்.  நட்புக்கரம் கொடுத்து இசையால் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் கே.வி. மகாதேவன்.

"சீருலாவும் இன்ப நாதம் ஜீவசங்கீதம்"- டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலாவின் குரல்களில் சுத்ததன்யாசி ராகத்தில் மகாதேவன் இசை அமைத்த இந்தப் பாடல் உண்மையிலேயே செவிகளுக்கு தேன்சுவையான பாடல்தான். 

"திலகமே தமிழ் நாட்டுக் கலை உலகின் திலகமே"- படம் எடுத்து ஆடும் நாகத்தின் முன்னால் நடிகர் திலகம் வீணை மீட்டிப் பாடுவதாக அமைந்த பாடல். பீம்ப்ளாஸ் ராகத்தில் துவங்கும் பாடல் "இசை கேட்டு ஓடி வந்தாயா" என்ற சரணத்தில் சிந்துபைரவிக்கு மாறி மனதை கொள்ளை கொள்கிறது. டி.எம்.எஸ்.- அவர்களின் குரல் வளமும், மகாதேவனின் இசைத் திறமையும் போட்டிபோட்டுக்கொண்டு பாடலை ஒரு வெற்றிப்பாடலாக்கி விட்டன.

திரை இசையில் தரமான பாடல்களில் ஒன்றாக அமைந்த இந்தப் பாடல் அறுபதுகளின் இறுதிவரை சென்னை வானொலி நிலையத்தால் அடிக்கடி ஒலிபரப்பப் பட்டுவந்த பாடல் மெல்ல மெல்ல குறைந்து இன்று வழக்கொழிந்து போனது உண்மையிலேயே இசை ரசிகர்களுக்கு ஒரு பெரிய இழப்புதான்.   யு-டியூப் தயவால் பாடலைக் கேட்க முடிகிறது.  நேயர்கள் தவறவிடக்கூடாத பாடல் இது.

(இசைப் பயணம் தொடரும்..)

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

செப்டம்பர்   09 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com