நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 15

நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 15

சென்னை பல்கலைக்கழக நூலகத்தில் தினமும் இரண்டு மணி நேரம் பகுதிநேர வேலையாக பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அப்போது மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் .ஏழை மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வழங்க பல்கலைக்கழகம் ஒரு நேர்காணல் நடத்தி பணி செய்ய வாய்ப்பு தந்தது.

அதில் நான் தேர்வாகி நூலகத்தில்  தினமும் கல்லூரி முடிந்து 2 மணி நேரம் பணி செய்வேன் . என்ன பணி என்று நீங்கள் கேட்கலாம்.  நூல்களை பகுதி வாரியாக அடுக்கி வைப்பது , கிழிந்த நூல்களை கண்டு பிரித்து  சரி செய்ய அனுப்புவது. அது அப்போது ரொம்ப பெருமையாக இருந்தது. அந்தப் பணி ஒரு மாதத்திற்கு எழுபத்தைந்து மணி நேரம் அதிகப்படியாக பணியாற்றலாம்.இரண்டு மணி நேரத்திற்கு சம்பளம் 2 ரூபாய் என்று மாதத்திற்கு 150 ரூபாய் எனக்கு கிடைத்தது .

அந்த சமயத்தில் கரிப்பு மணிகள் என்ற நூலைப் பார்த்தேன். அது எழுதியவர் ராஜம் கிருஷ்ணன் என்று எழுதி இருந்தது. லேசாக பழுதான அதை அங்கேயே அமர்ந்து வேகமாக படிக்கத் துவங்கினேன். மனதை பாதித்தது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடைய நூல்களை தேடி படிக்கத் துவங்கினேன்.

பாதையில் பதிந்த அடிகள் ,குறிஞ்சித்தேன் ,உத்தரகாண்டம், சுழலில் மிதக்கும் தீபங்கள், போன்ற நூல்களைப் படித்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமானது .

பிறகு சில வருடங்கள் கழித்து நான் தாய் வார இதழின் துணை ஆசிரியராக இருந்தபோது ராஜம் கிருஷ்ணன் அவர்களை நான் பார்க்க வேண்டும் அவரைப்பற்றி எழுத வேண்டும் என்று ஆசிரியர் வலம்புரி ஜான் எம் பி அவர்களைக் கேட்டபோது தாராளமாகச் செய்யுங்கள் என்று அனுப்பினார். பிடித்த எழுத்தாளரை பார்க்கப் போவதே பெரிய சந்தோஷம்.

ஒரு நாள் அவரைத் தேடி கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினேன் .

தேடிப் பார்த்தால் அவர் தாம்பரம் தாண்டி ..ரயில்வே நிலையத்தில் இறங்கி நடந்து போனால் ராஜகீழ்ப்பாக்கம் என்று நினைக்கிறேன் அதன் அருகில் சில சந்து. முனைகளை தாண்டி  ராஜம் கிருஷ்ணன் அவர்களை வீடு தேடி அடைந்து அழைப்பு மணியை அடித்தேன் .

ஒரு  வயதான சிவந்த பெண்மணி வந்தார் .

அவர் தான் ராஜம் கிருஷ்ணன் .

எளிமையான உடை ..

வாருங்கள் என்று அழைத்தார்.  ஒரு எழுத்தாளருக்கு உண்டான எந்த பிம்பங்களும் அறிகுறிகளும் அந்த வீட்டில் இல்லை. சாதாரணமாக இருந்தது.எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சாகித்ய அகடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளர் பெண்மணி தன்னுடைய அடையாளங்களை அதிகமாக இல்லத்தில் வைத்து கொள்ளாமல் சாதாரணமாக இருக்கிறாரே என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றியது.

எனக்கு தேநீர் அளித்த பிற்பாடு

நான் கேட்டேன் .

எப்படி உங்களால் இவ்வளவு எளிமையாக இருக்க முடிகிறது?

என்று கேட்டேன் . அவர் மெதுவாக சிரித்து விட்டுச் சொன்னார் .

ஏன் முடியாது ? அதில் என்ன சிரமம் இருக்கிறது என்றார் .

