The Old Patagonian express
The Old Patagonian express

பயணத்துக்கு ஏங்கும் கால்கள்!

போகமார்க்கம் - 5

மார்க்கம் என்கிற சொல்லுக்குப் பொதுவாக வழி,தெரு,பரம்பரை என்றெல்லாம் தமிழ் நிகண்டுகள் பொருள் சொல்கின்றன. ‘இன்னுயிர் போ மார்க்கம்' என்று நாலடியார் சொல்லுகிறது. சமயத் தொடர்பாகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமியர்கள் தாம் ஒழுகும் வழியை மார்க்கம் என்று சொல்வதுண்டு. 'மார்க்கமொன்றறிய மாட்டா மூர்க்கரானேன்' என்று நாலாயிரத் திவ்ய பிரபந்தம் சொல்கிறது. கெட்டவர்களை துன்மார்க்கர் என்பதுண்டு. ஒருவர் இவ்வுலகில்  ஏதோ ஒரு மார்க்கத்தின் வழி ஒழுகிச் செல்கிறார்.

எல்லா மார்க்கங்களும் பயணங்களுடன் தொடர்புடையவை. இன்றும் தனி மனிதனின் பிரயாணங்களில் பெரும்பகுதி சமயம் சார்ந்தவையே. ஹஜ் பிரயாணம்,காசி யாத்திரை,ஏசு பிறந்த இடத்துக்குச் செல்வது, புத்தர் சமாதி அடைந்த கயாவுக்குச் செல்வது என்று அன்றும் இன்றும் லட்சக்கணக்காண மனிதர்கள் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் காலத்தில் புத்தர் வாழ்ந்த இடங்கள் அலைந்து திரிந்த இடங்களுக்கு எல்லாம் தன் காலத்தில் சென்று சோ. சிவபாதசுந்தரம் எனும் அறிஞர் கவுதம புத்தர் அடிச்சுவட்டில் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். திபெத்திலிருந்தும் உலகின் மற்ற பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பவுத்தத் துறவிகள் இந்தியாவுக்கு இப்படி வருகிறார்கள். அதே அறிஞர் தமிழகத்தில் தேவாரத்தைத் தொகுத்தளித்த சேக்கிழார் வாழ்ந்த இடங்கள் சென்ற ஆலயங்கள் எல்லாம் சென்று சேக்கிழாரின் அடிச்சுவட்டில் என்றொரு நூலை எழுதியிருக்கிறார். இதே போன்று நதிகளைப் பின் தொடர்ந்து சென்று தங்கள் பயணங்களைப் பதிவு செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழில் காவிரியின் பின்னால் போன அனுபவங்களை தி.ஜானகிராமனும் சிட்டியும் ‘நடந்தாய் வாழி காவிரி ‘என்ற நூலாய் எழுதி இருக்கிறார்கள். கங்கை, அமேசான் போன்ற நதிகளின் மூலங்களைத் தேடிப் போய்க் காணாமல் போனவர்கள் உண்டு. தென் அமெரிக்கக் காடுகளில் மாயமான நாகரிகங்களைத் தேடிப் போய் மாயமானவர்கள் உண்டு.வணிகத்துக்காகப் புதிய நாடுகளுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கக் கிளம்பியவர்கள்,தொலைந்து போய்விட்டதாகக் கருதப்படும் யூதர்களின் பன்னிரண்டாவது குலம், உயிர்த்தெழுந்த ஏசுவின் சமாதி, கிழக்கில்  இருப்பதாக கருதப்பட்ட மாபெரும் கிறித்துவ ராஜ்ஜியம் அதன் அரசன் The Prestor John என்பவனைத் தேடி இந்தியாவுக்கு வந்த விசுவாசிகள்...

நான் தி.ஜானகிராமனின் மோகமுள் படித்துவிட்டு யமுனாவையும் பாபுவையும் தேடி கும்பகோணம் தெருக்களில் அலைந்து திரிந்திருக்கிறேன். மனிதர்க்கு பயணம் செய்ய ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது, அவ்வளவுதான் என்று தோன்றியிருக்கிறது.

நான் பயணம்செய்ய முடியாத காலங்களில் நிறைய பயணப் புத்தகங்களைப் படிப்பதுண்டு. என் கால்கள் பயணங்களுக்காக ஏங்குகின்றன. தமிழில் ஏ.கே. செட்டியார் எழுதிய பிரயாண நூல்களைப் படிப்பதுண்டு. மணியன் போன்றவர்கள் எழுதிய நூல்கள் பொதுவாக பிரயாண வழிகாட்டிகள் போன்றவை. ஜெயமோகன் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் எழுதும் பயண நூல்கள் பாதி நாவல்கள். எஸ் ராமகிருஷ்ணன் கண்ணகியின் வழிச்சுவட்டில் சென்று எழுதிய ஒரு கட்டுரை ஒரு இலக்கிய சரித்திரப் பயணம். பொன்னியின் செல்வன் நாவல்  நிகழ்ந்த இடங்களுக்கு வணிகமுறையாக அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் இப்போது வந்துவிட்டன.

தனிப்பட்ட முறையில் நான் விரும்பிப் படிக்கும் பயண நூல் ஆசிரியர்கள் Paul Theroux,V S Naipaul, Bill Bryson ,Graham Greene  போன்றவர்கள். Paul Theroux  - இன் The Old Patagonian express உலகின் மகத்தான இலக்கியப் பிரதிகளுக்கு இணையானது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com