திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 10

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 10

"இசை என்பது ஆன்மாவின் மொழி.  அது வாழ்க்கையின் ரகசியங்களைத் திறந்து மனங்களுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை அழித்து  அமைதியை வரவழைக்கிறது."  கலீல் கிப்ரான்.

சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் -  படத்துக்கு பூஜை போடும்போதே ரிலீஸ் தேதியை விளம்பரம் செய்து அதே நாளில் வெளியிடவும் செய்வார்.

நடிப்பவர்களுக்கு மட்டும் என்று இல்லை அனைவருக்குமே சிங்கிள் பேமென்ட்.   

அதே சமயம் கண்டிப்பு, கறாருக்கு பெயர் போன ஆசாமி.

ரீடேக் செய்து பிலிம் சுருளை வீணடிப்பது என்பதெல்லாம் இவரிடம் ஆகவே ஆகாது.

"தாய்க்குப் பின் தாரம்" அவரது முதல் தயாரிப்பு என்பதால் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து தயாரித்தார்.  தரத்தில் இம்மி அளவு கூட அவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. 

"மனிதனுக்கு மனிதன் விரோதி அல்ல.  அவரவர் கொள்கைகள் தான் விரோதி. பழிவாங்கவேண்டும் என்றால் ஒருவனது தீய குணத்தைத் தான் அழிக்கவேண்டுமே தவிர அவனையே அழிக்க நினைக்கக் கூடாது"  என்ற கருத்தை உள்ளடக்கிய படம்.

எம்.ஜி.ஆரின் அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தமுடியுமோ அதற்காக தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் தேவர் இந்தப் படத்தில் செய்தார் என்றால் அது மிகையே அல்ல.

மாட்டுவண்டி ரேஸ், காளையை எம்.ஜி.ஆர். அடக்கும் ஜல்லிக்கட்டு காட்சி -  ஒரு மாஸ் ஹீரோவாக தனது ஆருயிர் நண்பரின் இமேஜை தேவர் உயர்த்திக் காட்டினார்.

இப்படிப்பட்ட ஒருவரிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது மகத்தான சாதனை.

இசை அமைப்பைப் பொருத்தவரையில் அந்த சாதனையை கே.வி. மகாதேவன் நிகழ்த்திக் காட்டினார் என்றே சொல்லவேண்டும்.

இசை அமைப்புக்கு என்று மகாதேவன் சிரமப்பட்டதே இல்லை.

பாடலுக்கு இசை அமைக்க அவர் கையாண்ட முறை என்ன?

இதோ அவரே சொல்கிறார்:

"கதையில் பாட்டு வரும் இடத்தைக் கேட்பேன்.  எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்று கேட்பேன்.  பின்னர் பாடலாசிரியருடன் உட்கார்ந்து அவர் தரும் பாட்டுக்கேற்ப இசை அமைப்பேன்"  

தேவரின் முதல் தயாரிப்பான "தாய்க்குப் பின் தாரம்" படத்துக்கு கே.வி. மகாதேவனின் இசையில் பாடல்கள் அத்தனையுமே ஹிட்டான பாடல்கள் தான்.

எம்.ஜி. ஆரின் அறிமுகப் பாடலான "மனுஷனை மனுஷன்  சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே. இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே."  -   என்ற  பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டு இன்றளவும் காதுக்கு ரம்மியமாகவும் வார்த்தைகளை சிதைக்காத அளவுக்கும் ஒலிக்கின்றன.  பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு மறுமுறை கேட்கும்போதே வரிகள் மனப்பாடமாகி விடுகின்றன.  

அடுத்து சாய்-சுப்புலக்ஷ்மியின் நடனத்துக்கான பாடல்.

"நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்"  -  என்று துவங்கும் இந்தப் பாடலை சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

ஆபோகி, விஜயநாகரி, காபி  ஆகிய மூன்று ராகங்களைப் பயன்படுத்தி ஒரு அருமையான ராகமாலிகைப் பாடலை கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். இசை வீராங்கனை திருமதி. எம்.எல். வசந்தகுமாரி பாடியிருக்கிறார் என்ற போதே பாடலின் தரம் பற்றி சொல்லவா வேண்டும்?   

அடுத்து பி. பானுமதி பாடும் "அசைந்தாடும் தென்றலே தூது சொல்லாயோ"  -  கேட்பவர் மனங்களை அசைக்கத் தவறாத பாடல் இது. சங்கராபரணம் ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். 