தன்னுடைய தேவைகளை அறிந்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டாலே எளிமை என்பது சாதாரணமாக அமைந்து விடும் என்றார்.

அப்படியா? நம்ப முடியவில்லையே.

ஒரு பிராமணப் பெண் மணி எப்படி கீழ்த்தட்டு மக்களின் கதைகளையெல்லாம்  எழுதுகிறீர்கள்? .உங்களுக்கு வாழ்க்கை அனுபவமே கிடையாது. எப்படி எழுத முடிகிறது .கற்பனையா என்று கேட்டேன் .

அவர் உடனே அதற்கும் ஒரு சிரிப்பை பதிலாக தந்தார்.

'நான் கதைகளை எழுதுகிற போது அந்த கதையை எழுதுகிற இடங்களில் சென்று வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையை தெரிந்து கொண்ட பிற்பாடுதான் நான் அதை கதையாக மாற்றுவேன்.  அப்படித்தான் என்னுடைய கதைகள் எல்லாம்' என்றார்.

கடற்கரை பகுதியிலே சென்று பல மாதங்கள் அவர்களோடு உண்டு வாழ்ந்து அவருடைய அனைத்து வாழ்வையும் புரிந்துகொண்டு கலாச்சாரங்களையும் தெரிந்துகொண்டு பிற்பாடு எழுதியதுதான் கரிப்பு மணிகள் என்கிற கதை .

ஒரு எழுத்தாளன் கற்பனையாக எழுதுவது என்பது அவ்வளவு சரியாக இருக்காது .

எளிமையாக இருக்கும்  மக்கள் அவருடைய உணர்வுகளை எப்படி தூரத்தில் இருந்து பார்த்து தெரிந்து கொள்ள முடியும்? அப்படி தெரிந்து கொள்ளாமல் எழுதுவது எழுத்துக்கு செய்கிற துரோகம் என்றார்.

பேச்சு மலையாள எழுத்தாளர் குறித்தும் திசை மாறியது. அவற்றில் பலவற்றை அவர் மொழிபெயர்த்திருக்கிறார்

தான் பணம் சம்பாதிப்பதற்காக எழுதவில்லை .என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் எழுத்தாளராக மாறினேன் .என்றுதான் அவர்கள் சொன்னார்கள் .

இந்த நூற்றாண்டில் ஏன் அவர் கவனிக்கப்படவில்லை ? மறுவாசிப்பு செய்ய வில்லை ?என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .

வருங்காலத்தில் கல்லூரிகளிலும் ,நூலக வாசகர் வட்டங்களிலும் அவர் பேசப்பட வேண்டும் என்பதே என் கோரிக்கை.

திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து வளர்ந்த ராஜம்கிருஷ்ணன் அவர்களைப்போலவே தொட்டியத்தில் பிறந்த திரிபுரசுந்தரி என்கிற லட்சுமி என்கிற பெண் எழுத்தாளரும் கவனிக்கப்பட வேண்டியவர்

லட்சுமி அவர்களையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகமாக ஒருநாள் மாலைநேரம் மயிலாப்பூர்  சிஐடி காலனியில் உள்ள அவர் வீட்டிற்கு நான் சென்றேன் .

மாடியில் இருந்தார் .

வாருங்கள் என்று அழைத்தார் .

வட்ட வடிவ முகம்.  மலர்ச்சி . அமர்ந்தேன் .

வழக்கமாக எதையும் நேரடியாகவே கேட்டு விடுகிற பழக்கம் உள்ள நான் லட்சுமி அவர்களைப் பார்த்து கேட்டு விட்டேன் .ஆமாம் குடும்ப கதைகள் எழுதி கொண்டிருக்கிறீர்களே சமூகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் சென்றுகொண்டிருக்கிறது ஏன் நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவனம் செலுத்தி எழுதுவதில்லை? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் சிரித்தார்கள்.

