தேன்மொழி. எஸ்

கவிதைத்திருவிழா

நுணல் பாடும் இரவுகள்

உழுதநிலம் ஒய்வெடுத்துப் படுத்திருந்தது
நீரெøலாம் நிலவெளியில் குளிர்காய
நிலவின் பிம்பம் நீரில் மூழ்கி நீராடும்
சிலநேரம்
விழித்து வெளியே பிதுங்கும்
தவளை விழிக்குள் விழுந்து வெளியேறும்

தாழ்ப்பாள் திறந்து போர்வைக்குள் புகுந்து
கனவுகளை கட்டியணைத்து உறங்கும்
சிறுமிகளுக்கு நவரசங்கள் கற்று தரும்
உன் ராகங்களுக்கு இன்னும்
புல்லாங்குழல்கள் தயாராகவில்லை

பட்டறிவில் ஒளிÅ£சும்
பொக்கை கிழங்கள்
மழைவேண்டி கடவுளிடம் முறையீடு
செய்வதாய் முடித்துக் கொண்டன
துணை வேண்டுவதாய் சொன்னால்
பண்பாடு பாழ்படும் என்று

உணர்வுகளை ஒளித்து வைத்துக் கொள்ளும்
இரவு உச்சதொனியில் உன்பாடலை பாட
எனக்கு புரிந்தது இதுதான்
இரவும் நுணலும் பிரிக்க முடியாதொரு
கலவியில் இருôபதாக.

***** ***** *****

காதல்

உயிரைத் தேடி
உள்ளே பாய்ந்தது
உயிரை அணைத்து
வெளியில் பறந்தது.


***** ***** *****

மழைக்கால மௌனத்தில்

மழைக்கான அறிகுறியோடும்
மழையோடும் அந்த சிறுமி
பிரசவிக்கிறாள் என்னிலிருந்து
தனித்துவமான ஒரு சோகத்தை சுமந்து
எல்லா பரவசங்களையும் மறைத்து
தனியாய் என்னை அடைகாக்கிறாள்
மழையின் இழைகளில் முகாரி
பாடுகிறாள் ஆத்மாவின் ராகமாய்
எனக்கான அந்த நேர சங்கீதம்
அவளிடமிருந்து கடன்வாங்கப்பட்டவை
மழை பட்டவுடன் மறைந்து விடும்
வானவில்லைப் போல
மழை விட்டவுடன் என்னைவிட்டு
அவள் கடந்துபோக நேர்கிறது

***** ***** *****

தீண்டத்தகாதவள்

உரசலில் குத்திட்டு எழும்பாத
என் மயிர்கால்கள்
அடங்கிக் கிடக்கின்றன ஒரு
ஆண்சிங்கத்தை விடவும் கம்பீரமாய்
திருட்டுப் பூனையின் குருட்டுப் பார்வையில்
என் அனுமதிப்பு
ஒரு நாணத்தின் சாயலாய் தெரிகிறது
உண்மை என்னவெனில்
தீண்டத்தகாதவள் என்று
தெரியவரும்போது நீ
தீட்டுப்படவில்லை என்பதை
தெரிவிப்பதற்காக அனுமதிக்கிறேன்
உன் ஆபாசத் தீண்டலை

***** ***** *****

ஏவாள் ஆடைக்கட்டி கொண்டாள்

ஏவாள் வெளியே வா
கதவுகளுக்குப் பின்னால் தேவன்
உன்னதங்களினால் உனக்கு
ஆடைநெய்து கொணர்ந்திருக்கிறேன்,
ஆதாமுக்கு கடிக்கக் கொடுத்தது
ஆப்பிள் அல்ல - அடிமை விடுதலை
பகுத்தறிவு ஜீவாலையில்
முதலில் சுட்டுக் கொண்டது நீதான்
புரட்சியின் முன்னைக்கும் முந்தைய வித்து
இன்று,
ஏதேன் தோட்டம் தேவன்களுக்குப்
பயப்படாத பூனைகளால் நிரம்பியுள்ளது
மந்தையில் பல ஆடுகள் வழி தவறிவிட்டன
சில ஆடுகளும் சிறையாய் நினைத்துக் கொள்கிறது
ஏதோ ஒரு குறுகுறுப்பில் சொல்கிறேன்
அடுத்த படைப்புலகில்
ஏவாள் ஆடைகட்டிப் படைக்கப்படுவாள்
தண்டனைகள் திருத்தப்பட்டதாய்
இருக்கக் கடவது.

***** ***** *****

வேண்டுவது தீண்டல்

பெட்டியின் அரவமாய் அடைபட்ட
உணர்வுகள் விடுபட விரும்பும்
கொக்கரிக்கும் கோழியின் தொண்டைக்குள்
தொக்கி நிற்கும் சிறுசத்தமாய்
தோராயப் பொய்யின் உண்மையென
எப்போதும் எனக்கேயான
ஏதோ ஓர் வலி
விடைசொல்லி விலக்கமுடியா
நிழலாய் தொடர்கிறதே என்னை

***** ***** *****

ஒரு மரணம் அர்த்தப்படுகிறது

அந்த நாளின் காலமெல்லாம்
வெற்றாய் மட்டுமே இருக்கிறது,
அழுகைகள் அரவங்கள் இல்லை
எல்லோர் முகங்களிலும் தேடல் இன்றி
இழுத்தல் மட்டுமே தெரிகிறது
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்
மூன்றாமவனுக்கும் வேறுபாடு தெரியவில்லை
அனைவரின் உணர்வுகளும் ஒருமித்த
அர்த்தத்தில் அஞ்சலி செய்கிறது
மூச்சுகள் மட்டும் பேச்சுகளாய்
சோகங்கள் சுகம் விசாரித்து கொண்டன
எல்லோர் நினைவுகளும் தன்னுள் படிய
வெற்றுடம்பு விடைபெறும் போது கனத்தது
விடைபெறுபவனுக்கு பரிசாய்
விழிகளில் நீர் மட்டும் இருந்தது
விட்டு திரும்பிய பின்னும் மரணம்
இவர்களிடையே வாழ ஆரம்பிக்கிறது
மரணம் அர்த்தப்படுகிறது.

***** ***** *****

காத்திருப்பு

நீ வந்து சேராத நேரங்களில்
ஒரு சிலுவைப்பாடும் ஒரு புத்துயிர்ப்பும்
நடந்து முடிந்து,
சினத்தை கருணையாக்கும்
பொறுமையோடு காத்திருக்கிறேன்
நீண்ட சமவெளியின்
ஒரு புல்லின் மடியில்.

- தேன்மொழி. எஸ்.

தேன்மொழி. எஸ். என கவிதை உலகில் அறியப்படுகிற இக்கவிஞர் தஞ்சாவூரில் வசிக்கிறார். காவல்துறையின் தடய அறிவியல் துறையில் பணியாற்றுகிறார். காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகிற பெண்களின் எழுச்சிக் குரலை கவித்துவம் குறையாமல் நவீன மொழியில் கவிதைகள் செய்கிறார். "எனக்கான விடுதலையை, சுதந்திரத்தை கவிதை எழுதுவதின் மூலம் மீட்டெடுக்கிறேன்" என்று சொல்கிற தேன்மொழி. எஸ். தனது முதல் தொகுப்பைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.

ஜுலை   20 , 2006

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com