டி.எம். எஸ். - பானுமதி குரல்களில் ஒரு டூயட் "ஆகா நம் ஆசை நிறைவேறுமா.  கடல் அலையைப் போல மறைந்து போக நேருமா" -  இன்று வரை காற்றலைகளில் தவழ்ந்து வந்து நம் காது மடல்களை வருடத் தவறாத பாடல். 

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அவ்வையின் பொன்மொழி வீணா?"  - டி.எம்.எஸ். பாடும் இந்தத் தத்துவப் பாடலை - தந்தையின் பெருமையை மகன் உணர்ந்து போற்றுவதாக அமைந்த இந்தப் பாடலை "மத்யமாவதி" ராகத்தின் அடிப்படையில்  விருத்தமாகவும், பாடலாகவும் அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

பாடலாசிரியர் கொடுக்கும் பாடலின் வரிகள் தான் அமைக்கும் மெட்டுக்குள் அடங்காவிட்டால் "வரிகளை மாற்று" என்று பாடலாசிரியருடன் மல்லுக்கு நிற்கமாட்டார்.  அந்த வரிகளை விருத்தமாக அமைத்து அடுத்த வரிக்கு தாவிவிடுவார் அவர்.

ஆனால் பாடலைக் கேட்கும்போது அவை மெட்டுக்குள் அடங்காத வரிகளாகத் தோன்றாது.  விருத்தமாக வரும்போது பாடலின் கருத்து இன்னும் அழுத்தமாக அமைந்து கேட்பவரின் செவிகளுக்கு ரம்மியமாக ஒலிப்பதோடு  அல்லாமல் மனதையும் தொட்டு நிற்கும்.

அந்தவகையில் இந்த "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" பாடல் உயர்ந்து நிற்கும் பாடல்.  படத்தின் முக்கிய திருப்பத்தில் இடம் பெறும் இந்தப் பாடலால் கதையின் போக்கும், காட்சியின் அமைப்பும் அழுத்தம் பெற்று நிற்கும் வண்ணம் மகாதேவனின் இசை உயர்ந்து நின்றது.

தாய்க்கு பின் தாரம் வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்ற அதே சமயத்தில்  ஏ.பி.நாகராஜன் தனது நண்பரான நடிகர் வி.கே. ராமசாமியுடன் கூட்டாக இணைந்து “ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ்” என்ற பானரில் சொந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்.

கதை வசனம் ஏ.பி. நாகராஜனேதான்.  கே.சோமு இயக்குனர்.

படத்தின் கதாநாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அவருக்கு ஜோடியாக பி. பானுமதியும் நடித்தனர்.  இவரகளைத் தவிர இரண்டாவது கதாநாயகன் - நாயகியாக எம்.என். நம்பியாரும், எம்.என். ராஜமும் நடித்தனர்.  முக்கிய கதாபாத்திரங்களில் கண்ணாம்பா, வி.கே. ராமசாமி, சாரங்கபாணி ஆகியோர் நடிக்க தயாரான படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கே கிடைத்தது.

கிராமத்து பின்னணியில் நடிகர் திலகம் கொங்கு வட்டாரத் தமிழில் வெளுத்து வாங்கிய படத்திற்கு நாட்டுப்புற மண் மனம் கமழும் இசையில் கே.வி. மகாதேவனும் வெளுத்து வாங்கினார்.

1957-இல் வெளிவந்த "மக்களைப் பெற்ற மகராசி"  மற்றொரு வெற்றிமாலையை கே.வி. மகாதேவனின் இசை மகுடத்தில் சூட்டினாள்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்தான் "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி" என்ற மண்மணம் மாறாத பாடல்.கவிஞர் மருதகாசி எழுதிய இந்த அற்புதமான பாடலை டி.எம்.எஸ்.  அவர்களை அற்புதமாகப் பாடவைத்து அருமையான முறையில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

சிந்துபைரவி ராகத்தை இவ்வளவு எளிமையாக அழகாக திரைப் படத்தில் உபயோகப் படுத்தமுடியுமா என்று வியக்க வைக்கிறது கே.வி. மகாதேவனின் திறமை.

அதுதான் கே.வி. மகாதேவன். 

கர்நாடக சங்கீதத்தில் எத்தனையோ ராகங்கள் இருக்கின்றன.  அவை திரைப்படங்களில் பல இசை அமைப்பாளர்களால் கையாளப்பட்டிருக்கின்றன.