”நான் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக  படித்துக்கொண்டிருந்தேன் .வீட்டில் குடும்பத்தில் கஷ்டம் வந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் . என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

எப்படியாவது படிப்பைத் தொடர வேண்டும் என்று கருதியே நான் ஆனந்த விகடன் ஆசிரியர் வாசன் அவர்களை சந்தித்தேன் .என் படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் என்னை உன்னிப்பாக பார்த்துவிட்டு என் ஆனந்த விகடனுக்கு சிறுகதை எழுது நான் உதவுகிறேன் என்று சொன்னார்.இப்படியாகத்தான் என் எழுத்து உலகம் துவங்கியது. வேறு எந்த வழியும் புலப்படாத தால் தகுந்த தண்டனையா என்ற சிறுகதையை முதலில் எழுதத் துவங்கினேன்.

மாதம் மூன்று சிறுகதைகள் ஆனந்த விகடனில் கண்டிப்பாக எழுதித்தர வேண்டும் அப்போதுதான் மாதத்திற்கு என் படிப்பிற்கு வாசன் அவர்கள் பணம் தருவேன் என்று சொன்னார் நானும் அப்படியாக எழுதிக் கொண்டே இருந்தேன் அவரும் என் படிப்பிற்கு பணம் தந்து கொண்டே இருந்தார் மருத்துவராக நான் மாறிவிட்டேன்.

உலகில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் குடும்பத்திற்கு வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

குடும்ப உறவு முறைகள் சரியாக இருந்தால் தான் உலகம் சரியாக இயங்கும் என்று நினைக்கிற  எழுத்தாளர் நான்.

அதனால் தான் அதை உணர்ந்த கண்ணபிரான் என்ற கணவரை வாழ்க்கையில் கையை பிடித்தேன்.

ரொம்ப நல்லவர் தென்னாபிரிக்காவில் குடியேறி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். விடாது கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன் .தென்னாப்பிரிக்காவிற்கு பின் தமிழ் நாட்டில்  வந்து மருத்துவம் பணி செய்துகொண்டு கதைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன் .குடும்பகதைகள் தான். அதை தவிர்க்கவே முடியவில்லை,” என்று சொன்னார் .

நான் சிரித்துக்கொண்டேன் .”நீங்கள் குடும்ப கதைகள் எழுதுவது மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள் .

குடும்ப கட்டமைப்பு சீராக இருக்கிறது .ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக கற்பனையில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதவில்லை .உங்கள் பணி சிறப்பாகவே இருந்தது” என்று சொல்லி நான் விடை பெற்றேன்.

ஆனந்த விகடன் ஆசிரியர் வாசன் அவர்கள் படிப்புக்காக வந்த ஒரு மாணவியை சிறந்த எழுத்தாளராக மாற்றினார் என்று சொன்னால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

அவர் 1984 இல் சாகித்ய அகாடமி விருது ஒரு காவிரியைப் போல என்ற நூலை எழுதியதற்காக கிடைத்தது .

திரிபுரசுந்தரி என்ற மாணவி தன் பெயரால் எழுதினால் உடன் படிக்கும் மாணவிகள் கேலி செய்வார்கள் என்பதற்காக அவர்களுக்கு தெரியாமல் வைத்துக்கொண்ட பெயர்தான் லட்சுமி.

எதை மறைத்துக் கொண்டாலும் அவர் தன் வாழ்வியல் சார்ந்த உணர்வுகளால் சிறந்த எழுத்தாளராக மாறினார் என்பதை மறைக்கவே முடியவில்லை.

மயிலாப்பூர் சிஐடி காலனி கடந்து கவிக்கோ அரங்கத்துக்கு செல்கிறபோது லட்சுமியை ஒரு முறை நினைத்துப் பார்க்காமல் செல்ல முடியவில்லை.

நான் சந்தித்த இரண்டு பெண் ஆளுமைகளில் பொதுவாக நான் கருதியது . இலட்சியம் சத்தியம் நேர்மை .

பணத்திற்காக எதையும் எழுத வேண்டும் என்று நினைக்காத பண்பு .

இதுதான் ஒரு எழுத்தாளரை மேலும் மேலும் சமூகத்தில் உயர்த்திக் காண்பிக்கிறது.

(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வெளியாகும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com