என்றாலும் எந்த ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்த திரைப் பாடல் என்றாலும் அந்த ராகத்தில் கே.வி. மகாதேவன் அமைத்த பாடல் ஒன்று தான் முதலிடத்தில் நிற்கும்.  அந்த வகையில் இந்த சிந்துபைரவி ராகப் பாடலும் அப்படித்தான்.  சந்தேகமிருந்தால் நீங்களே கேட்டுப்பாருங்களேன்.  நான் சொல்வது உண்மை என்று புரியும். 

"பொன்னு விளையுற பூமியடா"  என்று விருத்தமாக  ஆரம்பித்து "மணப்பாறை மாடு கட்டி.." என்று பாடலாக உருமாறுகிறது.  கே.வி. மகாதேவனின் சிந்துபைரவி ஒரு அருமையான மண்மணம் கமழும் பாடலாக உருமாறி ரசவாதம் புரிகிறது. 

இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு காலத்தை வென்ற காதல் டூயட் அருமையான மெலடி.  "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா"  என்ற பி. பி. ஸ்ரீனிவாஸ் - சரோஜினி பாடிய பாடல் கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல். 

"போறவளே போறவளே பொன்னுரங்கம் - என்னை

புரிஞ்சிக்காம போறியே நீ சின்னரங்கம்" - என்ற டி.எம்.எஸ் - பி. பானுமதி பாடும் பாடல் ஒரு அருமையான நாட்டுப்புற மெட்டாக மலர்ந்த பாடல்.

கேட்கக் கேட்கத் திகட்டாக மண்மணம் கமழும் பாடல்களை அருமையாக வார்த்தெடுத்துக் கொடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

இப்படி சின்னப்பா தேவர், ஏ.பி. நாகராஜன் என்ற இரு நண்பர்கள் கொடுத்த வாய்ப்புகளை அருமையாகப் பயன்படுத்திக்கொண்டதால் கே.வி. மகாதேவனின் புகழ் பரவ ஆரம்பித்தது. 

வாய்ப்புகள் தொடர்ந்து வந்து குவிய ஆரம்பித்தன.  வெற்றிச் சிகரத்தை நோக்கி தனது பயணத்தை அனாயாசமாக தொடர ஆரம்பித்தார் அவர்.

*******************************

"தாய்க்குப் பின் தாரம்" படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு..  யார் கண் பட்டதோ சின்னப்பாதேவருக்கும், எம்.ஜி. ஆருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பில் ஒரு விரிசல் ஏற்பட்டது.  பார்க்கப் போனால் படப்பிடிப்பின் போதே இந்த விரிசல் ஏற்பட்டதால் தேவருக்கு படத்தை நல்ல படியாக முடிக்க முடியுமா என்ற அளவுக்கு சிக்கலே ஏற்பட்டது.

எது எப்படியோ படம் நல்லபடியாக ஓடி வெற்றிப்பட தயாரிப்பாளர் வரிசையில் இடம் பிடித்தார் சின்னப்பாதேவர்.

ஆனால்.. அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை எப்படி அணுகுவது என்ற தயக்கம் தேவருக்கு ஏற்பட்டது.

ஆனால்..  தொடர்ந்து படங்களை எடுத்தாக வேண்டுமே? 

தனக்காக இல்லாவிட்டாலும் தன்னை நம்பி இருக்கும் குடும்பங்களை வாழ வைத்தாக வேண்டுமே?

அதற்காகவாவது அடுத்த படத்தை துவக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவரை உந்தித் தள்ளியது.

பெருவெற்றி பெற்ற எஸ்.எஸ். வாசனின் "சந்திரலேகா" படம் அவரது நினைவுக்கு வந்தது.

அதில் வில்லன் சசாங்கனாக நடித்து அசத்திய ரஞ்சனை கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அஞ்சலிதேவியையும் ஒப்பந்தம் செய்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்தார் தேவர்.

வழக்கம் போல அம்மாவாக கண்ணாம்பா.  கதாநாயகனின் தங்கையாக ஈ.வி. சரோஜா. வில்லனாக பி. எஸ். வீரப்பா.

இசை?  கே.வி. மகாதேவனைத் தவிர வேறு யாரையுமே நினைக்கவில்லை தேவர்.

"நீலமலைத் திருடன்"  வளர ஆரம்பித்தான்.

(இசைப் பயணம் தொடரும்..)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஜுன்   17 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com